#100Unicorns |'யுனிக் கதை' 01 | InMobi - இரு பில்லியன் டாலர் ஸ்டார்ட்-அப்’களை உருவாக்கிய கான்பூர் இளைஞர்!
2007ல் தொடங்கப்பட்ட ‘mKhoj’ என்ற ஸ்டார்ட்-அப் பின்னர் 'InMobi’ என்று பெயர் மாற்றப்பட்டு விளம்பர-டெக் உலகில் கால்பதித்து, முதலீடுகளைப் பெற்று இந்தியாவின் முதல் யூனிகார்ன் அந்தஸ்த்தை 2011ல் அடந்தது. இந்த வெற்றி சுலபமானதல்ல என்பதற்கு அதன் நிறுவனர் நவீன் திவாரியின் கதை உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டும்.
#100Unicorns | 'யுனிக் கதை 01 | InMobi
கொரோனா பேரலையால் 2020-ம் ஆண்டை பல நிறுவனங்களும் மிகக் கடினமாக கடந்தன. ஆனால், பெங்களூருவைத் தளமாக கொண்ட விளம்பர தொழில்நுட்ப யுனிகார்ன் நிறுவனமான 'இன்மொபி' (
) கொரோனா பேரலையில் அசாத்திய நீச்சல் அடித்து முன்னேறியது."2020 தான் எங்களுக்கு சிறந்த ஆண்டு..." என்கிறார் இந்தியாவின் முதல் யூனிகார்ன் நிறுவனம் என்ற பெருமையைத் தன்னகத்தே கொண்ட InMobi-யின் நிறுவனர் நவீன் திவாரி.
இதற்கான காரணத்தை பின்னால் அறிவோம். முன்பாக, இன்மொபி உருவான கதையும், வளர்ந்த பாதையையும் சற்றே ரீவைன்ட் செய்வோம்.
யார் இந்த நவீன் திவாரி?
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்தவர் நவீன் திவாரி. இவரின் குடும்பமே கல்வியில் சிறந்து விளங்கியது எனலாம். இவரின் பாட்டியும் தந்தையும் ஐஐடி-கான்பூரின் முன்னாள் பேராசிரியர்கள். நவீனின் அத்தை இதே ஐஐடியில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தனது குடும்ப வழியை பின்பற்றி நவீனும் ஐஐடி-கான்பூரில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்தார்.
முதல் பணியே புகழ்பெற்ற கன்சல்டன்சி நிறுவனமான மெக்கின்சியில். மூன்றாண்டு காலம் அங்கு பணிபுரிந்தவர், ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ படிக்கச் சென்றுவிட்டார்.
எம்பிஏ முடித்தவர்களின் ஆஸ்தான கனவு, பிசினஸ் தொடங்குவதே. அதே கனவின் அப்டேட் வெர்ஷனான ஸ்டார்ட்-அப் முயற்சியில் இறங்கினார் நவீன். பல்வேறு விஷயங்களை பரிசோதித்தவருக்கு தோன்றியது mKhoj ஐடியா.
எஸ்எம்எஸ் அடிப்படையிலான தேடலைப் பயன்படுத்தி தகவல் சிக்கலைத் தீர்ப்பதே இதன் கான்செப்ட். எளிதாகச் சொல்வதென்றால், எஸ்எம்எஸ் மூலம் சந்தேகங்கள் கோரினால், அதற்கான தகவல் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். இந்த கான்செப்ட் உடன் மும்பையில் அலுவலகம் திறந்தார் நவீன். இப்படியாக ஆரம்பித்து, எஸ்எம்எஸ் விளம்பர நெட்வொர்க்காக ஒருகட்டத்தில் இந்நிறுவனம் மாற்றம் கண்டது.
வாங்கிய அடியும், வெளிவந்த அப்டேட்டும்:
மற்ற ஸ்டார்ட்அப் முயற்சிகளைப் போலவே, mKhoj நிறுவனமும் நிறைய ஏற்றத் தாழ்வுகளை கண்டது. 2007 வாக்கில் தோன்றிய இந்த ஐடியா புதிதாக இருந்தாலும், சந்தைக்கு வந்த சில மாதங்களுக்குப் பிறகு, இந்த மாடல் முன்பு எதிர்பார்த்ததுபோல் இல்லை. இந்தியாவின் கலாச்சார அம்சத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள இந்நிறுவனம் தவறியதால் பயனர்களை கவர முடியவில்லை.
இதனால், சேவைக்கான தேவை மிக அதிகமாக இல்லை என்பதால் வருமானம் என்பது குறைந்து கொண்டே இருந்தது. சில மாதங்களில் இழுத்து மூடுவது என்ற கடினமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கான முடிவை எடுக்கும் மீட்டிங் மட்டும் 18 மணிநேரம் நடந்துள்ளது.
அந்த 18 மணிநேர கூட்டு ஆலோசனையில் பிறந்த புது யோசனை, mKhoj-ன் அப்டேட் வெர்ஷன் எனலாம். இந்தியர்கள் அப்போது இணைய வசதி கொண்ட மொபைல் பயன்பாட்டுக்கும், கணினி பயன்பாட்டுக்கும் மாறியிருந்தனர். இணையம் இந்தியர்களின் பிடித்தமான ஒன்றாக இருந்ததால், எஸ்எம்எஸ் மூலம் விளம்பரம் மற்றும் தகவல் என்ற நவீன் நிறுவனத்தின் கான்செப்ட் அந்நியப்பட்டு நின்றது.
இதைப் புரிந்துகொண்ட 8 பேர் கொண்ட நவீன் அண்ட் கோ, நிறுவனத்தின் கான்செப்ட்டை சிறிது மாற்றியமைத்து எஸ்எம்எஸ் வணிகத்தை கைவிட்டு, வலுவான எதிர்காலத்திற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கிய மொபைல் இணையச் சூழல் (mobile web ecosystem) அமைப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியது.
புதிய முயற்சிக்கு ஏற்ப புதிய பெயரும் வைக்கப்பட்டது. (புதிய ஐடியா க்ளிக் ஆன பின் 2009-ம் ஆண்டு நடுப்பகுதியில் தான் mKhoj பெயர் மாற்றம் செய்யப்பட்டு InMobi ஆக மாறியது). இப்படியாக InMobi நிறுவனம் அறிமுகம் செய்யப்பட்டது.
“சில மாதங்களுக்கு முன்புதான் mKhoj என்ற நிறுவனத்துக்காக கொடுக்கப்பட்ட அனைத்து உழைப்புகளும் வீணாகி நிறுவனம் இழுத்துமூடப்பட்டது. இந்தநேரத்தில், புதிய முயற்சியில் இறங்குவது என்பது அணியில் இருந்த ஒவ்வொருவருக்கும் உணர்ச்சிவசமான காலகட்டமாக இருந்தது,” என்கிறார் நவீன்.
இந்தப் புதிய முயற்சியின் எதிர்காலம் குறித்து அனைவரின் மனதிலும் ஆயிரம் கேள்விகள் இருந்ததால், அதை கடந்தது என்பது அவ்வளவு எளிதாக அமையவில்லை, என்றும் தெரிவிக்கிறார்.
வெற்றிக் கொடி கட்டு...
மன உறுதியுடன் சம்பளம் எதுவும் இல்லாமல், இன்மொபி-க்காக அந்த எட்டு பேரும் உழைக்கத் தொடங்கியுள்ளனர். இன்மொபி-யின் தொடக்க காலகட்டம் அவ்வளவு கடினமாக அமைந்த அந்த நேரத்தில்தான் 8 பேரும் சிறந்த, அர்பணிப்பன உழைப்பை கொடுக்க, முதலீட்டாளர்கள் பார்வை நிறுவனம் பக்கம் திரும்பியுள்ளது.
2008ல் சிரீஸ் ஏ முதலீடாக $7.1 மில்லியனும், 2010ல் சிரீஸ் பி முதலீடாக $8 மில்லியனையும் Kleiner Perkins Caufield & Byers இடமிருந்தும் திரட்டியது InMobi. 2011ல் சாப்ட்பேன்க் இடமிருந்து $200 மில்லியனை சிரீஸ் சி நிதியாக திரட்டியது. 2019 வரை மொத்தம் 7 சுற்று நிதியாக மொத்தம் $320.6 மில்லியனை உயர்த்தி InMobi வளர்ச்சிப்பாதையில் பயணித்தது.
முதலீடுகளைப் பெற்று புதிய பயணத்தை மும்பையில் இருந்து இந்தியாவின் டெக் சிட்டியான பெங்களூருவில் தொடங்கினர். விளம்பரத் தொழில்நுட்ப நிறுவனமாக தொடங்கிய இன்மொபி, மூன்றே ஆண்டுகளில் Adtech ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ’இந்தியாவின் முதல் யூனிகார்ன்’ என்ற நிலையை எட்டியது.
மூன்று ஆண்டுகளில் இன்மொபி செய்த சாதனையை, அதன் துணை நிறுவனமான 'கிளான்ஸ்' (
) தொடங்கிய 2 ஆண்டுகளுக்குள் யூனிகார்ன் அந்தஸ்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது. கிளான்ஸ், Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைக் கொண்டு அவர்களுக்குத் தேவையான பொழுதுபோக்கு, விளையாட்டு, ஃபேஷன் போன்ற துறைகளின் தகவல்களை மொபைல் போன் லாக் ஸ்கிரீனில் வழங்குகிறது.அடுத்தடுத்த பாய்ச்சல்
ஆசியாவை, குறிப்பாக இந்தியர்களை நம்பி, இன்மொபி தனது வணிக சேவையை தொடங்கினாலும், தற்போது மொத்த வணிகத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை அமெரிக்காவே கொண்டுள்ளது. சீனா சுமார் 20 சதவீதமும், ஆசியா மற்றும் ஐரோப்பா எஞ்சிய சதவீத பங்குகளை கொண்டுள்ளது.
இன்மொபி ஆரம்பிக்கப்பட்ட ஓர் ஆண்டில் உலகின் 4 நகரங்களில் அலுவலகங்கள் திறக்கப்பட்டு, 8 பேராக இருந்த நிறுவனம் 50 பேர் என்ற எண்ணிக்கையை தொட்டது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் மொபைல் விளம்பர நெட்வொர்க்குகளில் ஒன்றாக மட்டுமல்லாமல், இந்தியாவின் முதல் யூனிகார்ன் நிறுவனம் என்ற பெருமையையும் கொண்ட ஒரே நிறுவனம் இன்மொபி.
கொரோனா காலக்கட்டத்தில் எல்லாமே இணையமயம் ஆன சூழலில், அதை இயன்றவரை தனக்குச் சாதகமாகவும் பயன்படுத்திக் கொண்டது. 2022ல் இன்மொபி, 20-30 ஊழியர்களுடன் துபாயில் தனது அலுவலகக் கிளையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், கூகுள் மற்றும் Mithril Capital இடமிருந்து $145 மில்லியன் முதலீடு பெற்று, 115 மில்லியனுக்கும் அதிகமான தினசரி பயனர்களுக்கு 'கிளான்ஸ்' தனது சேவையை வழங்கி வருகிறது. இந்த முக்கிய முதலீட்டால் 2020ல் எலைட் யூனிகார்ன் கிளப்பில் இணைந்தது Glance.
டிக் டாக் பார்மெட்டில் கொண்டுவரப்பட்ட ஷார்ட் வீடியோ தளமான 'Roposo'-வை 2019ல் கிளான்ஸ் வாங்கி, தொழில்நுட்பக் குழுவை விரிவுபடுத்தி, புதிய சேவைகளைத் தொடங்கியது.
inMobi அதைத்தொடர்ந்து Glance என இரண்டு ஸ்டார்ட்-அப்’களை தொடங்கி குறுகிய காலத்தில் யூனிகார்ன் அந்தஸ்த்தை அடையச்செய்த நவீன் திவாரியின் செயல்திறன் நிச்சயம் உற்று நோக்கவேண்டியது.
வெற்றிக் கதையின் நாயகனுக்கு கைகொடுத்தவை இந்த ஐந்து உத்வேக கொள்கைகள்தான். அவை: பெரிய பெரிய கனவு காண், கெத்தாக முடிவுகளை எடு, ஒருபோதும் கைவிடாதே, நம்பு - நம்பிக்கை ஏற்படுத்து, வேகத்தைக் காட்டு.
“ஒரு தொழில்முனைவராக, நீங்கள் 100 நிராகரிப்புகளையும் ஒரே ஒரு ‘ஆம்’ என்ற பதிலையும் சந்திப்பீர்கள். அந்த ஒரு ‘யெஸ்’ தான் உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் தொடர ஊக்கத்தையும், உந்துதலையும் தரும்,” என்று சொல்வார் நவீன் திவாரி.
யுனிக் கதைகள் தொடரும்...
கட்டுரை உதவி: ஜெய்