தூய்மையான செக்கு எண்ணெய் வழங்க பல லட்ச முதலீட்டில் மதுரையில் தொழில் தொடங்கிய ராம்குமார்!
தொழில்நுட்பம் மற்றும் நாகரிகம் வளர்ச்சி அடைந்தாலும் அத்துடன் போலித்தனமான வாழ்க்கையும் நம்முடன் வளர்கிறது. இன்று நாம் உண்ணும் உணவில் பல ரசாயானம் கலப்படம் இருப்பதால் ஆர்கானிக் பொருட்கள் பின் ஓடுகின்றோம்.
காய்கறிகளில் கலப்படம் இருப்பது போல் நாம் பயன்படுத்தும் எண்ணெயிலும் கலப்படம் வந்துவிட்டது. கலப்படம் இல்லாத தூய்மையான செக்கு நல்லெண்ணெயை வழங்க ஓர் நிறுவனத்தை துவங்கியுள்ளார் மதுரையைச் சேர்ந்த ராம்குமார்.
'ஆடிமா செக்கு நல்லெண்ணெய்' நிறுவனத்தின் நிறுவனர் ராம்குமார். இவர் பெங்களூரில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு 1976ல் இருந்து தன் தந்தை நிர்வகித்து வந்த எண்ணெய் கடை மீது ஆர்வம் ஏற்பட்டு சுயதொழில் தொடங்க முடிவு செய்தார். எந்தவித முன் அனுபவம் இல்லாதபோதிலும் எண்ணெய்களை பற்றி தெரிந்துக்கொள்ள பல ஆராய்ச்சிகளை செய்துள்ளார்.
“நான் செய்த ஆராய்ச்சியில் நல்லெண்ணெய் தான் எண்ணெய்க்கு எல்லாம் தொடக்கம் என்றும், அதில் அதிகம் கலப்படம் செய்யப்படுகிறது என்பதை தெரிந்துக்கொண்டேன். மக்களுக்கு நல்லதை தரும் நோக்கில் ஆடிமா செக்கு நல்லெண்ணெயை தொடங்கினேன்,” என்கிறார் ராம்குமார்
ஆகஸ்ட் 2013ல் நல்லெண்ணெய்களை சுயமாக தனது செக்கில் விற்கத் துவங்கினார். முன் அனுபவம் இல்லாததால் படிப்படியாக முன்னேற தீர்மானித்த ராஜ்குமார் எடுத்தவுடன் சில்லறை வியாபராம் செய்யாமல் முதலில் மொத்த வியாபாரம் செய்யத் துவங்கினார்.
“எண்ணெயின் தரம் மற்றும் வரவேற்பை பொறுத்து தயாரிப்பை அதிகரிக்கலாம் என முடிவு செய்தே நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்கவில்லை,”
என தன் தொழில்முனைவு யுக்தியை தெரிவிக்கிறார். மொத்த வியாபாரத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் 2014 ஆகஸ்ட் மாதம் முதல் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய ½ மற்றும் 1 லிட்டர் பேக்குகளை அறிமுகப்படுத்தினர்.
முதலீடு மற்றும் வருவாய்
தன் தந்தையின் தொழிலில் கிடைத்த லாபம் மற்றும் தான் சுயதொழிலுக்காக வங்கி கடனுடன் சேர்த்து 50 லட்ச ரூபாயில் இந்நிறுவனத்தை துவங்கியுள்ளார் ராம்குமார். இந்த தொகையை வைத்து ஒரு நாளுக்கு 750 கிலோ தயாரிக்கும் அளவு 7 செக்குகளை கொண்டு மில்லை நிறுவியுள்ளார் இவர். உணவு மற்றும் எண்ணேய் தொழில் போட்டிகள் அதிகம் என தெரிந்தும் பெரிய தொகையை முதலீடு செய்து பெரும் நம்பிக்கையுடன் இந்நிறுவனத்தை நிறுவியுள்ளார் ராம்குமார்.
“இந்த தொழிலில் வெற்றி காண்பது கடினம், எள் பருவகால பயிர் என்பதால் அதை நாம் ஆண்டு முழுவதற்கும் தேவையான அளவு சேகரித்து வைக்கவே பெரும் தொகை தேவைப்படும்,” என்கிறார்.
தனது மில் ஒரு நாளுக்கு 750 கிலோ தயாரிக்கும் அளவு இருந்தாலும் கூட, ராஜ்குமார் 250 கிலோ மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அதை தாண்டி தயார் செய்ய அடுத்த நிலைக்கு செல்ல இன்னும் காலங்கள் தேவைப்படும் என்கிறார்.
தொழில் துவங்கி 5 வருடம் ஆன நிலையில் வருடத்திற்கு 2 கோடி வரை விற்பனை செய்யும் இந்நிறுவனம் இன்னும் ப்ரேக்-ஈவன் புள்ளியை தொடவில்லை. இதனை அடைய இன்னும் பல முன்னேற்றங்களை ராம்குமார் செய்ய உள்ளார்.
“மக்கள் சந்தையில் இருக்கும் மற்ற நல்லெண்ணெயின் விலையோடு எங்களது விலையை ஒப்பிடுகிறார்கள். கலப்படம் இல்லாமல் தூய்மையாக கொடுப்பதால் அந்த விலைக்கு கொடுக்க முடியவில்லை...”
எங்கள் நிறுவனம் பெரிதாக லாபம் ஈட்டமுடியாததற்கு அதுவும் ஒரு காரணம் என்கிறார் ராம்குமார். இதனால் தங்களது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய முயற்சித்து வருகிறார். மேலும் மருத்துவ துறைக்கு மொத்தமாக வழங்கவும் முயற்சித்து வருகிறார். அதிகமான விலையால் விற்பனை சற்று தடைப்பட்டு போனாலும் எண்ணெயின் தரத்தை ஒரு போதும் குறைக்க போவதில்லை என்ற கொள்கையுடன் 5 வருடமாக நடத்தி வருகிறார்.
மதுரையில் துவங்கிய விற்பனை தற்பொழுது நெல்லை, கரூர், சென்னை மற்றும் நாமக்களுக்கு விரிவடைந்துள்ளது.