‘300 நாட்களில் 5 கையகப்படுத்தல்’ - நிதிநுட்பத் துறையில் வேக வளர்ச்சியில் சென்னை M2P Fintech
சென்னையைச்சேர்ந்த ஏபிஐ உள்கட்டமைப்பு சேவை நிறுவனம் M2P Fintech இரண்டு பெரிய நோக்கங்களுடன் ஐந்து ஸ்டார்ட் அப்களை கையகப்படுத்தியுள்ளது. புதிய நிதி நுட்ப பிரிவில் முன்னிலை பெறுவதற்கான உத்தியாக இது அமைகிறது.
நிதிநுட்ப (Fintech) ஸ்டார்ட் அப்'களில் ஒன்றான சென்னையைச் சேர்ந்த எம்2பி ஃபின்டெக் (
Fintech) நிறுவனம், எம்பெடட் பைனான்ஸ் எனப்படும் டிஜிட்டல் நிதிச்சேவைகள் பிரிவில் தனது நிலையை வலுவாக்கிக் கொள்ளவும், புதிய வருவாய் வழிகளை உருவாக்கவும் 5 ஸ்டார்ட் அப்களை கையகப்படுத்தியுள்ளது.நிதித்துறை அல்லாத பிற நிறுவனங்கள் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட வசதிகளை அளிப்பது எம்பெடட் பைனான்ஸ் (Embedded finance) என கொள்ளப்படுகிறது. இணைய மேடைகள் தங்கள் இணையதளங்கள் மற்றும் செயலிகளில் மைய சேவைகளுடன் நிதிச்சேவைகளை வழங்க வங்கிகளுடன் இணைந்து செயல்பட இத்துறை நிறுவனங்கள் வழி செய்கின்றன.
M2P Fintech வளர்ச்சி
சந்தை மதிப்பு அடிப்படையில் இந்தத் துறையில் பெரிய நிறுவனமாக விளங்கும் எம்2பி ஃபின்டெக் 2014ல் பேமெண்ட் ஸ்டாக் சேவை அளிக்கும் நிறுவனமாக அறிமுகமாகி வளர்ச்சி பெற்றுள்ளது.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து, வர்த்தகங்கள் தங்கள் மேடையில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வசதி அளிக்கும் சேவையை நிறுவனம் வழங்கத்துவங்கியது. உணவு டெலிவரி சேவையான ஜொமாட்டோ பலவகையான பேமெண்ட் வாய்ப்பை அளிப்பதை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
2017ல், இந்த ஏபிஐ உள்கட்டமைப்பு நிறுவனம், டெப்ட், கிரெடிட், டிராவல்கார்டு, கியூஆர்கோட், ஆதார்பே, சுங்க கட்டணம், பி.என்.பி.எல், வங்கிகளுக்கான மைய வங்கிச்சேவை உள்ளிட்ட வசதிகளை அளிக்கத்துவங்கியது.
முன்னணி நிதிநுட்ப நிறுவனங்கள், தனியார், பொதுத்துறை வங்கிகள், தொழில்நுட்ப நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது. இத்துறையில் நுழைந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், எம்2பி ஃபின்டெக் இப்போது, 600 மில்லியன் டாலருக்கு மேலான சந்தை மதிப்பீட்டை கொண்டிருப்பதோடு, 30 வங்கிகள் மற்றும் 600 நிதிநுட்ப நிறுவன வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. 15 நாடுகளில் வர்த்தகம் மூலம் ரூ.40.58 கோடி வருவாய் கொண்டுள்ளது.
டைகர் குளோபல், Beenext, டிஎம்.ஐ குழுமம், பெட்டர் கேபிடல், இன்சைட் பாட்னர்ஸ், MUFG இன்னவேஷன் பாட்னர்ஸ் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் வாயிலாக 100 மில்லியன் டாலருக்கு மேல் நிதி பெற்றுள்ளது.
எம்2பி ஃபின்டெக் வருங்காலம்
வளர்ந்து வரும் எம்பெடட் பைனான்ஸ் துறையில் பெரிய அளவு சந்தை பங்கை கொண்டுள்ளது எம்2பி ஃபின்டெக். எனினும், பெருந்தொற்று காலத்திற்கு பிறகு, ஏபிஐ உள்கட்டமைப்பு துறையில் போட்டி அதிகரித்திருப்பதால், நிறுவனம் தனது சந்தை பங்கை தக்க வைத்துக்கொள்வதற்காக அதற்கேற்ப தீவிர உத்திகளை வகுத்து செயல்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டுகளில் நிறுவனம், வங்கிகள் மற்றும் வர்த்தகங்கள்/நிதி நுட்ப நிறுவனங்கள் இடையிலான சேவையாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. எனினும், தனது வளர்ச்சி உத்திகளை பரிசீலித்து, பாரம்பரிய வங்கிகளை முன்நிலைப்படுத்தி அவற்றின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கத்துவங்கியிருக்கிறது.
வங்கிகள் மற்றும் நிதுநுட்ப நிறுவனங்கள் இடையிலான கூட்டு புரிந்து கொள்ளக்கூடியது என்றாலும், நியோவங்கிகள் உடனான கூட்டையும் தீவிரமாக்கியுள்ளது. பாரம்பரிய வங்கிகள், பின் தங்க நேரிடலாம் எனும் அச்சத்தில் சிக்கியுள்ளன. இணை நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஆர்.மதுசூதனன் இதை விளக்குகிறார்.
“நிதிநுட்ப நிறுவனம் புதிய பரப்பில் ஏதேனும் செய்கிறது அல்லது மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்றால், நாமே அதைச் செய்வதில் ஏதேனும் பலன் இருக்குமா? எனும் கேள்வியே வங்கி இயக்குனர் குழு அறைகளில் எழுப்பப்படுகிறது. புதிய வங்கிச்சேவை அல்லது பி.என்.பி.எல், அல்லது நிதி நுட்ப நிறுவனங்கள் அளிக்கும் சேவைகளில் வங்கிகள் ஆர்வம் கொண்டுள்ளன,” என்கிறார் அவர்.
இதன்காரணமாக டிஜிட்டல் வங்கிகள் உருவாகத்துவங்கியுள்ளன. கிளைகள் இல்லாமல், வங்கிச்சேவை அளிக்கும் வகையில் நியோ வங்கிகள் அமைகின்றன என்றால், டிஜிட்டல் வங்கிகள் பாரம்பரிய வங்கிகளின் விரிவாக்கமாக அமைகின்றன. உதாரணம் - Kotak 811 digital bank.
டிஜிட்டல் வங்கிச்சேவை தொடர்பான ஆர்வம், எம்2பி ஃபின்டெக் நிறுவனத்திற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இதன் காரணமாக நிறுவனம், நிதி நுட்ப நிறுவனங்களுக்கு இணையான டிஜிட்டல் வங்கிகளை உருவாக்க வங்கிகளுக்கான மைய வங்கிச்சேவை ஸ்டேக்கை வலுவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த பின்னணியில் எம்2பி ஃபின்டெக் கடந்த பத்து மாதங்களில், கையகப்படுத்தலில் ஈடுபட்டுள்ளது. ஐந்து கையகப்படுத்தலும், மேலே சொன்ன நோக்கத்திற்கு ஏற்ப அமைந்திருப்பதோடு, வங்கிகளுக்கான வசூல் மற்றும் தொடர்பு சேவை உள்ளிட்ட புதிய அம்சங்களை அளிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது.
மைய வங்கிச்சேவை
துவக்கம் முதல், எம்2பி ஃபின்டெக் பேமெண்ட் ஸ்டாக் பிரிவில் வங்கிகளுக்கு பிரதான சேவை வழங்கி வருகிறது. இதன் வாயிலாக தான் பிரதான வருவாயும் வருகிறது. மைய வங்கி உள்கட்டமைப்பு மற்றும் லெண்டிங் ஸ்டாக் ஆகியவையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
வங்கியின் பேக் எண்ட் அல்லது மைய வங்கிச்சேவை கிளவுடிற்கு மாறுவது உள்ளிட்ட மேம்பாடுகள் தேவைப்படுகின்றன.
இந்தப் பிரிவில், BSG ITSoft மற்றும் Finflux ஆகிய நிறுவனங்களை எம்2பி ஃபின்டெக் கையகப்படுத்தியது. பிஎஸ்ஜி கையகப்படுத்தல் எம்2பி நிறுவனத்தின் மைய வங்கிச்சேவை உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கிலானது என்றால், ஃபின்பிலக்ஸ் கையகப்படுத்தல், பி.என்.பி.எல் உள்ளிட்ட வங்கிகளுக்கான டிஜிட்டல் கடன் சேவை அம்சங்களை வலுவாக்க உதவும்.
பத்து தனியார் வங்கிகளில் 8 வங்கிகள் ஏற்கனவே, தங்களது பிஎன்பி.எல் சேவையை எம்2பி மேடையில் உருவாக்கியுள்ளன.
மேலும், பிஎஸ்ஜி கூட்டுறவு வங்கிகள் பிரிவில் கவனம் செலுத்துவதும் எம்2பி நிறுவனத்திற்கான பெரிய பிரிவாக அமையும். ஒருங்கிணைந்த சிபிஎஸ் மற்றும் பேமெண்ட் ஸ்டாக் என்ற முறையில் இந்நிறுவனம் வளர்ந்து வரும் பிளாக்செயின், வர்த்தக நிதி போன்ற துறைகளில் விரிவாக்கம் செய்யவும் உதவும்.
நிறுவனம் டிஜிட்டல் கடன் மற்றும் கணக்கு திரட்டிகள் (AA) தொடர்பான ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளையும் கவனைத்து வருகிறது.
ஃபின்பிக்ஸ் ஏற்கனவே ஏஏ உரிமம் கொண்டிருப்பது, எம்பெடட் பைனான்ஸ் நோக்கில இருந்து, குறிப்பாக கடன் சேவையில் ஏஏ உரிமத்தை எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறித்து ஸ்டார்ட் அப்களுடன் இணைந்து கண்டறிய முயன்று வரும் எம்2பி நிறுவன முயற்சிக்கு வலு சேர்க்கும்.
“தற்போதைய வர்த்தகத்தில், வீட்டுக்கடன் வசதி நிறுவனங்கள் பற்றி பெரிய புரிதல் இல்லாததால் அவற்றுடன் செயல்பட்டதில்லை. இவை வேறு வகையாக அமைகிறது. ஆனால், இன்று நாங்கள் வழங்கும் கடன் சேவை மேடை, ஃபின்பிலக்ஸ் காரணமாக வீட்டுக்கடன் வசதி நிறுவனங்களையும் உள்ளடக்கியிருக்கிறது. ஆக எங்கள் கடன் நிர்வாக மேடை வீட்டுக்கடன் வசதி நிறுவனங்களால் பயன்படுத்திக்கொள்ளப்பட்டால், இவற்றை மேலும் சிறப்பாக கையாள ஏஏ வசதியை பயன்படுத்திக்கொள்ள முடியுமா என பார்க்கிறோம்,” என்கிறார் மது.
மூன்றாவதாக Wizi, எனும் கிரெடிட் கார்டு பிரிவில் கவனம் செலுத்தும் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம், வங்கிகளுக்கான எம்2பி நிறுவனத்தின் பிஎன்பிஎல் சேவையை மேம்படுத்துகிறது.
உண்மையில் நுகர்வோரை எதிர்கொள்ளும் பி2சி மேடையான இந்நிறுவனத்தை, எம்2பி வங்கிகளை நோக்கிய B2B சேவையாக மாற்றியுள்ளது.
“எங்களுடைய பெரும்பாலான பிஎன்பிஎல் ஸ்டாக், டிஜிட்டல் சோர்சிங் தோற்றுவாயாக அமைகிறது. இந்த பிரிவில் Wiz மேடை ஏற்றதாக இருக்கிறது. இந்த உத்தி நல்ல பலன் அளிக்கிறது,” என்கிறார் அவர்.
கூடுதல் சேவைகள்
கடன் வசூல் சார்ந்த SaaS மேடையான Origa, மற்றும் மின்னணு வாடிக்கையாளர்கள் சேர்க்கைக்கான சேவை அளிக்கும் Syntizen ஆகிய நிறுவனங்களின் கையகப்படுத்தல் எம்2பி நிறுவனம் வங்கிகளுக்கு அளிக்கும் கூடுதல் சேவையாக அமைகின்றன.
ஒரு விதத்தில் எம்2பி வங்கிகளுக்கான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் அளிக்கும் நிறுவனமாக விரும்புகிறது.
“ஒன்றாக சேர்ந்து மொத்த அமைப்பையும் மேம்பட வைக்கும் துண்டுகள் இருக்கின்றன. மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் போது இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன மற்றும் இவை ஒன்றுக்கு ஒன்று வலு சேர்ப்பவை,” என்கிறார் மது.
ஐந்து ஒப்பந்தங்களும், ரொக்கம் மற்றும் பங்குகள் கலந்த விகிதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2021க்கு பிறகு நிறுவனம், டைகர் குளோபல் மற்றும் இன்சைட் பாட்னர்ஸ் தலைமையில், இரண்டு சுற்று நிதி திரட்டியுள்ளது. (91 மில்லியன் டாலர் அளவிலான சி மற்றும் சி 1 சுற்று மிகவும் முக்கியமானவை)
“ஒப்பந்தங்களின் பெரும்பகுதி கடந்த 12 முதல் 18 மாதங்களில் மேற்கொண்ட நிதி திரட்டல் மூலம் நிறைவேறியுள்ளன. டைகர் நிறுவன முதலீட்டிற்கு பிறகே எங்கள் கையகப்படுத்தல் பயணத்தை துவக்கினோம். வாய்ப்புகளை தீவிரமாக பரிசீலிப்பதோடு, எங்கள் சந்தை நுழைவை வேகமாக்க இந்தியாவுக்கு வெளியேவும் வாய்ப்புகளை நோக்கிறோம்,” என்கிறார்.
SaaS வாய்ப்பு
தற்போதைய 12 மாதங்களுக்கு பதிலாக அதிகபட்சமாக 90 நாட்களில் வங்கிகள் டிஜிட்டலுக்கு மாறும் வகையில் ’பிளக் அன் பிளே’ சாஸ் சேவையாக விளங்க வேண்டும் என்பதே எம்2பி நிறுவன விருப்பமாக உள்ளது.
“பல வகை சேவைகளை உருவாக்க, பத்து வெவ்வேறு நிறுவனங்களிடம் செல்வதற்கு பதிலாக, பெட்டியில் ஒரு வங்கியைப்போல எல்லாவற்றையும் ஒரே மேடையில் அளிக்கலாம். இந்த பிரிவில் இன்னும் செய்ய வேண்டியவை இருக்கின்றன. நாங்கள் உருவாக்க வேண்டிய அல்லது கையகப்படுத்த வேண்டிய பிரிவுகளை நோக்கிறோம்,” என்கிறார்.
எதிர்கால திட்டம்
தற்போது, M2P fintech நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய ஏபிஐ உள்கட்டமைப்பு சேவை நிறுவனமாக இருப்பதாக தெரிவிக்கிறது. அதன் 100 மில்லியன் டாலர் வருவாயில் 20 சதவீதம் கையகப்படுத்திய நிறுவனங்கள் மூலம் வரும்.
இதன் 15 சதவீத வருவாய், ஐக்கிய அமீரகம், எகிப்து, கத்தார், ஓமன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நேபால், சிக்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வருவதாக மது கூறுகிறார்.
45 சதவீத சமபங்குகள் கொண்டுள்ள நிறுவனர்கள், இந்தியாவில் லாபமான வர்த்தகம் கொண்டிருப்பதாகவும், ஐபிஓ திட்டம் இப்போது இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
இதன் வருவாய் 2020ல் ரூ.22.48 கோடியில் இருந்து 2021 நிதியாண்டில் ரூ.40.40 கோடியாக உயர்ந்தது. இதே போல், ஊழியர் நலன்கள் உள்ளிட்ட செலவுகளும் அதிகரித்துள்ளன.
கடந்த இரண்டு நிதியாண்டுகளில் லாபம் ஈட்டினாலும். 21 நிதியாண்டில்ரூ.5.99 கோடி அளவு நஷ்டம் உண்டானது.
"இது எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்ட முதல் ஆண்டு. மிகை வளர்ச்சியே இதற்குக் காரணம். எங்கள் வருவாய் சீராக அதிகரித்த நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எங்கள் வளர்ச்சியிலும் தீவிரமாக முதலீடு செய்தோம்,” என நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும், ஐக்கிய அமீரக துணை நிறுவனத்திலும் ரூ.3.67 கோடி முதலீடு செய்யப்பட்டது.
2022 நிதியாண்டு நிதி நிலை அறிக்கை இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. டிஜிட்டல் வங்கிச்சேவைக்கான பிளக் அன் பிளே மாதிரியில் நிறுவனம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. அண்மையில் Indus Ind வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. வாடிக்கையாளர்களுக்கு பேமெண்ட், கடன், செல்வ வளம் நிர்வாகத்தில் சேவை அளிக்க எம்2பி தொழில்நுட்பத்தை வங்கி பயன்படுத்திக்கொள்ளும்.
புதிய வர்த்தகம் மற்றும் குழுக்களை ஒருங்கிணைக்க நிறுவனம் கையகப்படுத்தலுக்கு இடைவெளி கொடுக்கலாம் என்றாலும் மதிப்பு மிக்க ஒப்பந்தங்களைக் கண்டறியும் வேட்கை கொண்டுள்ளது.
இந்தப் பிரிவில், நிறுவனம் Rupifi, Niro, Setu, Decentro உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டியிடுகிறது. எம்2பி தவிர, டைகர் குளோபல் ஆதரவு பெற்ற Rupifi ,Setu (பைன்லேப்ஸ் கையகப்படுத்தியது) நல்ல நிதி பெற்ற ஸ்டார்ட் அப்களாக உள்ளன.
“இலக்கு கம்பத்தை நகர்த்திக்கொண்டே இருப்பது தான் என் வேலை. புதிய நிறுவனம் நுழைந்தால் கூட, எங்கள் செயல்பாட்டை எட்டிப்பிடிப்பது கடினமாக இருக்கும். வங்கிகள் மற்றும் கட்டுப்பாடு காரணமாக இந்தத் துறை கடினமானதாக உள்ளது. எனவே இப்போது அதிக முதலீட்டுடன் ஒரு நிறுவனம் துவங்கினாலும், நாங்கள் இப்போது உள்ள நிலையை அடைய சில ஆண்டுகளாகவும் ஆகும்,” என உறுதியுடன் கூறுகிறார் மதுசூதனன்.
ஆங்கிலத்தில்: நைனா சூட் | தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan