GST new rates- ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிவுகள்: ஜூலை 18 முதல் விலை உயரும் பொருட்கள் எவை?
சண்டிகரில் நடந்த 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதம் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பொருட்களுக்கான வரி உயர்ந்திருக்கிறது எவற்றிற்கான விலை குறைந்துள்ளது?
47-வது சரக்கு மற்றும் சேவை வரி(GST) குழும கூட்டம் மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை மாற்றியமைப்பதற்கு பரிந்துரைக்கப் பட்டது.
என்னென்ன மாற்றங்கள்?
- அச்சு மற்றும் எழுது பொருளுக்கான மை (Ink), வெட்டுபலகையுடன் கூடிய கத்தி, பென்சில் (pencil), ஷார்ப்னர் (Sharpener), பிளேடு (blade), கரண்டி, கேக் வெட்டும் கத்தி (knife), ஆழமான குழாய்-கிணறு ஆழ்துளை கிணற்றினுள் வைக்கும் பம்புகள், தண்ணீர் பம்புகள், சைக்கிள் பம்புகள், தூய்மைபடுத்தும் இயந்திரங்களுக்கான வரியானது 12 % -ல் இருந்து 18 %-மாக உயர்த்தப்பட்டுள்ளது.
- முட்டைகளை வரிசைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், பழங்கள் அல்லது பிற விவசாயப் பொருட்கள் மற்றும் அதன் பாகங்கள் பால் கறக்கும் இயந்திரங்கள் மற்றும் பால் இயந்திரங்களை சுத்தம் செய்வதற்கான இயந்திரங்கள், எல்இடி விளக்குகள், விளக்குகள் மற்றும் சாதனங்கள், அவற்றின் உலோக அச்சிடப்பட்ட சர்க்யூட் பலகை; வரைதல் மற்றும் குறிப்பதற்கான கருவிகள் ஆகியவற்றுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 12%-ல் இருந்து 18%-மாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- விதைகள், தானியங்கள் ஆகியவற்றை தூய்மைபடுத்தும் இயந்திரங்கள், தரம் பிரிப்பதற்கான இயந்திரங்கள், அரைக்கும் தொழிலில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், மாவு அரைக்கும் இயந்திரங்கள் (Grinders), சூரிய சக்தியால் இயங்கும் வாட்டர் ஹீட்டர் (Water heater), தயாரித்து முடிக்கப்பட்ட தோல்கள் பொருட்கள் ஆகிய பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- தோல் பதப்படுத்துதல், தோல் பொருட்கள் மற்றும் காலணி உற்பத்தி, செங்கல் உற்பத்தி தொடர்பான பணிகளுக்கான சேவை வரியானது 5 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது.
- சாலைகள், பாலங்கள், ரயில்வே, மெட்ரோ (Metro), கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சுடுகாடு போன்றவற்றுக்கான பணி ஒப்பந்தம். மத்திய மற்றும் மாநில அரசுகள், வரலாற்று நினைவுச்சின்னங்கள், கால்வாய்கள், அணைகள், பைப்லைன்கள், நீர் விநியோகத்திற்கான ஆலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றுக்கான உள்ளாட்சி மற்றும் அதன் துணை ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஒப்பந்தம் ஆகிய பணிகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- எலும்பியல் சாதனம்- பிளவுகள் மற்றும் பிற எலும்பு முறிவு உபகரணங்கள், உடலின் செயற்கை பாகங்கள், குறைபாடு அல்லது இயலாமைக்கு ஈடுசெய்ய, அணிந்திருக்கும் அல்லது எடுத்துச் செல்லப்படும் அல்லது உடலில் பொருத்தப்படும் பிற உபகரணங்கள், உள்விழி லென்ஸ் ஆகியவற்றுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- பெட்ரோல் மற்றும் நிலக்கரியில் இருந்து எடுக்கப்படும் மீத்தேனுக்கான (Methane) வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்ந்துள்ளது.
- வெட்டி மெருகூட்டப்பட்ட வைரங்களுக்கான வரியானது 0.25 சதவிகிதத்தில் இருந்து 1.5 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு படைக்காக வாங்கப்படும் உபகரணங்களுக்கு ஐஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
- சரக்கு மற்றும் பயணிகள் பயன்படுத்தும் ரோப்வே போக்குவரத்துக்கான சேவை வரியானது 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது.
- பேக் செய்யப்படாத, லேபிளிடப்படாத மற்றும் முத்திரையிடப்படாத பொருட்களுக்கு தொடர்ந்து ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோன்று சில மருத்துவ பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளன.
- பால், தயிர், பனீர் போன்ற பேக் செய்யப்பட்ட உணவுகள், அரிசி, கோதுமை போன்ற பேக் செய்யப்பட்ட உணவுகள் ஆகியவற்றுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
- ஒரு நாளைக்கு ரூ.1,000 அல்லது அதற்கும் குறைவாக வாடகை வசூலிக்கும் ஹோட்டல்களுக்கு 12% வரி வசூலிக்கப்படும்.
- ரூ.5000க்கு மேல் வாடகை வசூலிக்கும் மருத்துவமனை (ICU அல்லாத) அறைகளுக்கு ஐடிசி இல்லாமல் 5 சதவிகிதம் வரி விதிக்கபப்படும்.
- தனியாகவோ அல்லது மொத்தமாகவோ வங்கிகளால் வழங்கப்படும் காசோலைகளுக்கு (Cheques) 18 சதவீத வரி விதிக்கப்படும்.
- வரி இல்லாமல் இருந்த மேப்கள், அட்லஸ், க்ளோப் உள்ளிட்ட அச்சடிக்கப்பட்ட எல்லா வகை மேப்களுக்கும் இனி 12 சதவீத வரி விதிக்கப்படும்.
- அஞ்சலக சேவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கு நீக்கப்பட்டுள்ளதால் இனி அஞ்சல சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் 2022 ஜூலை மாதம் 18ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.