‘அம்மாவின் மாதவிடாய் பிரச்சனையை புரிந்து கொண்ட மகன்’ - பேட் மறுசுழற்சி மெஷின் உருவாக்கிய அஜின்கியா!
சானிட்டரி நாப்கின் அப்புறப்படுத்துவது தொடர்பாக முழுமையான தீர்வ/லிக்கும் வகையில் 2018-ம் ஆண்டு அஜின்கியா தரியா தொடங்கிய PadCare Labs சமீபத்தில் ஷார்க் டேங்க் இந்தியா நிகழ்ச்சியில் 1 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.
தொழில்முனைவிற்கான விதை எப்போது, எந்தப் புள்ளியில் தொடங்குகிறது என்பதை தொழில்முனைவோர் எளிதில் மறப்பதில்லை.
துப்புறவு தொழிலாளார்கள், குப்பைகளை சேகரிப்பவர்கள் மற்ற கழிவுகளிலிருந்து சானிட்டரி நாப்கின்களைப் பிரித்து எடுப்பதை நேரில் பார்த்திருக்கிறார் அஜின்கியா தரியா. அதிலும், அவர்கள் கையுறைகூட அணியாமல் வெறும் கைகளில் எடுப்பதைப் பார்த்திருக்கிறார். இந்தப் புள்ளியில் உருவானதுதான்
. சானிட்டரி பேட் அப்புறப்படுத்துவதற்கு முழுமையான தீர்வுகளை இந்நிறுவனம் வழங்குகிறது.ஒரு சானிட்டரி பேட் மக்குவதற்கு 500-800 ஆண்டுகள் ஆகும் என்று தரவுகள் சுட்டிக்காட்டுவது அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவில் சுமார் 3.37 டன் சானிட்டரி கழிவுகள் உற்பத்தியாகின்றன.
சானிட்டரி நாப்கின் – முழுமையான தீர்வு
மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள மசா என்கிற சிறிய கிராமத்தில் பிறந்தவர் தரியா. புனேவில் இருக்கும் ஒரு நிறுவனத்திற்காக இஸ்ரோ பிராஜெக்ட் ஒன்றில் பங்களித்திருந்தார். அந்த சமயத்தில்தான் குப்பை சேகரிப்பவர்களின் அவலநிலையைப் பார்த்திருக்கிறார்.
இந்த சம்பவம் அவரைப் பெரிதும் பாதித்தது. உடனே தன் அம்மாவை அழைத்து பேசியிருக்கிறார். அம்மா சானிட்டரி பேட்களை எப்படி அப்புறப்படுத்துவார் என கேட்டுத் தெரிந்துகொண்டார். நியூஸ்பேப்பரில் மடித்து குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவதாக அம்மாவும் பதிலளித்துள்ளார்.
“அப்போதுதான் சானிட்டரி நாப்கின் கழிவுகளை அப்புறப்படுத்த முழுமையான தீர்வு அவசியம் என்பதைப் புரிந்துகொண்டேன். அந்த சமயத்தில் சானிட்டரி நாப்கிகளை அப்புறப்படுத்த இருந்த ஒரே தீர்வு எரியூட்டும் இயந்திரங்கள் மட்டுமே. ஆனால், அவை ஆபத்தான நச்சுப் பொருட்களைக் காற்றில் கலந்து மாசுபடுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் அதற்கு தொடர்ந்து செலவு செய்துகொண்டே இருக்கவேண்டும்,” என தரியா விவரிக்கிறார்.
கழிவுகளை சேகரிப்பது, மறுசுழற்சி செய்வது, இதிலிருந்து கிடைக்கும் துணைப் பொருட்களை வெவ்வேறு துறைகளில் மூலப்பொருட்களாகப் பயன்படுத்துவது என முழுமையான தீர்வு பலனளிக்கும் என்கிற முடிவிற்கு வந்தார். இதைத் தொடர்ந்து 2018ம் ஆண்டு புனேவைச் சேர்ந்த Padcare Labs என்கிற ஸ்டார்ட் அப் தொடங்கினார்.
பெண்களின் கழிப்பறையில் நாப்கின்களை அப்புறப்படுத்தும் வகையில் இயந்திரத்தை நிறுவுவதே இவரது ஆரம்பகால திட்டமாக இருந்தது.
“2019ம் ஆண்டு இதை நடைமுறைப்படுத்தியும் பார்த்தோம். பெண்கள் நாப்கின்களை அப்புறப்படுத்தைப் பற்றி மட்டுமே யோசித்தார்கள். மறுசுழற்சி பற்றியோ எரியூட்டுவது பற்றியோ அவர்கள் யோசிப்பதில்லை. இது ஒருபுறம் இருக்க கழிப்பறைகளில் பெரும்பாலான நேரங்களில் தண்ணீர் இருப்பதில்லை. இந்தத் தீர்வில் தொடர் செலவுகள் இருக்கும் என்பது அடுத்த முக்கிய சிக்கல்,” என தரியா விவரித்தார்.
செயல்பாடுகள்
சானிட்டர் நாப்கின் வென்டிங் இயந்திரம் மட்டுமல்லாது கழிப்பறைகளில் வைக்கும் வகையில் குப்பைத்தொட்டிகளையும் PadCare உருவாக்கியது. இந்தத் தொட்டிகளில் சானிட்டரி கழிவுகள் சேகரிக்கப்பட்டு 30 நாட்கள் வரை சேமிக்கப்படும். ஆனாலும் துர்நாற்றமோ பாக்டீரியாக்களோ இருக்காது என்பது இதன் சிறப்பம்சம்.
இந்தத் தொட்டிகளிலிருந்து சேகரிக்கப்படும் சானிட்டரி கழிவுகள் PadCare X மையப்படுத்தப்பட்ட யூனிட்டிற்கு கொண்டு செல்லப்படும். இந்த யூனிட்டில் உலகத்தரம் வாய்ந்த 5டி தொழில்நுட்பம் சார்ந்த சானிட்டரி நாப்கின் அப்புறப்படுத்தப்படும் அமைப்பும் மறுசுழற்சி அமைப்பும் உள்ளன.
”நான்காண்டு கால முயற்சியைத் தொடர்ந்து, ஐந்தாயிரத்திற்கும் அதிகமான சோதனை முயற்சிகளைத் தொடர்ந்து இந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தோம். 100 கிலோ திறனுடன் தொடங்கப்பட்ட இந்த முயற்சி விரைவில் 1.5 மெட்ரிக் டன் பிராசஸ் செய்யும் திறன் கொண்டதாக விரிவடைய உள்ளது,” என்கிறார் தரியா.
தற்சமயம் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 250 வாடிக்கையாளர்களின் அலுவலகங்களில் PadCare தொட்டிகள் இலவசமாக நிறுவப்பட்டுள்ளன. புனேவில் இருக்கும் இரண்டு மையப்படுத்தப்பட்ட பிராசசிங் யூனிட்களில் 1.5 டன் அளவிற்கான சானிட்டரி பேட்கள் தினமும் பிராசஸ் செய்யப்படுகின்றன. Meta, Capgemini, TCS, Goldman Sachs உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் இவர்களது வாடிக்கையாளர்கள் தொகுப்பில் அடங்கும்.
“நிறுவனத்திற்கு வெளியில் நியமிக்கப்பட்டிருக்கும் குழு ஒன்று கழிவுகளை வாடிக்கையாளர்களின் இடத்திலிருந்து சேகரிக்கும். இந்தக் கழிவுகள் அருகிலிருக்கும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மறுசுழற்சி செய்யப்படும். இதிலிருந்து கூழ், பிளாஸ்டிக் ஆகியவை கிடைக்கும். அதன் பிறகு இந்த பிளாஸ்டிக், சிறு துகள்களாக மாற்றப்பட்டு PadCare தொட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் மறுசுழற்சியின் மூலம் கிடைக்கும் கூழ், உரம் சம்பந்தப்பட்ட துறையில் வெவ்வேறு பயன்பாடுகளுக்காக விற்பனை செய்யப்படுகிறது,” என விவரித்தார்.
அதுமட்டுமல்லாது இந்தக் கூழ்களைக் கொண்டு PadCare Labs அலங்காரப் பொருட்கள், எழுதுபொருட்கள் போன்றவற்றைத் தயாரிக்கிறது.
பெங்களூரு, புதுதில்லி ஆகிய பகுதிகளிலும் PadCare யூனிட்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உள்ளூர் அரசு அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றுடன் இணைந்து இந்த முயற்சியின் மூலம் வருமான வாய்ப்புகளை உருவாக்கவும் இந்நிறுவனம் விரும்புகிறது. இதற்காக குறைந்த திறன் கொண்ட இயந்திரத்தை (200 கிலோ) வடிவமைக்க திட்டமிட்டுள்ளதாக தரியா தெரிவிக்கிறார்.
நிதி ஆயோக், பயோடெக்னாலஜி துறை, தூய்மை இந்தியா திட்டம் ஆகியவற்றிலிருந்து PadCare மானியம் பெற்றுள்ளது.
2020ம் ஆண்டு BIRAC’s LEAP Fund நிதியின்கீழ் Venture Center என்கிற தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் இன்குபேட்டரிடமிருந்து PadCare Labs அறிவிக்கப்படாத தொகையை நிதியாக திரட்டியுள்ளது. இந்த ஆண்டு Social Alpha, Lanvi Ventures, 3i Partners, Rainmatter, Spectrum Impact ஆகிய நிறுவனங்களிடமிருந்து 5 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.
ஷார்க் டேங்க் இந்தியா நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் 4% ஈக்விட்டியுடன் 1 கோடி ரூபாய் டீல் கிடைத்தது வைரலானது. ஷார்க் குழுவில் ஒருவரான லென்ஸ்கார்ட் நிறுவனர் பியூஷ் பன்சால் இந்த ஆஃபர் வழங்கியுள்ளார்.
“ஷார்க் டேங்க் தளம் லட்சக்கணக்கான மக்களை சென்றடைந்திருக்கிறது. இதன் மூலம் மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான தவறான கற்பிதங்களைத் தகர்த்தெறிய விரும்பினேன். மாதவிடாய் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பினேன்,” என்கிறார் தரியா.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா
‘மாதவிடாய் கப்’ தயாரித்து ஏழைப் பெண்களிடம் கொண்டு சேர்க்கும் பெண் தொழில்முனைவர்!