புதிய தலைமை நீதிபதி யு.யு.லலித் கையாண்ட சர்ச்சை வழக்குகளும், முக்கிய தீர்ப்புகளும் என்ன?
உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவி ஏற்றுள்ளார். நவம்பர் 8ம் தேதியோடு ஓய்வு பெற உள்ள இவர், 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக பதவியில் இருப்பார்.
இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.ஏ.பாப்டேவுக்கு பின் என்.வி.ரமணா அந்த பொறுப்புக்கு வந்தார். கடந்த 16 மாதங்களாக உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த என்.வி.ரமணாவின் பணிகாலம் நேற்றுடன் நிறைவடைந்தது. அவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்திய உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று காலை பதவியேற்றுள்ளார்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தமது மாளிகையில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் லலித்திற்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
யார் இந்த நீதிபதி லலித்?
நீதிபதி யு.யு.லலித்தின் முழுப்பெயர் உதய் உமேஷ் லலித் ஆகும். 1957ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் பிறந்தவர். இவரது தந்தை யு.ஆர். லலித், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகவும், உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் இருந்தார்.
தந்தை வழியில் மும்பை அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் படித்த லலித், 1983ம் ஆண்டு ஜூன் மாதம் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். குற்றவியல் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவரான இவர், 1983 முதல் 1985 வரை பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அதைத்தொடர்ந்து, 1986 முதல் 1992 வரை அப்போதைய இந்திய அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜியின் வழக்கறிஞர் குழுவில் இருந்தார்.
முக்கியப் பிரமுகர்களின் வழக்கறிஞர்
வழக்கறிஞராக இருந்தபோது, பல முக்கிய பிரமுகர்களின் சார்பாக வழக்காடியுள்ளார். 1994ம் ஆண்டு, பாபர் மசூதி இடிப்பைத் தடுக்கத் தவறியதற்காக நீதிமன்ற அவமதிப்புக் குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான கல்யாண் சிங்குக்காக ஆஜரானவர் இவர்தான்.
இதேபோல், ஊடகங்களில் அதிகம் பேசப்பட்ட பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான், வன உயிரினங்களை வேட்டையாடிய வழக்கில், அவருக்காக வாதிட்டவரும் லலித் தான். ஷொராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி போலி என்கவுன்டர் வழக்கில் கொலைக் குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவரும், அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுக்காக ஆஜரானவர் இவர்தான்.
இப்படியாக பல முக்கிய வழக்கில் வழக்கறிஞராக வாதிட்ட லலித், கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரலில் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக அங்கீகரிக்கப்பட்டார். காடுகள், வாகன மாசுபாடு, யமுனை நதியின் மாசுபாடு தொடர்பான பல முக்கிய விஷயங்களில் நீதிமன்றத்திற்கு உதவும் வழக்கறிஞராக இவரது சேவையை உச்ச நீதிமன்றம் பயன்படுத்திக் கொண்டது.
அதன் தொடர்ச்சியாக, 2011ல் 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக லலித் நியமிக்கப்பட்டார். அவர் இரண்டு முறை உச்ச நீதிமன்றத்தின் சட்ட சேவைகள் குழுவின் (SCLSC) உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
2014ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி இவரது சட்டப்புலமை காரணமாக நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் மூலம் கீழமை நீதிமன்றத்திலோ உயர் நீதிமன்றத்திலோ நீதிபதியாக பணியாற்றாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஆறாவது நீதிபதி என்ற சிறப்பு லலித்திற்கு கிடைத்தது. கடந்தாண்டு மே மாதம் 14ம் தேதி, தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) செயல் தலைவராக நியமிக்கப்பட்டார் லலித்.
பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்கும் உரிமை, திருவாங்கூர் அரசக் குடும்பத்தினருக்கு உண்டு என்று தீர்ப்பு வழங்கியவர் நீதிபதி லலித் தான். இதேபோல், முத்தலாக் வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் அமர்வில் லலித்தும் இடம்பெற்றிருந்தார்.
பாதியில் விலகிய வழக்குகள்
தான் வழக்கறிஞர் மற்றும் நீதிபதியாக இருந்த காலகட்டத்தில், பல முக்கிய வழக்குகளில் இருந்து திடீரென பாதியிலேயே விலகினார் லலித். இதனால், பாராட்டுகளைப் போலவே பல சர்ச்சைகளிலும் அவர் சிக்கினார்.
உதாரணத்திற்கு 2014ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி, தூக்கு தண்டனை கைதியான யாகூப் மேமனின் மறுஆய்வு மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து அவர் தன்னை விலக்கிக் கொண்டார். காரணம், வழக்கறிஞராக இருந்தபோதே, அவர், 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமனை குற்றவாளி என அறிவித்த வழக்கில் அவருக்காக ஆஜராகியிருந்தார்.
இதேபோல், 2015ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி, 2008ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து தன்னைத் தானே விலக்கிக் கொண்டார். காரணம் அந்த வழக்கிலும் அவர் குற்றம்சாட்டப்பட்ட சிலருக்காக ஆஜராகி வாதாடி இருந்தார். இப்படியாக மேலும் சில சம்பவங்களும் அவரது சட்ட வாழ்க்கையில் உள்ளது.
இந்தச் சூழ்நிலையில்தான், இந்தியாவின் 49வது தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றுள்ளார் நீதிபதி லலித். வரும் நவம்பர் 8ம் தேதியோடு இவரது பணிக்காலம் முடிவடைவதால், 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இவர் பதவியில் இருப்பார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து இன்று தலைமை நீதிபதியாக உயர்ந்துள்ளார் லலித். இவருக்கு முன்பு இதேபோன்று வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகி தலைமை நீதிபதியாக உயர்ந்தவர் எஸ்.எம் சிக்ரி ஆவார்.
மூன்று விஷயங்களில் கவனம்
முன்னதாக நீதிபதி என்.வி.ரமணாவிற்கு உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நேற்று மாலையில் பிரியாவிடை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் புதிய தலைமை நீதிபதி லலித்தும் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், தான் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்றதும் மூன்று விஷயங்களில் அதிக கவனம் செலுத்தப்போவதாகக் கூறினார். அதன்படி,
“முதலாவதாக வழக்குகளை பட்டியலிடுதல். அந்த பட்டியலை முடிந்தவரை எளிமையாகவும், வெளிப்படையாகவும் செய்வோம் என்று உறுதியளிக்கிறேன்.
இரண்டாவதாக, அவசர விஷயங்களைக் குறிப்பிடும் நடவடிக்கையை நாங்கள் பரிசீலிப்போம். விரைவில் இது தொடர்பாக தெளிவான நிலையை பெறுவீர்கள். அந்தந்த நீதிமன்றங்களுக்கு முன்பாக எந்த அவசர விஷயங்களையும் சுதந்திரமாக குறிப்பிடக்கூடிய முறையை வழங்குவோம்.
மூன்றாவதாக, அரசியலமைப்பு அமர்வு மற்றும் மூன்று நீதிபதிகள் அமர்வு தொடர்பான வழக்குகள். ஏனெனில் உச்ச நீதிமன்றத்தின் தலையாய வேலை என்பது, சட்டத்தை தெளிவாக ஆக்குவதுதான் என நான் நம்புகிறேன். இதனால் மக்கள் சட்டத்தின் தனித்துவமான நிலைகளைப் பற்றி அறிந்து கொள்வார்கள். ஆண்டு முழுவதும் ஒரே அரசியலமைப்பு பெஞ்ச் செயல்பட நாங்கள் பாடுபடுவோம், என நீதிபதி லலித் தெரிவித்துள்ளார்.
நீதிபதி லலித்துக்கு அமிதா லலித் என்ற மனைவியும், ஷ்ரீயாஷ் லலித், ஹர்ஷத் லலித் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.