#100UNICORNS | ‘யுனிக்’ கதை 34 - Uncademy: பூஜ்ஜியத்தில் தொடங்கி ராஜ்ஜியம் ஆக்கிய கெளரவ் முன்ஜல்!
2015-ல் கையில் ஒரு பைசா இல்லாமல் தொடங்கப்பட்டு, 2020-ல் யூனிகார்ன் அந்தஸ்த்தை பெற்ற எட்-டெக் நிறுவனமான ‘அன்அகாடமி’ அடைந்த வளர்ச்சிக்கு கௌரவ் முன்ஜல்தான் மூலக் காரணம்.
2015-ல் கையில் ஒரு பைசா இல்லாமல் தொடங்கப்பட்டு, 2020-ல் யூனிகார்ன் அந்தஸ்த்தை பெற்ற எட்-டெக் நிறுவனமான ‘
' அடைந்த வளர்ச்சிக்கு கௌரவ் முன்ஜல்தான் மூலக் காரணம்.பாரம்பரியமான வகுப்பறைக் கல்வியும், கரும்பலகை கற்பித்தல் முறைகளும் படிப்படியாக வழக்கற்று வருகின்றன. கல்வித் துறையில் தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டதன் காரணமாக புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கரும்பலகை, காகிதம், பென்சில் அணுகுமுறையை விட அதிகமான மக்கள் மின் கற்றல் எனப்படும் இ-லேர்னிங் கற்றல் முறையை விரும்புவதால், இ-லேர்னிங் தளங்கள் மாணவர்களுக்கான புதிய வகுப்பறைகளாக மாறி வருகின்றன.
இ-லேர்னிங் தளங்களின் வளர்ச்சியில் கொரோனா தொற்றுநோய் நிச்சயமாக மிகப்பெரும் பங்கைக் கொண்டுள்ளது. கொரோனா தொற்றுநோய் சமயத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்ததால் ஆன்லைன் கல்வி வெறும் விருப்பத்திற்கு பதிலாக அவசியமாகி போனது. ஆன்லைன் கல்வி வழங்குவதற்கு எண்ணற்ற நிறுவனங்கள் உள்ளன. எனினும், கொரோனா காலத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னேற்றத்தை கண்ட எட்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்றைப் பற்றிதான் இந்த யூனிகார்ன் அத்தியாயத்தில் காண இருக்கிறோம்.
‘எட்-டெக்’ எனப்படும் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னணி வகிப்பது சில நிறுவனங்களே. எட்டெக் ஸ்டார்ட்அப்பை பற்றி அறிந்தவர்களுக்கு பைஜூஸ் நினைவுக்கு வருவது சகஜம். இன்றைய சூழலில் பைஜூஸ் சிக்கலில் இருப்பது வேறு கதை. ஆனால், அப்படி எத்தகைய சிக்கலில் சிக்காமலும் குறைந்த காலத்தில் எட்-டெக் நிறுவனங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டிய நிறுவனம் என்றால் அது ‘அன்அகாடமி’ (Uncademy). போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஆன்லைன் கற்றல் தளமே ‘அன்அகாடமி’.
கௌரவ் முன்ஜல் போட்ட விதை
மற்ற நிறுவனங்களின் தொடக்கத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது அன்அகாடமி ஆரம்பக்கட்டம். அன்அகாடமி என்னும் ஆலமரம் விருட்சமாக விதைபோட்டவர் கௌரவ் முன்ஜல். அன்அகாடமியின் சிஇஓ இவரே.
வெறும் ஐந்தே ஆண்டுகளில், அன்அகாடமி இந்தியாவின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமாக மாறியுள்ளது. 10 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்ட நிறுவனமாக, அனைவருக்கும் குறைந்த செலவில், தரமான கல்வியை வழங்குவதன் மூலம் பாரம்பரிய கல்வி முறையை அன்அகாடமி மாற்றியமைத்து புரட்சி செய்துள்ளது என்றால் மிகையல்ல.
2015-ல் கையில் ஒரு பைசா இல்லாமல் தொடங்கப்பட்டு, அடுத்த ஐந்தே ஆண்டுகளில் ஜப்பானை தளமாகக் கொண்ட சாஃப்ட் பேங்க் விஷன் நிறுவனத்திடம் இருந்து 150 மில்லியன் டாலர் நிதி திரட்டிய பிறகு, செப்டம்பர் 2020-ல் யூனிகார்ன் அந்தஸ்த்தை பெற்ற எட்டெக் தளமாக அன்அகாடமி வளர்ச்சி பெற்றுள்ளது என்றால், அதற்கு மூலக் காரணம் கௌரவ் முன்ஜல்தான்.
கௌரவ் முன்ஜல் யார், அவர் எப்படி இவ்வளவு பெரிய வளர்ச்சியை சாத்தியப்படுத்தினார், அவருக்கு துணையாக இருந்தது யார், அவர்களின் பின்னணி என்னவென்பதே இன்றைய யூடியூபர்ஸ் தலைமுறை இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் விஷயம்.
யூடியூப் சேனலில் தொடங்கிய பயணம்
கௌரவ் முன்ஜல் 1990-ம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்தார். ஜெய்ப்பூரில் பள்ளிப்படிப்பு, மும்பை NMIMS பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு முடித்தவருக்கு கல்லூரி நாட்களில் இருந்தே தொழில்முனைவோராக வேண்டும் என்பது கனவு. கனவுக்கு வித்திட்டது அவரது கோடிங் ஆர்வம். 12-ம் வகுப்பு படிக்கும்போதே கோடிங் செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டியிருக்கிறார் கௌரவ். அது கல்லூரியிலும் தொடர, தொழில்முனைவோர் கனவு அவரை பற்றிக்கொண்டது.
கனவின் அடுத்தகட்ட செயல்பாடாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கினார். 2010-ல், புத்தாண்டு தீர்மானமாக எடுத்து அந்த வருடத்தின் கடைசியில் 'UnAcademy என்கிற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கினார். ஆரம்பத்தில், ஒரு வெள்ளை பலகையை வாங்கி அதில் ஜாவா போன்ற கோடிங் மொழிகளை பாடமாக எடுத்து, அதை விடியோவாக பதிவு செய்து யூடியூப்பில் வெளியிட்டு வந்துள்ளார். கல்லூரி படிக்கும் காலத்தில் தொடங்கிய இந்த முயற்சியில் படிப்புடன் சேர்ந்து யூடியூப் சேனலை டெவலப் செய்வதில் தான் கௌரவின் ஆர்வம் இருந்தது.
கல்லூரி முடிந்ததும், ஃப்ளாட்சாட் (FlatChat) என்கிற நிறுவனத்தை தனது நண்பர்களுடன் சேர்ந்து நிறுவிய அவர் Directi என்கிற நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகவும் பணிக்கு சேர்ந்தார். இந்த இரண்டு பணிகளுக்கு மத்தியில் யூடியூப் சேனலையும் பராமரித்து வந்தார். ஒருகட்டத்தில், அன்அகாடமி சேனல் படிப்படியாக வளர்ந்து மாணவர்கள் மத்தியில் அங்கீகாரத்தை பெற்றது. அன்அகாடமி மூலம் நாட்டின் கல்வி முறையை மாற்ற முடியும் என்று நம்பிக்கை கொண்டிருந்த கௌரவ், அதையே தனது தொழில்முனைவுக்கான ஐடியாவாக நினைத்தார்.
யூடியூப் டு பில்லியன் டாலர் பிசினஸ்
தனது பிசினஸ் கனவுக்கு தீனியாக இருந்த அன்அகாடமியை நிறுவனமாக மாற்ற நினைத்து அதற்கான வேலைகளை துவங்கிய கௌரவுக்கு தன்னால் மட்டும் தனியாக இதை செய்ய முடியாது என்பது தெரிந்து இருந்தது. அப்படியாக கௌரவ் போய் நின்றது அவரின் குழந்தைப் பருவ நண்பரான ரோமன் சைனி.
ராஜஸ்தானில் குழந்தை பருவத்தை ஒன்றாக கழித்தவர்கள் ரோமன் சைனியும், கௌரவும். குழந்தை பருவத்தில் ஒன்றாக சுற்றிந்த இவர்களை பிரித்தது படிப்பு. கௌரவ் இன்ஜினியர் என்றால், ரோமன் சைனி ஒரு டாக்டர். டாக்டர் மட்டுமல்ல, ஐஏஎஸ் அதிகாரியும் கூட. ரோமன் சைனி தனது 16 வயதில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (AIIMS) தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை முடித்த பிறகு தேசிய மருந்து சார்பு சிகிச்சை மையத்தில் (NDDTC) பணியாற்றத் தொடங்கினார். எனினும், மருத்துவராக ஆறு மாதம் மட்டுமே பணியாற்றினார். அதன்பின், புதிய இலக்கை நோக்கி பயணித்தார். அதுதான் சிவில் சர்வீஸ் தேர்வு. 22 வயதில் யுபிஎஸ்சி தேர்வில் வென்று மிகக்குறைந்த வயதில் ஐஏஎஸ் அதிகாரி ஆனார். மத்தியப் பிரதேசத்தில் துணை கலெக்டராக பணி கிடைத்தது.
சைனி மத்திய பிரதேசத்தில் பணியாற்றி கொண்டிருந்த சமயத்தில்தான் தனது மில்லியன் டாலர் பிசினஸ் ஐடியா உடன் அவரை அணுகினார் கௌரவ். அன்அகாடமி பற்றிய தனது தொலைநோக்குப் பார்வையை விவரித்தார். கௌரவின் பார்வை சைனியை மையமாக நகர்த்தியது. முடிவு, இந்தியாவின் மிக உயர்ந்த அதிகாரம் கொண்ட ஐஏஎஸ் அதிகாரி பணியை துறந்துவிட்டு கௌரவின் அன்அகாடமி மூலம் இந்தியாவில் ஆன்லைன் கல்வி புரட்சியை ஏற்படுத்த பயணமாக்கினார்.
இந்தப் புரட்சி பயணத்தில் மூன்றாவதாக இணைந்த நபர்தான் ஹேமேஷ் சிங். மோதிலால் நேரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பொறியியல் பட்டம் பெற்ற ஹேமேஷ் சிங் கூகுள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்தவர். ஆனால், அதற்கு முன்னதாகவே கௌரவ் ஃப்ளாட்சாட்-ஐ தொடங்கியபோது அதில் இணைந்து பணியாற்றி இருந்தார் ஹேமேஷ். இந்த நட்பின் காரணமாக அன்அகாடமியிலும் ஹேமேஷை இணைத்துக் கொண்டார் கௌரவ்.
இப்படியாக 2015-ல் எட்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமாக உதயமானது கௌரவின் கனவான அன்அகாடமி. முதல் வருடம் அங்கு கற்பவர்களுக்கு கல்வி இலவசம். யூடியூப்பில் சொல்லிக் கொடுத்த கோடிங் படிப்புகள் பிரதான இடம்பிடித்த அதேவேளையில் போட்டித் தேர்வுகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை வழங்கியது அன்அகாடமி. சிறிது சிறிதாக படிப்புகளின் எண்ணிக்கையும் மாணவர்களின் வருகையும் அதிகமானது.
ஆரம்ப கட்டங்களில் அனைத்தும் இலவச வகுப்புகளாக இருந்தன. இதனால் வருமானம் அவ்வளவாக இல்லை. இதன்பின், போட்டித் தேர்வுகளில் கூடுதல் கவனம் செலுத்திய அன்அகாடமி, குறிப்பாக ஐ.ஏ.எஸ், வங்கி, கல்லூரி நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துவதில் தீவிர ஆர்வம் செலுத்தியது.
2019-ம் ஆண்டு பணம் செலுத்திப் படிக்கும் முறையை நிறுவனம் கொண்டுவந்தது. அதன்பின்னரே வருமானம் அதிகமாக கிடைத்தது. 2017 மற்றும் 2018-ம் ஆண்டில் கிடைத்த மொத்த வருமானம் அதன்பின் ஒரு மாதத்தில் கிடைக்க தொடங்கியது.
கொரோனா காலத்தில்...
உலகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் பரவல், பல தொழில்களை முடக்கியிருந்தாலும், சில தொழில்களில் அபரிமிதமான வளர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக, கல்வி சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளன.
இந்திய கல்வி அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்படுவதற்கு கொரோனா காரணமாக அமைந்தது. கொரோனா காலத்தில், இணைய வழி கல்வி வழங்கும் கல்வி தொழில்நுட்ப (Ed-tech) ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எழுச்சியானது கற்பித்தலை மிகப்பெரிய சந்தையாக மாற்றியது. கொரோனா வைரஸுக்குப் பிறகு, இந்தத் துறையின் வளர்ச்சி பல மடங்காக உயர்ந்திருக்கிறது. மாணவர்கள் எங்கும் வெளியே செல்ல முடியாத சூழலில் கல்வி கற்க இணையத்தை நாட வேண்டியிருந்தது.
அப்படியான சூழலில் அன்அகாடமியும் தனது வளர்ச்சியை பல மடங்கு உயர்த்தியது. கிட்டத்தட்ட 35 போட்டித் தேர்வுகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை வழங்கியது. நூற்றுக்கணக்கில் இருந்த ஆசிரியர்களை ஆயிரக்கணக்கில் நியமித்து, 200-க்கும் மேற்பட்ட படிப்புகளை கற்றுக்கொடுத்தது. ஒருகட்டத்தில் 18,000-க்கும் மேற்பட்ட பயிற்றுனர்கள் அன்அகாடமியில் இணைந்தனர்.
கௌரவ் கண்ட கனவு சாத்தியமானது. 3 கோடிக்கும் மேலான நபர்கள் அன்அகாடமியை சப்ஸ்கிரைப் செய்தார்கள். 3.5 லட்சம் நபர்கள் பணம் செலுத்தி படித்தார்கள்.
அடுத்தகட்டத்துக்கு நகர்ந்த அன்அகாடமி Wifistudy, Kreatryx, PrepLadder, CodeChef உள்ளிட்ட நிறுவனங்களை கையகப்படுத்தியது. தொடர்ந்து தளத்தில் 200 கோடி நிமிடங்களுக்கான கன்டென்ட் உடன், ஒவ்வொரு மாதமும் 20,000 இலவச வகுப்புகள் நடத்தப்பட்டன. ஐ.ஏ.எஸ், வங்கி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு, தேர்வு முறையைப் பொறுத்து 20 டாலர் முதல் 150 டாலர் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது.
வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல கௌரவ் முதலீடுகளை திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் பலனமாக ஜெனரல் அட்லாண்டிக், செக்யோயா, நெக்ஸஸ் வென்ச்சர் பார்னட்ஸ், ஃபேஸ்புக் மற்றும் புளூம் வென்ச்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அன்அகாடமியில் முதலீடுகளை குவித்தன. ஜப்பானை தளமாகக் கொண்ட சாஃப்ட் பேங்க் விஷன் ஃபண்டிலிருந்து 150 மில்லியன் டாலர் திரட்டிய பிறகு, செப்டம்பர் 2020-ல் யூனிகார்ன் எட்-டெக் நிறுவனமாக உயர்ந்தது அன்அகாடமி.
பூஜ்ஜியத்தில் தொடங்கிய அன்அகாடமியின் மதிப்பு 2022-ம் ஆண்டு நிலவரப்படி, சுமார் ரூ.26,000 கோடியாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் அன்அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரியான கௌரவ் முஞ்சால் ரூ.1.58 கோடி ஊதியம் பெற்று இருந்தார். ஹேமேஷ் சிங் ரூ.1.19 கோடியும், மூன்றாவது இணை நிறுவனரான ரோமன் சைனி ரூ.88 லட்சமும் சம்பளம் பெற்றனர்.
வளர்ச்சியை தாண்டி 2023-ம் ஆண்டில் சில சறுக்கல்களையும் சந்தித்தது. கொரோனா முடிந்து மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கவே, ஏற்பட்ட மந்தநிலை மற்றும் பணிநீக்கங்கள் காரணமாக நிறுவனர்களுக்கு 25 சதவீதம் ஊதிய குறைப்பு அறிவிக்கப்பட்டது.
மேலும், அன்அகாடமியின் 2.2 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டன. இதில் விப்ரோ, இன்ஃபோஸிஸ், காக்னிசன்ட், கூகுள் மற்றும் அதன் முதலீட்டு நிறுவனமான ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் விவரங்கள் மற்றும் தொடர்புகளும் அடங்கும். இந்தத் தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனைக்கு வந்தது சர்ச்சையானது.
சர்ச்சை, சரிவுகள் அன்அகாடமியவோ, அதன் நிறுவனங்களையோ பாதிக்கவில்லை. சமீபத்தில் ஆன்லைனில் இருந்து ஆஃப்லைன் பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியது அன்அகாடமி. நிறுவனம் தனது முதல் ஆஃப்லைன் மையத்தை ராஜஸ்தானின் கோட்டாவில் நிறுவியது.
நாட்டின் பல்வேறு நகரங்களில் ஆஃப்லைன் கல்விக்கு அடித்தளம் அமைப்பதை கௌரவ் நோக்கமாகக் கொண்டுள்ளார்.
பெங்களூரு, சண்டிகர், அகமதாபாத், பாட்னா, புனே, டெல்லி மற்றும் அவரது சொந்த ஊரான ஜெய்ப்பூரில் இதுபோன்ற மையங்களை நிறுவுவதே அவரது வரவிருக்கும் இலக்கு.
“எங்களின் நோக்கம் கல்வியை ஜனநாயகப்படுத்துவது மட்டுமல்ல... பொருளாதார பின்னணியை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க ச்செய்வதே. அதற்கு அன்அகாடமி எப்போதும் உதவியாக இருக்கும்,” என்கிறார் கௌரவ்.
அவரின் இந்த இலக்குதான் யூடியூபில் தொடங்கி தற்போது இந்த உயரத்தை எட்ட வைத்துள்ளது. இன்றைய பல யூடியூபர்களுக்கு கௌரவ் நிச்சயம் ஒரு இன்ஸ்பிரேஷேன் என்பது மறுப்பதற்கில்லை.
கட்டுரை உதவி: ஜெய்
யுனிக் கதைகள் தொடரும்...
#100UNICORNS | ‘யுனிக்’ கதை 33 - Postman: 13 வயது விதையில் வளர்ந்த 46,000 கோடி மகா விருட்சம்!