தாய்மையை கொண்டாடும் 20 ஊக்கமூட்டும் வாசகங்கள்!
உலக பிரபலங்கள் தங்களின் தாய் பற்றியும் தாய்மை போற்றியும் கூறியுள்ள பொன்னான வாக்கியங்கள்!
ஒரு அன்னையின் இடத்தை யாராலும் நிரப்பிவிடவே முடியாது. தாயன்பு நிபந்தனையற்றது, தன்னலமில்லாதது. ஒரு குழந்தையைப் பெற்று, வளர்த்து, முனைப்போடு பாதுகாக்கும் திறமை தான் ஒரு அன்னையை சிறப்பாக்குகிறது. நாம் காயப்பட்டிருக்கும் போது, அழ ஒரு தோள் வேண்டும் என நினைக்கும் போது அம்மாவை தவிர வேறு யாரையும் நாம் தேடுவதில்லை. அம்மாவிற்கு எல்லாம் தெரியும், அதை நாம் ஏற்றுக் கொள்ளவும் செய்கிறோம்.
நம் வாழ்வில் இருக்கும் தாய்களை கொண்டாட சில ஊக்கமூட்டும் வாசகங்கள்.
தாய்க்கு இணை யாரும் இல்லை!
“என் அம்மா எப்போதுமே என் உணர்வுகளை கணிக்கும் கருவியாகவும், எனக்கு வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார். எல்லாவற்றிலும் என்னை வழிநடத்த செல்ல எனக்கு இப்படி ஒருவர் கிடைத்தது என் அதிர்ஷ்டம்“ – எம்மா ஸ்டோன், நடிகர்.
“அழுவதற்கு சிறந்த இடம், தாயின் கரங்கள்”- ஜோடி பிகோல்ட், அமெரிக்க எழுத்தாளர்.
“என் அம்மா தான் என் வாழ்க்கையில் ஒரே நிரந்தரமாக இருந்தவர். இருபது வயதில், வேலை செய்து கொண்டு, வீட்டை கவனித்துக் கொண்டு தனியே என்னை வளர்த்துக் கொண்டு, தன்னுடைய கனவை நோக்கியும் அவர் முன்னேறிக் கொண்டிருந்ததை நினைக்கும் போது, வேறு எந்த சாதனையோடும் அதை ஒப்பிடவே முடியாது எனத் தோன்றுகிறது” – முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
“என் அம்மா ஒரு போதும் என் மீது நம்பிக்கை இழந்ததில்லை. ஸ்கூலில் நான் வில்லங்கமாக எதையாவது செய்து கொண்டே இருப்பதால் என்னை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள், அம்மா உடனேயே என்னை திருப்பி அனுப்பினார்” – டென்ஸெல் வாஷிங்டன்,நடிகர்.
தாய்மை
“தாயாக வேண்டும் என எடுக்கும் முடிவு, ஒரு சிறந்த மனோதத்துவ ஆசிரியர் ஆவதற்கு எடுக்கும் முடிவு என்றே நான் நினைக்கிறேன்”- ஓப்ரா வின்ஃப்ரே, தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர், கொடையாளர்
“எனக்கு மிகவும் முக்கியமான பதவி ‘சீஃப் அம்மா’ . இந்த உலகிலேயே எனக்கு மிகவும் நெருக்கமானதும், மிக மிக முக்கியமானதும் என் மகள்கள் தான்” – மிஷெல் ஒபாமா, முன்னாள் முதல் பெண்மணி.
“தாய்மைக்கு ஒரு மனிதத்தன்மை உருவாக்கும் சக்தி இருக்கிறது. மற்றது எல்லாவற்றையும் விட்டுவிட்டு, எது தேவையோ அதை மட்டும் கவனிக்கும் நோக்கு வளர்கிறது” – மெரில் ஸ்ட்ரீப், நடிகர்.
“நீங்கள் ஒரு தாயாக இருக்கும் போது, எப்போதுமே உங்கள் எண்ணங்களில் தனியாக இருப்பதில்லை. ஒரு தாய் எப்போதும் இரண்டு முறை யோசிக்க வேண்டும் – ஒரு முறை தனக்காக, ஒரு முறை தன் பிள்ளைக்காக” – சோஃபியா லோரென், நடிகர், பாடகர்.
“குழந்தை பெற்றுக் கொண்டது, அன்புக்கு ஒரு புனிதம் இருப்பதை எனக்கு புரிய வைத்திருக்கிறது. நிபந்தனையற்ற அன்பு என ஒன்று இருப்பதை நம்ப வைக்கிறது”- ஜெனிஃபர் லோபஸ், பாடகர், நடனக் கலைஞர் மற்றும் நடிகர்.
“வீட்டில் எனக்கொரு அழகான குழந்தை காத்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் போது, இன்னொரு மேட்ச் விளையாட தேவையில்லை என தோன்றும். காசும், பட்டங்களும், பெருமிதமும் எனக்கு தேவையில்லை. அவை எல்லாம் எனக்கு வேண்டும், ஆனால் அவை எனக்கு தேவை இல்லை. அது எனக்கொரு வித்தியாசமான உணர்வு” – செரினா வில்லியம்ஸ், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை.
“மகிழ்ச்சி, சோர்வு, அன்பு, கவலை என கலவையான உணர்வுகள் நிறைந்தது அது. ஒரே இரவில் உங்கள் அடையாளம் மாறிவிடும் “ – கேத்ரின், கேம்ரிட்ஜ் டச்சஸ்.
“ஒரு தாயாக இருப்பது என்னை ரொம்பவே சோர்வடையச் செய்திருக்கிறது. மகிழ்ச்சியடையவும் கூட”- டினா ஃபே, நடிகர், காமெடியன் மற்றும் எழுத்தாளர்.
“நீங்கள் கருவுறுவது தீவிரமாக திட்டமிடப்பட்டதோ, மருத்துவத்தால் நிகழ்த்தப்பட்டதோ அல்லது ஆச்சரியமாக நடந்ததோ – உங்கள் வாழ்வு முன்னதை போல இனி இருக்கப் போவதில்லை” – கேத்தரின் ஜோன்ஸ், நடிகர்.
“யாருமே அதை பெர்ஃபெக்டாக செய்வதில்லை, நீங்கள் உங்கள் குழந்தைகளை முழு மனதால் நேசித்து, எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தான் நினைக்கிறேன்”- ரீஸ் விதர்ஸ்பூன், நடிகர், தயாரிப்பாளர், தொழில்முனைவோர்.
“தாயாக இருப்பது தான் உலகிலேயே கடினமான வேலை என்று நினைக்கிறேன். நிறைய வழிகளில், குழந்தைகள் இந்த உலகில் வருவதே நமக்கு பயிற்றுவிக்கத்தான் என எனக்கு தோன்றும்”- மரியா கேரி, பாடகர், பாடலாசிரியர் மற்றும் நடிகர்.
தமிழில்: ஸ்னேஹா