போர்வெல் குழிக்குள் சிக்கும் குழந்தைகளை மீட்கும் அதிநவீன கருவியைக் கண்டுபிடித்த தமிழர்!
மூடப்படாத போர்வெல் குழிகளில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை மீட்க அதிநவீன வசதிகளுடன் கூடிய கருவியை தயாரித்து விற்பனை செய்து வரும் கோவில்பட்டி ஆசிரியர் மணிகண்டன்.
அண்மையில் வெளிவந்த அறம் திரைப்படத்தின் மையக்கருவான ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்த குழந்தையை காப்பாற்றும் சம்பவம் அந்த படத்தை வெற்றியடையச் செய்ததோடு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள அச்சம்பவங்களின் துயரத்தையும், ஆழத்தையும் பிரதிபலித்தது. எத்தனை தான் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது என்று நாம் மார்தட்டிக் கொண்டாலும் நாட்டின் மூலைமுடுக்கு கிராமங்களில் நடைபெறும் இதுபோன்ற பயங்கர சம்பவங்கள் நம்மின் இயலாமையை காட்டுகிறது.
சரிவர மூடப்படாத போர்வெல் குழிகளில் குழந்தைகள் எதிர்பாராத விதமாக சிக்கிக் கொள்வதும், அவற்றை மீட்க தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடும்வதும் அடிக்கடி நாம் கேள்விப் படும் செய்தி . பெரும்பாலும் அக்குழந்தைகளை சடலமாகத் தான் அவர்களால் மீட்க முடிகிறது என்பது வேதனையான விஷயம். காரணம் மீட்புக்குழுவினரிடம் போதிய கருவிகள் வசதி இல்லாதது தான். அறம் திரைப்படத்தில் போர்வெல் ரோபோ உயிர் காக்கும் கருவியுடன் ஒருவர் மதுரையிலிருந்து குழந்தையை காப்பாற்ற வந்து கொண்டிருப்பதாக பேசப்படும் காட்சி உண்மையான ஒரு கண்டுபிடிப்பாளரை குறிப்பிட்டவையே.
ஆம். தூத்துக்குடியைச் சேர்ந்த தொழிற் கல்வி ஆசிரியர் மணிகண்டன் வடிவமைத்துள்ள ரோபோ கருவியைப் பற்றி தான் அதில் கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் இந்தப் பிரச்சினைக்கு புதிய தீர்வு ஒன்றைக் கண்டறிந்துள்ளார். அதாவது போர்வெல் குழிக்குள் சிக்கிக் கொண்ட குழந்தைகளை பாதுகாப்பாக வெளியில் தூக்கிவரும் கருவியை தயாரித்து, அதனை விற்பனை செய்து வருகிறார்.
“2003-ம் ஆண்டு எங்கள் ஊர்த் தோட்டத்தில் போர்வெல் பணி ஒன்றிற்காக சென்றிருந்தேன். அப்போது, என்னுடன் வந்திருந்த என் மூன்று வயது மகன் எதிர்பாராத விதமாக போர்வெல் குழிக்குள் தவறி விழப் பார்த்தான். அவனைக் காப்பாற்றி விட்டாலும், அப்போது நான் அனுபவித்த வேதனை தான், என்னை இந்தக் கருவியை கண்டுபிடிக்க தூண்டுகோலாக இருந்தது,” என்கிறார் மணிகண்டன்.
கோவில்பட்டி அருகிலுள்ள நாலாட்டின்புதூரைச் சேர்ந்தவர் மணிகண்டன். ஐடிஐ முடித்துள்ள அவர், மதுரை டிவிஎஸ் சமுதாயக் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதுதவிர மாலை நேரங்களில் பிட்டராகவும் வேலை பார்த்து வருகிறார். இவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயில் போர்வெல்லில் விழுந்த குழந்தைகளைத் தூக்கும் கருவி, சோலார் சைக்கிள், சோலார் பைக், பேட்டரியில் இயங்கும் அடிகுழாய் போன்ற மக்களுக்குப் பயன்பெறும் வகையிலான பல கண்டுபிடிப்புகளை அவர் நிகழ்த்தி வருகிறார்.
2003-ம் ஆண்டு போர்வெல் குழிக்குள் விழுந்த குழந்தைகளை மீட்கும் கருவியைக் கண்டுபிடித்த மணிகண்டன், பின்னர் 2013-ம் ஆண்டு அதில் பேட்டரியில் இயங்கும் சிறிய கேமரா, ரத்த அழுத்த சோதனை செய்யும் கருவி உள்ளிட்டவற்றை இணைத்து நவீனமாக்கியுள்ளார். ஐந்து கிலோ எடையுள்ள இக்கருவி மூலம் ஐம்பது கிலோ வரை எடையைத் தூக்க முடியும் என்பது இதன் சிறப்பாகும்.
“2014-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே போர்வெல்லில் விழுந்த ஒரு குழந்தையை எனது கருவியைப் பயன்படுத்தி ஒருமணி நேரத்தில் காப்பாற்றினேன். அதன்பிறகே எனது கருவி மீது தீயணைப்புத் துறையினருக்கு நம்பிக்கை வந்தது,” என்கிறார் மணிகண்டன்.
தற்போது வேலூர், மதுரை, விழுப்புரத்தில் தீயணைப்புத் துறையினர் மணிகண்டனின் இக்கருவியை வாங்கியுள்ளனர். இது தவிர கோயமுத்தூர் ரோட்டரி கிளப் சார்பில் ஒருகருவியும், விஜயவாடா, லக்னோ உள்ளிட்ட சில இடங்களிலும் இக்கருவி வாங்கப்பட்டுள்ளது. இக்கருவியை வாங்குபவர்களுக்கு இலவசமாக அதை இயக்குவதற்கான பயிற்சியையும் மணிகண்டன் அளித்து வருகிறார்.
“தற்போது 3 மாவட்டங்களில் மட்டுமே எனது கருவி உள்ளது. ஆனால் இது போதாது. உதாரணமாக கன்னியாகுமரியில் ஒரு குழந்தைக்கு ஆபத்து என்றால், மதுரையில் இருந்து இக்கருவியைக் கொண்டுவரவே 4 மணி நேரம் ஆகும். அதற்குள் குழிக்குள் இருக்கும் குழந்தையின் நிலைமை இன்னும் மோசமாகலாம். எனவே, அனைத்து மாவட்ட தீயணைப்புத் துறையினரிடமும் இந்தக் கருவி இருக்க வேண்டும். அப்போது தான் ஆபத்தில் சிக்கும் குழந்தைகளை உடனடியாக மீட்க முடியும்,” என்கிறார் மணிகண்டன்.
கடந்த 2015-ம் ஆண்டிற்குப் பிறகு தமிழகத்தில் போர்வெல் துயர சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பது ஆறுதல் தரும் தகவல். ஆனால், வடமாநிலங்களில் இதுபோன்ற போர்வெல் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. எனவே, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தனது கருவி சென்று சேர வேண்டும் என்பதே மணிகண்டனின் லட்சியமாம்.
“ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் இறக்கும் சம்பவங்களே இல்லாமல் போய்விட வேண்டும். இதனால், எனது கருவி உலகத்திலேயே பயன்படாத கருவியாக இருந்தாலும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே. அதேசமயம் எனது சோலார் பைக், சைக்கிள் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தி சுற்றுச்சூழலை மக்கள் காத்திட வேண்டும்,” என சமூக அக்கறையுடன் பேசுகிறார் மணிகண்டன்.
தற்போது மணிகண்டனின் இந்தக் கருவியை தேசப் பாதுகாப்பு அமைப்புகளும் பல்வேறு மாநில நிர்வாகங்களும் வாங்கி பயன்படுத்திவருகின்றன. தனது வருமானம் முழுவதும் ஆராய்ச்சிக்கு செலவாகி விடுவதால், மனைவியின் டியூசன் வருமானத்தில் குடும்பம் நடத்தி வருவதாகக் கூறும் மணிகண்டன், தமிழக அரசின் உதவி கிடைத்தால் தன்னால் மேலும் பல நல்ல கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் காட்ட முடியும் என நம்பிக்கையுடன் கூறுகிறார்.
தனது கண்டுபிடிப்புகளுக்காக பல்வேறு விருதுகளையும், பாராட்டுகளையும் மணிகண்டன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“இதுவரை தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் என பல்வேறு இடங்களில் எட்டுக் குழந்தைகளை போர்வெல் குழி எனும் அரக்கனிடமிருந்து காப்பாற்றி இருக்கிறேன். அப்போது சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் அடையும் சந்தோஷமே எனக்கு கிடைக்கும் மிகப்பெரிய விருது ஆகும்,” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் மணிகண்டன்.