'இந்திய கல்வி முறை மாறினால், வேலை வாய்ப்பின்மை குறையும்'- 'Coursee' நிறுவனர் சிதம்பரேசன் சக்தி
இந்தியாவில் படித்த இளைஞர்கள் பலருக்கு, அவர்கள் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை என அண்மைய ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இதற்கு தமிழகம் ஒன்றும் விதிவிலக்கல்ல.
தமிழகத்திலும் பல பட்டதாரி இளைஞர்கள் தங்கள் படிப்புக்கு சம்பந்தம் இல்லாத ஏதோ ஒரு வேலையை செய்து தங்கள் அன்றாடத் தேவையை பூர்த்தி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்தியாவில் அதிகரித்து வரும் வேலையில்லாப் பிரச்னை இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும், பல பட்டதாரி இளைஞர்களுக்கு ஆங்கில அறிவு, மற்றும் அவர்கள் படித்த படிப்பின் மேல் அவர்களுக்கு இல்லாத தன்னம்பிக்கை, மற்றும் புலமை ஆகியவையே இதற்கு மிக முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளது.
இவ்வாறு படித்த பட்டதாரி இளைஞர்களுக்குத் தேவையான ஆங்கில அறிவு மற்றும் அவர்களுக்குத் தேவையான தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக ஆரம்பிக்கப்பட்டதே “கோர்சி” Coursee கல்வி நிறுவனம்.
பரபரப்பான காலை வேளையில், நாம் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் அளித்தார் 'கோர்சி’ கல்வி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் சிதம்பரேசன் சக்தி.
திருச்செந்தூர் அருகே நடுவக்குறிச்சி என்ற கிராமத்தில் பிறந்து, சாத்தூரில் தனது பட்டப்படிப்பை முடித்து, பின்னர் தான் பட்டம் பெற்ற கல்லூரியிலேயே விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார் சக்தி சிதம்பரேசன். தான் விரிவுரையாளராக பணியாற்றிய காலத்தில், மாணவர்களுக்கான கற்பித்தலோடு, வேறு சில கல்வி சார்ந்த செயல்களில் ஈடுபடும் சந்தர்ப்பம் தனக்கு கிடைத்தாக சொல்லும் சக்தி, கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கற்பித்தல் முறை மாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய கல்வி முறை ஒன்றை அறிமுகப்படுத்தி, அதனை கல்லூரியில் பணியாற்றும் சக விரிவுரையாளர்களுக்கு கற்பித்துக் கொடுத்ததாக தெரிவித்தார்.
இந்த கல்வி முறை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மேலும் பல கல்லூரிகளில் தன் புதிய கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் சக்தி தெரிவித்தார்.
கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிய போது, ஒரு நாள் தன்னை அழைத்த அக்கல்லூரியின் இயக்குனர், 40 000ரூபாய் அதிகப்படியான சம்பளத்தை தனக்கு அறிவித்ததாகவும், அப்போதுதான் தனக்குள்ளும் ஒரு சிறந்த ஆளுமை திறன் இருப்பதை உணர்ந்ததாக சொல்லும் சக்தி, தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னையில் முதன் முதலாக "கோர்சி பிளஸ்” என்ற கல்வி நிறுவனத்தை தொடங்கியதாகத் தெரிவித்தார்.
இக்கட்டான காலகட்டம்
3 நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்த “கோர்சி பிளஸ்”, ”கோர்சி” கல்வி நிறுவனமாக பெயர் மாற்றம் அடைந்த போது, தன் நண்பர்கள் குடும்ப சூழ்நிலைக் காரணமாக , மாத சம்பளத்துக்கு வேலைக்குச் சென்று விட்டதாக கூறிய சக்தி, அந்தக் காலப்பகுதியில், தான் மிகவும் கஷ்டப்பட்டதாக தெரிவித்தார். ஆயினும் தன் மனைவியின் ஆதரவு இருந்ததால் , தற்போதைய நிலைக்கு தான் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நிறுவனத்தின் மார்க்கெட்டிங்
”கோர்சி பிளஸ்” என தன் கல்வி நிறுவனம் தொடங்கிய காலகட்டத்தில், சென்னையில் உள்ள பல கல்லூரிகளுக்குச் சென்று, தங்கள் கல்வி நிறுவனம் தொடர்பாக விளம்பரப்படுத்தியதாக சொல்கிறார். தற்போது, தன் கல்வி நிறுவனம் மூலம் வேலை வாய்ப்பு பெற்றவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் பல பேர் தன் கல்வி நிறுவனத்தை அணுகுவதாக கூறினார்.
தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என பல பேர் நினைக்கும் இன்றைய கால கட்டத்தில், படித்து விட்டு, படிப்புக்கு தக்க வேலை கிடைக்காமல் அவதியுறும் பல பேருக்கு, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற வழிகாட்டும் சக்திக்கு ஒரு பெரிய சலாம்.
அடுத்த கட்டம்
”கோர்சி” கல்வி நிறுவனம் ஆரம்பித்து 4 வருடங்களில் சுமார் 4000 பட்டதாரி இளைஞர்கள், இக்கல்வி நிறுவனம் மூலம் தாங்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை பெற்றுள்ளதாக தெரிவித்த சக்தி, அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தர வேண்டும் என்பதே கோர்சியின் அடுத்த கட்ட நகர்வு எனத் தெரிவித்தார். இதற்காக மிகவும் பயிற்சி பெற்ற 10 பேர் தன் கோர்சி கல்வி நிறுவனத்தில் முழு நேர பயிற்சியாளர்களாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இணையதள முகவரி: Cousee
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்:
செயல்முறைக் கல்வி மூலம் குழந்தைகள் வாழ்வில் ஏற்றத்தை தரும் 'ஃப்ளின்டோபாக்ஸ்'
'சுவரில்லா பள்ளி', 'கல்கேரி' : இந்திய மாற்றுக் கல்வி முறை பள்ளிகள்!