'இந்தியாவின் 100 பணக்கார பெண்கள் பட்டியலில் ரோஷ்னி நாடார், கிரண் மஜும்தார்!
இந்தியாவின் 100 பணக்கார பெண்கள் பட்டியலை கோடக் செல்வம் ஹூருன் முன்னணி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் 100 பணக்கார பெண்கள் பட்டியலை, Kotak Wealth Management and Hurun முன்னணி வெளியிட்டுள்ளது. அதில் ஃபால்குனி நாயர் (நைகா) மற்றும் ரேணு முஞ்சல் (ஹீரோ ஃபின்கார்ப்) ஆகியோரும் அடங்குவர்.
கோட்டக் வெல்த் மேனேஜ்மென்ட் மற்றும் ஹுருன் இந்தியா தொகுத்துள்ள அறிக்கையின்படி,
எச்.சி.எல் டெக்னாலஜியின் தலைவரான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா இந்தியாவின் முதல் பணக்கார பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். பயோகான் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கிரண் மஜும்தார் ஷா மற்றும் யு.எஸ்.வி பிரைவேட் லிமிடெட் தலைவர் லீனா காந்தி திவாரி முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தனர்.
’கோடக் வெல்த் ஹுருன் லீடிங் வுமென் 2020’ என்ற தலைப்பில் வெளியான 100 பணக்கார பெண்கள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் 69 செல்வந்தர்களும், 31 சுய எழுச்சி பெண்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. இதில் ஜோஹோவின் ராதா வேம்பு (5வது), ஹீரோ ஃபின்கார்ப் நிறுவனத்தின் ரேணு முஞ்சல் 7வது இடத்திலும், நைகாவின் ஃபால்குனி நாயர் 10வது இடத்திலும் உள்ளனர். பட்டியலில் உள்ள 19 சதவீத பெண்கள் 40 வயதிற்குட்பட்டவர்கள் என்றும், 30 சதவீதம் பேர் 50 வயதுக்குக் குறைவானவர்கள் என்றும் அறிக்கையில் சில புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
திவ்யா கோகுல்நாத் (BYJU இன் இணை-ஃபவுட்னர்) உட்பட ஆறு பெண்கள் தொடக்க சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்தவர்கள். கனிகா டெக்ரிவால் (ஜெட் செட்கோ), அஞ்சனா ரெட்டி (யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ் பிஸ்), மற்றும் விதி சங்க்வி (சன் பார்மாசூட்டிகல்ஸ்) ஆகியோர் இந்த பட்டியலில் இளைய பெண்களாக இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலைப் பொறுத்தவரை, பெண்கள் அதிகம் 3 துறைகளில் தங்கள் பங்களிப்பை அதிக அளவில் செலுத்தியுள்ளனர். அவை மருந்துகள், ஜவுளி, ஆடை, ஆபரணங்கள் மற்றும் ஹெல்த் கேர்.
”தொழில்துறை முழுவதும் பெண்கள் வெற்றியாளர்களாக, எழுச்சியூட்டும் வகையில் உள்ளனர். இந்தியாவின் வளர்ச்சியில் பெண்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். அவர்களின் தேவை இன்றியமையாத வகையில் உள்ளது,” என வெல்த் மேனேஜ்மென்ட் கோட்டக் மஹிந்திரா வங்கி லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஓஷார்யா தாஸ் தெரிவித்துள்ளார்.
ஹுருன் இந்தியாவின் எம்.டி மற்றும் தலைமை ஆராய்ச்சியாளரான அனஸ் ரஹ்மான் ஜுனைத் கூறுகையில்,
"உலக அளவில் 48சதவீதம் பெண்கள் தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் பங்களிக்கும்போது, இந்தியாவில் 24 சதவீத பெண்கள் மட்டுமே தொழிலாளர் தொகுப்பில் தங்கள் பங்களிப்பை செலுத்தி வருகின்றனர்.
“இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகிறது. அதாவது பாலின சமத்துவம் அடைந்தால் மட்டுமே இந்தியா சரியான நேரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியான 5 டிரில்லியன் டாலரை கடக்க முடியும்,” என்று தெரிவித்துள்ளார்.
பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, ஆழ்ந்த ஆராய்ச்சிக்குபிறகு இந்த அறிக்கை தயாரிக்கபட்டுள்ளது. உதாரணமாக, வருவாய்க்கான ஆதாரம், அவர்கள் சார்ந்த தொழில்கள், அவர்கள் வாழும் இடங்கள், உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பல்வேறு கட்ட ஆய்வுக்குப்பின் இந்த பெண்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடபட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா | தமிழில்: மலையரசு