ஆட்டோ ஓட்டுநராக வாழ்க்கையைத் தொடங்கி உலக சாதனை படைத்துள்ள 'இட்லி இனியவன்'

இட்லியில் என்ன புதுமையைச் செய்துவிட முடியும் என அலட்சியம் செய்தவர்கள் எல்லாம், இன்று ஆச்சர்யத்தில் மூக்கில் விரலை வைக்கும்படிச் செய்துள்ளார் கோவையைச் சேர்ந்த இனியவன்.
9 CLAPS
0

இன்று உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான இட்லி, சுமார் 700 ஆண்டுகளாக உண்ணப்பட்டுவருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அப்படிப்பட்ட இட்லியின் புகழை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்காக உருவானது தான் இந்த உலக இட்லி தினம்.

'இட்லி கிங்' என்ற பெயரில் அறியப்படும் சென்னையைச் சேர்ந்த இனியவனும், தமிழக கேட்டரிங் ஊழியர்கள் சங்க தலைவர் ராஜாமணி அய்யரும் சேர்ந்துதான், இந்த இட்லி தினத்தை அறிமுகப்படுத்தினர்.

உலக சுகாதார அமைப்பும் உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுப்பண்டங்களின் பட்டியலில் இட்லிக்கு, முக்கிய இடம் அளித்துள்ளது. இப்படியாக இட்லியின் புகழ் ஒருபுறம் பரவி வர, இட்லி மூலம் உலக சாதனை புரிந்து, தொழில் முனைவோராகி புகழும் அடைந்துள்ளார் ‘இட்லி’ இனியவன்.


பட உதவி: தி ஹிந்து

கோவையைச் சேர்ந்தவர் இனியவன். ஒன்பது குழந்தைகளைக் கொண்ட ஏழ்மையான குடும்பம் அவருடையது. மூன்று வேளை உணவுக்கும் உத்தரவாதம் இல்லாத குடும்பச் சூழல். மதிய சத்துணவு உதவியோடு 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். விடுமுறை நாட்களில் அதுவும் இல்லாமல் பட்டினியாக கிடந்துள்ளார். இதனால் சாப்பாட்டிற்காக ஒவ்வொரு குழந்தையும் உழைத்தே ஆக வேண்டிய நிர்பந்தம். எனவே, அருகில் இருந்த பேக்கரி ஒன்றில் விடுமுறை தினங்களில் ஊழியராகி விட்டார் இனியவன். பேக்கரி என்பதால் அவ்வப்போது டீ, காபி, பன் போன்றவை விடுமுறை நாட்களில் அவருக்கு உணவாகக் கிடைத்தது.

ஆனாலும் குடும்ப வறுமை அவரைத் தொடர்ந்து படிக்கவிடவில்லை. 8-வதோடு படிப்பை நிறுத்திய இனியவன், அம்மாவுக்கு உதவியாக பஜ்ஜி, தர்பூசனி விற்பனை என காலநிலைக்கு தகுந்த வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

“பண்டிகை நாட்களில் மட்டுமே வீட்டில் இட்லி, தோசை செய்வார்கள் அந்தளவிற்கு வறுமையான குடும்பம் எங்களுடையது. இதனால் சிறு சிறு வேலைகளால் கிடைத்த வருமானம் போதாமல் போகவே, ஓட்டுநர் உரிமம் பெற்று ஆட்டோ ஓட்டுநர் ஆனேன்,” என்றார். 

அப்போது தான் எதிர்பாராத ஒரு தருணத்தில் சந்திராம்மாவின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. சில கடைகளுக்கு இட்லி சுட்டுக் கொடுக்கும் வேலையைச் செய்து வந்தார் சந்திராம்மா. அப்போது அவருக்கு உதவியாக தனது ஆட்டோவில் கொண்டு சென்று அண்டாவில் மாவு அரைத்துக் கொடுப்பது, அவித்த இட்லியை ஹோட்டல்களுக்கு சப்ளை செய்வது போன்ற வேலைகளை செய்யத் தொடங்கியுள்ளார்.

“எனது ஆர்வம் மற்றும் கடின உழைப்பால் நாள் ஒன்றுக்கு 250 இட்லியாக இருந்த சந்திராம்மாவின் விற்பனை, ஒரே மாதத்தில் 2500 இட்லியாக உயர்ந்தது,” என தன் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கிறார் இனியவன்.

சந்திராம்மாவிடம் இருந்தே இட்லிக்கு அரிசியை எப்படிக் கழுவுவது, எந்த பதத்தில் மாவு அரைப்பது உள்ளிட்ட தொழில் நுணுக்கங்களை அவர் கற்றுக் கொண்டார். சந்திராம்மா சப்ளை செய்யும் கடைகள் போக, புதிய கடைகளையும் பிடித்து தனது திறமையால் வியாபாரத்தை அதிகமாக்கியுள்ளார் இனியவன். இதனால், இரண்டு குடும்ப வறுமையும் தீர்ந்துள்ளது. சந்திராம்மாவின் இட்லித்தொழிலுக்கே முழுநேர ஆட்டோ டிரைவராகவும், உதவியாளராகவும் இனியவன் இருந்துள்ளார்.


இப்படியாக நாட்கள் சென்று கொண்டிருந்த வேளையில், சென்னையில் மருத்துவக் கல்லூரி கேண்டீனிற்கு இட்லி மாஸ்டர் தேவை எனத் தெரிய வந்து, இனியவனை அங்கு அனுப்பியுள்ளார் சந்திராம்மா. சுமார் ஒரு வருட காலம் அங்கு வேலை பார்த்துள்ளார் அவர். பின்னர் தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்ததால், மீண்டும் கோவை திரும்பியவருக்கு அதிர்ச்சி. அங்கே ஏற்கனவே தான் பார்த்து வந்த வேலைகளைப் பார்க்க வேறு புதிய ஆட்கள் வந்துவிட்டனர். இதனால் இனியவனுக்கு அங்கே வேலையில்லாத நிலை. என்ன செய்வது எனக் குழப்பத்தில் ஆழ்ந்தார் இனியவன்.

“மேற்கொண்டு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்த எனக்கு சந்திராம்மா தான், சென்னையில் சென்று இதே இட்லித் தொழிலை தனியாகச் செய்ய ஐடியா கொடுத்தார்.”

 அதனைத் தொடர்ந்து சென்னை ஆர்.கே.நகரில் உள்ள எழில் நகரில் தனியே வீடெடுத்து தங்கினேன். இரண்டு இட்லி பானை, மாவு அரைக்க பழைய கிரைண்டர் போன்றவற்றோடு 1997ம் ஆண்டு சென்னையில் எனது இட்லி வியாபாரத்தை ஒரு ஓலை வீட்டில் தொடங்கினேன். 

இனி வாழ்க்கையில் எப்படியும் ஜெயித்து விடலாம் என நம்பிக்கையோடு சென்னை வந்த எனக்கு, முதல் நாளே பெரும் இடி. விடிய விடிய பெய்த மழையால் எனது வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் மூழ்கின. இடுப்பளவு தண்ணீரில் இரவு முழுவதும் கழித்தேன். பின் அடுத்தநாள் காலையில் அருகில் இருந்த மேடான பிளாட்பார்ம் ஒன்றிற்கு குடிபெயர்ந்தேன். ஏறக்குறைய 20 நாட்கள் அந்த பிளாட்பார்ம் தான் என் வீடாக இருந்தது,” என தனது கடந்தகால நினைவுகளில் மூழ்குகிறார் இனியவன்.

ஆனாலும் எப்படியும் வாழ்க்கையில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறியை, அந்த மழையால் அணைக்க முடியவில்லை. முற்றிலும் நீர் வடிந்த பிறகு தனது ஓலை வீட்டிற்குத் திரும்பிய இனியவன், மீண்டும் தனது முயற்சியைத் தொடங்கினார். அப்போது அவரது இலக்கு திருமண ஆர்டர்களைப் பிடிப்பது தான். இதற்காக திருமண மண்டபங்களாக ஏறி இறங்கத் தொடங்கினார்.


ஆனால் இட்லிக்காக எல்லாம் தனியாக ஆர்டர் தர முடியாது, விசேஷ நாட்களில் நாங்களே அதனை தயாரித்துக் கொள்வோம் என அங்கிருந்தவர்கள் கூறிவிட்டனர். ஆனபோதும், தொடர்ந்து கடிதங்கள் மூலம் அவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளார் இனியவன். அதில், சிறிய ஆர்டர்களை தனக்கு தரும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரின் இந்த ஐடியா தோற்கவில்லை. சிறு சிறு ஆர்டர்கள் அவருக்கு வரத் தொடங்கின.

அப்போது தான், ‘ஏன் இட்லிகள் ஒரே மாதிரி வட்டமாக, ஒரே சுவையில் இருக்க வேண்டும்?’ என அவர் யோசித்துள்ளார். பீட்சா, பர்கரை விரும்பிச் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏன் இட்லி பிடிப்பதில்லை என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, இளநீர் இட்லி, பீட்ஸா இட்லி, சாக்லேட் இட்லி போன்றவற்றை அவர் அறிமுகப்படுத்தினார்.

“குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு அடுத்து தரப்படும் உன்னத உணவாக இட்லி உள்ளது. குழந்தைகள், வயதானவர்கள், அறுவைச் சிகிச்சை செய்தவர்கள் என யாராக இருந்தாலும், எவ்வித தடையும் இல்லாமல் உண்ணக்கூடிய ஆரோக்கியமான உணவு இட்லி தான். அதன்பலனாக, இட்லிகளின் வடிவத்தை நான் மாற்றினேன். அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இது மேலும் பல புதிய முயற்சிகளுக்கு எனக்கு ஊக்கத்தைத் தந்தது,” என்கிறார் இனியவன்.

தற்போது பீட்ரூட் இட்லி, இனிப்பு இட்லி, மல்லிகைப்பூ இட்லி, ஆரஞ்சு இட்லி, கீரை இட்லி, சிறுதானிய இட்லி என 2,500க்கும் அதிகமான ருசிகளில் விதவிதமான வடிவங்களில் இட்லி தயாரித்து வருகிறார் இனியவன். குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் மிக்கி மவுஸ், கரடி என வெவ்வேறு விதமான வடிவங்களிலும் அவர் இட்லி தயாரிக்கிறார். இதற்கான அச்சுக்களை அவரே வடிவமைத்துக் கொள்கிறார்.


இப்படியாக தனது தொழிலில் புதுமைகளைப் புகுத்தி வந்த இனியவன், 30 கிலோவில் ஒரே இட்லி, 50 கிலோவில் ஒரே இட்லி என சாதனை முயற்சிகளையும் தொடர்ந்து செய்து வந்தார். 2013ம் ஆண்டு 124.800 கிலோகிராமில் உலகில் கனமான இட்லியைத் தயாரித்தார். பின்னர் 200 வகை இட்லிகளைக் கொண்டு கண்காட்சி நடத்தினார். 2015ம் ஆண்டு ஆயிரம் இட்லி வகைகளைக் கொண்டு அவர் நடத்திய கண்காட்சியை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டனர். இது தொடர்பான விழாவில் கலந்து கொண்ட, தமிழ்நாடு உணவு தயாரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ராஜாமணி அய்யர், இட்லி தினம் கொண்டாடும் திட்டத்தை முன்மொழிந்தார். இட்லியில் இப்படியாக பல்வேறு புதுமைகளைப் புகுத்தி வரும் இனியவனின் பிறந்தநாளான மார்ச் 30ம் தேதியையே அவர் இட்லி தினம் என அறிவித்தார்.

“என்னுடைய பிறந்தநாளை உலக இட்லி தினமாக அறிவித்த போது, இதுவரை நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறந்து போனது. எனது காயங்களுக்கெல்லாம் மயிலிறகு கொண்டு மருந்திடுவது போன்று இருந்தது அந்த அறிவிப்பு. மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனேன்...” என்கிறார் இனியவன்.

2017-ம் ஆண்டு 2547 வகை இட்லிகளை இனியவன் அறிமுகப்படுத்தினார். இது கின்னஸ் டேர்ல்ட் ஆப் ரெக்கார்ட் என்ற உலக சாதனைப் புத்தகத்தில் பதிவானது. இது தவிர அப்துல்கலாம், நேரு, ஜெயலலிதா என மறைந்த தலைவர்கள் உருவங்களிலும் இட்லிகளை உருவாக்கி இனியவன் சாதனை படைத்துள்ளார்.

இதற்கிடையே 2001ம் ஆண்டு இனியவனுக்கு திருமணம் நடைபெற்றது. இட்லி வியாபாரத்தில் அவருக்கு உறுதுணையாக அவரது மனைவி சமீனாவும் களம் இறங்கினார்.

இன்னிக்கு ஒரேசமயத்தில் 45 மண்டபங்களில் சமைக்கும் அளவுக்கு என் தொழில் விரிவடைந்துள்ளது. என் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்தது பெண்கள்தான். 

”வறுமையிலும் தன்னம்பிக்கையோட என்னை வளர்த்த என் அம்மா, இட்லி தொழிலை எனக்கு கற்றுக் கொடுத்த சந்திராம்மா, நவீன ஐடியாக்கள் தந்து இந்தத் தொழிலில் என்னை மெருகேற்றிக் கொண்டே இருக்கும் என் மனைவி... இவங்க எல்லாம்தான் என்னுடைய இந்த வெற்றிக்குக் காரணம்!’’ என தன்னடக்கத்துடன் கூறுகிறார் இனியவன்.

இன்று திரையுலகப் பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பெரும்புள்ளிகள் வீட்டு விருந்துகளில் தவறாமல் இனியவனின் விதவிதமான இட்லிகள் இடம் பிடித்து விடுகின்றன. லாபம் கருதி மட்டும் இந்தத் தொழிலை நடத்தவில்லை எனக் கூறும் இனியவன், முயற்சி இருந்தால் எந்தத் தொழிலிலும் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்கிறார்.


தற்போதைக்கு தனியாக ஹோட்டல் எதுவும் வைக்காமல் ஆர்டர் மட்டுமே எடுத்து செய்து வரும் இனியவன், இட்லி தொழிலின் மூலம் மாதம் 70 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் வருவதாகக் கூறுகிறார். ஆனால், எதிர்காலத்தில் ஹோட்டல் வைக்கும் திட்டமும் அவரிடம் உள்ளது.

பிறந்த நாளைக்கு கேக் வெட்டுகிற கலாசாரத்தை மாற்றி, இட்லி வெட்டுகிற புதுமை முயற்சியையும் அவர் ஆரம்பித்திருக்கிறார். அதன் தொடக்கமாக, தனது மகளின் பிறந்த நாளைக்கு இட்லி தயாரித்து, ஸ்டாலின் முன்னிலையில் வெட்டச் செய்திருக்கிறார்.

இட்லிக்காகவும், சமூக சேவைக்காகவும் அமெரிக்கப் பல்கழக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் அளித்துள்ளது. ரஷ்யாவில் இவரது புதிய கண்டுபிடிப்புகளுக்கு மரியாதை தரும் விதமாக விருது வழங்கிக் கவுரவித்துள்ளனர். இன்று பல கல்லூரிகளில் தனது வாழ்க்கையையே முன்னுதாரணமாகக் கொண்டு தன்னம்பிக்கை உரை தந்துகொண்டிருக்கிறார் இனியவன்.


படிப்பை பாதியில் கைவிட்டு ஆட்டோ ஓட்டுநராகி, இன்று நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை தரும் முதலாளியாக மாறி இருக்கிறார் இனியவன். தற்போது பிரபல இட்லி வியாபாரியாக, சாதனையாளராக சொந்தவீடு, கார் என சகல வசதிகளோடும், நிம்மதியாக வாழ்ந்து வருகிறார் அவர். கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது, அதில் புதுமைகளைச் செய்வது, வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை போன்றவயே தனது வெற்றியின் ரகசியம் என்கிறார் இனியவன்.

Latest

Updates from around the world