#100UNICORNS | ‘யுனிக்’ கதை 28 - Rivigo | ரிலே மாடலில் பலே புரட்சிக்கு வித்திட்ட இருவர்!
டிரக் ஓட்டுநர்களின் மனிதாபிமான பிரச்சினைகளை தொழில்நுட்பம் மூலம் மாற்றி, அதையே பில்லியன் டாலர் பிசினஸாக உருவாக்கிய ‘ரிவிகோ’-வின் பிசினஸ் புரட்சி அசாத்தியமானது.
இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் அல்லது தளவாடங்கள் துறையில் 22 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பணியாற்றுகின்றனர். உலக வங்கியின் லாஜிஸ்டிக்ஸ் செயல்திறன் குறியீட்டில் இந்தியா 44-வது இடத்தில் உள்ளது. இவ்வளவு மக்கள் பணியாற்றும் இத்துறையில் சிக்கல்களுக்கும் பஞ்சமில்லை. குறிப்பாக லாஜிஸ்டிக்ஸ் துறையின் அச்சாணியாக இருப்பவர்கள் டிரக் ஓட்டுநர்கள்.
பொதுவாக, டிரக் ஓட்டுநர்கள் என்றாலே நீண்ட பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரும். போக்குவரத்துத் துறையில் பொதுவாக டிரக் ஓட்டுநர்கள் 20 முதல் 25 நாட்களுக்கு தங்கள் குடும்பங்களை பிரிந்து பணிபுரிய வேண்டும். நினைத்த நேரத்தில் அவர்களால் வீடு திரும்பி வர முடியாது. வாரக் கணக்கில் சாலையில் வாழ்க்கையை கழிப்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
இத்தகைய கடினமான பணி கலாச்சாரத்தின் விளைவாக, டிரக் ஓட்டுநர்கள் தொழிலை பெரும்பாலோனோர் செய்ய விரும்புவதில்லை. ‘சேவ் லைஃப்’ என்கிற அறக்கட்டளை நடத்திய ஆய்வில்,
‘டிரக் ஓட்டுநர்களில் 84% பேர் தங்களின் குடும்ப உறுப்பினருக்கு தங்கள் வேலையைப் பரிந்துரைக்க விரும்பவில்லை. லாஜிஸ்டிக்ஸ் தொழிற்துறையின் உயிர்நாடியாக டிரக் ஓட்டுநர்கள் சந்திக்கும் இத்தகைய பிரச்சினைகள் இத்துறையின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது,’ எனத் தெரிய வருகிறது.
டிரக் ஓட்டுநர்களின் மனிதாபிமான பிரச்சினைகளை தொழில்நுட்பம் மூலம் மாற்றினால் எப்படியிருக்கும்? அதுவே பில்லியன் டாலர் பிசினஸாக மாறினால்...?
இப்படியான யோசனைகளுடன் டிரக் ஓட்டுநர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட ஒரு பிசினஸ் புரட்சியே ‘ரிவிகோ’ (
) நாம் பார்க்கப்போகும் இந்த யூனிகார்ன் அத்தியாயம்.Rivigo - ஓர் அறிமுகம்
150 பில்லியன் டாலர் புழங்கும் வணிகம்தான் இந்திய சாலை சரக்கு போக்குவரத்து. இதில் எண்ணற்ற நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தாலும், டிரக் ஓட்டுநர்களின் மனிதாபிமான பிரச்சினைகளை தீர்க்கும் எண்ணத்துடன் 2014-ல் குருகிராமை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனமே ‘ரிவிகோ’.
தொடங்கப்பட்ட ஐந்து ஆண்டுகளில் (2019 செப்டம்பரில்) யூனிகார்ன் கிளப்பில் நுழைந்தது. யூனிகார்னாக மாறுவது ஒருபோதும் ரிவிகோவின் குறிக்கோளாக இருந்ததில்லை என்றாலும், லாஜிஸ்டிக்ஸ் தொழிலில் ரிவிகோ காட்டிய தனித்துவமான ஐடியா அந்த அந்தஸ்த்தை விரைவாக எட்டிப்பிடிக்க வைத்தது. இதற்கான விதையை தூவியவர்கள் தீபக் கார்க் மற்றும் கசல் கல்ரா என்ற இருவர்.
தீபக் கார்க் யார்?
தீபக் கார்க் ஐஐடி கான்பூரில் மெக்கானிக்கல் இன்ஜினியர் பட்டமும், லக்னோ ஐஐஎம்மில் எம்பிஏ பட்டமும் பெற்று தேர்ச்சி பெற்றவர். ஜியோமெட்ரிக் லிமிடெட் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் டெவலப்பராக வாழ்க்கையைத் தொடங்கியவர், பிரபல நிறுவனமான மெக்கின்சி & கம்பெனியில் அசோசியேட் பார்ட்னராக கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் பணிபுரிந்தவர்.
கசல் கல்ரா யார்?
ஹார்வர்ட் கென்னடி கல்லூரியில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற கசல், ஸ்டான்போர்ட் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ பட்டமும் பெற்றவர். ‘ரிவிகோ’வை தொடங்குவதற்கு முன்பு உலக வங்கிக் குழுமத்தில் ஆலோசகராக இருந்துள்ளார்.
இருவரும் ‘ரிவிகோ’வின் நிறுவனர்கள் என்றாலும், ரிவிகோவின் துவக்கம் தீபக் கார்க்கிடமிருந்தே வெளிப்பட்டுள்ளது. ஆரம்பத்திலிருந்தே உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் கொண்ட தீபக்கிற்கு லாஜிஸ்டிக்ஸ் மற்றும் வாகனத் துறையில் ஈடுபாடு அதிகம். அந்த ஆர்வம், பொருளாதாரம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த 2012ம் ஆண்டு வாக்கில், அந்த வளர்ச்சிக்கு ஏற்ப டிரக்குகள் விற்பனை இல்லை என்ற புள்ளி விவரத்தை அறியவைத்தது.
1200 கிமீ தூரப் பயணம்
பொருளாதாரத்தின் முதுகெலும்பாக லாஜிஸ்டிக்ஸ் துறை அமைந்திருந்தும் அதன் ஆணி வேராக இருக்கும் டிரக்குகள் பெரிதளவில் விற்பனை இல்லை என்பது ஆச்சரியமாக அவரை உணர வைத்தது. லாஜிஸ்டிக்ஸ் துறைக்கு பொருளாதாரம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் நேரடி தொடர்பு இருப்பதால், அத்துறையில் உள்ள சிக்கல்களை கண்டறிய வேண்டும் என முடிவெடுத்தார்.
இதே சமயத்தில் மெக்கின்சி மற்றும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC) இந்தியாவிற்கு மிகவும் தேவையான திறமையான வேலைகள் எங்குள்ளது என்பதைக் கண்டறிய ஒரு கூட்டு ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வை நடத்திய தீபக், ஜெய்ப்பூரில் உள்ள டிரக் டிரைவர்களுக்கு தலையணைகளை விநியோகிக்கும் சாக்கில் அவர்களுடன் உரையாடல்களை நிகழ்த்த ஆசைப்பட்டு ஒருமுறை ஒரு டிரக் ஓட்டுநருடன் சேர்ந்து சுமார் 1200 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டார்.
இந்தப் பயணத்தின் போது, டிரக் ஓட்டுநர்களுடன் நேரடியாகப் பழகுவதற்கும், ஓட்டுநர்கள் பற்றாக்குறைக்கான காரணங்களைப் புரிந்துகொள்வதற்கும் அவருக்கு வாய்ப்பு உண்டானது.
“டிரக் ஓட்டுநர்களுடன் நான் நடத்திய உரையாடலில், அவர்களில் 37 சதவீதம் பேர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதும், சாலையில் செல்கிற வழியில் பாலியல் தொழிலாளர்களுடன் அதிக அளவில் உறவு கொள்கிறார்கள் என்பதும், அதனால் ஓட்டுநர்களில் 40 சதவீதம் பேர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் என்னை அதிரவைத்தது.
மேலும், அவர்கள் மது மற்றும் புகை பழக்கங்களுக்கு அடிமையாகி இருந்தனர். ஒரு சந்தர்ப்பத்தில், டிரக் டிரைவர்கள் சாதாரண மனிதர்களாக இந்த சமூகத்தால் கருதப்படவில்லை என்ற சோகமான பின்னணியும் என்னை வருத்தப்பட வைத்ததற்கு மேல் அதற்கான தீர்வு என்னவென்பதை யோசிக்க வைத்தது,” என்கிறார் தீபக் கார்க்.
ஸ்டார்ட்-அப் ஐடியா கொடுத்த காபி சந்திப்பு
கசல் கல்ராவும், தீபக்கும் ஒன்றாக வேலை செய்யவில்லை. அவர்கள் நேரடியாக தெரிந்த நண்பர்கள் கிடையாது. கசல் கல்ராவின் கணவர் தீபக்குடன் மெக்கின்சி நிறுவனத்தில் பணிபுரிந்தவர். அவர் மூலமாகவே கசலை தெரியும். இருவருக்கும் ஸ்டார்ட்-அப் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்த சமயத்தில், இருவரும் காபி ஷாப்பில் சந்தித்து பேசி கொண்டிருந்தனர். இந்த உரையாடலின்போது டிரக் ஓட்டுநர்களின் பரிதாப நிலை குறித்து வெளிப்படுத்திய தீபக், அவர்களுக்கான தீர்வுக்கான தேடலில் கசல் கல்ராவையும் இணைத்துக்கொண்டார்.
தீபக்கின் எண்ணத்தை புரிந்துகொண்ட கசல், வேலையில்லாத் திண்டாட்டம் பெரிய பிரச்சினையாக உள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டில், ஓரளவுக்கு ஊதியம் கிடைக்கும் டிரக் ஓட்டுநர் வேலையைச் செய்ய மக்கள் ஏன் தயாராக இல்லை என்பதை புரிந்துகொள்ள விரும்பினார். இதனால், களத்தில் என்ன நடக்கிறது என்பதை நேரடியாக தெரிந்துகொள்ள முற்பட்டார். அந்தத் தேடலின்போது நடந்த சம்பவத்தை கசலே ஒரு பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.
“ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் மூன்று, நான்கு வேலையில்லாத ஆண்கள் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். நான் அவர்களிடம் ‘எதாவது வேலைக்கு செல்லலாமே. டிரக் ஓட்டுநர் தொழிலில் ஏன் ஆர்வம் இல்லை?’ என்ற கேள்வியை கேட்டவுடன், அவர்கள் மிகவும் கோபமடைந்தனர். அதில், ஒரு பையன், ‘டிரக் ஓட்டுநரானால் யாரும் என்னை திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்’ என்றான். மற்றொரு பையன் ‘8-ம் வகுப்பு வரை படித்தது டிரக் ஓட்டுநர் வேலைக்காக அல்ல’ என்றான்.
டிரக் ஓட்டுநர் வேலை பாரம்பரியமாக இழிவான வேலையாக கருதப்படுகிறது என்பது அப்போது புரிந்தது. பொதுவாக, லாரி ஓட்டுநர்கள் வருடத்துக்கு மூன்று முதல் நான்கு முறை வீட்டிற்குச் செல்வார்கள். குடும்பம், மனைவியை விட்டு பிரிந்திருப்பதால் பாலியல் தொழிலாளர்களுடன் உறவுகொண்டு எச்.ஐ.வி. பாதிப்பு, போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு அடிமை என மோசமான வாழ்க்கை முறைக்கு ஆளாகிவிட்டனர்.
2017-18-ம் ஆண்டில் இந்தியாவின் 12 மில்லியன் டிரக் ஓட்டுநர்களில் 0.2 சதவீதம் பேர் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். போதாக்குறைக்கு டிரக் உரிமையாளர்கள் அதிக வேகமாக வாகனத்தை ஓட்டச் சொல்லி அழுத்தம் கொடுப்பதால் இது அதிக ஆபத்துள்ள வேலையாக கருதப்படுகிறது.
"இவை எல்லாவற்றிக்கும் ஒரே தீர்வு டிரைவர்கள் ஒரே நாளில் வீடு திரும்புவது. அப்படி வீட்டுக்கு அனுப்பினால், அவர்கள் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியும். இதனால், பிரச்சினைகள் பல தானாகவே தீர்ந்துவிடும் என்பதால் அதற்கான வழியாக நாங்கள் ஒரு மாடலை உருவாக்கினோம்,” என்கிறார் கசல் கல்ரா.
‘ரிலே’ மாடல்
ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீபக் - கசல் இணை கொண்டுவந்த தீர்வே இந்த ‘ரிலே’ மாடல். ‘ரிவிகோ’வின் இந்த வணிக மாடலில், டிரக் ஓட்டுநர்கள் ஷிஃப்ட் அடிப்படையில் வேலை செய்கிறார்கள். ஒரு ஓட்டுநர் தோராயமாக ஒரு நாளைக்கு 250 கி.மீ அல்லது ஐந்து மணி நேரம் மட்டுமே வாகனம் ஓட்ட வேண்டும். இப்படி செய்வதால் தினமும் ஓட்டுநர் வீடு திரும்ப முடியும் என்பதே ரிலே மாடல் கான்செப்ட்.
விரிவாக சொல்வதென்றால், ரிலே மாடலில் பிட் ஸ்டாப் நிறுத்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பணிக்கு வரும் ஓர் ஓட்டுநர் தனது டிரக்கை ஒருநாளைக்கு 250 கி.மீ அல்லது ஐந்து மணி நேரம் மட்டுமே இயக்குவார். குறிப்பிட்ட தூரத்தை அடைந்ததும் அதே வழியில் எதிர்திசையில் வரும் அதே நிறுவனத்தின் டிரக் ஓட்டுநரிடம் தனது வாகனத்தை ஒப்படைத்துவிட்டு அவரின் வாகனத்தை எடுத்துக்கொண்டு வருவார். இப்படிச் செய்வதால் ஓட்டுநர் ஒருநாளைக்கு குறைந்த தூரம் மட்டுமே செல்வதுடன் தினமும் நாள் முடிவில் அவரால் வீடு திரும்ப முடியும். இடைப்பட்ட நேரத்தில் ஓட்டுநருக்கு 45 நிமிட இடைவெளி கொடுக்கப்படும். இதற்காக, ‘ரிவிகோ’ நாடு முழுவதும் 70 பிட் ஸ்டாப் நிறுத்தங்களின் நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளது.
இந்த மாடலின் முதல் கண்டிஷன், ரிவிகோ தனது ஓட்டுநர்களை ஓட்டுநர்கள் என அழைக்காமல் ‘பைலட்’ என அழைக்கிறது. மேலும், அவர்களுக்காக பிரத்யேக சீருடை கொடுக்கப்படுகிறது. ஓட்டுநர்களுக்கு ஒழுக்கத்தை கடைபிடிப்பதற்காக இப்படி செய்துள்ளது.
அசத்தல் ஆப்
இந்தப் பணிகள் அனைத்தும் ரிவிகோவின் மொபைல் அப்ளிகேஷன் மூலம் கண்காணிக்கப்படும். சொல்லப்போனால், ரிவிகோவின் மொபைல் அப்ளிகேஷன் ஓட்டுநர்களின் அனைத்து தேவைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வை வழங்குகிறது. மொத்தம் 11 மொழிகளில் கிடைக்கும் இந்த மொபைல் அப்ளிகேஷன் டியூட்டி அறிவிப்பு முதல் கணக்கெடுப்பு வரை ஒரு ஓட்டுநர் செய்ய வேண்டிய அனைத்தையும் கண்காணிக்கிறது.
இந்த அப்ளிகேஷன் மூலமாக டியூட்டி அலர்ட் கொடுக்கப்படுகிறது. பிறகு, குறிப்பிட்ட தூரத்தை அடைந்ததும் அவர் டிரக்கை ஒப்படைக்க வேண்டிய விவரம் மற்றும் எதிர்திசையில் வரும் டிரக்கை தெரிந்துகொள்ளுதல், அவற்றை கைமாற்றுவது வரை அனைத்தும் அந்த அப்ளிகேஷன் மூலமாக நடைபெறும். இதில் வண்டியில் வரும் சரக்குகளின் விவரம், அவற்றின் ஸ்டேடஸ் வரை அனைத்தும் அடக்கம்.
வழக்கமான பாரம்பரிய முறையில் ஓட்டுநர் 20 நாட்களுக்கு மேல் டிரக்கில் பயணிக்க வேண்டி இருக்கும். ஆனால், இந்த ரிலே மாடல் மூலம் ஓட்டுநர்கள் தினமும் குறிப்பிட்ட தூரம் பயணிப்பதுடன் ஒரே நாளில் வீடு திரும்பவும் முடியும். இதனால் ஓட்டுநர்களால் தங்கள் குடும்பத்துடன் தினமும் நேரம் செலவழிக்க முடிந்தது. இந்த மாடலை செயல்படுத்தத் தொடங்கிய ஆறு மாதங்களுக்கு பிறகு நிறுவனர்கள் இருவரும் ஓட்டுநர்களின் மனைவிகளை சந்தித்தனர்.
முன்பு எப்போதாவது வீட்டிற்கும் வரும் ஓட்டுநர்கள் மனைவிகளை அடிப்பது அல்லது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கமாக இருந்த நிலையில், ரிலே மாடலில் பணிபுரிந்து தினமும் வீடு திரும்பும்போது அவர்கள் குடும்ப நபர்களாக மாறினர். நீண்ட பயணங்களைவிட, ஒவ்வொரு நாளும் குறுகிய தூரம் மட்டுமே ஓட்டுவது பாதுகாப்பானது என்பது மனைவிகளுக்குத் தெரியும். ஓட்டுநர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகிறார்கள்.
வீட்டிலிருந்து ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு, போதுமான ஓய்வு பெறுகிறார்கள். இதுவே தீபக் - கசல் எதிர்பார்த்த ஆகப்பெரும் வெற்றி. அவர்கள் கொண்டுவர துடித்த மனிதாபிமானமும் இதுதான்.
ஆனால், அவர்கள் எதிர்பாராத ஒரு வெற்றியும் இதில் கிடைத்தது. அது, விரைவான டெலிவரி. இந்த மாடலின் செயல்முறை மூலம் டிரக்குகள் இடைநிறுத்தங்கள் பெரிதாக இல்லாமல் விரைவாகவே டெலிவரி பாயின்ட்களை அடைய முடிந்தது. வழக்கமான பழைய முறையில் ஒருநாளைக்கு குறிப்பிட்ட தூரம் செல்லும் ஓட்டுநர்கள் சாலையின் ஏதாவது ஒரு ஓரத்தில் நீண்ட நேரம் ஓய்வெடுப்பார்கள்.
ஆனால் ரிலே மாடலில் ஓய்வுக்கான தேவை இல்லை என்பதால் டிரக்குகள் இயங்கிக்கொண்டே இருப்பதால் மற்ற நிறுவனங்களை விட குறைந்த நேரத்தில் பொருட்களை டெலிவரி செய்ய முடிந்தது.
“தவறுகள் செய்வதும், தோல்வியை அனுபவிப்பதும் முக்கியம். ஆனால், அவற்றைப் பற்றி சிந்திப்பது இன்னும் முக்கியமானது.” - கசல் கல்ரா.
டெலிவரி நேரம் குறைவானது . தொடர்பாக ஒரு சுவாரஸ்ய கதையை பகிர்ந்துகொள்கிறார் கசல் கல்ரா. “அது எங்களின் முதல் வாடிக்கையாளர் மூலம் நடந்தது. டெல்லி-புனே ஷிப்மென்ட்டுக்காக கடக்க வேண்டிய தூரம் 1,350 கி.மீ. இதற்கு முன்னர் இருந்த பழைய முறையில் இந்த தூரத்தை கடக்க 70 மணிநேரம் அல்லது மூன்று நாட்கள் ஆகும். நான் ஆர்டரின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அங்கேயே அமர்ந்திருந்தேன். மேசைக்குப் பின்னால் இருந்த பெண் ஷிப்மெண்ட் நேரத்தைக் கேட்டார். 24 மணி நேரம் என்றேன். அதை கேட்ட அப்பெண் அதிர்ச்சி அடைந்தார்.
அவரின் அதிர்ச்சியை பார்த்து சிறிது நேரம் யோசித்துவிட்டு நான் மீண்டும் 36 மணிநேரம் வரை ஆகலாம் என்றேன். ஆனால், அவர்களுக்கு நான் சொன்னதில் நம்பிக்கை இல்லை. ஆனால், எங்கள் மாடல் மூலம் டிரக் 23 மணி 36 நிமிடங்களில் டெலிவரி பாயிண்டை சென்றடைந்தது. அன்றைய தினம் அந்நிறுவனத்தில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களும் இவ்வளவு விரைவாக வந்த டிரக்கை பார்க்க ஓடிவந்தது இன்னும் எனது நினைவில் உள்ளது” - கசல் கல்ரா ஒருமுறை பேட்டியில் குறிப்பிட்டது இது.
ரிவிகோவின் வெற்றிக்கான சூட்சமம் இதுதான். ரிலே மாடல் நிகழ்த்தப்பட்ட விரைவான டெலிவரியே லாஜிஸ்டிக்ஸ் துறையில் ரிவிகோவை தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றியுள்ளது. மேலும், ஐந்து வருடத்தில் யூனிகார்ன் கிளப்பில் நுழைய வைத்ததுடன் 20 துறைகளில் 3,000 வாடிக்கையாளர்களைக் கொண்ட மிகப் பெரிய நிறுவனமாக ரிவிகோவை வளர வைத்தது. 2014 அக்டோபரில் 15 டிரக்குகள் உடன் ஆரம்பித்த ரிவிகோவின் பயணம் ஒருவருடத்தில் அதாவது 2015-ல் அதே மாதத்தில் 500 டிரக்குகள் வரை வளர்ந்தது. வளர்ச்சி அதிகமாக இருக்க, முதலீடுகளும் குவிந்தன.
நிதியும் முதலீட்டாளர்களும்
செப்டம்பர் 2019-ல், ரிவிகோ 1.05 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் யூனிகார்ன் கிளப்பில் நுழைந்தது. அதுவரை ரிவிகோ 11 நிதி சுற்றுகள் மூலம் மொத்தம் 268.7 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. ரிவிகோவின் மதிப்பீடு தற்போது 1 பில்லியன் டாலருக்கும் அதிகம்.
ரிவிகோ நிறுவனம் நாடு முழுவதும் 29,000 பின்கோடுகளுக்கு டெலிவரி செய்யும் வகையில் 3,000 டிரக்குகளைக் கொண்டுள்ளது. மேலும், 70-க்கும் மேற்பட்ட பிட் ஸ்டாப் நிறுத்தங்கள் மற்றும் 200 கிளைகளின் வலையமைப்பை உருவாக்கியுள்ளது. வளர்ச்சி, வருவாய் என எல்லாவற்றையும்விட மனிதாபிமானமாக இருப்பதே எப்போதும் மிகப் பெரியது என்பதில் உறுதியாக உள்ளது ரிவிகோ. எந்த நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்பதிலும் அந்நிறுவனத்தின் உறுதி நீடிக்கிறது.
இதனால்தான் தங்களின் ‘ரிலே’ மாடலை காப்புரிமை பெற்றிருந்தாலும்கூட மற்ற லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களுக்கும் பயன்படுத்த கொடுக்க தயாராக உள்ளது.
“இந்தத் துறையில் எங்களால் அனுதாபத்தைக் கொண்டுவர முடிந்தது. எங்கள் தீம் லாஜிஸ்டிக்ஸ் துறையை மனிதாபிமானமாக்குகிறது. எங்கள் மாடல் புறக்கணிக்கப்பட்ட டிரக் ஓட்டுநர்களை மீண்டும் சமூகத்துடன் ஒருங்கிணைத்துள்ளது. டிரக் ஓட்டுநர் தொழிலை மரியாதைக்குரியதாக ஆக்கியுள்ளது. ஓட்டுநர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் வீட்டில் இருக்க அனுமதிப்பதன் மூலம் ஆரோக்கியமான வேலை - வாழ்க்கை சமநிலையை பராமரிக்க முடியும். இதற்காகவே நாங்கள் வந்தோம். அதையே இனியும் செய்ய விரும்புகிறோம்” - கசல் கல்ரா.
ஒரு கூடுதல் தகவல்... இந்திய சாலை சரக்கு போக்குவரத்து சந்தையில் புரட்சியை ஏற்படுத்திய ரிவிகோவின் தலைவர்கள் தற்போது தீபக் மற்றும் கசல் கிடையாது. அக்டோபர் 2018-ல் ரிவிகோவில் இருந்து கசல் ராஜினாமா செய்தார். இதன்பின், 2022-ல் ரிவிகோவை ரூ.225 கோடி கொடுத்து புகழ்பெற்ற மஹிந்திரா நிறுவனம் கைப்பற்றியது. நிறுவனர்கள் மாறினாலும் அவர்கள் ஆரம்பித்து வைத்த நோக்கம் மாறவில்லை. இன்னும், அதே பொலிவுடன் ரிவிகோ இயங்கி கொண்டு வருகிறது.
யுனிக் கதை தொடரும்...
#100UNICORNS | ‘யுனிக்’ கதை 27 - Ola Electric | இந்தியாவில் EV புரட்சியை ஏற்படுத்தும் ஓலா ‘பாவிஷ் அகர்வால்’