பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புத்தகம் வெளியிட்டுள்ள விஜி ஹரி
ஊபர் போன்ற நிறுவனங்கள் மற்றும் 500 ஸ்டார்ட் அப்கள் போன்ற விசி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடந்ததால் இந்த வருட துவக்கத்தில் சிலிக்கான் வேலியில் பல எதிர்பாராத பிரச்சனைகள் முளைத்தன. இதற்கு வெகு அருகிலுள்ள இந்திய ஸ்டார்ட் அப் இகோசிஸ்டமும் பரவலான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து கவனிக்கத் துவங்கியது.
பல்வேறு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடப்பது வெளிச்சத்திற்கு வந்த காரணத்தினால் ஸ்டார்ட் அப் நிறுவனர்கள், சிஇஓக்கள், விசி போன்றோர் இதற்கு தீர்வுகாண்பதற்கு முன்னுரிமை அளிக்க விரும்புகின்றனர். கெல்ப்எச்ஆர் நிறுவனத்தின் சிஇஓ விஜி ஹரி ’Behind Closed Cubicles’ என்கிற புத்தகத்தை எழுதியுள்ளார். மேலாளர்கள், ஊழியர்கள், மனிதவள ப்ரொஃபஷனல்கள் ஆகியோர் பணியிடத்தில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை எவ்வாறு கையாள்வது என்பது இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து விஜி யுவர் ஸ்டோரியுடன் பகிர்ந்துகொண்டார்.
KelpHR துவக்கம்
“பாலியல் சார்ந்த எந்த ஒரு வேண்டாத நடவடிக்கையும் பாலியல் துன்புறுத்தலாகும். இந்திய மக்கள் பலவிதமான கலாச்சாரம் மற்றும் பின்னணியைக் கொண்டவர்கள். அடுத்தவரிடம் காலை வணக்கத்தை கட்டியணைத்து தெரிவிப்பது ஒருவரது கலாச்சாரமாக இருக்கலாம். இது மற்றொரு கலாச்சாரத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே பணியிடத்தில் அடுத்தவரது பின்னணியையும் உணர்ச்சிகளையும் மதித்து நடப்பது முக்கியமானதாகும்,” என்றார் விஜி.
மின்வழிகற்றல் வாயிலாகவும் வகுப்பறை அமர்வுகள் வாயிலாகவும் இதுவரை பல்வேறு துறைகளில் 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 1,00,000 ஊழியர்களை இக்குழுவினர் சென்றடைந்துள்ளனர்.
பெரும்பாலும் பெண்களைக் கொண்ட 11 பேர் கொண்ட குழு சென்னை, மும்பை, புனே, பெங்களூரு ஆகிய இடங்களில் சிறிய அலுவலக அமைப்பில் பணிபுரிகிறது. விஜி சென்னையைச் சேர்ந்தவர். இங்குதான் இவர்களது பதிவு செய்யப்பட்ட அலுவலகம் உள்ளது.
பணியிடத்தில் கலாச்சார வேறுபாடு
Behind Closed Cubicles புத்தகத்தில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு விவரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தின் கலாச்சார வேறுபாடுகள், நிறம் சார்ந்த பாகுபாடு, ஒருவரை கட்டியணைத்து பாராட்டை வெளிப்படுத்தும் செயலை உடன்பணிபுரிவோர் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது உள்ளிட்டவை பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.
”பாமர மக்களுக்கு புரியும் விதத்தில் இளம் ஊழியர்களை சென்றடையவும் அதே நேரத்தில் மனிதவள துறைக்கு உதவும் விதத்திலும் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் கமிட்டிக்கு பல்வேறு சம்பவங்களை புரியவைத்து கையாள உதவும் விதத்திலும் இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன்,” என்றார் விஜி.
கலாச்சார வேறுபாடுகளை முறையாகக் கையாள்வது குறித்து விஜி குறிப்பிடுகையில், “நிறுவனம் என்பது பல்வேறு கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களும் பணிபுரியும் இடம் என்கிற விழிப்புணர்வை ஊழியர்களிடையே ஏற்படுத்தவேண்டும். மரியாதையுடன் அடுத்தவரை அணுகவேண்டும் என்கிற கலாச்சாரம் அனைத்து நிலைகளிலும் இருப்பது அவசியமானதாகும்.”
துன்புறுத்தலின் வகை இடங்களுக்கேற்றவாறு மாறுபடுமா?
பல ஆண்டுகளாகவே உலகளவில் பாலியல் துன்புறுத்தல்கள் பரவியிருப்பதாகவும் இந்த அடிப்படையில் சிலிக்கான் வேலிக்கும் இந்தியாவிற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றும் குறிப்பிடுகிறார் விஜி.
”மக்கள் சமூக ஊடகங்களை எளிதாக அணுகுவதால் விழிப்புணர்வு பெருகியுள்ளது. பல பெண்கள் தைரியமாக பகிர்ந்துகொள்கின்றனர்,” என்றார் விஜி.
பலர் இதற்கு முன்பு தங்களுக்கு நடந்த துன்புறுத்தல்களை இதுவரை வெளிக்காட்டிக் கொண்டதில்லை என்பதை சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக பிரபலமாகிக்கொண்டிருக்கும் #MeToo campaign நிரூபித்துள்ளது.
”மகிழ்ச்சியான பணியிடங்களை உருவாக்க பலதரப்பட்ட கலாச்சாரங்களை உள்ளடக்கிய சார்பு இல்லாத நிறுவனங்கள் உருவாகவேண்டும். பாலின துன்புறுத்தல்களை தடுக்கும் பயிற்சிகள் பெயரளவில் இல்லாமல் இந்த பிரச்சனையை முளையிலேயே கிள்ளியெறிய உதவக்கூடியதாக கார்ப்பரேட் கலாச்சாரம் இருக்கவேண்டும். பெண்களை மதிக்கும் கலாச்சாரத்துடன்கூடிய நிறுவனங்கள் உருவாக நாங்கள் உதவுகிறோம்.”
உயர்மட்ட அளவில் அரங்கேறும் துன்புறுத்தல்களை சமாளித்தல்
500 ஸ்டார்ட் அப் சம்பவம் தலைமைப் பதவியில் இருப்பவர்களும் தவறிழைக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ஒரு நிறுவனத்தின் சிஇஓ, தலைவர் அல்லது மூத்த நிர்வாகிகள் தவறு இழைத்ததாக கண்டறியப்பட்டால் நிறுவனம் எத்தகைய நடவடிக்கை எடுக்கும்?
”உயரதிகாரிகளுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டால் நடவடிக்கை எடுக்காமல் போகும் காலம் மலையேறிவிட்டது. ஒரு தனிநபரின் பிம்பத்தைக் காட்டிலும் நிறுவனத்தின் ப்ராண்டை பாதுகாப்பது மனிதவளத் துறையின் முக்கிய பணியாகும். மனிதவளத் துறை தனது முதன்மை எடிட்டரை பாதுகாக்க முயன்றபோது நடந்த தெஹல்கா சம்பவம் மற்றும் சமீபத்தில் TVF-ல் பாதிக்கப்பட்டவர் நிறுவனத்தின் தரப்பிலிருந்து நியாயம் கிடைக்காததால் சமூக ஊடகங்களின் பார்வைக்கு எடுத்துச் சென்ற சம்பவம் ஆகியவை இதற்கான உதாரணங்களாகும்.
பாலின் துன்புறுத்தல்களை கையாள்வதில் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள்
ஒருவரின் நடத்தை பிடிக்காதபோது அதை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்வது அவசியம் என்றும் அதன் பின்னரும் தொடர்ந்தால் நிறுவனத்தின் பாலின துன்புறுத்தல்களை தடுக்கும் கமிட்டியிடம் (PoSH) புகாரளிக்கவேண்டும் என்கிறார் விஜி. மேலும்,
”எதிர்த்து நின்று போராடிய பிறகு 65 சதவீத சம்பவங்கள் திரும்ப நடப்பதில்லை. பிரச்சனை தீவிரமாக இருக்கும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள ஆயத்தமாகவேண்டியதுதான் முதல் கட்ட நடவடிக்கையாக இருக்கவேண்டும். நிறுவனத்திற்குள் இயங்கும் கமிட்டியிலோ அல்லது காவல் நிலையத்திலோ புகாரளிக்கவேண்டும்,” என்றார் விஜி.
விஜியின் கதை
விஜி சென்னையில் பிறந்து வளர்ந்து வெவ்வேறு நகரங்களில் படிப்பை முடித்துள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். 14 வருடங்கள் உலகெங்கும் பயணித்துள்ளார். இது வேறுபட்ட கலாச்சாரங்கள் குறித்தும் மனிதர்களின் மனநிலை குறித்தும் ஒரு விரிவான பார்வையையும் புரிதலையும் அவருக்கு வழங்கியது.
விஜியின் பல வருட அனுபவங்களால் உருவானது Behind Closed Cubicles புத்தகம். KelpHR மூலமாக ப்ராண்டில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் நிறுவனத்தின் மதிப்பை கூட்டி சிறப்பான பணிச்சூழலையும் கலாச்சாரத்தையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார் விஜி.
”KelpHR துவங்கியபோது விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்களைக் கொண்ட தளத்தை உருவாக்குவதில் பணம், நேரம், வளங்கள் அனைத்தையும் அதிகளவில் செலவிட்டோம். இந்த முயற்சி வெற்றியடையாமல் இதிலிருந்து வெளியேறியபோது மிகவும் கடினமாக இருந்தது.”
”புதிய விஷயங்களை கற்க சிறப்பாக செயல்படவேண்டும். ஈடுபடும் செயல்களில் சிறப்பாக செயல்படவேண்டும். சமூக நலனில் என்னால் இயன்ற அளவு பங்களிக்கவேண்டும். இதுவே என்னுடைய விருப்பம். பரிச்சயமில்லாத ஒரு நபர் என்னுடைய புத்தகம் பயனுள்ளதாக இருப்பதாகவும் தங்களது வாழ்க்கையுடன் தொடர்புப்படுத்திக்கொள்ள முடிவதாகவும் என்னிடம் தெரிவித்த தருணம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். மென்மேலும் சிறப்பாக செயல்பட இவை உந்துதலளிக்கிறது,” என்றார் விஜி.
ஆங்கில கட்டுரையாளர் : தன்வி துபே