உலகின் 100 மதிப்புமிக்க பிராண்டுகளில் இடம்பிடித்துள்ள 4 இந்திய நிறுவனங்கள் - டாப் 5 யார் தெரியுமா?
உலகின் 100 மிகவும் மதிப்புமிக்க சர்வதேச பிராண்டுகள் 2024: டாப் பிராண்ட் இடத்தை பிடித்தது ஆப்பிள், அதனைத் தொடர்ந்து கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் முதல் 5 இடங்களில் உள்ளன. டாப் 10 இடங்களை பிடித்துள்ளவற்றில் 8 தொழில்நுட்ப நிறுவனங்களாகும்.
உலக வணிக நிறுவனங்களுக்கு மார்கெட்டிங் டேட்டா மற்றும் பகுப்பாய்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனம் Kantar Brandz. உலகிலுள்ள பெரும்பாலான நிறுவனங்களின் பிராண்ட் பார்ட்னராக இருக்கும் Kantar 100 மிகப்பெரிய நிறுவனங்களில் 96 நிறுவனங்களின் விளம்பரதாரராகவும் இருக்கிறது.
523 பிரிவுகளில் 21,000 பிராண்டுகள் குறித்து 4.3 மில்லியன் மக்களிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில், புதிய பிராண்டு மதிப்பீட்டு தரவரிசையை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கந்தார் வெளியிட்டுள்ள 2024 தரவரிசை, ஒவ்வொரு இந்தியர்களையும் அதிலும் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையினர் பெருமைப்படும் தருணத்தை கொடுத்துள்ளது. உலகின் 100 மிகவும் மதிப்புமிக்க பிரண்டுகளில் முன்னணி ஐடி சேவை வழங்கும் இந்திய நிறுவனங்கள் இடம்பிடித்துளளன. உலக அளவிலான நிறுவனங்களோடு போட்டி போடும் அளவுக்கு உயர்ந்துள்ள இந்திய நிறுவனங்கள் எவை? இங்கே தெரிந்து கொள்வோம்.
டாப் இந்திய ஐடி நிறுவனங்கள்
இந்தியாவின் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் இருக்கும் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ், உலகின் டாப் 100 மிகவும் மதிப்புமிக்க பிராண்டுகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இந்நிறுவனங்கள் தவிர மூன்றாவதாக ஒரு இந்திய நிறுவனம் டாப் 100 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது, அது இந்திய டெலிகாம் துறையில் மிகப்பெரிய நிறுவனமான ஏர்டெல்.
டாப் 100 நிறுவனங்கள் பட்டியலில் டெக் ஜாம்பவான்களான ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் இடம்பெற்றுள்ள வரிசையில் இந்த நிறுவனங்களும் சேர்ந்துள்ளன.
Kantar Brandzன் மிகவும் மதிப்புமிக்க உலகளாவிய பிராண்டுகள் அறிக்கை 2024ன்படி, 100 நிறுவனங்கள் பட்டியலில் டிசிஎஸ் 46வது இடத்தையும் ஏர்டெல் 73வது இடத்தையும் இன்போசிஸ் 74வது இடத்தையும் பிடித்துள்ளது. இவற்றுடன், டிசிஎஸ்க்கு அடுத்தபடியாக, HDFC வங்கி 47வது இடத்தில் உள்ளது.
“இந்த ஆண்டு சவாலானதாகவும் உலக அளவில் நிலையற்ற தன்மை இருந்த போதும்கூட, நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தருவதில் கவனத்துடன் இருந்தோம் மேலும் எங்களுடைய உழைப்பு இன்போசிஸ் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்” என்று இன்போசிஸ் சர்வதேச முதன்மை மார்க்கெட்டிங் அதிகாரி சுமித் விர்மானி தெரிவித்துள்ளார்.
“நிலையற்ற தன்மைகள் இருந்த போதும், எங்களுடைய வாடிக்கையாளர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்களின் ஊக்கத்தால் நாங்கள் அடுத்த கட்ட தொழில்நுட்ப வளர்ச்சியான டிஜிட்டல் – ஃபர்ஸ்ட், கிளவுட் -ஃபர்ஸ்ட் மற்றும் ஏஐ-ஃபர்ஸ்ட் அணுகுமுறைக்கு மாறினோம். எங்களுடைய முழுத்திறனையும் செலவிட்டு மக்கள், தொழில்கள் மற்றும் சமூகம் என அனைவருக்கும் அடுத்த கட்ட வாய்ப்புகளை ஏற்படுத்துவதில் முனைப்புடன் இருந்தோம்,” என்று விர்மானி கூறியுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வணிக தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் தளத்தில் டிசிஎஸ் 16வது மிகப்பெரிய பிராண்டாக உள்ளது, இன்போசிஸ் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இந்தப்பட்டியலில் இடம்பெறுவதோடு தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் தளத்தில் மிகப்பெரிய பிராண்டுகள் பட்டியலில் 20வது இடத்தில் உள்ளது.
டெலிகாம் நிறுவனங்களில் ஏர்டெல் ஏழாவது இடத்தில் உள்ளது. Kantar BrandZன் மிகவும் மதிப்புமிக்க உலகளாவிய பிராண்டுகள் அறிக்கை 2024ல் எதிர்காலத்தில் வளர்ச்சி பெறக்கூடிய ஐடி நிறுவனமாக HCL நிறுவனத்தை சேர்த்துள்ளது.
“இந்திய பன்னாட்டு ஐடி கன்சல்டன்சி நிறுவனமான HCL Tech, 52 சந்தைகளில் தங்களது இருப்பை கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவில் செயல்படும் மென்பொருள் மேம்பாடு மற்றும் வாழ்க்கை சுழற்சியை கையாள்வதற்கு பொறியியல் ரீதியிலான தீர்வுகளை இந்நிறுவனம் வழங்குவதாக,”அறிக்கை தெரிவித்துள்ளது.
உலக அளவிலான டாப் டெக் நிறுவனங்கள்
Kantar BrandZ அறிக்கையின்படி, உலகின் டாப் பிராண்ட் இடத்தை ஆப்பிள் பிடித்துள்ளது, இதற்கு அடுத்தபடியாக கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் டாப் 5 இடங்களில் உள்ள நிறுவனங்களாகும். உலகின் முதல் ட்ரில்லியன் டாலர் பிராண்டாக வளர்ந்து ஆப்பிள் நிறுவனம் மூன்றாவது ஆண்டாக முதல் இடத்தில் உள்ளது என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
புதுமையான திட்டங்கள், பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப ஏஐ தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட மெனு போர்டு மற்றும் ஆர்டர் பெறுவது போன்றவற்றால் இந்தப் பட்டியலில் 5வது இடத்தை தக்க வைத்திருக்கிறது MC Donalds. டாப் 10 இடத்தை பிடித்துள்ள பிராண்டுகளில் 8 தொழில்நுட்ப நிறுவனங்களாகும்.
ஓராண்டுக்குப் பிறகு டாப் 10 பிராண்டுகளில் ஒன்றாக மீண்டும் இணைந்திருக்கிறது Facebook. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 13 பிரிவுகளில் உள்ள பிராண்டுகளின் தரவரிசையில் குறிப்பிடும்படியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
மதுபானம்: மதுபானத் துறையை பொருத்தவரையில் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த கொரோனா மிகவும் மதிப்புமிக்க பீர் பிராண்டாக உயர்ந்துள்ளது. பிரேசில், சீனா மற்றும் தென்ஆப்ரிக்கா போன்ற நாடுகள் சர்வதேச சந்தைகளில் உயர்ந்தாலும் மெக்சிகோ தங்களது இருப்பிற்கான ஸ்திரத்தை கொண்டிருப்பதே கொரோனா வெற்றி அடைந்திருப்பதற்கான முக்கியக் காரணம்.
ஆயத்த ஆடைகள் துறை - இத்துறையில் Nike தங்களின் நம்பர்.1 இடத்தை தக்கவைத்திருக்கிறது. எனினும், போட்டி நிறுவனங்களுக்கிடையேயான இடைவெளி குறைந்திருக்கிறது. 47% வளர்ச்சியுடன் Zara இரண்டாவது இடத்திற்கு உயர்ந்திருப்பதால் டாப் 100 பிராண்டுகள் வரிசையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கனடா நாட்டைச் சேர்ந்த Lululemon athletica தன்னுடைய புதுமையான அணுகுமுறையால் முதல் முறையாக டாப் 100 பிராண்டுகள் வரிசையில் இடம்பிடித்திருக்கிறது.
ஆடம்பரங்கள் – ஆடம்பரங்கள் வரிசையில் 130 பில்லியன் டாலர் பிராண்ட் மதிப்புடன் மிக மதிப்புமிக்க பிராண்ட் என்கிற இடத்தை தக்கவைத்திருக்கிறது Louis Vuitton. அமெரிக்க மற்றும் சீன சந்தையில் தனித்துவத்தை காட்டி சிறப்பாக இருக்கும் Hermes பிராண்ட் மதிப்பில் 23% வளர்ச்சி கண்டுள்ளது.
ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு : Netflix புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது, இந்தப் பிரிவில் பிராண்ட் மதிப்பில் 6வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு தாவியுள்ளது. வாடிக்கையாளர்கள் அதிகரித்ததால் இந்த பிராண்டின் மதிப்பானது 51% அதிகரித்துள்ளது.
2024ல் உலக அளவில் ஒரு ஸ்திரமற்ற தன்மை இருந்தாலும், ஏஐ தொழில்நுட்பத்தில் நிறுவனங்கள் முதலீடு செய்ததன் பலனை வாடிக்கையாளர்கள் மூலமாக அடைந்துள்ளன. எனினும் சிறந்த கருத்தாக்கம், புதுமைகள், திறன்பட்ட உத்திகள் என சந்தையின் மாற்றத்திற்கு பல்வேறு காரணங்களும் உள்ளன.