Motivational Quote | 'தினமும் நாம் புதிதாய் பிறக்கிறோம்...' - புத்தர் கூற்றும் 5 குறிப்புகளும்!
கௌதம புத்தரின் இந்த மேற்கோள் தரும் ஞானம், ஒவ்வொரு நாளும் ஒரு விலை மதிப்பற்ற பரிசு, வளர்ச்சி மற்றும் மாற்றத்துக்கான முடிவில்லாத வாய்ப்புகளை வழங்குகிறது.
“Every morning we are born again. What we do today is what matters most.”
நாம் வாழ்க்கையைப் பெரும்பாலும் கடந்தவற்றை நினைப்பதிலும், அதில் பெருமையோ, வருத்தமோ, வேதனையோ கொள்வதிலும்தான் கழித்து விடுகிறோம், கடந்த கால வெற்றிகளை அசைப்போட்டு இப்போது அது சாத்தியமில்லையே என்று நினைக்கிறோம். ஆனால், நாம் இந்தக் கணத்தைப் பற்றியோ, எதிர்காலம் பற்றியோ அதிகம் சிந்திப்பதில்லை.
நம் மனம் எப்போதும் நம்மை நமது முந்தைய கணங்களுக்குக் கொண்டுசென்று கொண்டே இருக்கும். இந்தக் கணம், அதாவது தற்கணம், நிகழ்காலம் என்பதை முக்கியப்படுத்திய தத்துவ ஞானி, தத்துவ ஆசிரியர், பேராசான் கௌதம புத்தர் என்றால் மிகையாகாது.
“தினமும் நாம் புதிதாய் பிறக்கிறோம். இன்று நாம் என்ன செய்கிறோமோ, அதுதான் முக்கியம்!”
நிகழ்காலத்தில் வாழ்வதன் முக்கியத்துவம், ஒவ்வொரு கணத்தின் முக்கியத்துவம் குறித்த கௌதம புத்தரின் ஆழமான நுண்ணறிவின் இந்த வழிகாட்டுதலின் மூலம் நிறைவான, குறிக்கோளுடன் கூடிய வாழ்க்கைக்கான ரகசியங்களைத் திறக்கலாம்.
நம்மைத் தொடர்ந்து பல திசைகளில் இழுக்கும் உலகில், புத்தரின் மேற்கோள் வழிகாட்டும் ஒளியாகச் செயல்படுகிறது. இது உண்மையிலேயே முக்கியமானவற்றில் கவனம் செலுத்த உதவுகிறது. இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள அர்த்தத்தை ஆழமாக ஆராய்வோம், நிகழ்காலத்தில் வாழ்வது என்பதன் வாழ்க்கையை மாற்றும் சக்தியை தெரிந்துகொள்வோம்.
புத்தரின் ‘மறுபிறப்பு’ என்னும் உருவகம் கூறுவது என்ன?
புத்தரின் மறுபிறப்பு கொள்கை ஆழமானது, சிக்கல் நிரம்பியது. நம்முடைய தேவைக்கு இப்போதைக்கு, ‘ஒவ்வொரு காலையும் நாம் மீண்டும் புதிதாய் பிறக்கின்றோம், இன்று என்ன செய்கிறோம் என்பதே முக்கியத்துவம் வாய்ந்தது’ என்ற மேற்கோளில் மட்டும் கவனம் கொள்வோம்.
தினசரி மறுபிறப்பு பற்றிய இந்த யோசனை நம்மை தொடர்ந்து வளரவும், மாற்றியமைக்கவும், மேம்படுத்தவும் தூண்டுகிறது. ஒவ்வொரு நாளும் சூரியன் உதிப்பது போல், நாமும் புதிதாய் உதித்து சவால்களையும் வாய்ப்புகளையும் உற்சாகத்துடனும் வீரியத்துடனும் எதிர்நோக்க முடியும்.
‘இன்று’ என்பதே முக்கியம்!
இந்த மேற்கோள் தற்போதைய தருணத்தில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. பெரும்பாலும், நாம் கடந்த காலத்தில் வாழ்கிறோம் அல்லது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறோம், இத்தகைய போக்கு இன்றைய காலத்தை அதிகம் பயன்படுத்துவதைத் தடுக்கிறது. உண்மை என்னவென்றால், நிகழ்காலத்தின் மீது மட்டுமே நமக்கு கட்டுப்பாடு உள்ளது. அதை மிகச் சிறப்பாகப் பயன்படுத்துவதன் மூலம் வெற்றியும் மகிழ்ச்சியும் நம்மை நாடும்.
தொழில்முனைவு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி உலகில், புத்தரின் இந்த அறிவுரை மிகவும் பொருத்தமானது. செயல்திறனுடன் செயல்படுவதன் மூலமும், ரிஸ்க்குகளை எடுப்பதன் மூலமும், நமது அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வதன் மூலமும் ஒவ்வொரு நாளையும் சிறப்பாகப் பயன்படுத்த இது நம்மை ஊக்குவிக்கிறது. இன்றைய நிலையில் கவனம் செலுத்துவதன் மூலம் நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
புத்தர் நல்கிய மேற்கோளின் உணர்வை உண்மையாக ஏற்றுக்கொள்ள, கீழ்வரும் நடைமுறைப் படிகளை கவனியுங்கள்:
1. நன்றியுணர்வோடு உங்கள் நாளைத் தொடங்குங்கள்: ஒவ்வொரு காலையிலும் வரவிருக்கும் வாய்ப்புகள், அனுபவங்களுக்கு நன்றியைத் தெரிவிக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள். இந்த எளிய செயல் அன்றைய நாளுக்கு நேர்மறையான தொனியை அமைத்து, நம்பிக்கையான கண்ணோட்டத்துடன் நாளை எதிர்கொள்ள உதவும்.
2. தினசரி இலக்குகளை அமைக்கவும்: உங்கள் நீண்ட கால நோக்கங்களுடன் இணைந்த இன்றைய நாளுக்கான குறிப்பிட்ட, அடையக்கூடிய இலக்குகளை அடையாளம் காணவும். இந்த தினசரி இலக்குகளில் கவனம் செலுத்துவதன் மூலம், உங்கள் செயல்களும் முடிவுகளும் குறிக்கோள் நோக்கியதாகவும் தாக்கம் ஏற்படுத்துவதாகவும் இருப்பதை உறுதி செய்யலாம்.
3. மனதை விழிப்பு நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்: தியானம் அல்லது உங்கள் எண்ணங்கள், சிந்தனைகளைப் பதிவு செய்து கொள்வதன் மூலமும் மனதை விழிப்பு நிலையில் வைத்திருக்கும் பயிற்சியை வளர்த்துக் கொள்ளுங்கள். இது அந்தந்த தருணத்தில் நாம் கவனம் செலுத்தவும், ஈடுபடவும் உதவும். இது மன அழுத்தத்தைக் குறைக்கலாம், கவனத்தை மேம்படுத்தலாம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தலாம்.
4. நிறைவின்மையைத் தழுவுங்கள்: யாரும் சரியானவர்கள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மேலும் நாம் நிறைவை நோக்கி மன அழுத்தங்களை ஏற்படுத்திக் கொள்வதை விட நிறைவின்மையை தழுவுவதன் மூலம், ஏற்றுக்கொள்வதன் மூலம் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ளவும் வளரவும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். திட்டமிட்டபடி விஷயங்கள் நடக்காதபோது உங்களைப் பற்றி நீங்களே விமர்சனபூர்வமாக கடினமாக இருக்காதீர்கள். மாறாக, இந்த பின்னடைவுகளை மதிப்புமிக்க கற்றல் அனுபவங்களாக பார்க்கவும்.
5. சிந்தித்து மீட்டமைத்துக் கொள்ளல்: ஒவ்வொரு நாளின் முடிவிலும், உங்கள் சாதனைகள் மற்றும் சவால்களைப் பற்றி சிந்திக்க நேரம் ஒதுக்குங்கள். இந்த நடைமுறையானது உங்கள் முன்னேற்றத்தை மதிப்பிடவும், அடுத்த நாளுக்கான உங்கள் முன்னுரிமைகளை மீண்டும் ஒருமுகப்படுத்தவும் உங்களை அனுமதிக்கிறது.
கௌதம புத்தரின் மேற்கோள்களின் ஞானம், ஒவ்வொரு நாளும் ஒரு விலைமதிப்பற்ற பரிசு, வளர்ச்சி மற்றும் மாற்றத்துக்கான முடிவில்லாத வாய்ப்புகளை வழங்குகிறது என்பதன் விலைமதிப்பற்ற நினைவூட்டலாகும். மறுபிறப்பு பற்றிய யோசனையைத் தழுவி, நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவதன் மூலம், நமது முழுத் திறனையும் திறந்து, உண்மையிலேயே அசாதாரணமான வாழ்க்கையை உருவாக்க முடியும். எனவே, நாளை சூரியன் உதிக்கும்போது, நினைவில் கொள்ளுங்கள்:
"ஒவ்வொரு காலையிலும் நாம் மீண்டும் பிறக்கிறோம். இன்று நாம் என்ன செய்கிறோம் என்பதே மிக முக்கியமானது."
மூலம்: Nucleus_AI | தமிழில்: ஜெய்
Motivational Quote | 'விழுந்தாலும் எழுவதிலேயே இருக்கிறது வாழ்வின் மகத்துவம்!'
Edited by Induja Raghunathan