#100UNICORNS | ‘யுனிக்’ கதை 33 - Postman: 13 வயது விதையில் வளர்ந்த 46,000 கோடி மகா விருட்சம்!
சிறுவயதில் 80 டாலர் ஊதியத்தில் தொடங்கி இன்றைய மதிப்பில் ரூ.46,000 கோடி வர்த்தக நிறுவனத்தை உருவாக்கிய அபினவ் அஸ்தானாவின் மெகா பயணம்.
ஒரு ஐந்தாம் வகுப்பு சிறுவனுக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்தால் அந்தச் சிறுவன் என்ன செய்வான் என்று கற்பனை செய்து பாருங்கள். மொபைல்போன் டாமினேஷன் உள்ள இக்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். உண்மைதான். ஆனால், அதுவே 1990-களின் இறுதி காலக்கட்டம் என்றால் யோசித்து பாருங்கள். நிச்சயமாக ஆச்சரியமாக பார்த்துக்கொண்டு எதுவும் தெரியாமல் முழிப்பான்.
அப்படி இல்லாமல், அந்தக் கணினியை கொண்டு ப்ரோகிராமிங் செய்து அந்த வயதில் வருமானம் தேடியதுடன் அதையே தொடர்ந்து அன்று டாலரில் பெற்ற வருமானத்தை பிற்காலத்தில் ‘போஸ்ட்மேன்’ (
) என்கிற ஸ்டார்ட்அப் மூலம் தொழில்முனைவோராக ரூ.1,000 கோடியாக மாற்றிக் காட்டினால் எப்படியிருக்கும்?இது கற்பனை அல்ல, நிஜம். அதை செய்தவர் பெயர் அபினவ் அஸ்தானா. இவரது வியத்தகு பயணம்தான் இந்த யூனிகார்ன் அத்தியாயம்.
சுட்டி ப்ரோகிராமர்!
அபினவ் அஸ்தானாவின் கதை கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் அதிகம் அறியப்படாத நகரமான பஸ்தியில் தொடங்குகிறது. அஸ்தானாவின் தந்தை சிவில் சர்வீஸ் பணி. இதனால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பணிபுரியும் நிலை. இந்த காரணங்களால் அஸ்தானாவின் குழந்தைப் பருவ காலம் உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் இருந்தது.
1 முதல் 5ம் வகுப்பு வரை பஸ்தியில் பள்ளிப்படிப்பு. அதன்பின், நேபாள எல்லை அருகே உள்ள லக்கிம்பூர் கேரியில் உயர் நிலைக் கல்வி. பஸ்தியில் 5-ம் வகுப்பு படிக்கும்போது அஸ்தானாவுக்கு கணினி ஒன்றை வாங்கிக்கொடுத்தார் தந்தை. இதனால் சில நாட்கள் நாள் முழுவதும் கேம் விளையாடுவதில் கழிந்தது அஸ்தானாவின் பொழுதுகள்.
இதை கவனித்த தந்தை, கணினியை பயனுள்ளதாக பயன்படுத்த கேட்டுக்கொண்டார். இதனால் கேம் விளையாடுவதில் இருந்து தன் கவனத்தை அஸ்தானா திருப்பியது ப்ரோகிராமிங் பக்கம். தந்தையே அஸ்தானாவுக்கு ப்ரோகிராமிங் கற்றுக்கொடுத்தார். இதனால் அவரின் முழு ஆர்வமும் ப்ரோகிராமிங் மீதே மாறத் தொடங்கியது.
7-ம் வகுப்பு முடிவதற்குள்ளாகவே ப்ரோகிராமிங்கின் அடிப்படையை கற்றுத் தேர்த்தார். 2000ம் தொடக்கத்தில் இணைய பயன்பாடு இந்தியாவில் அறிமுகமான நேரம். இது அஸ்தானாவையும் விட்டுவைக்கவில்லை. இணையத்தின் உதவியுடன் ப்ரோகிராமிங் குறித்து இன்னும் ஆழமாக படித்தார். விரைவாக இணையதள பக்கங்களை உருவாக்குவதில் அவரின் ஆர்வம் மாறத் தொடங்கியது. இதன்காரணமாக HTML, CSS, Flash, PHP ஆகியவற்றைக் கற்றுக் கொண்ட அவரால், 8-ம் வகுப்பிலேயே ஒரு இணையதள பக்கத்தை முழுமையாக உருவாக்க முடிந்தது.
13 வயதில் முதல் வருமானம்
நல்ல தேடலின், பயிற்சியின் அடுத்தகட்டம் வணிகம் தானே. அதேதான் அஸ்தானாவும் செய்தார். அதுவும் 13 வயதில். தன்னைப் போல் ப்ரோகிராமிங்கில் ஆர்வம் கொண்ட சிறுவர்களை தேடி, அவர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தினார். யாஹூவின் (yahoo) குளோனிங் எடுப்பதே இவர்களின் லட்சியமாக இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை.
எனினும், லக்கிம்பூர் கேரியைச் சேர்ந்த இருவர் மற்றும் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் தலா ஒருவர் என ஐந்து சிறுவர்கள் சேர்ந்து வெப்சைட் டிசைன் மற்றும் வெப் அபிளிக்கேஷன் ப்ராஜெக்ட் எடுத்து பணிபுரிந்தனர். அப்படியாக 13 வயதில் அஸ்தானாவுக்கு முதல் வருமானம் கிடைத்தது. அதுவும் டாலரில். முதன்முதலில் அஸ்தானா சம்பாதித்தது 80 அமெரிக்க டாலர். அஸ்தானா ஒரு தொழில்முனைவோராக மாறுவதற்கான அறிகுறியாகவோ அல்லது தொடக்கமாகவோ அவரை அறியாமல் இது நடந்தது.
புதுப்புது முயற்சிகள்
அபினவ் அஸ்தானாவுக்குள் இருந்த தொழில்முனைவோருக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது பிரபல பிட்ஸ் பிலானி பல்கலைக்கழகம். 12-ம் வகுப்பு படிக்கும்போதே பிட்ஸ் பிலானிக்கு தேர்ச்சிபெற்று பொறியியல் படிப்பில் சேர்ந்தார். வழக்கமாக கல்லூரிகளில் மாணவர்களுக்காக மன்றங்கள் இருக்கும். அப்படி பிட்ஸ் பிலானிக்கான மாணவர்கள் மன்றத்தின் பெயர் BITSZone.
இந்த மன்றத்தை நடத்தியவர், மாணவர்களுக்கான ப்ராஜெக்ட் செய்பவர்களை கொண்ட குழுவை உருவாக்கிக் கொண்டிருந்தார். அப்போது புதிதாக பிட்ஸ் பிலானியில் சேர்ந்த அஸ்தானா இதனை அறிந்து அந்த மன்றத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டார். கூடவே, சாஃப்ட்வேர் டெவலப்மென்ட் சென்டரிலும் இணைந்து கொண்டார்.
கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டிலேயே சில நண்பர்களுடன் இணைந்து கல்லூரியின் பனோரமாவை உருவாக்கினார். பனோரமா (Panorama) என்பது அகலப்பரப்புக் காட்சி என்று அழைக்கப்படுகிறது. உதாரணத்துக்கு நீங்கள் பெரிய பரப்பளவுள்ள ஒரு இடத்தையோ காட்சியையோ படம் பிடிக்க வேண்டுமென்றால் நீங்கள் பனோரமா முறையைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரு அகலமான புகைப்படத்தை உங்களால் சாதாரண கேமரா முறை (effect) கொண்டு எடுக்க இயலாது.
சிம்பிளாக சொல்வதென்றால் 360டிகிரியில் புகைப்படத்தை காண்பதற்கு பதிலாக நீங்கள் பனோராமா பயன்படுத்தினால் சாத்தியம். இன்றைய கூகுள் ஸ்ட்ரீட் வியூக்கு முன்னோடி இந்த பனோரமா. இதை அப்போதே நண்பர்கள் உதவியுடன் உருவாக்கினார் அஸ்தானா. BITS360 என பெயரிடப்பட்ட இது பிட்ஸ் பிலானி கோவா வளாகத்தில் பிரபலமானது. தொடர்ந்து இணையதளங்களை உருவாக்கி வருமானம் ஈட்டிய அஸ்தானா BITS360, ExamCrunch மற்றும் LetMeKnow.in என பல பெயர்களில் புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டார்.
இப்படியான நேரத்தில் யாஹூ (Yahoo) நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் வாய்ப்பு. நாம் இன்று அஸ்தானா பற்றி தெரிந்துகொள்வதற்கும், அவரின் நிறுவனம் என்ன, அது என்ன செய்தது என்பதை அறிந்துகொள்வதற்கும் ஆரம்ப புள்ளி இந்த யாஹூ இன்டர்ன்ஷிப் வாய்ப்பே. அஸ்தானா இன்டர்ன்ஷிப் சென்ற சமயத்தில் யாஹூ தனக்கான API தொழில்நுட்ப தளத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தது.
யாஹூவில் அஸ்தானாவுக்கு வழிகாட்டியாக இருந்தவரும் API குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தார். BITS360, ExamCrunch மற்றும் LetMeKnow.in போன்ற இணையதளங்களை உருவாக்கியபோதே API தொழில்நுட்பம் குறித்து அறிந்து வைத்திருந்த அஸ்தானாவுக்கு யாகூ, API குறித்த கூடுதல் அறிவை, அதன் முக்கியத்துவத்தை உணரவைத்தது.
API என்றால் என்ன?
API-ன் விரிவாக்கம் application programming interface ஆகும். API என்பது C++ அல்லது JavaScript போன்ற ப்ரோகிராமிங் லாங்குவேஜ்களில் எழுதப்பட்ட நெறிமுறைகள் மற்றும் வழிமுறைகளின் தொகுப்பாகும். இது இரண்டு மென்பொருள்கள் ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்பு கொள்ளும் என்பதை தீர்மானிக்கிறது.
சிம்பிளாக, ஒரு அப்ளிகேஷனில் இருந்து இன்னொரு அப்ளிகேஷனுக்கு இடையிலேயோ, அல்லது ஒரு சர்வரில் இருந்து இன்னொரு சர்வருக்கு இடையிலேயே டேட்டா டிரான்ஸ்பர் மற்றும் கம்யூனிகேஷன் நடைபெறுவதற்கு உதவுவது தான் API. இன்னும் எளிதாக சொல்வதென்றால் லெட்டரை எழுதுபவருக்கும், பெறுபவருக்கும் இடையே செயல்படும் போஸ்ட்மேன் (Postman) போன்றது. இணைய செயல்பாடுகள் அனைத்துக்கும் அடிப்படையே இதுதான்.
ப்ரோகிராமிங் தெரிந்தவர்கள் மொழியில் சொல்வதென்றால் பேக் எண்ட் செயல்பாடுதான் API. கல்லூரிகளில் தனியாக வெப்சைட்களை உருவாக்கி கொண்டிருந்த அஸ்தானா API-ல் இன்னும் நிபுணத்துவம் பெறவேண்டும் என எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் யாஹூ வாய்ப்பு கிடைத்து, அதன்மூலம் API குறித்த கூடுதல் அறிவை வளர்த்துக்கொண்டார்.
யாஹூ வேலை நிராகரிப்பு
API-ல் காட்டிய ஆர்வம் யாஹூவில் அஸ்தானாவுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. ஆனால், அந்த வாய்ப்பை நிராகரித்தார். BITS360 மூலம் சில திட்டங்களை உருவாக்கி அதன்மூலம் பணம் சம்பாதித்தார். இதன் முதல் தயாரிப்பான பனோரமாவை பிரபலபடுத்தி அதன்மூலம் நிதியும் திரட்டி TeliportMe என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
வினீத் என்ற நண்பருடன் 2010-ல் நிறுவப்பட்டTeliportMe ஒரு தொழில்நுட்ப நிறுவனமாகும். இது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனில் Panorama360-ஐ செயல்படுத்த உதவுவது. கூகுள் ஆண்ட்ராய்டு உதவியுடன் TeliportMe பனோரமா ஆப்ஸ் ப்ளே ஸ்டோரில் இடம்பெற்றது. அந்த நேரத்தில், ப்ளே ஸ்டோரில் இடம்பெற்ற இந்தியாவிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரே பயன்பாடு TeliportMe மட்டுமே.
மூன்றரை வருடங்களுக்குப் பிறகு, நிறுவனத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக வினீத் மற்றும் அபினவின் எண்ணங்கள் மாறின. இருவராலும் ஒருமித்த கருத்துக்கு வர முடியவில்லை. அஸ்தானா புதிய விஷயங்களை முயற்சிக்க முடிவு செய்தார். TeliportMe-ஐ விட்டு வெளியேறினார் அஸ்தானா.
போஸ்ட்மேன் உதயம்
அப்போதைய காலகட்டத்தில் API தொழில்நுட்பத்தை சோதனை செய்வதும், பிழைத்திருத்தம் செய்வதும் அவ்வளவு எளிதானதாக இல்லை. இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் அஸ்தானா உருவாக்கியதுதான் சாஸ் (SaaS) அடிப்படையிலான ‘போஸ்ட்மேன்’ (Postman) என்னும் ஸ்டார்ட்அப் நிறுவனம்.
சொல்லப்போனால், TeliportMe-ல் இருந்தபோதே போஸ்ட்மேன் தொடங்குவதற்கான பணிகளை தொடங்கிவிட்டார். டெவலப்பர்கள் எதிர்கொண்ட API சோதனை, பிழைத்திருத்தத்தை ஜாவா ஸ்கிரிப்ட் மூலம் செய்துகொடுப்பதே ‘போஸ்ட்மேன்’ நிறுவனத்தின் பணி. இயற்கையாகவே போஸ்ட்மேனுக்கு சில வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். API குறித்த தேடல்களில் இருந்தவர்களுக்கும் போஸ்ட்மேன் வெகுவிரைவில் அறிமுகமானது.
போஸ்ட்மேனை ஒரு திட்டமாக ஸ்பான்சர் செய்யத் தயாராக இருந்த சில நிறுவனங்களிடம் இருந்து மாதம் 200 டாலர் பெற இது உதவியது. 2012-ல் தொடங்கி அதுவரை பரீட்சார்த்த முயற்சியாக தொடங்கிய போஸ்ட்மேனின் பயணம் 2014-ல் போஸ்ட்மேன் நிறுவனத்தை அதிகாரபூர்வமாக தொடங்க வைத்தது. அஸ்தானா உடன் யாஹூவில் பணியாற்றிய அங்கித் மற்றும் அபிஜித் இணைந்தனர். தொடங்கிய சில மாதங்களிலேயே அரை மில்லியன் பயனர்களையும் பெற்றது.
அசுர வளர்ச்சி...
இப்படி தொடங்கிய போஸ்ட்மேன் இன்று உலகெங்கிலும் உள்ள 20 மில்லியனுக்கும் அதிகமான டெவலப்பர்களால் பயன்படுத்தப்படுகிறது. இதில் இந்தியாவின் மூன்றாவது பெரிய தனியார் வங்கியான Axis Bank, டிராவல் நிறுவனமான Goibibo, Meta Platform-க்கு சொந்தமான WhatsApp மற்றும் Facebook. இதுதவிர சேல்ஸ்ஃபோர்ஸ், ஸ்ட்ரைப், ட்விட்டர், சிஸ்கோ, பேபால் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவையும் அடங்கும்.
போஸ்ட்மேனின் அசுர வளர்ச்சி விரைவாக 2020-ல் யூனிகார்ன் அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. இந்தியாவில் அதிவேகமாக யூனிகார்ன் அந்தஸ்தை பெற்ற SaaS ஸ்டார்ட்-அப் ‘போஸ்ட்மேன்’ நிறுவனமே.
இன்று போஸ்ட்மேன் நிறுவனம் 30 நாடுகளில் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. அதன் முக்கிய சந்தைகள் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் இந்தியா. உலகளாவிய ரீதியில் 11 மில்லியனுக்கும் அதிகமான டெவலப்பர்களால் பயன்படுத்தப்படுகிறது.
பெங்களூரு மற்றும் சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்டு தொடங்கப்பட்ட போஸ்ட்மேனின் முதலீட்டாளர்கள்
தலைவர் கோகுல் ராஜாராம் மற்றும் ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம் போன்ற முக்கிய தொழில்முனைவோர்கள்.Postman இதுவரை 6 சுற்றுகளில் மொத்தமாக $434M நிதி திரட்டியுள்ளது. இதன் முதல் நிதிச் சுற்று அக்டோபர் 31, 2014 அன்று நடைபெற்றது. இவர்களுக்கு சமீபத்தில் D சுற்று நிதியாக 2021ல் 225 மில்லியன் டாலர் கிடைத்தது. இந்நிறுவனம் 5.6 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தனக்குள் இருந்த பொறியாளர் மூளை ஒவ்வொரு பிரச்சனையின் ஆழத்துக்கும் சென்று அதை ஒரு தொழில் முனைவோர் மனநிலையுடன் தீர்க்க விரும்புவதாக அஸ்தானா ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில், API பற்றி அஸ்தானாவுக்கு எதுவும் தெரியாது. ஆனால், அதில் போதுமான நிபுணதத்துவம் பெற வேண்டும் என்கிற ஆர்வம், அதை முழுவதுமாக அறிந்துகொண்ட பின்னர் அதில் உள்ள சிக்கல்களை தீர்க்க வேண்டும் என்ற எண்ணமே அஸ்தானாவை இந்த உயரத்தை குறுகிய ஆண்டுகளிலேயே எட்ட வைத்தது.
ஆர்வம் இருந்தால், அதில் உழைப்பை செலுத்தினால் சாதிக்கலாம் என்பதற்கு சிறுவயதில் 80 டாலர் ஊதியத்தில் தொடங்கி இன்றைய மதிப்பில் ரூ.46,000 கோடி கொண்டுள்ள நிறுவனத்தை உருவாக்கியிருக்கும் அபினவ் அஸ்தானாவின் பயணமே சான்று.
யுனிக் கதைகள் தொடரும்...
#100UNICORNS | ‘யுனிக்’ கதை 32 - Pine Labs: ஃபின்டெக் வெற்றிக் கதைகளில் தனி ரகம்!