ஒருநாளைக்கு ரூ.27 கோடி; இதுவரை ரூ.9,713 கோடி கொடை: இந்திய டாப் கொடையாளி அசிம் பிரேம்ஜி!
ஹுருன் இந்தியா பட்டியல் வெளியீடு!
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி இந்த நிதியாண்டில் அதிக நன்கொடை அளித்த இந்தியர்கள் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.
ஒரு நாளைக்கு ரூ.27 கோடி என்ற வீதம் ரூ.9,713 கோடி அளவுக்கு இந்த நிதியாண்டில் நன்கொடை அளித்திருக்கிறார். ஹுருன் இந்தியா வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில், கொரோனா தொற்றுநோய் காலகட்டத்திலும் அசிம் பிரேம்ஜி தனது நன்கொடையை கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காக அதிகரித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசிம் பிரேம்ஜிக்கு அடுத்ததாக இந்தியா முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் உள்ளார். அவர் இந்த நிதியாண்டில் 1,263 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளார்.
இந்தியாவின் பெரும் பணக்காரரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ரூ.577 கோடி பங்களிப்புடன் பட்டியலில் இதில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
குமார மங்கலம் பிர்லா நான்காம் இடம் பிடித்துள்ளார். அவர் ரூ.377 கோடி நன்கொடை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.130 கோடி நன்கொடை அளித்து இரண்டாவது பணக்கார இந்தியரான கௌதம் அதானி, இந்தப் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார். இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி ரூ.183 கோடி நன்கொடையுடன் இதில் ஐந்தாம் இடம்பிடித்துளளார்.
ஹுருன் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் தலைமை ஆராய்ச்சியாளருமான அனஸ் ரஹ்மான் ஜுனைட் இந்தப் பட்டியல் தொடர்பாக பேசுகையில்,
"தற்போது, அடிப்படைத் தேவைகள் காரணமாக பெரும்பாலான நன்கொடை கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மற்றவர்களை விட இணை நிறுவனர் நந்தன் நிலேகனி உண்மையில் சுவாரசியமான பங்களிப்பைச் செய்துள்ளார். கடந்த ஆண்டு 10வது இடத்தில் இருந்த நிலேகனி தனது அதிகமான பங்களிப்பு காரணமாக இப்போது ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளார்," என்றுள்ளார்.
இந்தப் பட்டியலில் புதிதாகச் சிலர் நுழைந்துள்ளனர். இந்தியாவின் வாரன் பப்பெட் என அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தனது ஒட்டுமொத்த வருவாயில் நான்கில் ஒரு பங்கை கல்விக்கான முயற்சிகளுக்காக ரூ.50 கோடியை நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.
இதேபோல், இளம் தொழில்முனைவோர்களான நிதின் மற்றும் நிகில் காமத் இருவரும் பட்டியலில் 35வது இடத்தில் உள்ளனர். பொறியியல் நிறுவனமான லார்சன் & டூப்ரோவின் முன்னாள் தலைவர் ஏ.எம். நாயக், 112 கோடி ரூபாய் நன்கொடையுடன் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளார். மேலும், அவர் தனது வருமானத்தில் 75 சதவீதத்தை தொண்டு நோக்கங்களுக்காக வழங்கி இருக்கிறார்.
ஹிந்துஜா குடும்பம், பஜாஜ் குடும்பம், அனில் அகர்வால் மற்றும் பர்மன் குடும்பம் ஆகியவையும் கணிசமான உதவிகளை வழங்கியுள்ளன. இந்தப் பட்டியலில் ரோகினி நிலேகனி உட்பட ஒன்பது பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல், வசிக்கும் இடத்தின் அடிப்படையில், மும்பையைச் சேர்ந்தள் 31 சதவீதம் பேரும், டெல்லியைச் சேர்ந்த 17 சதவீதம் பேரும், பெங்களூருவைச் சேர்ந்த 10 சதவீதம் பேரும் நன்கொடைகளை வழங்கியுள்ளனர்.