2 வாழைப் பழத்துக்கு ரூ.442 பில்; அதிர்ச்சியான விஸ்வரூப நடிகர்!
5 ஸ்டார் ஹோட்டலில் 2 வாழைப் பழங்களுக்கு ஜிஎஸ்டி உடன் 442ரூபாய் பில் வந்ததை, இந்தி நடிகர் ராஹுல் போஸ் அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததில், ஹோட்டலுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த வாரம், விஸ்வரூப படத்தில் வில்லனாக நடித்த இந்தி நடிகரான ராஹுல் போஸ் அவருடைய இன்ஸ்டா மற்றும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட வீடியோ, இணையத்தில் வைரலாகி சமூக ஊடக பக்கங்களில் நெட்டிசன்கள் விவாதிக்கும் ஒரு பிரபலமான தலைப்பாக மாறி உள்ளது.
வீடியோவில், சண்டிகரில் உள்ள ஜே.டபிள்யூ மாரியட் ஹோட்டலில் தங்கியிருந்தபோது, அவர் ஆர்டர் செய்த இரண்டு வாழைப்பழங்களுக்கு ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.442.50 வசூலிக்கப்பட்டதாக நடிகர் தெரிவித்திருந்தார்.
ராஹுல் முழு சூழ்நிலையையும் விளக்கும் வகையில் வீடியோவில் அவர் தங்கி இருக்கும் அறையையும் வாழைப்பழங்களுக்கான பில்லையும் காட்டி,
“இதை நம்புவதற்கு நீங்கள் இதைப் பார்க்க வேண்டும். பழம் உங்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்று யார் சொன்னது? அற்புதமான நபர்களிடம் கேளுங்கள்...”
என்ற பதிவிட்டு ஹோட்டலின் டுவிட்டர் ஐடியினையும் டேக் செய்திருந்தார். இன்ஸ்டாகிராமில் மட்டும் அந்த வீடியோ கடந்த 5 நாட்களில் 1,90,372 பேரால் பார்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ராஹுலின் குற்றச்சாட்டிற்கு நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வைரலாக்கியதில், விஷயம் கலால் மற்றும் வரிவிதிப்புத் துறையினை சென்றடைந்தது.
வீடியோவில் அவர் காண்பித்திருந்த ஹோட்டல் பில்லில், இரு பழங்களுக்கு 375 ரூபாய் என்றும் அதற்கு 18% ஜி.எஸ்.டி வரியாக 67.50 ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சண்டிகரின் கலால் மற்றும் வரிவிதிப்பு ஆணையர் மந்தீப் சிங் பிரார் இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு, 3பேர் கொண்ட குழுவினை அமைத்துள்ளார். விதிகளை மீறி ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்களில் ஒன்றான வாழைப்பழத்திற்கு வரி வசூலித்ததற்காக ஜேடபிள்யூ மாரியட் ஹோட்டலிடம், விளக்கம் கேட்டு வரிவிதிப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.
இது குறித்து கலால் மற்றும் வரிவிதிப்பு துணை ஆணையர் ஆர்.கே. சௌத்ரி கூறுகையில்,
“நோட்டீசுக்கு பதிலளிக்க ஹோட்டல் நிர்வாகத்திற்கு ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டது. அவர்கள் அளித்த விளக்கம் ஏற்று கொள்ளத்தக்கதாக இல்லை. விசாரணையில் கிடைத்த பதிவுகளின் அடிப்படையில், வரி இல்லாத பொருட்களுக்கு சட்டவிரோதமாக வரி வசூலித்ததற்காக ஹோட்டலுக்கு ரூ25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாழைப்பழங்களுக்கு ரூ.67.50 வரி வசூலித்ததற்காக சிஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 125 மற்றும் யுடிஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 21-ன் கீழ் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சட்டவிரோதமாக கட்டணம் விதிக்கப்பட்டதை கண்டால் எ ங்களிடம் புகார் செய்யலாம்,”
என்று தி இந்தியன் எக்ஸ்பிரசிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இணையவாசிகள் இதே போன்று அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவங்களை ‘ராஹுல் போஸ் தருணங்கள்’ என்ற கேப்ஷனிட்டு பகிர்ந்து வருகின்றனர். உங்களுக்கும் ‘ராஹுல் போஸ் தருணங்கள்’-இருந்தால் கமெண்ட் பாக்சில் பதிவிடவும்...
தகவல் உதவி: dnaindia | கட்டுரையாளர்: ஜெயஸ்ரீ