ஒரு பேன், லைட்டுக்கு ரூ.128 கோடி மின் கட்டண பில்: ஷாக் ஆன உபி முதியவர்!
நமக்கெல்லாம், மின்கட்டணத் தொகை வழக்கமானதைவிட கொஞ்சம் கூடுதலாக வந்தாலே கொஞ்சம் ஷாக்காக இருக்கும். அப்படி இருக்க, 128 கோடி ரூபாய்க்கு மின் கட்டண பில் வந்தால் எப்படி இருக்கும்?
உத்தரபிரதேச மாநிலத்தில் முதியவர் ஒருவருக்குத் தான், இத்தகைய மின் கட்டண ரசீது வந்துள்ளது. அவர் இப்போது அதிர்ச்சி அடைந்து அல்லாடிக்கொண்டிருக்கிறார்.
உத்தரபிரதேச மாநிலம், ஹப்பூர் எனும் நகரம் அருகே உள்ள சாம்ரி கிராமத்தில் முதியவரான ஷமீம் தனது மனைவு கைரா நிஷாவுடன் வசித்து வருகிறார். முதியவர் தனது சிறிய வீட்டில் ஒரு பேன் மற்றும் விளக்கு தான் பயன்படுத்தி வருகிறார். அப்படி இருந்தும் அவர், அண்மையில் தனக்கு வந்த மின்கட்டண பில்லைப் பார்த்து திகைத்து போய்விட்டார். ஏனெனில், ரூ.128 கோடி கட்டணமாக செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முதியவருக்கு 128 கோடிக்கு பில் தொகை வந்தது மட்டும் அல்ல, இதைச் செலுத்த தவறியதற்காக அவரது வீட்டிற்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது தான் இன்னும் திகைப்பானது.
பெரியவர் மின்வாரியத்திற்கு நடையாக நடந்து முறையிட்டும் ஒரு பலனும் இல்லை என்கிறார். எங்கள் கோரிக்கையை யாரும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இந்தத் தொகையை எப்படி எங்களால் செலுத்த முடியும். இது பற்றி முறையிட்டால், தொகையை செலுத்தினால் தான் மின் இணைப்பு மீண்டும் கிடைக்கும் என பதில் வந்ததாக பெரியவர் பரிதாபமாக. ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
”நான் அங்கும் இங்கும் அல்லாடியும் யாரும் கவனிக்கவில்லை. ஒட்டுமொத்த ஹபூர் நகருக்கும் சேர்த்து நான் பில் தொகை செலுத்த வேண்டும் என மின்வாரியம் நினைக்கிறதா? என்றும் அவர் சோகமாக கூறியுள்ளார்.
நாங்கள் பேனும், விளக்கும் தான் பயன்படுத்துகிறோம். எப்படி இவ்வளவு தொகை வரும் என அவர் மனைவியும் புலம்பியுள்ளார். ஆனால், அதிகாரிகளோ இது ஒரு விஷயம் அல்ல, பில் நகலை காண்பித்தால் சரி செய்யப்பட்டுவிடும் என்று கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.
’இது ஒரு தொழில்நுட்பக் கோளாறாக இருக்கும். அவர்கள் பில்லை கொடுத்தால், எங்கள் சிஸ்டத்தில் சரி செய்து புதிய பில் அளிப்போம்’ என்று பொறியாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இதனிடையே, ஏ.என்.ஐ நிறுவனம் இந்த செய்தியை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டது. இது தொடர்பான அதிகாரி பதிலையும் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த விநோத நிகழ்வு குறித்து டிவிட்டர் பயனாளிகள் பலரும் கேலியும் , விமர்சனமுமாக, கருத்து தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு நடப்பது இயல்பானது தான், ஆனால் , இத்தகைய பில்லை அனுப்பிய மேதாவி யார்? மேலும் அந்த முதியவரிடம் கடந்த கால பில் இல்லாவிட்டால் என்னாவது என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழில் : சைபர்சிம்மன்