Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ஆண்டுக்கு 24 லட்சம் விற்றுமுதல் காணும் கோவை பழங்குடிப் பெண்கள்!

கோவை தனிகண்டி பகுதியைச் சேர்ந்த பழங்குடிப் பெண்கள் குழுவாக ஒன்றிணைந்து ஆதியோகி சிலை அருகே தொடங்கிய தொழிலில் சிறந்து ஓராண்டில் 9.5 லட்ச ரூபாய் லாபம் ஈட்டுகின்றனர்.

ஆண்டுக்கு 24 லட்சம் விற்றுமுதல் காணும் கோவை பழங்குடிப் பெண்கள்!

Tuesday September 24, 2019 , 6 min Read

கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடி கிராமமான தனிகண்டியைச் சேர்ந்த 12 பெண்கள் சிறியளவில் ஒரு உணவகத்தை நிறுவ தீர்மானித்தபோது ஓராண்டில் வெற்றிகரமான வணிகத்தின் உரிமையாளராக இருப்பார்கள் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த நிறுவனம் அவர்களது வாழ்க்கை முறையை மேம்படுத்தியது. அதைக் காட்டிலும் முக்கியமாக அவர்களது திறனை புதுமையான, சவால் நிறைந்த வகையில் ஆராய்வதற்கான வாய்ப்பை அளித்தது.

3

உஷா இந்த உணவக வணிகக் குழுவில் பங்களிக்கிறார். இவர் எட்டு இருக்கை வசதி கொண்ட வாகனத்தை ஓட்டுகிறார். இந்த வாகனம் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள பிரபல ஆதியோகி சிலைக்கு அருகிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்கிறது.


ஆதியோகி சிலைக்கு அருகில் உள்ள சுற்றுலா பயணிகளுக்கு சேவையளிக்கும் இந்த சிறிய உணவகத்தில் டீ, காபி, ஸ்னாக்ஸ், இட்லி, கலந்த சாதம் உள்ளிட்டவை கிடைக்கிறது. உணவு வகைகள் அனைத்தும் குறைந்த விலையில் கிடைக்கிறது. நீண்ட பயணத்திற்கு பிறகு இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடையே இந்த உணவகம் மிகவும் பிரபலம். இந்த உணவக வணிகத்திலிருந்து அடுத்தகட்டமாக உருவானதுதான் எட்டு இருக்கை வசதி கொண்ட வாகன சவாரி.

”எனக்கு எப்போதும் வாகனம் ஓட்டுவது, விளையாட்டு, சாகசங்கள் போன்றவை பிடிக்கும். வாகனம் ஓட்ட வாய்ப்பு கிடைத்ததால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என்று சிரித்தவாறே குறிப்பிட்டார் அந்த இளம் பெண்.

இவரது பழங்குடி சமூகத்தில் இதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்ததில்லை. எட்டு இருக்கை வசதி கொண்ட வாகனத்தை ஓட்டுவதற்கு முன்பு சுற்றுலா பயணிகளுக்காக இந்தப் பெண்கள் மூன்று சக்கர வாகனத்தை ஓட்டி வந்தனர்.


ஈஷா அறக்கட்டளையின் பழங்குடி நலத் திட்டத்தின் ஒரு பகுதியாக சுவாமி சிடகாஷா தனிகண்டி வந்தபோது ஆதியோகி சிலைக்கு அருகில் பெண்கள் மட்டுமே இணைந்து டீக்கடை நடத்தும் திட்டம் குறித்து பேசினார். அப்போதுதான் இந்த முயற்சிக்கான எண்ணம் தோன்றியது. பெண்கள் வருவாய் ஈட்டி அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள உதவுவதே இதன் நோக்கமாகும். இந்தத் திட்டம் எளிதாக இருப்பதுபோல் தோன்றினாலும் அத்தனை எளிதாக அமைந்துவிடவில்லை.

கடினமான முயற்சி

தனிகண்டி அதிகளவில் காடுகள் நிறைந்த பழங்குடி கிராமம். இங்கு 200-க்கும் குறைவானவர்களே வசிக்கின்றனர். இங்குள்ள 53 வீடுகளில் 30 வீடுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலான தமிழக கிராமப்புறங்கள் போலல்லாமல் இந்த பழங்குடி கிராமவாசிகள் விவசாயத்தில் ஈடுபடுவதில்லை. இங்கு வசிப்பவர்களுக்கு விவசாய நிலங்கள் இல்லை. அவ்வப்போது விவசாய தொழிலாளர்களாக பணிபுரிந்தும் தினக்கூலிகளாக பணிபுரிந்தும் மட்டுமே வருவாய் ஈட்டி வந்தனர்.

1

பெரும்பாலான குடியிருப்புவாசிகள் படிப்பறிவில்லாதவர்கள். தனிகண்டியில் ஒருவர்கூட இன்னும் பட்டதாரி ஆகவில்லை. முதல் தலைமுறையாக படிப்பவர்களும் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டனர்.


இந்தப் பழங்குடி சமூகம் அடிப்படை வசதிகளுக்கு அரசாங்கக் கொள்கைகளையும் அரசு சாரா குழுக்களின் நலத்திட்டங்களையும் பெருமளவில் சார்ந்துள்ளது.

”ஆண், பெண் இரு பாலினருமே திறன் பெற்றிருக்கவில்லை. இவர்கள் பணிபுரியவேண்டுமானால் இவர்களுக்கு அனைத்திலும் பயிற்சியளிக்கப்படவேண்டும்,” என்றார் சுவாமி சிடகாஷா.

அவர் மேலும் கூறும்போது, “சுவாமி நந்திகேசா, சுவாமி வசுநந்தா மற்றும் சில சுவாமிகள் இந்த சமூகத்துடன் அதிகம் பணிபுரிந்துள்ளனர். இதனால் அங்குள்ளவர்கள் எங்களுக்கு பரிச்சயமாகியுள்ளனர். இதுவே இந்த கிராமத்தில் நுழைவதை எளிதாக்கி சுவாமி நந்திகேஷா முன்மொழிந்த தொழில்முனைவுத் திட்டம் குறித்து பேச உதவியது.

ஆனால் நாங்கள் நேரடியாக சமூகத்தை அணுகவில்லை. ஏற்கெனவே எங்களது சமையலறையில் பணிபுரிந்து வந்த சில பெண்கள் மூலமாகவே அவர்களை அணுகினோம்,” என்றார்.

இந்தத் திட்டம் குறித்து முதலில் தெரியப்படுத்தியபோது அதை ஏற்க யாரும் முன்வரவில்லை. ”நாங்கள் வணிக முயற்சியில் ஈடுபடத் தயங்கினோம்,” என்றார் சிவகாமி. இறுதியாக இவர் இணைந்துகொண்டார்.


“நாங்கள் வணிகத்தில் ஈடுபட எங்கள் குடும்பங்களும் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சுவாமி தொடர்ந்து கிராமத்திற்கு வந்து இந்த திட்டம் குறித்து விவரித்தார். ஒருவரும் ஆர்வம் காட்டாதபோதும் சுவாமி தனது முயற்சியைக் கைவிடவில்லை. சுவாமியின் விடாமுயற்சி காரணமாகவே நாங்கள் முயற்சி செய்து பார்க்க எண்ணினோம்,” என்று சிரித்தவாறே நினைவுகூர்ந்தார்.

இறுதியாக 12 பெண்கள் அடங்கிய குழு ஒன்றிணைந்து முயற்சியைத் தொடங்கத் தீர்மானித்தது. ஒவ்வொருவரும் 200 ரூபாய் முதலீடு செய்து 2018-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி டீ ஸ்டால் ஒன்றைத் தொடங்கினார்கள். அடுப்பு, பாத்திரம் மற்றும் இதர சமையலறை பொருட்களை அருகில் இருந்த ஈஷா சமையலறை, ஈஷா கேண்டீன் போன்ற இடங்களில் இருந்து இரவல் வாங்கிக்கொண்டனர். சில பொருட்களை தங்களது வீட்டில் இருந்தும் கொண்டு வந்தனர்.

டீ தயாரிப்பது, கணக்கு நிர்வகிப்பது, வாடிக்கையாளர் சேவை என அனைத்திலும் சுவாமி சிடகாஷா விரிவாக பயிற்சியளித்தார். “ஆரம்பத்தில் இது மிகவும் கடினமாக இருந்தது,” என்று பெண்களைக் குழுவாக ஒன்றிணைத்து செயல்படவைத்தது குறித்து சுவாமி குறிப்பிட்டார்.

இது போன்ற பணிகளை மேற்கொள்ள அவர்கள் தயார்நிலையில் இல்லை. அவர்கள் அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். சரியான நேரத்திற்கு வரவில்லை. சரியான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறவில்லை. விலை நிர்ணயிப்பது குறித்த புரிதல் இல்லாததால் குறைவான விலைக்கு விற்பனை செய்தனர். அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களில் ஒருவர் விலகினார். அவர்களை சரியான நேரத்திற்கு வரவழைப்பது, கருத்துக்களை ஏற்றுக்கொள்ளச் செய்வது, கடையை திறக்கச் செய்வது உள்ளிட்டவற்றிற்கு தீவிர முயற்சி மேற்கொள்ளவேண்டியிருந்தது,” என்றார்.

மாற்றம்

இவர்களது எதிர்பார்ப்புகளைத் தாண்டி இந்தச் சிறு நிறுவனம் முதல் மாதத்திலேயே 90,000 ரூபாய் விற்றுமுதல் ஈட்டியது. லாபத்தில் அனைத்து பெண்களுக்கும் பங்கு கிடைத்தது. நான்கு மாதங்களுக்குப் பிறகு 1,65,000 ரூபாய் லாபம் ஈட்டினர். ஒவ்வொருவருக்கும் 15,000 ரூபாய் கிடைத்தது. முதல் முறையாக அவ்வளவு பெரிய தொகையைப் பெற்றனர்.

”அவர்களுக்குக் கிடைத்தது மிகப்பெரிய ஊக்கத்தொகை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதையும் தாண்டி, அந்தப் பெண்கள் பணத்தை ஈட்டக் கற்றுக்கொண்டுள்ளனர் என்பதையே இது உணர்த்தியது. அவர்கள் தங்களுக்குக் கிடைத்த முதல் தொகையை செலவு செய்த விதம் குறித்து பகிர்ந்துகொண்டது நெகிழ்வான சம்பவமாக இருந்தது,” என்றார் சுவாமி சிடகாஷா.

”அந்தப் பெண்களில் ஒருவர் என்னிடம் கூறும்போது, ’ஒவ்வொரு வருடமும் தீபாவளி சமயத்தில் என்னுடைய கணவர் எனக்குப் புத்தாடைகள் வாங்கித் தருவார். இத்தனை ஆண்டுகளில் அவர் தனக்கென ஏதும் வாங்கியதில்லை. வீட்டில் எப்போதும் பணப் பற்றாக்குறை இருக்கும். முதல் முறையாக என்னுடைய வருவாயைக் கொண்டு அவருக்காக புதிய ஆடைகளை வாங்கினேன். அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது’ என்றார்.


இந்தப் பெண்களில் பெரும்பாலானோருக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. தினக்கூலியாக பணிபுரிவது தவிர இதர பணிகளில் இவர்கள் ஈடுபட்டதில்லை. இவர்களைப் பொறுத்தவரை குடும்பத்திற்கான வருவாயில் பங்களிப்பது மிகப்பெரிய மாற்றம்,” என்றார் சுவாமி.


அதுமட்டுமின்ற இவர்களது முயற்சி சமூகத்தில் நல்ல நிலையை எட்டவேண்டும் என்று கிராமவாசிகளை சிந்திக்கத் தூண்டியது. ”ஆரம்பத்தில் மற்ற பெண்களுடன் இணைந்து வணிகத்தை தொடங்குவதையும் முதலீடு செய்வதையும் என்னுடைய குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் எங்களது வருவாயையும் தனிப்பட்ட வளர்ச்சியையும் கண்டபோது எங்களை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கினார்கள்,” என்றார் கடையில் முழுநேரப் பணியில் ஈடுபட்டுள்ள சிவகாமி. இந்தப் பெண்களின் கதை உள்ளூர் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. இவர்கள் தங்கள் கிராம மக்களிடையே பிரபலமாயினர்.

இந்த கிராமத்தில் உள்ள பல பெண்களும் தற்போது இதேபோன்ற வாய்ப்பை எதிர்நோக்குவதாக சிவகாமி தெரிவித்தார். “இதுபோன்ற முயற்சியை தொடங்கி லாபகரமான வணிகமாக தங்களாலும் வளர்ச்சியடையச் செய்யமுடியுமா என்று கேட்கின்றனர். என்னுடைய கிராமத்தில் என்னுடைய சொந்த பணத்தைக் கொண்டு ஃப்ரிட்ஜ் வாங்கிய முதல் நபர் நான்தான்,” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

”ஃப்ரிட்ஜில் பெரிதாக பொருட்கள் ஏதும் வைக்காததால் அதை வாங்குவதற்கான அவசியம் என்ன என்று பலர் வியக்கின்றனர். ஆனால் அதை என் கணவருக்காக வாங்கினேன். அவரது சிறு வயதில் யாரோ ஒருவர் அவரிடன் “உன் வீட்டில் என்ன இருக்கிறது?” என கேட்டுள்ளனர். ஏழ்மை நிலையில் இருந்ததால் ’எதுவும் இல்லை’ என்று பதிலளிக்கும் கட்டாயத்தில் அவர் இருந்துள்ளார். பிற்காலத்தில் தனது குழந்தையிடம் இதே கேள்வி கேட்கப்படுமானால் ‘என் வீட்டில் டிவி, ஃப்ரிட்ஜ் என வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இருக்கிறது’ என்று பதிலளிக்கும் நிலையில் இருக்கவேண்டும் என்று விரும்பியுள்ளார். அவரது விருப்பத்தை என்னால் நிறைவேற்ற முடிந்தது மகிழ்ச்சியளிக்கிறது,” என்று புன்னகைத்தவாறே குறிப்பிட்டார்.

வளர்ச்சி

தேவையான பொருட்களை இரவல் வாங்கிக்கொண்டு கடையைத் திறந்த நிலையில், ஆறு மாதங்களுக்குப் பிறகு இக்குழுவினர் அந்தப் பொருட்களை திருப்பியளித்தனர். அவர்கள் ஈட்டிய வருவாயைக் கொண்டு அவர்களால் புதிய பொருட்களை வாங்கமுடிந்தது. தங்களது லாபத்தைக் கொண்டு மூன்று சக்கர வாகனத்தை எட்டு இருக்கை வசதி கொண்ட வாகனமாக மாற்றினர்.

”ஆறு மாதங்களில் 8 லட்ச ரூபாய் விற்றுமுதல் கிடைத்தது. லாபத்தில் எங்கள் பங்கை எடுத்துக்கொண்ட பிறகு பேட்டரி மூலம் இயங்கும் வாகனத்தை வாங்கினோம். அதைக் கொண்டு இன்று இந்தப் பெண்கள் நாள் ஒன்றிற்கு சுமார் 5,000 ரூபாய் சம்பாதிக்கின்றனர்,” என்றார் சுவாமி சிடகாஷா. இந்த வாகனத்தில் சவாரி செய்ய ஒரு நபருக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் இவர்களது முயற்சி தொடங்கப்பட்டு ஓராண்டு முடிந்த நிலையில், ஆண்டு விற்றுமுதல் 24 லட்ச ரூபாயாக உள்ளது. லாபம் 9.5 லட்ச ரூபாய். சிறு டீ ஸ்டாலாக தொடங்கப்பட்ட முயற்சி புதிய உணவு வகைகளை மெனுவில் இணைத்துக்கொண்டு ஒரு உணவகமாக செயல்படுகிறது. சில பொருட்களை வெளியில் இருந்து வாங்கப்படுகிறது. மற்ற பெண்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

2

”இன்னும் ஓராண்டில் மற்றுமொரு வாகனத்தை வாங்க விரும்புகிறோம்,” என்றார் கடையில் பணிபுரியும் காயத்ரி. வணிகத்தை வளர்ச்சியடையச் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்,” என்றார் உஷா. இவர்கள் வீட்டுச் செலவை நிர்வகிக்கப் போராடி வந்த நிலையில் இன்று வணிகம் சார்ந்து திட்டமிட்டு வருகின்றனர்.


”சுவாமி சிடகாஷா டீ தயாரிக்கும் விதம், சமைப்பது, வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவது, விலை நிர்ணயிப்பது என எங்களுக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்தார். எங்களால் இதைச் செய்யமுடியும் என்று நம்பிக்கையளித்தார். எங்கள் மீது எங்களுக்கே நம்பிக்கை இல்லாதபோது சுவாமி எங்கள் மீது நம்பிக்கை வைத்து இதை சாத்தியப்படுத்தியுள்ளார்.


எங்களால் சாதிக்கமுடியும் என்பதை எங்களது சமூகத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளார். முதல் ஆறு மாதங்களில் சுவாமியே கிட்டத்தட்ட அனைத்து பணிகளையும் மேற்கொண்டார். லாபத்தை நாங்கள் எடுத்துக்கொண்டோம். அந்த சமயத்தில் எங்களுக்கு புரிதல் இல்லை. ஒவ்வொரு சிறு நடவடிக்கையிலும் அவர் தலையிடவேண்டிய அவசியம் ஏற்பட்டது,” என்று சிரித்தவாறே குறிப்பிட்டார்.

”ஓராண்டிற்கு முன்பு இவர்கள் இருந்த நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இவர்களிடம் அபார மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இன்னமும் அதிக தூரம் பயணிக்கவேண்டியுள்ளது. அதேசமயம் இவர்கள் ஏற்கெனவே நெடுந்தூரம் பயணித்து தற்போதைய நிலையை எட்டியுள்ளனர். இவர்கள் உருவாக்கியதன் மதிப்பை அவர்கள் உணர்ந்துள்ளனர். இதற்கு முன்பு இவர்கள் வெறுமனே பணிபுரிந்தனர். அது இவர்களுக்கோ இவர்களது வளர்ச்சிக்கோ நல்லதல்ல. தற்போது இவர்களிடம் பெருமை, மனஉறுதி, திறன், சொந்த காலில் நிற்பதற்கான நம்பிக்கை அனைத்தும் நிறைந்துள்ளது,” என்றார் சுவாமி.

ஆங்கில கட்டுரையாளர்: யுவர்ஸ்டோரி குழு | தமிழில் : ஸ்ரீவித்யா