வயதோ 28; மனதோ பெரிசு: கடப்பாவின் 10 ரூபாய் டாக்டர் 'நூரி பர்வீன்'
நூரி பர்வீனின் இன்ஸ்பிரேஷன் கதை!
டாக்டர் நூரி பர்வீன் ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் வெறும் 10 ரூபாய்க்கு நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதன் மூலம் மருத்துவ சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். கடப்பாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் முடித்த அவர், மருத்துவ வசதி செய்ய முடியாத பொருளாதார ரீதியாக பலவீனமான குடும்பங்களுக்கு சேவை செய்து வருகிறார்.
டாக்டர் பர்வீன் விஜயவாடாவில் உள்ள ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், தன்னால் முடிந்த சேவைகளை இந்த சமூகத்துக்காக செய்து வருகிறார்.
டாக்டர் பர்வீனின் கிளினிக்கில், வெளிநோயாளிகள் ரூ.10 செலுத்தி சிகிச்சை பெறுகின்ற அதே வேளையில் நோயாளிகளுக்கு ஒரு படுக்கைக்கு ரூ.50 மட்டுமே வசூலிக்கிறார்கள். தனியார் மருத்துவர்கள் சிகிச்சைக்கு ரூ.200 வரை வசூலிக்கக்கூடிய இந்தக் காலகட்டத்தில் பர்வீனின் சேவை கடப்பா நகரம் முழுவதும் பிரபலம் ஆகி வருகிறது.
இதனால் நகரத்தில் “ரூ .10 மருத்துவர்” என எல்லோரும் அவரை அழைத்து வருகின்றனர். இவரின் கிளினிக் சமீபத்தில்தான் ஒருவருடம் நிறைவு செய்துள்ளது. தற்போது அவரின் கிளினிக்கில் ஒரு ஆய்வகம், மூன்று நோயாளி படுக்கைகள் மற்றும் ஒரு மருந்தகத்தையும் கொண்டுள்ளது. மேலும் ஒரு OP அறை உள்ளது. இதுவே இரவில் பர்வீனின் படுக்கையும்கூட. ஆம், மருத்துவமனையிலேயே தங்கிக் கொள்கிறார்.
மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவமனையை நடத்த முடிகிறதா, மற்ற செலவுக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேள்விக்கு,
"மருந்துகளிலிருந்து நான் பெறும் கமிஷன் உதவுகிறது, மேலும் எனது பெற்றோர் எனக்குத் தேவைப்படும்போதெல்லாம் தங்கள் ஆதரவை வழங்குகிறார்கள்," என்று கூறும் பர்வீன் அடுத்ததாக உளவியலில் முதுகலைப் பட்டம் பெறவும், பின்தங்கிய பிரிவுகளில் சிறப்பு கவனம் செலுத்தி பல சிறப்பு மருத்துவமனையை அமைக்கவும் திட்டமிட்டு வருகிறார்.
இதற்கிடையே, பர்வீனின் இந்த சமூக அக்கறைக்கு வித்திட்டது அவரின் குடும்பத்தினர்தான். இதை அவரே விரிவாக கூறுகிறார்.
“கடப்பாவின் ஏழை வட்டாரத்தில் வேண்டுமென்றே எனது கிளினிக்கைத் திறந்தேன், விலையுயர்ந்த சிகிச்சையை வாங்க முடியாத மக்களுக்கு இது பயன்படுகிறது.”
விஜயவாடாவில் உள்ள எனது பெற்றோருக்கு தெரிவிக்காமல் கூட நான் எனது கிளினிக்கைத் தொடங்கினேன். ஆனால் எனது நடவடிக்கை மற்றும் பெயரளவு கட்டணம் வசூலிக்க நான் எடுத்த முடிவு பற்றி அவர்கள் அறிந்ததும் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து என்னை ஆசீர்வதித்தார்கள்.
”எனது உத்வேகம் எனது பெற்றோரிடமிருந்தும் அவர் வளர்க்கப்பட்ட விதத்திலிருந்தும் வருகிறது. எனது பெற்றோர்கள் சமூகச் சேவையின் உணர்வை எனக்குள் புகுத்தினர். எனது பெற்றோர்கள் மூன்று அனாதைகளை தத்தெடுத்து அவர்களின் கல்விக்கு பணம் செலுத்தி வருகின்றனர்,” எனப் பெருமிதம் கொள்கிறார் நூரி பர்வீன்.
இதற்கிடையே, சமூகப் பணிகளை மேற்கொள்ள தனது தாத்தாவின் நினைவாக “நூர் நற்பணி மன்றத்தையும்” தொடங்கியுள்ள அவர், இதன் கீழ், COVID-19 தொற்றுநோயால் ஏற்பட்ட லாக்டவுனின் போது ஏழைகளுக்கு ஒரு சமூக உணவுத் திட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுரை: Think Change India