#100UNICORNS | ‘யுனிக்’ கதை 27 - Ola Electric | இந்தியாவில் EV புரட்சியை ஏற்படுத்தும் ஓலா ‘பாவிஷ் அகர்வால்’
கடந்த 2021-ல் தான் உற்பத்தியை தொடங்கிய 'ஓலா எலெக்ட்ரிக்' நிறுவனம் கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் யூனிகார்ன் கிளப்பில் நுழைந்தது. ஸ்டார்ட்அப்பில் உச்சம் தொட்ட பலரும் நினைத்து பார்க்க முடியாத சாதனையை எப்படி பாவிஷ் அகர்வால் நிகழ்த்தினார் எனப் பார்ப்போம்.
ஒரு தொழில்முனைவோரின் வளர்ச்சி என்பது ஒரேயொரு நிறுவனத்தை தொடங்கி, அதில் வெற்றி காண்பது என்பதோடு நின்றுவிடாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்தான் இந்த அத்தியாயத்தில் நாம் பார்க்கப்போகும் யூனிகார்ன். அதுவும் ஏற்கெனவே ஒரு தொழில் மூலம் தொழில்முனைவின் உச்சதை தொட்ட ஒருவர், மீண்டும் இன்னொரு நிறுவனம் மூலம் அடுத்த பரிணாமத்தை வெளிப்படுத்துவது என்பது வேறுமாதிரியான ரகம்.
அப்படி ஓர் சிறப்பான சம்பவத்தை செய்தவர் பாவிஷ் அகர்வால். இந்தப் பெயரை எங்கோ கேட்டது போல் உள்ளதா...?
ஆம், ‘ஓலா கேப்ஸ்’ நிறுவனர் பாவிஷ் அகர்வால் தான். அவரின் இரண்டாவது சரித்திர சம்பவம்தான் இந்த அத்தியாயத்தின் உத்வேக கதை. ஓலா கேப்ஸின் அடுத்தகட்ட பாய்ச்சல் ‘ஓலா எலெக்ட்ரிக்’ ( ). இப்பெயர் இன்று பலருக்கும் தெரிந்திருக்கும். பலரும் ஓலா எலெக்ட்ரிக் பைக்கை சாலைகளில் பார்த்திருப்போம்.
ஆனால், அதன் அசுர வளர்ச்சி பற்றி பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த 2021-ல் தான் உற்பத்தியை தொடங்கிய ஓலா எலெக்ட்ரிக்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் யூனிகார்ன் கிளப்பில் நுழைந்தது. ஸ்டார்ட்அப்பில் உச்சம் தொட்ட பலரும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று இது. அத்தகைய சாதனையை நிகழ்த்தி, ஓலா எலெக்ட்ரிக் குறுகிய காலத்தில் எப்படி இந்தியாவின் நம்பர் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் ஆனது என்பதைப் பார்ப்போம்.
ஓலா கேப்ஸ் டு ஓலா எலெக்ட்ரிக்
ஐஐடி பாம்பே பட்டதாரிகளான பாவிஷ் அகர்வால் மற்றும் அங்கித் பாடி இணைந்து நிறுவியதுதான் ஓலா கேப்ஸ். வேலை விஷயமாக பாவிஷ் பெங்களூரில் இருந்து பந்திப்பூருக்கு வாடகை காரில் பயணம் செய்தபோது அக்காரின் டிரைவருடன் ஏற்பட்ட கசப்பான அனுபவமே ஓலா என்னும் சாம்ராஜ்ஜியம் உருவாக வழிவகுத்தது.
ஆரம்பித்த எட்டு ஆண்டுகளில் 110 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டி பில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்டார்ட்அப் நிறுவனமாக உருவெடுத்த ஓலா, ஆண்டாண்டுகளாக இருக்கும் கேப் சேவையை, ஒருவித சொகுசு அம்சங்களுடன், கையிலுள்ள போனில் பட்டனை தட்டினால், குறிப்பிட்ட தொகைக்கு வாசலில் வந்து நிற்கும் ஒரு புதிய அனுபமாக இந்தியர்களுக்கு கொடுத்தது.
2018-ம் ஆண்டுக்குள், 168 நகரங்களில் சேவைகளை வழங்கி 110 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய ஓலா கேப்ஸ், இந்தியாவின் ஐந்தாவது யூனிகார்ன் நிறுவனமாக 5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில், இப்போது உலகம் முழுவதும் 250 நகரங்களில் சேவைகளை வழங்கி வருகிறது.
ஓலா கேப்ஸ் யூனிகார்ன் அந்தஸ்தை தொட்ட கதையை இங்கே கிளிக் செய்து படியுங்கள் மோசமான அனுபவத்தில் ‘ஐடியா’ பிடித்து ஆசமான வெற்றிபெற்ற பாவிஷ் அகர்வால்!
ஓலா கேப்ஸ் வெற்றிப் பயணத்தில் பாவிஷின் பங்களிப்பு அதிகம். ஓலா எலெக்ட்ரிக் உருவாக்கத்திலும் பாவிஷே ஒற்றை மனிதனாக வெளிப்படுகிறார்.
தப்பாத வெச்ச ‘குறி’
உலகின் தற்போதைய மிகப் பெரிய பிரச்சினை காலநிலை மாற்றம். இதை சமாளிக்க உலக நாடுகள் பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து மின்சார வாகனங்களை நோக்கி தீவிரமாக நகர்ந்துவருகின்றன. இதனால், உலக அளவில் வாகனத் துறையில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இங்கிலாந்தில் வரும் 2030-க்குள் அனைத்து வாகனங்களையும் மின்சார வாகனங்களாக இலக்காகக் கொண்டுள்ளது.
இந்தியச் சூழலும் இதே நிலைதான். 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் விற்பனையாகும் இரு சக்கர வாகனங்களில் 80 சதவீதமும், கார்களில் 30 சதவீதமும் மின்னாற்றலில் இயங்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அரசின் இந்த இலக்கு நிர்ணயிப்பதற்கு முன்னதாகவே இந்தியாவை எலெக்ட்ரிக் வாகனத்துக்கான சிறந்த சந்தையாக கணித்தவர் பாவிஷ். மேலும், இந்த சந்தையில் உலக நாடுகளை இந்தியாவே வழிநடத்தும் என்றும் உறுதியாக நம்பியவரும் அவரே. அந்த கணிப்பை நம்பிக்கையை சோதித்தும் பார்த்தார்.
சரியாக மே 2017-ல் நாக்பூர் நகரத்தின் பல இடங்களில் சார்ஜிங் நிலையங்களை நிறுவி, மின்சார வண்டிகள், இ-பஸ்கள் மற்றும் இ-ரிக்ஷாக்களை வாங்கி ‘ஓலா கேப்ஸ்’ மூலம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முக்கிய அம்சம் ‘ஓலா எலெக்ட்ரிக்’ பிராண்ட்டை உருவாக்க வேண்டும் என்பதைவிட ஓலா கேப்ஸில் முக்கிய சிக்கலாக இருந்த எரிபொருள் பயன்பாட்டுக்கு ஏற்படும் செலவீனத்தை குறைக்க வேண்டும் என்பதே. இதற்கான நாக்பூர் சோதனை வெற்றியாக அமைய 2017ல் ‘ஓலா எலெக்ட்ரிக்’ நிறுவனம் உதயமானது.
பாய்ச்சலைத் தொடங்கிய பாவிஷ்!
2018 - 2022-ம் ஆண்டுக்குள் 1 மில்லியன் மின்சார வாகனங்களை ‘ஓலா கேப்ஸ்’ மூலம் இயக்க வேண்டுமென்பதை இலக்காகக் கொண்டு ‘ஓலா எலெக்ட்ரிக்’ நிறுவனத்தின் 92.5% பங்குகளை பாவிஷ் அப்போதே வாங்கினார். அதுவரை கூட்டணி நிறுவனமாக இருந்தது, இதன்பின் தனி நிறுவனமாக மாற்றப்பட்டு நிதி திரட்டியது.
பிப்ரவரி 2019-ல், டைகர் குளோபல் மற்றும் மேட்ரிக்ஸ் இந்தியா நிறுவனங்கள் மூலம் 56 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி கிடைத்தது. அதே ஆண்டில் யூனிகார்ன் கிளப்பில் நுழைந்தது ஓலா எலெக்ட்ரிக். இதேபோல் SoftBank மூலம் 250 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் ரத்தன் டாடாவும் முதலீடுகளை ‘ஓலா எலெக்ட்ரிக்’ பக்கம் குவிக்க புதிய தெம்புடன் 2020-ல் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமை தளமாகக் கொண்டு செயல்பட்ட வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனமான ’எடெர்கோ பிவி’யை (Etergo BV) கையப்படுத்தினார் பாவிஷ்.
எலெக்ட்ரிக் வாகனத் துறையில் ஏற்கெனவே தன்னை நிரூபித்த நிறுவனம் எடெர்கோ. இந்நிறுவனம் அப்போதே, ஒரு முறை சார்ஜ் செய்தால் 240 கிமீ தூரம் வரை செல்லும் இரு சக்கர வாகனத்தை வெற்றிகரமாக வெளியிட்டிருந்தது. இப்படியான நிறுவனத்தை கைப்பற்றிய உடனே ‘ஓலா எலெக்ட்ரிக்’ மின்சார வாகனச் சந்தையில் கால்பதிக்கவுள்ளதாக அறிவித்தது.
ஓலாவின் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன உருவாக்கத்தில் எடெர்கோவின் டிசைன் மற்றும் பொறியியல் திறன்களைப் பயன்படுத்தவது, அதேபோல் வாகனத்தின் விற்பனை மற்றும் செயல்பாடுகளுக்கு ஓலாவின் உள் வளங்களைப் பயன்படுத்தவது என்று தெளிவான திட்டங்களுடன் பாவிஷ் பாய்ச்சலைத் தொடங்கினார்.
அதேநேரம், Peugeot மோட்டார் சைக்கிள்ஸ், பென்ட்லி, ஆல்பைன் மற்றும் பிஎம்டபிள்யு போன்ற முன்னணி வாகன நிறுவனங்களில் பணியாற்றியவரும் ஆட்டோ இன்டஸ்ரி துறையில் முன்னோடியுமான ஜூலியன் கெஃபர்ட்(Julien Geffard) மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஜோஸ் பின்ஹீரோ ஆகியோரை ஓலா தன் பக்கம் இழுத்தது. ஜூலியன் கெஃபர்ட் ஓலாவின் ஆம்ஸ்டர்டாம் அலுவலகத்தை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பாவில் அதன் வணிகத்திற்கான Go-to-Market Strategy இன் இயக்குநராக நியமிக்கப்பட்ட அதேவேளையில் ஜோஸ் பின்ஹீரோவை அதன் உலகளாவிய உற்பத்தி மற்றும் செயல்பாடுகளுக்கு தலைமை தாங்கினார்.
இந்த இரண்டு நியமனங்களும் ஓலாவின் தொடக்கத்தில் முக்கியமான பணியமர்த்தலாக அமைந்தது. இதன்பின், 35 ஆண்டுகால அனுபவம் கொண்ட யோங்சுங் கிம், ஓலாவின் உலகளாவிய விற்பனை மற்றும் விநியோகத் துறைக்கு தலைமை தாங்கினார். அதே நேரத்தில் வெய்ன் பர்கெஸ் வாகன வடிவமைப்புத் தலைவராகப் பொறுப்பேற்றார். நியமனங்களை அறிவித்த சில நாட்களில், உடனடியாக ஐரோப்பா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா போன்ற பல உலகளாவிய சந்தைகளில் மின்சார ஸ்கூட்டரை விற்பனை செய்வதையும் நிறுவனம் உறுதிப்படுத்தியது.
‘ஓலா ஃபியூச்சர் ஃபாக்டரி’
ஓலாவின் அடுத்த முக்கிய அறிவிப்பு ஆட்டோமொபைல் துறையில் சீர்குலைவை ஏற்படுத்தியது எனலாம். அது ரூ.2400 கோடி முதலீட்டில் உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிலையத்தை ‘ஓலா ஃபியூச்சர் ஃபாக்டரி’ (Ola Future Factory) என்ற பெயரில் உருவாக்க இருப்பதாக அறிவித்து, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 500 ஏக்கர் நிலத்தில் அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டது.
500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை, உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தித் தொழிற்சாலை என்பதையும் இங்கு தயாரிக்கப்படும் வாகனம், உலகின் இரு சக்கர வாகன உற்பத்தியில் 15% இருக்கும் என்பதையும் அறிவித்து அதற்கான செயல்பாடுகளை தீவிரப்படுத்தியது. ஓலா சொன்ன கணக்குப்படி பார்த்தால் ஒவ்வொரு இரண்டு வினாடிக்கும் ஒரு ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்படும் திறன்கொண்டதாக இருக்க வேண்டும் இந்த ஆலை.
இவ்வளவு பெரிய ஆலையை விரைவாக உருவாக்க Siemens உடன் கைகோர்த்தது. உற்பத்தியை டிஜிட்டல் மயமாக்கவும் சரிபார்க்கவும் இந்த கூட்டணி இன்றியமைததாக அமைந்தது. மேலும், இந்த மெகா தொழிற்சாலைக்கான ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் தீர்வுகளுக்காக ABB’s automation solutions-ஐ தேர்ந்தெடுத்தது. இவையெல்லாம் ஆட்டோ மொபைல் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள்.
தொழிற்சாலையின் பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில், பிரமிப்பில் ஆழ்த்தியது பாவிஷ் அகர்வாலின் மற்றொரு அறிவிப்பு. ஓலா ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க் குறித்த அறிவிப்புதான் அது.
“இது உலகின் மிகப் பெரிய மின்சார இரு சக்கர வாகனம் சார்ஜிங் நெட்வொர்க். 400-க்கும் மேற்பட்ட நகரங்களில் 1,00,000-க்கும் மேற்பட்ட சார்ஜிங் பாயின்ட் ஸ்டேஷன்களுடன் இந்தியாவின் மிகப் பெரிய நெட்வொர்க்காக இது இருக்கும். ஓலா ஹைப்பர்சார்ஜர் வேகமான இரு சக்கர வாகன சார்ஜிங் நெட்வொர்க்காகவும் இருக்கும். 18 நிமிடத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 50 சதவிகிதம் பேட்டரியை சார்ஜ் செய்யும் திறன் இந்த ஸ்டேஷன்களில் அமைக்கப்படும், அதோடு 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்படும்.” - ஓலா
இதனிடையே, ‘ஓலா ஃபியூச்சர் ஃபாக்டரி’ முழுவதுமாக பெண்களால் நடத்தப்படும் வகையில் 10,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வழங்கப்பட்டது. இதுமாதிரியான தகவல்கள் மட்டுமில்லாமல், வாகன பிரியர்கள் மத்தியில் ஓலா பேசுபொருளாக இருக்க இன்னொரு காரணம் ஓலா எலெக்ட்ரிக்கின் மார்க்கெட்டிங் குழு. பைக்கின் அறிமுகம் முதல் வண்ணம் வரையிலான தகவல்களை சுவாரஸ்யமான பதிவுகளுடன் வலைத்தளங்களில் வெளியிட்டு ஒருவித ஆர்வத்தை உண்டாக்கியது.
இறுதியாக ஜூலை 2, 2021 அன்று, பாவிஷ் அகர்வால் ஓலா ஸ்கூட்டரை பெங்களூரு தெருக்களில் ஒட்டியபோது, உலகின் ஒட்டுமொத்த பார்வையும் அதன்மேல் தான் இருந்தது. ஒரு பதினைந்து நாட்களுக்குப் பிறகு, எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை தொடங்கியது. 499 ரூபாய் செலுத்தி வாடிக்கையாளர்கள் தங்கள் ஓலா ஸ்கூட்டரை olaelectric.com தளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று நிறுவனம் கூற, தேனீக் கூட்டில் தேனீக்கள் போல ஆர்டர்கள் குவிந்தன. முன்பதிவு தொடங்கிய ஒரே நாளில் 1,00,000 முன்பதிவுகளைப் பெற்றது.
வரவேற்பு அதிகமாக இருக்க, 75-வது இந்திய சுதந்திர தினத்தன்று, S1 மற்றும் S1 ப்ரோ ஆகிய இரண்டு வகைகளுடன், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்-S1 அறிமுகம் மற்றும் விலையை அறிவித்தது ஓலா. S1 மின் ஸ்கூட்டர் ரூ.99,999 எனும் விலையிலும், Ola S1 Pro ரூ.1,29,999 எனும் விலையிலும் கிடைக்க வழிவகை செய்தது. விற்பனை தொடங்கும் தேதி செப்டம்பர் 8 எனவும், அக்டோபர் முதல் டெலிவரி செய்யப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.
உற்பத்திக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை காரணமாக சொன்ன தேதியில் பைக் விற்பனை வரவில்லை. இறுதியில் டிசம்பர் 15, 2021 விற்பனைக்கு கொண்டுவரப்பட்டபோது வரவேற்பு உச்சம்தொட்டது.
ஓலா சிறப்பம்சங்கள்
பிரத்யேகமான சிப், வாகன ஓட்டிகள் விரும்பிய வாகன ஒலியை தேர்வு செய்து கொள்ளும் வசதி, இசையை கேட்டு ரசிக்கும் வகையில் ஸ்பீக்கர்கள், போக்குவரத்துத் தகவல்களை அளிக்கும் வரைபட (மேப்) வசதி, மூவ் ஓ.எஸ் எனும் புதிய பிரத்யேக ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஸ்கூட்டர்களை குரல் மூலம் கட்டுப்படுத்தும் வசதி, ரிவர்ஸ் மோடு வசதி, ஒரு முறை சார்ஜ் செய்தால், 181 கிமீ வரை செல்லும் திறன் ஆகியவை.
இத்தனை சிறப்பம்சங்கள் பட்ஜெட் விலையில் உள்ளது அறிந்ததும், வரவேற்பும் அதிகமாக இருந்தன. ஒவ்வொரு நொடியும் 4 ஸ்கூட்டர்களை விற்றது. மொத்தம் 2 நாட்களில், நாங்கள் 1100 கோடி ரூபாய்க்கு மேல் ஆன விற்பனை, வாகனத் துறையில் மட்டுமல்ல, இந்திய இ-காமர்ஸ் வரலாற்றில் ஒரு பொருளின் முதல் நாள் விற்பனையில் அதிகபட்சம் என்னும் சாதனையைப் படைத்தது. விற்பனை அதிகரிக்கத் தொடங்கியிருந்தாலும், ஒரு பெரிய சம்பவம் ஓலாவை சற்று அசைத்தது. மகாராஷ்டிராவின் புனேவில் Ola S1 Pro தீப்பிடிக்கும் வீடியோ வைரலான சம்பவமே அது.
விபத்து குறித்த தகவல்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மீதான அச்சத்தை தொடர்ந்து ஏற்படுத்த, பாவிஷ் அகர்வால் தீப்பிடிப்பு சம்பவம் குறித்து வெளிப்படையா பேசிய அவர், விற்பனையான 1400 யூனிட்களை திரும்பப் பெறுவதாக சொன்னார். வாகனம் தீப்பிடித்தற்கான விரிவான ஆலோசனையை செய்த ஓலா, சில வாரங்களில் ஸ்கூட்டருக்கான மென்பொருள் புதுப்பிப்பை அறிவித்தது மற்றும் இதுபோன்ற தீ விபத்து இனி நடக்காது என்பதை உறுதி செய்தது. இந்த உறுதிக்குப் பின் தற்போது எந்த தீப்பிடிப்பு சம்பவமும் நிகழவில்லை. தீப்பிடிப்பு ஒரேயொரு சம்பவம் என்பதால், ஓலா எலெக்ட்ரிக் மீதான நம்பிக்கை மீண்டும் வலுவாக உருவானது.
மின்சார வாகனப் புரட்சி
“ஓலா ‘இந்தியாவின் டெஸ்லா’ அல்லது ‘இந்தியாவின் உபெர்’ என்று சொல்கிறார்கள். நாங்கள் அவர்களின் அடைமொழியில் சிக்கியிருக்க விரும்பவில்லை. ஏனென்றால், நாங்கள் உலகத்தின் ஓலா பிராண்டாக இருக்க விரும்புகிறோம். எங்களின் இலக்கு மின்சார வாகன (EV) புரட்சியைத் தவிர வேறு எதையும் விரும்பவில்லை. எலெக்ட்ரிக் சந்தையில் நுழைய வேண்டும் எனத் தீர்மானித்தபோது எங்கள் முன் இரண்டு தேர்வுகளே இருந்தன.
"களத்தில் நமது விளையாட்டு சிறியதாக இருக்க வேண்டுமா அல்லது உலகை மாற்றக்கூடிய பெரிய விளையாட்டை விளையாட வேண்டுமா என்பதே அது. இரண்டாவது வாய்ப்பை தேர்ந்தெடுத்தோம். உலகின் முன்னணி எலெக்ட்ரிக் நிறுவனங்களில் ஒன்றாக ஓலா இருக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்,” என்கிறார் பாவிஷ்.
கிருஷ்ணகிரி ஆலை தொடங்கப்பட்ட சமயத்தில் பாவிஷ் அகர்வால் உதிர்த்த வார்த்தைகள் இவை. இந்த வார்த்தை சில வருடங்களில் உண்மையானது. 2022 - 23 நிதியாண்டில் இந்தியாவில் சுமார் 7.3 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 11,52,021 மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மின்சார இருசக்கர வாகனத்தை பொறுத்தவரையில் மாதத்திற்கு சராசரியாக சுமார் 60,000 வாகனங்கள் இந்தியாவில் கடந்த நிதியாண்டில் வாங்கப்பட்டுள்ளதாக தகவல். ஒட்டுமொத்தமாக இந்த 7.3 லட்ச மின்சார இருசக்கர வாகனத்தில் ஓலா எலெட்ரிக் நிறுவனத்தின் பங்கு சுமார் 22 சதவீதம் என்றும் தகவல். இதற்கு காரணம் அந்த நிறுவனத்தின் வாகனத்தில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்ப அம்சங்கள்தான் என சொல்லப்படுகிறது.
“மின்சார வாகனத்தின் எதிர்காலம் என்பது தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்கும். அதை இரண்டு அல்லது மூன்று என வரையறுக்க முடியும். அதில் ஒன்று மென்பொருள். மற்றொன்று ஆற்றல் (எனர்ஜி) / செல் சார்ந்து இருக்கும். இந்த இரண்டிலும் நாங்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளோம். அதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். இதன் மூலம் விநியோகச் சங்கிலி சார்ந்து ஒரு தளத்தைக் கட்டமைத்து வருகிறோம்,” என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் பாவிஷ் அகர்வால் அண்மையில் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய், ஹீரோ எலெக்ட்ரிக், ஏதர் எனர்ஜி, மகிந்திரா எலெக்ட்ரிக், ஒலெக்ட்ரா க்ரீன்டெக், அசோக் லேலண்ட், ஒகினாவா, ஆம்பியர் ஆகிய நிறுவனங்கள் மின்வாகன தயாரிப்பில் இறங்கியிருக்கின்றன. எனினும், இத்துறையில் டாப்பில் இருந்த டாடா, ஹீரோ போன்ற நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி ஓலா எலெக்ட்ரிக் முன்னணியில் வந்துள்ளது குறைந்த வருடத்தில்.
இதன் பயனாக மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டும் வகையிலும், ஒருமுறை சார்ஜ் செய்தாலே 500 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் வகையிலும் ஓலா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் 2024-ம் ஆண்டின் கோடை காலத்தில் அறிமுகப்படுத்த தீயாக உழைத்துவருகிறது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘ஓலா எலெக்ட்ரிக் பைக்’ நிறுவனம் யூனிகார்ன் கிளப்பில் நுழைந்தது. எலெக்ட்ரிக் கார் உருவாக்கும் முயற்சிக்கு மத்தியில் ஐபிஓ வெளியீட்டுக்கும் தயாராகி வருகிறது. சமீபத்திய நிதி திரட்டல் சுற்றில், சுமார் ரூ.2,500 கோடியை வெற்றிகரமாக திரட்டிய, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மதிப்பீடு ரூ.50,000 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“இந்தியா EV புரட்சியின் உலகளாவிய மையமாக மாற வேண்டும் மற்றும் உலகின் வாகன சந்தையில் 25-வது இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இன்று, ஓலாவில், தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதற்கும், உருவாக்குவதற்குமான திட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக மிஷன் எலெக்ட்ரிக் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளோம். இந்தியாவுக்குத் தகுதியான தரமான தயாரிப்புகளைக் கொண்டு வரவும், உலகின் பிற எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முன்னூதாரணமாக இருக்கக்கூடிய வாகனங்களை இந்தியாவில் உருவாக்கவும் உறுதியேற்றுள்ளோம்,” - பாவிஷ் அகர்வால்.
யுனிக் கதைகள் தொடரும்...
#100UNICORNS | ‘யுனிக்’ கதை 26 - Lenskart: கண்களை கூர்நோக்கி வென்ற பியூஷ் பன்சல்!