இந்த காலத்துல இப்படி ஒரு மகனா...?
கல்லீரல் பாதிப்படைந்த தந்தைக்கு தனது உறுப்பை தானமாக தந்து இன்றைய தலைமுறையினருக்கான சிறந்த வழிகாட்டியாகி இருக்கிறார் வேலூரைச் சேர்ந்த 25 வயது இளைஞர் சுரேந்தர்.
60 வயது வந்துவிட்டால் பெற்றோரின் அட்வைஸ்களை தாங்க முடியாது என்று அவர்களை முதியோர் இல்லங்களில் விட்டு விரும் பிள்ளைகளின் மத்தியில் சுரேந்தர் செய்திருக்கும் செயல் நிச்சயம் பாராட்டிற்குரியவையே. மகனோ அல்லது மகளோ யாராக இருந்தாலும் பெற்றோருக்கென செய்ய வேண்டிய கடமை என்ன என்பதை தெள்ளத்தெளிவாக தோலுறித்துக் காட்டியுள்ளார் சுரேந்தர்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்தர் காத்தவராயனின் மூத்த மகன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய காத்தவராயன் தனது மகன் மற்றும் மகளை எந்தக் குறையும் இன்றி வளர்த்து படிக்க வைத்துள்ளார். சுரேந்தரின் தங்கைக்கு திருமணம் முடிந்த நிலையில் முதுநிலை பொறியியல் பட்டதாரியான இவர், குடிமைப் பணிகள் தேர்விற்காக தயாராகிக் கொண்டிருந்துள்ளார். முதல் முறை தேர்வில் தோல்வியடைய 2வது முறையாக தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில் தான் அந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
சுரேந்தரின் தந்தை காத்தவராயனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. நாளுக்கு நாள் காத்தவராயன் உடல் மெலிந்து சோர்வுற்று கொண்டே இருந்ததால் அவரை பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்து சென்றுள்ளார் சுரேந்தர்.
“அப்பாவிற்கு உடலில் என்ன பிரச்னை என்பதை மருத்துவர்களால் சரியாக கணிக்கவே முடியவில்லை. அவருக்கு மஞ்சள் காமாலை என்று முதலில் சொன்னார்கள். சித்த மருத்துவம், வேலூரில் பிரபல மருத்துவமனை, சென்னையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை என பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தோம். கடைசியில் அப்பாவின் கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது அவரை காப்பாற்ற வேண்டும் என்றால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், என்று மருத்துவர்கள் கூறினர்.”
சென்னையின் பிரபல தனியார் மருத்துவமனையில் அப்பாவை அனுமதித்தோம். மாற்று உறுப்பு பெற அரசு விதிகளின் படி சீனியாரிட்டி அடிப்படையில் உறுப்பு தானம் செய்பவர்களிடம் இருந்து பெற்று அறுவை சிகிச்சை செய்யப்படும். எனவே மாற்று உறுப்புக்காக 6 மாதங்கள் காத்திருந்தும் அவருக்கான முறை வரவில்லை. அதனால் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இனியும் காலதாமதம் செய்ய முடியாது குடும்பத்தில் இருக்கும் யாராவது கல்லீரல் தானம் செய்தால் உடனடியாக அப்பாவை காப்பாற்றி விடலாம் என்று கூறியதாக தெரிவிக்கிறார் சுரேந்தர்.
சுரேந்தரின் அம்மாவிற்கு 55 வயது அவர் கல்லீரல் தானம் செய்யும் அளவில் உடல்நிலை இல்லை, எனவே தானே தந்தைக்கு கல்லீரல் தானம் செய்யலாம் என முடிவு செய்திருக்கிறார் சுரேந்தர்.
“எனது முடிவை பெற்றோரிடம் சொன்ன போது அவர்களிடம் மௌனம் மட்டுமே பதிலாக இருந்தது. எனக்கு 60 வயதாகிவிட்டது இனி நான் வாழ்ந்து என்ன செய்யப்போகிறேன் அப்படியே விட்டுவிடு என்று அப்பா சொன்ன வார்த்தைகள் வலியை கொடுத்தன. அப்போது தான் என்னுடைய முடிவில் நான் உறுதியாக இருந்தேன்,” என்று கூறுகிறார் எழுச்சி நாயகன் சுரேந்தர்.
வாழ்வில் இனி நான் பல சாதனைகளை செய்யப் போகிறேன் அந்த வெற்றிப்பயணத்தில் என்னுடன் நீங்களும் நிஜத்தில் இருக்க வேண்டும், நினைவுகளில் அல்ல என்று நான் சொன்ன வார்த்தை அப்பாவை சம்மதிக்க வைத்தது. எனக்கு உயிர் கொடுத்த அப்பாவிற்கு என் உயிரையே கொடுக்கக் கூட நான் தயாராக இருந்தேன்.
மருத்துவர்களே முதலில் தயங்கிய நிலையில் பின்னர் என்னுடைய உறுதியான நிலைப்பாடை கண்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான பணிகளைத் தொடங்கினர் என்கிறார் சுரேந்தர்.
சுரேந்தர் உறுப்பு தானம் செய்வதற்கான நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறாரா என்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு, டிஎன்ஏ பரிசோதனை நடத்தி, உறுப்பு தானம் செய்வதற்கு நீதிமன்ற அனுமதி பெற்று என அனைத்தையும் சட்டப்படி செய்துள்ளனர்.
கடந்த 2018 ஜூன் 27ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை நாளன்று கூட உறவினர்கள் கடைசி நேரத்தில் அழுது புலம்பி என்னுடைய நம்பிக்கையை குறைத்துவிடுவார்கள் என்று நினைத்து 4 மணிக்கே அறுவை சிகிச்சை தொடங்கிய போதும் 8 மணிக்கு தான் என்று சொல்லி அவர்களை தாமதமாக வரவழைத்து அனைத்து சூழல்களையும் எனக்குச் சாதகமாக அமைத்து நல்ல மனநிலையில், முழு தைரியத்துடன் கல்லீரலை அப்பாவிற்கு தானமாகக் கொடுத்ததாகக் கூறுகிறார் சுரேந்தர்.
அறுவை சிகிச்சை முடிந்த அன்றே நான் கண்விழித்துவிட்ட போதும் அப்பா 3 நாட்கள் கழித்தே கண் விழித்தார். கண்விழித்து என்னை பார்த்து அப்பா புன்னகைத்த அந்த நிமிடம் வாழ்வில் இனி நான் எப்போதுமே அடைய முடியாத மகிழ்ச்சியைத் தந்தது.
அறுவை சிகிச்சைக்காக எனக்கு 35 தையல்களும் அப்பாவிற்கு 45 தையல்களும் போடப்பட்டதால் 3 மாதங்கள் சற்று சிரமமாக இருந்தது. ஆனால் இப்போது ஓராண்டாகிவிட்ட நிலையில் இருவருமே நல்ல உடல்நிலையுடன் இருக்கிறோம். என்னோடு என் அப்பா மகிழ்ச்சியோடு இருக்கிறார் என்ற ஆத்ம திருப்தி கிடைத்துள்ளது. உடல்நிலை தேறிவிட்டதால் அடுத்த வாரமே புதிதாக ஒரு பணியில் சேர இருக்கிறேன் என்று நிறைவான வாழ்க்கை வாழ்ந்து விட்ட மகிழ்ச்சியோடு பேசுகிறார் சுரேந்தர்.
மாற்றத்தை ஏற்படுத்துபவர்களுக்காக வழங்கப்படும் விருதுகள் பட்டியலில் “லைஃப் சேவியர்” விருதைப் பெற்றுள்ளார் சுரேந்தர்.
“மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்”
என்ற திருக்குறளின் வரிகள் காத்தவராயனுக்கு மிக அழகாகப் பொருந்திப் போய் இருக்கிறது. ஒரு மகனாக தனது தந்தையின் உயிருக்கு ஆபத்து என்றதுமே தனது உறுப்பை தானமாகத் தந்து உயிர் கொடுத்த பிதாவை காப்பாற்றி இருக்கிறார் சுரேந்தர். 25 வயதில் தனது மகனுக்கு இருந்த பெருந்தன்மை, இப்படிப்பட்ட மகனைப் பெற்றிருக்கிறீர்களே என்று பிறர் சொல்லக் கேட்கும் போது அடையும் மகிழ்ச்சி இதைத் தவிர அப்பா காத்தவராயனுக்கு வேறு என்ன வேண்டும்?