200 மில்லியன் டாலர் நிதி திரட்டிய ஓலா எலக்ட்ரிக்: மதிப்பும் உயர்ந்தது!
மகிழ்ச்சியில் பவிஷ்!
ஓலாவின் மின்சார வாகன (ஈவி) பிரிவான ஓலா எலக்ட்ரிக், ஃபால்கன் எட்ஜ், சாஃப்ட் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து 200 மில்லியன் டாலர் நிதி திரட்டியிருக்கிறது.
இதன் இந்திய மதிப்பு ரூ.1,484.7 கோடி எனக் கூறப்படுகிறது. இந்த நிதி திரட்டலால், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மதிப்பு 300 கோடி டாலரை (ரூ.22,272 கோடி) எட்டியுள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள ஓலா நிறுவனத்தின் தலைவா் பாவிஷ் அகா்வால்,
"இந்தியாவில் இருந்து மின்சார வாகனப் புரட்சியை உலகிற்கு வழிநடத்தியதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்தியா முழுக்க முழுக்க எதிர்காலத் தொழில்களுக்காக எதிர்காலத் தொழில்நுட்பங்களை உருவாக்கும் திறமையும் திறனும் கொண்டது. தற்போதுள்ள முதலீட்டாளர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன், புதியவர்களை ஓலாவிற்கு வரவேற்கிறேன். ஒன்றாக இணைந்து, நாங்கள் எதிர்காலத்திற்கான நிலைத்தன்மையைக் கொண்டு வருவோம்," என்றுள்ளார்.
ஓலா சில நாட்களுக்கு முன்பு தான் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை தொடங்கியது. S1, Ola S1 Pro ஸ்கூட்டர்களுக்கான புக்கிங் முதல் நாளில் இருந்தே விறுவிறுப்பாக சென்றது. முதல் இரண்டு நாட்களிலேயே ரூ.1,100 கோடிக்கு மேல் விற்று ஓலா சாதனை படைத்திருந்தது. இந்த விற்பனை மூலம் இரு சக்கர வாகன விற்பனையில் முக்கிய இடத்தை அடைந்த நேரத்தில் இந்த நிதி திரட்டல் முக்கியவத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஒரு வலைப்பதிவில் ஓலா நிறுவனர் பாவிஷ்,
“ஓலா நிறுவனம் வாடிக்கையாளரை மையமாகக் கொண்டு ஒரு புதிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி இருக்கிறது," என்றுள்ளார்.
ஓலா எலக்ட்ரிக் கட்டியுள்ள ஃபியூச்சர்ஃபாக்டரி உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்பட்ட 2W தொழிற்சாலைகளில் ஒன்றாகும். இதன் முதல் கட்டிடத்தை முடித்து தற்போது உற்பத்தி முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஓலா ஃபியூச்சர்ஃபாக்டரி உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையாகும், இது முற்றிலும் பெண்களால் நடத்தப்படுகிறது. முழு அளவில், இது 10,000க்கும் மேற்பட்ட பெண்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
தகவல்: பிடிஐ | தமிழில்: மலையரசு