சம்ஷத் பேகம் வாழ்வில் நம்பிக்கை தந்த நாட்டுக்கோழி முட்டை விற்பனை!
மாதச் சம்பளத்திள் ஐடி கம்பெனியில் செக்யூரிட்டி வேலை பார்த்த சம்ஷத் பேகம், தனி ஆளாக சுயதொழில்முனைவர் ஆகி சொந்தமாக வருமானம் ஈட்டி தன் குழந்தைகளை வளர்த்துள்ளார்.
வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பரீட்சைகளை நடத்திக் கொண்டே தான் இருக்கிறது. அத்தகைய நேரத்தில் நாம் எடுக்கும் சரியான முடிவே வாழ்வைச் சிறப்பானதாக மாற்றிக் கொள்ளக் காரணமாக அமையும்.
கணவனால் கைவிடப்பட்டு பெற்றோரின் அரவணைப்புமின்றி 2 குழந்தைகளுடன் நிர்கதியாய் நின்ற சம்ஷத் பேகத்திற்கும் அப்படியான ஒரு சூழல் தான். கஷ்டங்களைத் தாண்டி இன்று சுயசக்தியாக உருவெடுத்திருப்பது பற்றி யுவர் ஸ்டோரி தமிழிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.
“நான் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன். வீட்டில் பார்த்து தான் கல்யாணம் செய்து வைத்தார்கள், எனக்கு 1 பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளார்கள். குடும்பப் பொருளாதார நிலை காரணமாக அடிக்கடி எனக்கும் என் கணவருக்கும் இடையே சண்டை வந்து கொண்டிருந்தது.
வாழ்க்கைக் கசந்து கொண்டிருந்த சமயத்தில் தான் என் கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றார், கணவர் கைவிட்டதால் பெற்றோரிடம் சென்றேன் அவர்களும் எங்களை அரவணைத்துக் கொள்ளத் தயாராக இல்லை. என்ன செய்வதென்றே தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன், என் குழந்தைகளுக்காக வாழ்ந்தாக வேண்டும் என்று முடிவு செய்தேன். இருவரையும் தங்கும் விடுதி கொண்ட பள்ளியில் சேர்த்துவிட்டு நான் மட்டும் ஹாஸ்டலில் தங்கி வேலை செய்ய தீர்மானித்தேன்.
10ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்ததால் பெரிதாக எந்த வேலையும் கிடைக்கவில்லை என்பதால் ஐடி நிறுவனத்தில் செக்யூரிட்டி வேலை செய்தேன். அந்த வேலை மட்டுமல்ல பகுதி நேரமாகவும் எனக்குத் தெரிந்த வேலைகளை செய்து பணம் சம்பாதித்தேன்.
“ஒரு நாளில் தூக்கம் என்பதே சில மணி நேரங்கள் தான். என் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி நரகமான அந்த நாட்களை சுகமானதாக எண்ணி நகர்த்திக் கொண்டிருந்தேன். 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் வேலை செய்தாலும் வருமானம் ரூ.20 ஆயிரத்தை எட்டுவதே குதிரைக் கொம்பாக இருந்தது.
அந்த சமயத்தில் தான் என்னுடைய நண்பர் மூலமாக நாட்டுக்கோழி முட்டை விற்பனை பற்றி அறிந்து கொண்டேன். தொடர் பணி என்னை சோர்ந்து போகச் செய்திருந்த சமயத்தில் தான் நாட்டுக் கோழி முட்டை விற்பனையை கையில் எடுத்தேன். மொத்த வியாபாரிகளிடம் இருந்து நாட்டுக்கோழி முட்டையை வாங்கி வந்து பேக் செய்து மளிகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு விற்பனை செய்யத் தொடங்கினேன்.
தொடக்கத்தில் என்னிடம் வாங்கச் சிலர் தயக்கம் காட்டினர். நான் கடையில் முட்டை அட்டையை வைத்துவிட்டு போகிறேன், விற்பனையானதும் பணம் பெற்றுக் கொள்கிறேன் என்று கடைக்காரர்களை சமாதானப்படுத்தி பிசினஸைத் தொடங்கினேன்.
சொந்தமாக தொடங்கிய தொழில் பெரிய முதலீடு இல்லை என்பதால் வேலைக்கு ஆட்கள் வைத்துக் கொள்ளும் வசதியும் இல்லை. எனவே நானே மொத்த வியாபாரிகளிடம் சென்று முட்டைகளை வாங்கி வந்து அவற்றை வீட்டில் வைத்து தனிக்கவனத்துடன் பெட்டிக்குள் அடைத்து டூ வீலரில் எடுத்துச் சென்று நானே டெலிவரியும் செய்துவிட்டு வருவேன் என்கிறார் சம்ஷத்.
இப்படியாக தாம்பரம் பகுதியில் தொடங்கிய நாட்டுக்கோழி முட்டை விற்பனையை இன்று தாம்பரம், தாம்பரம் கிழக்கு தொடங்கி வடபழனி வரை முட்டை சப்ளை செய்து வருகிறார் இவர். ‘அன்சாரி எக்ஸ் சப்ளை’ (Ansari eggs supply) என்ற பெயரில் வீட்டிலிருந்தபடியே இயங்கி வரும் இவரது சில்லறை முட்டை விற்பனையானது மாதத்திற்கு ரூ.30 ஆயிரம் வரை வருமானம் தருகிறது.
சந்தையில் நாட்டுக்கோழி முட்டையில் கலப்படங்கள் நிலவும் நிலையில் பெண் என்பதால் என்னிடம் வாங்கும் முட்டைக்கு வியாபாரிகள் மத்தியில் நன்மதிப்பு இருக்கிறது. ஒன்று கலப்படம் செய்ய மாட்டேன் மற்றொன்று எந்த நேரத்தில் வியாபாரிகள் அழைத்து முட்டை வேண்டும் என்று கேட்டாலும் முகம் சுளிக்காமல் ஆர்டர் எடுத்துக் கொண்டு டெலிவரி கொடுத்துவிடுவேன்.
பெரும்பாலும் மளிகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் தான் நாட்டுக்கோழி முட்டை அதிகம் விற்பனையாகும். ஒரு வாரம் கடையில் முட்டை பெட்டியை அடுக்கி வைத்துவிட்டு 4 அல்லது 5 நாட்கள் கழித்து மீண்டும் சென்று அவை விற்றிருக்கிறதா என்பதை பார்த்துவிட்டு மீண்டும் புதிய பெட்டிகளை வைத்துவிட்டு வருவேன்.
வாரத்தில் எல்லா நாட்களும் மணிக்கணக்கில் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 4 நாட்களுக்கு ஒரு முறை நானே கடைகளுக்குச் சென்று புதிய முட்டை பெட்டிகளை வைப்பேன் அல்லது வியாபாரிகள் தொடர்பு கொண்டு முட்டை தீர்ந்துவிட்டால் தெரிவிப்பார்கள்.
வயதாகிவிட்டதால் நீண்ட தூரம் டூ வீலர் ஓட்டினால் மூட்டுப்பிரச்னை வருகிறது, எனினும் என்னுடைய குழந்தைகளுக்காக நான் தொடர்ந்து ஓட வேண்டி இருக்கிறது என்கிறார் சம்ஷத் பேகம்.
சுயதொழில் முனைவராக மாறிய பின்னர் மகனையும் மகளையும் உடன் அழைத்து வந்து வைத்துக் கொண்டிருக்கிறார் சம்ஷத். மகளுக்கு 19 வயதாகிறது, மகனும் படித்துக் கொண்டிருக்கிறான். அவர்களின் படிப்பு நேரம் போக எஞ்சிய நேரத்தில் எனக்கு உதவியாக இருக்கின்றனர்.
முட்டையை கொள்முதல் செய்துவிட்டு வந்த பிறது அவற்றை தரம் பிரித்து பெட்டிக்குள் பத்திரப்படுத்தி அடுக்கி வைத்து சீலிடுவது வரை அனைத்தையும் அவர்களே செய்து விடுவார்கள். அவர்கள் பள்ளிக்குச் சென்ற பின்னர் காலை 10 மணியளவில் என்னுடைய டெலிவரி பணியைத் தொடர்வேன், பிற்பகல் 2 மணிக்குள் டெலிவரியை முடித்துவிட்டு வீடு திரும்பிவிடுவேன். இப்போது வருமானத்திற்கும் பிரச்னை இல்லை குழந்தைகளுடனும் நேரத்தை செலவிட முடிகிறது என்கிறார் அவர்.
என்னுடைய வாழ்க்கையின் பக்கங்கள் முழுவதுமே வலிகளும், முட்களும் நிறைந்ததாகவே இருந்தது. அதை திரும்பிப் பார்க்கக் கூட எனக்கு தைரியம் இல்லை, அந்த அளவிற்கு பயம் தரக்கூடியது. எனினும் என்னையும் ஒரு சுயசக்தியாக அடையாளம் காட்டி எனக்குள் இருந்த தன்னம்பிக்கையை வெளிக்கொண்டு வந்தது சுயதொழில்.
இதெல்லாம் ஒரு வேலையா என்று நான் நினைத்திருந்தால் இன்று குடும்ப வாழ்க்கையும், நிரந்தர வருமானமும் நிம்மதியானதாகி இருக்காது என்று கூறுகிறார் சம்ஷத் பேகம்.