உண்டியல் சேமிப்பை கேரளாவுக்கு வழங்கிய சிறுமிக்கு சர்ப்ரைசாக ஆண்டுதோறும் புதிய சைக்கிள் கிப்ட்!
நான்கு ஆண்டுகளாக சைக்கிள் வாங்குவதற்காக சேமித்த ரூ.9000 பணத்தை கேரளாவின் வெள்ள நிவாரண நிதிக்கு சிறுமி ஒருவர் கொடுத்துள்ளார். இந்த சிறுமிக்கு ஆண்டுக்கு ஒரு ஹீரோ சைக்கிள் தரவுள்ளதாக ஹீரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
விழுப்புரம் கே.கே.ரோடு சிவராம் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன், லலிதா தம்பதியரின் மகள் அனுப்பிரியா. 8 வயதுடைய இந்த சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். தனக்காக ஒரு புதிய சைக்கிள் வாங்க வேண்டும் என்பதை ஆசையாகக் கொண்ட அனுப்பிரியா அதற்காக கடந்த 4 ஆண்டுகளாக உண்டியலில் பணம் சேர்த்து வந்துள்ளார்.
அக்டோபர் 16ஆம் தேதியன்று தமது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், சைக்கிள் வாங்க முடிவு செய்திருந்தார். ஆனால் கேரளா வெள்ளம் குறித்து அறிந்த சிறுமி, தான் சேமித்த பணத்தை கேரளாவின் வெள்ளநிவாரண நிதிக்கு கொடுக்குமாறு, தன் உண்டியலை உடைத்து அப்பணத்தை தனது தந்தையிடம் ஒப்படைத்துள்ளார். அப்பணத்தை அவரது தந்தை சண்முகநாதன் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வங்கியில் செலுத்தியுள்ளார்.
இந்த செய்தி ஊடகங்களில் வெளிவந்ததை தொடர்ந்து சிறுமி அனுப்பிரியாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. சமூக வலைதளங்களை வலம் வந்த இச்செய்தி ஹீரோ சைக்கிள் நிறுவனத்திற்கும் சென்று சேர்ந்துள்ளது.
8 வயது சிறுமியின் மனிதநேயத்தை பாராட்டிய ஹீரோ சைக்கிள் நிறுவனம் அவருக்கு புது சைக்கிள் ஒன்றை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான பன்கஜ் முன் ஜல் தனது ட்விட்டர் பதிவில்,
“அன்புள்ள அனுப்பிரியா உங்களது செயலை பாராட்டுகிறோம். எங்களது நிறுவனத்தின் புதிய சைக்கிள் உங்களுக்கு கிடைக்கும். உங்களது முகவரியை அனுப்பி வையுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.”
பன்கஜ் முன்ஜலின் மற்றொரு ட்விட்டர் பதிவில்,
”உங்களது உள்ளம் உன்னதமாக உள்ளது. உங்களுடைய வாழ்வில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சைக்கிள் வழங்க ஹீரோ நிறுவனம் விரும்புகிறது. உங்களுடைய முகவரியை எனது அக்கவுண்டில் சேர் செய்யுங்கள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். கேரளா மீண்டு வர பிரார்த்திக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறுமி அனுப்பிரியாவுக்கு வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் ஒரு புதிய சைக்கிள் பரிசளிக்கப்படும் என்று ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக மேலாளருமான பங்கஜ் முன்ஜல் ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார். பதிலுக்கு நன்றியை தெரிவித்த அனுப்பரியா அவரது வீட்டு முகவரியை அனுப்பியுள்ளார்.
கோடி கோடியாய் பணம் இருப்பவர்கள் நிவாரண நிதியாக ஒருசில லட்சங்கள் கொடுப்பதைவிட தனது வாழ்நாள் கனவிற்காக சேமித்து வைத்திருந்த ரூ.9 ஆயிரத்தை அனுப்ரியா என்ற சிறுமி கொடுத்த தொகை மிகப்பெரிய தொகை என்பதால் அவருக்கு சைக்கிள் மட்டுமின்றி புகழும் வீடுதேடி வந்திருப்பதாக சமூக வலைத்தள பயனாளிகள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
கட்டுரையாளர்: ஜெசிக்கா