உம்மன் சாண்டிக்கு எதிராக தேர்தலில் 31 வயது இளைஞன்: யார் இந்த ஜெய்க் சி தாமஸ்?
கேரள அரசியலில் முக்கிய முகமாக மாறும் இளைஞன்!
கேரளாவில் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த உம்மன் சாண்டியை தேர்தல் மீண்டும் அரசியலுக்கு வரவழைத்திருக்கிறது. நடக்கவுள்ள தேர்தலில் தனது ஆஸ்தான தொகுதியும், 11 முறை வென்ற தொகுதியுமான புதுப்பள்ளியில் வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார் உம்மன் சாண்டி. அவருக்கு எதிராக இந்த தேர்தலில் களம் காண்கிறார் 31 வயது இளைஞர் ஜெய்க் சி தாமஸ்.
எல்.டி.எஃப் கூட்டணி களமிறக்கியுள்ள ஜெய்க் சி தாமஸ் தான் கடந்த முறையும் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அப்போது அவரின் வயது 26 மட்டுமே. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில், புதுமுக வேட்பாளராக இருந்தபோதிலும், ஜெய்க் 44,505 வாக்குகளைப் பெற்றார். இது மொத்த வாக்குப் பங்கில் 33.2% ஆகும். புதுப்பள்ளி மக்கள் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக உம்மன் சாண்டிக்கு வாக்களித்து வருகின்றர். தொடர்ந்து மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று புதுப்பள்ளியின் அசைக்க முடியாத தனிப்பெரும் தலைவராக இருந்து வருகிறார் உம்மன் சாண்டி.
புதுப்பள்ளி தொகுதியின் செல்வாக்குமிக்க தலைவர் 77 வயதான உம்மன் சாண்டிதான் என்பது ஒவ்வொரு முறையும் உறுதியாகிறது. இந்த முறை உம்மன் சாண்டிக்கு ஜெய்க் தாமஸ் கடுமையான டஃப் கொடுப்பார் என்கிறது அந்த ஆய்வு. பதவியில் இல்லாதபோதிலும் ஜெய்க் செய்த நற்பணிகள் அதற்கு ஒரு காரணம்.
"கொரோனா காலத்தில் அரசாங்கம் மக்களுக்காக செய்ததைத் தவிர, ஜெய்க் தனது சொந்த முயற்சியில், பொருள்களை வாங்கி மக்களுக்கு விநியோகித்தார். மக்களுக்கு உதவியாக இருந்துள்ளார். உம்மன் சாண்டி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும். உம்மன் சாண்டியால் தொகுதியில் எந்தவொரு வளர்ச்சியும் இல்லை," என்று புதுப்பள்ளியில் பலரும் புகார் கூறி வருகின்றனர்.
இதேபோல் பலரின் கருத்தும் இருக்கிறது. கொரோனா, பெருவெள்ளம் என கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்த ஏராளமான சம்பவங்களில் மக்களுடன் மக்களாக நின்று உதவிகளை செய்துள்ளார் ஜெய்க். அரசாங்கத்தின் உதவிகளைத் தாண்டி தனது சொந்த முயற்சியில் பல விஷயங்களைச் செய்துள்ளார்.
இது அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. அந்தப் பகுதி இளைஞர்கள் மத்தியிலும் ஜெய்க் மீது ஈர்ப்பு உருவாகியுள்ளது. இதனுடன், எல்.டி.எஃப் கொள்கைகள், கூட்டணி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் வாக்குகளாக தனக்கு சாதகமாக மாற்றக்கூடும் என்றும் ஜெய்க் நம்புகிறார். அதற்கேற்ப தேர்தல் களத்தில் பம்பரமாக சுழன்று வருகிறார்.
அவரது முயற்சி பலனளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.