மனமிருந்தால் மார்க்கமுண்டு: 41 வயதில் வழக்கறிஞராக பதிவு செய்த கேரள பெண்மணி!
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான நீனா பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிந்து எர்னாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி முடித்துள்ளார்.
வயது ஒரு எண்ணிக்கை மட்டுமே என்பதற்கு 41 வயதான நீனா ஒரு சிறந்த உதாரணம். கொச்சியின் வடுதலா பகுதியைச் சேர்ந்த இவர் தனியாக தன் இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிந்து வழக்கறிஞராகியுள்ளார்.
நீனா பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்தவர். எட்டாண்டுகளுக்கு முன்பு வரை இதுதான் அவரது நிலையாக இருந்தது. ஆனால் கேரள எழுத்தறிவு இயக்கத்தில் இணைந்து படிப்பைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு முடித்தபோது நிலைமை மாறிப்போனது. அதன் பிறகு முழு வீச்சில் எல்.எல்.பி படித்தார்.

நீனாவின் மகள் பட்டப்படிப்பை முடித்துவிட்டு முதுகலைப் படிப்பைத் தொடர்வது குறித்தும் பணி வாய்ப்பினை ஆராய்வது குறித்தும் சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் நீனா கேரள பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டுள்ளார்.
”பணியையும் படிப்பையும் சமன்படுத்தி ஐந்தாண்டுகள் கடுமையாக உழைத்தேன். அதற்கான பலன் கிடைத்துள்ளது,” என்று நீனா தெரிவித்ததாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.
நீனா கடந்து வந்த பாதை…
நீனா பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு திருமணம் நடந்தது. இதனால் படிப்பைத் தொடர முடியாமல் போனது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார். குடும்பத்தை நிர்வகிக்க பணி வாய்ப்புத் தேடினார். ’நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ உடனான உரையாடலில் அவர் கூறும்போது,
”பள்ளிப்படிப்பை முடிக்காத நிலையில் பணி கிடைப்பது கடினமாக இருந்தது. அப்போதுதான் என் படிப்பைத் தொடரவேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன். வழக்கறிஞர் ஒருவரின் அலுவலகத்தில் எனக்கு கிளார்க் வேலை கிடைத்தது. அங்கு டைப் செய்ய கற்றுக்கொண்டேன்,” என்றார்.
நீனாவின் இருப்பிடத்திற்கு அருகில் வசிப்பவர் ஒருவரும் தனது படிப்பைத் தொடர விரும்பினார். அவர் நீனாவிடம் பத்தாம் வகுப்பிற்கு நிகரான தேர்வு குறித்து கூறியுள்ளார். உடனே நீனா தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் (என்.ஐ.ஓ.எஸ்) மூலம் பதினோறாம் வகுப்பும் பன்னிரண்டாம் வகுப்பும் தேர்ச்சி பெற்றார்.
நீனா அடுத்ததாக சட்டப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வு எழுத விரும்பினார். பணியையும் படிப்பையும் முறையாக திட்டமிட்டு சமன்படுத்தி எர்னாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்தார்.
”அது என்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாட்கள். என் கனவு நனவாகி வருவதை உணர்ந்தேன். கடினமான காலகட்டத்தில் உறுதுணையாக இருந்த குடும்பம், பணி வாய்ப்பளித்த முதலாளி, ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய முதலாளியிடமே ஜூனியராக சட்டப் பயிற்சியைத் தொடங்குவேன் என்று நம்புகிறேன். அதுதான் என்னுடைய அடுத்த கனவு,” என தெரிவித்ததாக ’நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவிக்கிறது.
கட்டுரை: THINK CHANGE INDIA