காயங்களை மறைக்கும் 3டி அச்சுத் தோல் உருவாக்கிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசியர்!
இந்த முப்பரிமாண அச்சு தோல் நீரிழிவு நோயாளிகள் மற்றும் அழுத்தப் புண் ஏற்பட்ட நோயாளிகளுக்கு உதவுவதற்கான முன்னெடுப்பாகும்.
தொழில்நுட்பம் பல்வேறு வகைகளில் நம் உலகையே மாற்றி வருகிறது. இந்த மாற்றத்தை மருத்துவத் துறை பெரிதும் வரவேற்கிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசியர் நியூயார்க்கின் ரென்செலயர் பாலிடெக்னிக் இன்ஸ்டிட்யூட் குழுவுடன் இணைந்து ரத்த நாளங்களுடன்கூடிய முப்பரிமாண அச்சுத் தோல் உருவாக்கியுள்ளார்.
வேதியியல் மற்றும் உயிரியல் பொறியியல் துறையின் உதவி பேராசிரியரான பங்கஜ் கராந்தே இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். இது இயல்பாக நம் உடலில் உள்ள மனிதத் தோல் போன்றே புதிய தோலை உருவாக்குவதற்கான முன்னெடுப்பாகும்.
இவரது ஆய்வின் ஆரம்பகட்டமாக ’பயோ-இங்க்’ எனப்படும் ’உயிரி மை’ தயாரிக்க இரு வகையான செல்களை ஒன்றாகக் கலந்தார். இவை தோல் போன்ற அமைப்பில் அச்சிடப்பட்டது. இருப்பினும் அதில் ரத்த நாளங்கள் இல்லை.
யேல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ரத்த நாளங்களின் உட்புற அடுக்கில் இருக்கும் எண்டோடெலியல் செல்கள் மற்றும் எண்டோதீலியல் செல்களைச் சுற்றியிருக்கும் பெரிசைட் செல்கள் ஆகியவை இணைக்கப்பட்டதாக ’நியூ அட்லாஸ்’ தெரிவிக்கிறது.
இதற்கு உயிரி மையில் தோலின் ரத்த நாளங்களில் உள்ள செல்களை கலந்தனர். விரைவில் தோலில் ரத்த நாளங்கள் வளரத் தொடங்கியது.
இக்குழுவினர் எலியின் மீது செய்த சோதனை வெற்றியடைந்தது. காயம்பட்ட ஒரு எலியின் மீது புதிய தோலின் ஒரு சிறு துண்டு பதிக்கப்பட்டபோது எலியின் உடலில் உள்ள நாளங்கள் அந்த தோல் துண்டுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளத் தொடங்கியது. நான்கு வாரங்களுக்குப் பிறகு விலங்கின் ரத்தம் அச்சிடப்பட்ட தோலுடன் பரவியது. இது குறித்து பங்கஜ் கூறும்போது,
“ரத்தமும் சத்துக்களும் புதிய தோலுக்கு மாற்றப்படுகிறது என்பதையும் இதுவே அவற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்பதையும் நாங்கள் அறிவோம். எனவே இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்,” என தெரிவித்ததாக ’நியூ அட்லாஸ்’ தெரிவிக்கிறது.
உயிரியலை மறு உருவாக்கம் செய்தல்
பயோடெக்னாலஜி மற்றும் இண்டர்-டிசிப்ளினரி ஸ்டடீஸ் மையத்தின் உறுப்பினரான இந்த பேராசிரியர் இந்த மருத்துவத் தயாரிப்பு பேண்ட் எயிட் போன்றது என தெரிவிப்பதாக ’சயின்ஸ் டெய்லி’ குறிப்பிட்டுள்ளது.
”பொறியாளர்கள் உயிரியலை மறு உருவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் எங்களைப் பொறுத்தவரை உயிரியல் என்பது நாம் ஆய்வகத்தில் உருவாக்கும் எளிய அமைப்பைக் காட்டிலும் சிக்கலானது. நாங்கள் இந்த சிக்கலை அணுகத் தொடங்கும்போது உயிரியல் இயற்கைக்கு மிக அருகில் செல்லத் தொடங்குகிறது,” என்றார்.
இதை மருத்துவ ரீதியாக பயன்பாட்டிற்கு உட்படுத்த ஆராய்ச்சியாளர்கள் CRISPR போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எடிட் செய்யவேண்டும். இதனால் நாளங்கள் ஒருங்கிணைந்து நோயாளியின் உடலில் ஏற்றுக்கொள்ளப்படும்.
”நாங்கள் இன்னமும் அந்த நிலையை எட்டவில்லை. ஆனால் வெகு விரைவில் எட்டிவிடுவோம்,” என்று பங்கஜ் தெரிவித்ததாக ‘சயின்ஸ் டெய்லி’ குறிப்பிட்டுள்ளது.
கூடுதல் ஆய்வு அவசியம்
தீக்காயம் ஏற்பட்ட நோயாளிகளுக்கு பயன்படுத்துவதில் இருக்கும் சவால்களுக்கு தீர்வுகாண கூடுதல் ஆய்வு அவசியம் என்கிறார் பங்கஜ். எனினும் நீரிழிவு அல்லது அழுத்தப் புண்கள் ஏற்பட்டவர்களுக்கு அச்சிடப்படும் இந்தத் தோல் உதவும்.
”இந்த நோயாளிகளுக்கு இது கச்சிதமாக பொருந்தும். ஏனெனில் உடலில் தெளிவாக தெரியும் இடங்களில் புண்கள் ஏற்படுவதால் தோலின் சிறிய துண்டுகள் கொண்டு இதற்கு தீர்வு காணலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு விரைவில் காயம் ஆறாது என்பதால் அந்த செயல்முறையை துரிதப்படுத்த இது உதவும்,” என்றார்.
கட்டுரை: THINK CHANGE INDIA