மும்பை டப்பாவாலாக்களுடன் இணைந்து கூரியர் சேவை வழங்கும் 13 வயது சிறுவன்!
ஒரு நபர் சார்ஜர், இயர்ஃபோன், குடை போன்ற பொருட்களை அலுவலகத்திலோ நண்பரின் இருப்பிடத்திலோ மறந்து வைத்துவிடுவதற்காக வருத்தப்படுவதற்கு ஒரு மாதத்தில் சராசரியாக ஆறு மணி நேரங்கள் செலவிடுகிறார்.
இந்தப் புள்ளிவிவரம் முழுமையாக உண்மையல்ல என்றாலும் இதுபோன்று மறந்து வைத்துவிட்ட பொருட்களை உடனே திரும்ப பெறுவதற்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் திலக் மேத்தா என்பவர் மும்பையில் ஒரு ஸ்டார்ட் அப்பை அறிமுகப்படுத்தியிருப்பது முற்றிலும் உண்மை. நான்கு முதல் எட்டு மணி நேரத்தில் டெலிவர் செய்யப்படும் அளவிற்கு இவரது கூரியர் சேவை விரைவானது என்பதுடன் மிகவும் இளம் வயதிலேயே தொழில்முனைவோர் ஆனவர்களில் திலக்கும் ஒருவர். ஆம் இவரது வயது வெறும் 13 மட்டுமே.
இந்த இளம் தொழில்முனைவர் மும்பையில் உள்ள கரோடியா சர்வதேச பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். ஒருமுறை அவரது உறவினர் வீட்டில் சில புத்தகங்களை மறந்து வைத்துவிட்டார். அந்தப் புத்தகங்கள் உடனடியாக அவர் கைக்கு கிடைக்க உதவும் சேவை ஏதேனும் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார். இந்தச் சம்பவமே இத்தகைய முயற்சி குறித்து அவரை சிந்திக்க வைத்தது.
”பல நாட்களாக இது குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தேன். என் கட்டிடத்தில் டப்பாவாலாவைப் பார்த்தபோது பேப்பர் அண்ட் பார்சல் திட்டம் உதித்தது. டப்பாவாலாக்களின் உணவு விநியோக வலைத்தொடர்பின் துரிதமான திறமையான செயல்பாடுகளைக் கண்டு எப்போதும் வியந்து போவேன். இந்த வலைத்தொடர்பை உணவு அல்லாத பிற பொருட்களுக்கும் பயன்படுத்த முடியுமா என வியந்தேன்,” என்று நினைவுகூர்ந்தார்.
”நான் பள்ளியில் படிக்கும் சிறுவன் என்பது ஒரு பொருட்டல்ல. இது ஒரு தீர்வுகாண வேண்டிய பிரச்சனை என்கிற கண்ணோட்டத்தில் பார்த்தேன். அப்போதிருந்து தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்தோம்,” என்றார். லாஜிஸ்டிக்ஸ் துறையில் சிறப்பாக செயல்பட்டு வந்த இவரது அப்பா விஷால் மேத்தா பேப்பரில் இருந்த இந்த திட்டம் சந்தையில் செயல்பட உதவினார்.
டப்பாவாலா விநியோகம்
திலக் இந்த முயற்சிக்கு ஏற்கெனவே இருந்த வலைத்தொடர்பைப் பயன்படுத்தத் துவங்கி இறுதியில் மும்பையில் மிகவும் நம்பகமான விநியோக சேவை வழங்கும் டப்பாவாலாக்களுடன் இணைந்தார். பேப்பர்ஸ் அண்ட் பார்சல்ஸ் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி தவறே இழைக்காத ஒரு வலைத்தொடர்புடன் இணைந்தது மட்டுமின்றி மொபைல் செயலி வாயிலாக ஒரே க்ளிக்கில் வீட்டிற்கே சென்று கூரியர் சேவையை அதே நாளே வழங்கி இந்தப் பிரிவில் தொழில்நுட்பத்தைப் புகுத்தினார்.
பேப்பர்ஸ் அண்ட் பார்சல்ஸ் டப்பாவாலாக்கள் செயல்படும் முறையில் மாற்றத்தை புகுத்துகிறது. அதாவது இந்தச் சேவையை வழங்குவதற்காக இவர்கள் பிஎன்பி செயலியுடன்கூடிய ஆண்டிராய்ட் போன்களைக் கொண்டிருப்பார்கள். பயனர்கள் கூகுள் ப்ளேஸ்டோர் அல்லது ஆப்ஸ்டோரில் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் அவர்களது பார்சலை சேகரிப்பதற்கான விண்ணப்பத்தை முன்வைக்கலாம். செயலி இருப்பிடத்தைக் கண்டறியும்.
இந்த ஆர்டர் குறித்து டப்பாவாலாக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் பார்சலை அனுப்புவோரின் வீட்டிலிருந்து பார்சலை பெற்றுக்கொள்வார்கள். பின்னர் அந்த பார்சலை பெற்றுக்கொள்பவரின் பகுதியில் உள்ள முக்கிய மையத்தில் அது கொண்டு சேர்க்கப்படும். அங்கிருந்து இறுதி முகவரிக்கு பார்சல் அனுப்பப்படும். செயலி சார்ந்த இந்தச் சேவையானது நீண்ட லாஜிஸ்டிக்ஸ் செயல்முறையைத் தவிர்த்து, நேரத்தை சேமித்து, அஞ்சல் செயல்முறையைக் குறைக்கிறது.
வாடிக்கையாளர்களிடமிருந்து நேரடியாக பார்சலை பெற்றுக்கொள்ளும் முறையை இதுவரை எந்த கூரியர் நிறுவனமும் பின்பற்றியதில்லை. பேக்கேஜ் மற்றும் பேப்பர்கள் நான்கு முதல் எட்டு மணி நேரங்களில் கொண்டு சேர்க்கப்படும் என்பதே இதன் சிறப்பம்சமாகும். பார்சல் பெற்றுக்கொள்ளப்பட்ட நேரம் முதல் கொண்டு சேர்க்கப்படும் நேரம் வரை பார்சல் எங்குள்ளது என்பதை ஒருவர் கண்காணிக்க முடியும்.
டப்பாவாலாக்கள் இந்த சேவைக்காக பேப்பர்ஸ் அண்ட் பார்சல்ஸ் நிறுவனத்திடமிருந்து நிலையான வருமானத்தைப் பெறுகின்றனர். எனினும் திலக் அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் ஒவ்வொரு பார்சலை வழங்குவதற்கான வருமானத்தை வழங்கும் மாதிரிக்கு மாற விரும்புகிறார். மும்பையின் 5000 உறுப்பினர்களைக் கொண்ட வலுவான வலைத்தொடர்பில் இருந்து இதுவரை 300 டப்பாவாலாக்கள் இணைந்துள்ளனர். பிஎன்பி வளர்ச்சியடைகையில் மேலும் அதிகம் பேர் இந்த அமைப்புடன் இணைந்து கொள்வார்கள்.
இந்தச் செயலி வெளிப்படையானது. பிஎன்பி பிரத்யேகமான வாடிக்கையாளர் சேவை ஹெல்ப்லைனை அமைத்துள்ளது.
”ஏற்கெனவே இருக்கும் டப்பாவாலாக்களின் வலைத்தொடர்பைப் பயன்படுத்தி உலக தரத்திலான சேவையை மிகக்குறைவான கட்டணத்தில் வழங்குகிறோம். விநியோகத்திற்காக பிரத்யேகமாக மூன்று வெவ்வேறு நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பார்சலை டெலிவர் செய்வதற்கான வசதியான நேரத்தை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்,” என்றார் திலக்.
கூரியர் சேவை வழங்கும் மற்ற நிறுவனங்களுக்கு பார்சலை வகைப்படுத்த பல்வேறு மையங்கள் இருக்கும். ஆனால் பேப்பர்ஸ் அண்ட் பார்சல்ஸ் நிறுவனம் பார்சல்களை வகைப்படுத்தும் பணிக்காக ஒரே ஒரு மையத்தை மட்டுமே கொண்டுள்ளதால் அந்தப் பலன் வாடிக்கையாளர்களச் சென்றடைகிறது. எனவே கூரியர் அனுப்பதற்கான கட்டணம் 45 முதல் 50 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இது மற்ற நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணத்தில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே ஆகும். இத்தகைய குறைவான கட்டணத்தில் மதியம் 2.30 மணி வரை பார்சலை வழங்க வாய்ப்பளித்து அதே நாளில் கொண்டு சேர்க்கும் சேவையை வேறு எந்த நிறுவனமும் வழங்குவதில்லை.
நீங்கள் எளிதாக கட்டணம் செலுத்த பேப்பர் அண்ட் பார்சல் வாலட்டிற்கு பேடிஎம் மூலம் நேரடியாக பணத்தை அனுப்பிக் கொள்ளலாம்.
எதிர்காலத் திட்டம்
பேப்பர்ஸ் அண்ட் பார்சல்ஸ் தற்சமயம் பிரிஹம்மும்பை முனிசிப்பல் கார்ப்பரேஷன் எல்லைக்குள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதிக்கு உட்பட்ட குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களை இலக்காகக் கொண்டுள்ளது.
”சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்ட காலகட்டத்தில் பல பரிவர்த்தணைகளை வெற்றிகரமாக நிறைவு செய்தோம். ஆயிரக்கணக்கான சில்லறை மற்றும் கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் எங்களது வாடிக்கையாளர்களாக உள்ளனர். தினமும் சுமார் 1,000 முதல் 1,200 பார்சல்களை அனுப்புகிறோம். அடுத்த ஆறு மாதங்களில் இந்த எண்ணிக்கை 2,000 முதல் 5,000 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார் திலக்.
வாடிக்கையாளர்களையும் வெண்டார்களையும் இணைக்கும் முயற்சியில் தனது வயது ஒரு தடையாக இருக்கவில்லை என்கிறார். “ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய வெண்டார்களும் என்னுடைய அர்ப்பணிப்பையும் தரத்தையும் கண்டனர். வாடிக்கையாளர்களும் எங்களது சேவையைக் கண்டு மகிழ்கின்றனர்,” என்றார். பேப்பர்ஸ் அண்ட் பார்சல்ஸ் மற்றும் அதன் துவக்கம் குறித்து உரையாற்ற சூரத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து திலக்கிற்கு அழைப்பு வந்துள்ளது.
இவர்களது வணிகம் சுயநிதியில் இயங்கி வருகிறது. ஆரம்பகட்ட நிதியை இவரது குடும்பத்தினர் அளித்தனர். நிறுவனம் லாபகரமாக செயல்படத் துவங்கியதும் அதை திரும்ப அளிக்க விரும்புகிறார் திலக். எனினும் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக வெளியில் இருந்து நிதி திரட்டும் வாய்ப்பு குறித்து ஆராய்கிறார்.
திலக் மட்டுமே நிறுவனராக உள்ள நிலையில் நிதி தொடர்பான அனுபவம் கொண்ட அவரது உறவினரான கன்ஷ்யாம் பரேக் சிஇஓ-வாக உள்ளார். வைஷாலி நந்து திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் மொபைல் மற்றும் வலைதளம் சார்ந்த புதுமைகளில் அனுபவமிக்க ஜிக்னேஷ் பிரம்காத்ரி சிடிஓ-வாகவும் இவர்களது முக்கிய குழுவில் இணைந்துள்ளனர். தற்போது இந்நிறுவனம் 180 பேர் அடங்கிய குழுவுடன் செயல்படுகிறது.
திலக் வாரத்தில் ஐந்து நாட்கள் பள்ளி மற்றும் பணிவாழ்க்கையை முறையாக நிரிவகிக்கவும் வார இறுதியில் பணி மற்றும் பொழுதுபோக்கை முறையாக நிர்வகிக்கவும் இந்த வலுவான ஆதரவு அமைப்பு உதவுகிறது.
”நான் மாலை 4 மணி வரை பள்ளியில் இருப்பேன். அதன் பிறகு அலுவலகத்திற்குச் செல்வேன். என்னால் செல்லமுடியாத சூழலில் அலுவலகத்தில் உள்ளவர்களிடம் போன் வாயிலாக தொடர்பில் இருப்பேன். வார இறுதியில் ஒரு நாளில் பாதி நேரத்தை அலுவலகத்தின் குழு சந்திப்புகளுக்கு ஒதுக்குவேன். எஞ்சி இருக்கும் நேரத்தை படிக்கவும் விளையாடவும் செலவிடுவேன்,” என்று கூறி விடைபெற்றார் திலக்.
ஆங்கில கட்டுரையாளர் : பிஞ்சல் ஷா | தமிழில் : ஸ்ரீவித்யா