‘2022ஜூன் முதல் கிருஷ்ணகிரி ஆலையில் 20 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி தொடங்கும்’ - ஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால்
ஓலா எலெக்ட்ரிக் தமிழகத்தில் மெகா உற்பத்தி ஆலை பணிகளை துவக்கியுள்ளது. 500 ஏக்கரில் உருவாகும் இந்த முழுவதும் தானியங்கி ஆலை, 2022 ஜூன் மாத வாக்கியில் 10 மில்லியன் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
ஓலா நிறுவனர் மற்றும் சி.இ.ஓ பாவிஷ் அகர்வால்-க்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மிகவும் பிஸியானது. பெங்களூருவில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படுபவர், 140 கிமீ பயணித்து, தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிப்காட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய ஓலா மின்சார இருசக்கர வாகன ஆலையை பார்வையிடுகிறார்.
துவங்கிய ஒராண்டில் யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற ஓலா எலெக்ட்ரிக், உலக அளவில் தனது மின்வாகனங்களைக் கொண்டு செல்லும் இலக்கைக் கொண்டுள்ளது. இந்த ஆலைக்கான பூமி பூஜை சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த நிலையில்,
கிருஷ்ணகிரியில் உள்ள 500 ஏக்கர் நிலப்பரப்பில், பெரிய வாகனங்கள் மற்றும் ஊழியர்கள் சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். முதல் கட்ட பணிகள் ஜூன் மாதம் முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளது.
டிரோன்கள், கிரேன்கள் மற்றும் மனிதர்கள் ஒத்திசைவுடன் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு செயலும் நெருக்கமாக கவனிக்கப்படுகின்றன. இந்த நிலம் வழியே நடந்தபடி, 24 மணி நேரமும் பணிகள் நடைபெறுவதாகவும், பல பணிகள் ஒரே நேரத்தில் நடப்பதாகவும் யுவர் ஸ்டோரியிடம் பாவிஷ் அகர்வால் தெரிவிக்கிறார்.
“இந்த ஆண்டு ஜூன் மாதம் 2 மில்லியன் யூனிட்கள் உற்பத்தியைத் துவக்க விரும்பும் நிலையில், இலக்குகளும், நேர நிரலும் தீவிரமாக இருப்பதாக பாவிஷ் சொல்கிறார். 500 ஏக்கர் ஆலை, பேட்டரி, வெல்டிங், பொது அசம்ப்ளி, மோட்டார், சோதனை ஓட்டம் ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த வசதிகளைக் கொண்டிருக்கும்.”
ஏ.ஐ வசதி
90 சதவீத தானியங்கி ஆலையுல், மைய தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஓலாவின் கட்டுப்பாட்டில் இருக்கும். தனது சொந்த பேட்டரியை, வாகன கம்ப்யூட்டரை, மென்பொருட்களை நிறுவனம் வடிவமைத்து தயாரிக்கும்.
“ஏ.ஐ நுட்பம், ஆலை செயல்பாடுகளைக் கண்காணித்து பணிகளை மேம்படுத்தும் ஒருங்கிணைந்த ஏ.ஐ அதிகம் உள்ளது. எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்த நீடித்த முறையில் ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. ஆலையின் நடுவே செங்குத்தான வனத்தையும் திட்டமிட்டுள்ளோம்,” என்கிறார் ஓலா மார்க்கெட்டிங் தலைவர் வருண் துபே.
ஓலாவின் சொந்த ஏ.ஐ நுட்பம் கொண்டு ஆலை இயங்கும். ஆலையில் பணியாற்ற 10,000 பேர் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.
“இது உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் ஆலையாக இருக்கும். இந்த மின்மயமாக்க புரட்சியில் இந்தியாவை உலக அரங்கில் கொண்டு செல்ல ஓலா விரும்புகிறது,” என ஆலை வாளகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது பாவிஷ் அகர்வால் கூறினார்.
“இந்தத் திட்டத்தை துவக்கிய போது, ஆலையை உருவாக்குவது என்பது முழுமையான பொறியியல் திட்டம் என உணர்ந்தோம். ஒரு ஆலையை உருவாக்குவதே மிகவும் சவாலானது என்றால், நாங்கள் தானியங்கி, ஏ.ஐ மூலம் இயங்கும் ஆலையை உருவாக்குகிறோம்,” என்கிறார் அவர்.
கனவுத் திட்டம்
பெரிய அளவில் மின்சார வாகனங்களை உருவாக்கும் நோக்கில் இது ஓலாவின் முதல் முயற்சி அல்ல. மூன்றாண்டுகளுக்கு முன், நாக்பூரில் பெரிய உற்பத்தித் திட்டத்தை ஓலா அறிவித்தது. அப்போது, மகிந்திரா, டாடா மோட்டார்ஸ், கைனட்டிக், டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஓலா கூட்டு ஏற்படுத்திக்கொண்டிருந்தது.
பல்வேறு நிறுவனங்களுடன் பணியாற்றுவது தொடர்ந்திருக்கலாம் என்றாலும், மின்சார வாகனங்களில் அளவு முக்கியம் என்பதை உணர்ந்தது.
“நீடித்தத் தன்மை கொண்ட, பரந்த நோக்கிலான போக்குவரத்து அமைப்பை உருவாக்கும் கனவு ஒரிரவில் நிறைவேறக்கூடியது அல்ல. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான செயல்பாடு எப்படி இருக்கும் என ஆய்வு செய்தோம். இந்தியாவில் தற்போதுள்ள தொழில்நுட்பத்தையும் கணக்கில் கொண்டோம். நாக்பூர் ஆலை பல அடுக்கு கொண்டது. சார்ஜிங் மற்றும் ஸ்வேப்பிங் நெட்வொர்க் கொண்டிருந்தோம். முழுமையான சூழல் அமைப்பை உருவாக்க வேண்டும் என இந்தத் திட்டம் கற்றுக்கொடுத்தது,” என்று விளக்குகிறார் பவிஷ் அகர்வால்.
“இதற்கு வேறுவிதமான முயற்சி தேவை என அறிந்தோம். பல நிறுவனங்கள் உதிரிகளாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்த போக்குவரத்தில் நீடித்த தன்மை கொண்டுவர, பெரிய அளவில் செயல்பட வேண்டும். அப்போது தான் ஓலா எலெக்ட்ரிக் துவங்கினோம்,” என்கிறார் அவர்.
இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் கார் விற்பனையில் நிறுவனம் இறங்கி உள்ளது. 2022ல் பத்து மில்லியன் வாகனங்கள் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள நிறுவனம் முதல் கட்டமாக ஜூன் மாதம் 2 மில்லியன் வாகனம் உற்பத்தி செய்யத் துவங்க உள்ளது.
எதிர்காலத்தில் போக்குவரத்து அமைப்பை உருவாக்கவே ஓலாவை துவக்கிய போது, விரும்பியதாக அவர் கூறுகிறார்.
“அப்போது பகிர்வு போக்குவரத்து என்பது மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரக்கூடியதாக இருந்தது. அதை செயல்படுத்தினோம். இன்று உலகின் முன்னணி பகிர்வு போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறோம். ஆனால் எங்கள் கனவு, எல்லோருக்குமான நீடித்த, பாதுகாப்பான போக்குவரத்து வசதியை உருவாக்குவது தான்,” என்கிறார் பவிஷ் அகர்வால்.
வாகன மறுவரையறை
இந்தப் பிரச்சனையை, சப்ளை செயின் முதல் ஆய்வு வரை அடிப்படையில் இருந்து தீர்ப்பது தான் முக்கிய ஐடியாவாக இருந்தது. இதை ஆண்டுக்கு 2,000 வாகனங்கள் விற்பதன் மூலம் செய்ய முடியாது, பெரிய அளவில் மாற்றம் தேவை என்கிறார் அவர்.
பகிர்வு போக்குவரத்து தனிநபர் போக்குவரத்திற்கு மாற்றாக உருவாகாது என்கிறார் அவர். மக்களுக்கு விதவிதமான போக்குவரத்துத் தேவை இருக்கும் என்கிறார்.
“எதிர்காலத்தில் மக்கள் தனிப்பட்ட கார் அல்லது வாகனம் வைத்திருப்பார்கள், ஆனால் இவை மேம்பாடு அடைந்து, நீடித்தத் தன்மை கொண்டவையாக இருக்கும். மின் வாகனங்கள் இணைக்கப்பட்ட தன்மை கொண்டிருக்கும். வாகனத்தின் கருத்தாக்கம் மாறும். மின்சார தொழில்நுட்பம் என்பது வாகனங்களை தூய்மையாக்குவது மட்டும் அல்ல, வாகனம் எப்படி இருக்கும் என்பதை மாற்றி நினைத்து பார்ப்பதாகும்,” என்கிறார் அவர்.
“அடுத்த 10 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் நிகழ உள்ளன. எனவே துவக்கத்தில் இருந்து பெரிய அளவிற்கு தயாராவது முக்கியம் என்கிறார்.
உலக மின்வாகன அரங்கில் இந்தியா
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழுமையான ஏ.ஐ இஞ்சின், இரண்டு பேட்டரிகள் கொண்டிருக்கும். முன்னோட்ட ஸ்கூட்டர் சொந்தமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளவுட்டில் இணைக்கப்பட்டு, அழைப்புகளை பெறக்கூடியதாக இருக்கும். பல முறை சார்ஜிங் மையங்களும் இருக்கும். வீட்டிலும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
பெரிய அளவிலான உற்பத்தியே தங்கள் சாதகமான அம்சமாக இருக்கும் என்கிறார் பாவிஷ். டெஸ்லா மற்றும் நியோ ஆகியவை பிரிமியம் பிரிவில் இருக்கின்றன. ஆனால் சொகுசு வாகனங்களை பெரிய அளவில் கொண்டு செல்ல முடியாது என்கிறார்.
“சந்தையின் முக்கியப் பிரச்சனையை யாரும் தீர்வு காணவில்லை. நகர்புற மின்வாகனங்கள் மற்றும் மின்மயமாக்கலில் கவனம் செலுத்தி, இந்தியாவை நகர்புற மின் வாகனங்களுக்கான உற்பத்தி மையமாக்குவதன் மூலம், இந்தியாவை உலக வரைபடத்தில் இடம்பெறச்செய்வதற்கான அருமையான வாய்ப்பு நம்மிடம் உள்ளது,” என்கிறார்.
தங்கள் குழு, மோட்டார் பைக், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான திட்டம் கொண்டுள்ளது.
உலக வரத்தகம்
இந்த ஆண்டு இந்தியாவில் மின் வாகன புரட்சியை துவக்கியுள்ளது. எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவுக்கான திட்டத்தை அறிவித்துள்ளது. டிவிஎஸ் நிறுவனம், பகிர்வு போக்குவரத்து ஸ்டஅர்ட் அப், Intellicar Telematics நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. Ather Energy நிறுவனம், தனது உற்பத்தியை மேம்படுத்தி வருகிறது.
மேலும், பிரிமியம் பைக் பிரிவில் Ultraviolette செயல்பட்டு வருகிறது. இந்த வாகனம் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை விலை கொண்டவை. ஓலா நிறுவனம் தனது வாகனத்தின் விலையை தெரிவிக்காவிட்டாலும் அது போட்டி மிக்கதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
“உலக வர்த்தகத்தை உருவாக்குவது எங்கள் இலக்கு. உலக நோக்கிலான வர்த்தகத்தை உருவாக்கி வருகிறோம். இந்த ஆலை அதிக வாகனங்களை ஏற்றுமதி செய்யும்,” என்கிறார் பாவிஷ் அகர்வால்.
ஆங்கில கட்டுரையாளர்: சிந்து கஷ்யப் | தமிழில்: சைபர் சிம்மன்