சைவ உணவுப் பிரியர்களுக்கு சென்னையில் கஃபே தொடங்கிய இளம் பெண்!
சென்னையில் பிரபல திருமண போட்டோகிராஃபி மற்றும் வீடியோ நிறுவனமான 'ஸ்டுடியோ 31' நிறுவனத்தின் நிறுவனர் பிரானேஷ். இவரது நெருங்கிய நண்பரான அஸ்வினி ஸ்ரீனிவாசன் இவருடன் இணைந்து பணிபுரிய தீர்மானித்தபோது அது தனது சொந்த தொழில்முனைவு பயணத்திற்கு அடித்தளமாக அமையும் என்பதை அஸ்வினி உணரவில்லை.
22 வயதான அஸ்வினி சென்னையின் எஸ்ஆர்எம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பி.டெக் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.
படைப்பாற்றல் மிக்க போட்டோகிராஃபி துறையின் நுணுக்கங்களை அஸ்வினி கற்றபோது அவரிடம் இருந்த ஈடுபாட்டை பிரானேஷ் கவனித்தார். இதனால் அஸ்வினி தனது சொந்த நிறுவனத்தைத் துவங்க பிரானேஷ் ஊக்கமளித்தார். நீண்ட நாள் நண்பர்களான இவ்விருவருக்கும் கஃபே துவங்குவதில் ஆர்வம் இருந்தது. எனவே இருவரும் இணைந்து உணவின் மீது தங்களுக்கு இருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் ’80 டிகிரிஸ் ஈஸ்ட்’ (80 Degrees East) என்கிற கஃபேவை அமைத்தனர்.
80 டிகிரிஸ் ஈஸ்ட் என கஃபேவிற்கு பெயரிடக் காரணம் என்ன? பிரானேஷின் மனைவி க்ருதி இந்த பெயரைத் தேர்ந்தெடுத்தார்.
”எந்த ஒரு பயணத்தின் முதல் அடியும் ஒரு நேர மண்டலத்தை கருத்தில் கொண்டே துவங்கப்படுகிறது. எங்களது முயற்சி சென்னையில் 80.1901 டிகிரி கிழக்கு தீர்க்கரேகைப் பகுதியில் துவங்கப்பட்டது. இதனால் உலகின் சிறந்த உணவு வகையை வழங்கும் இந்த கஃபேக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டது,” என்றார் அஸ்வினி.
இந்த கஃபே 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் திறக்கப்பட்டது.
வணிக வாய்ப்பு
பெரும்பாலான கஃபேக்களில் சைவ மற்றும் அசைவ உணவு வகைகளே பரிமாறப்படுகிறது என்பதையும் சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்களுக்கென பிரத்யேகமான கஃபேக்கள் நகரில் அதிகம் இல்லை என்பதையும் தனது சந்தை ஆய்வு மூலம் அறிந்தார் அஸ்வினி.
“ரெஸ்டாரண்டுகள் பெரும்பாலும் பசுமையான உணவு வகைகளைக் காட்டிலும் மாமிசங்களிலேயே அதிக கவனம் செலுத்துகிறது,” என்றார்.
சைவ உணவு வகைகளைப் புதுமையாக வழங்கவேண்டும் என்கிற விருப்பத்துடன் பல விதமான உணவு வகைகளை தொகுத்து வழங்கும் சவாலான பணியை மேற்கொண்டார். 80 டிகிரிஸ் ஈஸ்டில் 85 சைவ உணவு வகைகளைப் பரிமாறுகிறோம். அது மட்டுமல்லாமல் நேரம் மற்றும் பருவகாலத்தை அடிப்படையாகக் கொண்டு தினசரி ஸ்பெஷல் உணவு வகை மற்றும் காம்போக்களை தொகுத்து வழங்குகிறோம்,” என்றார் அஸ்வினி.
அத்துடன் கஃபே நிலையான சமையல் முறையையும் பின்பற்றுகிறது. “நாங்கள் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களும் மின்சாரத்தால் இயங்கக்கூடியதாகும்,” என்றார் அஸ்வினி.
கஃபேயின் முக்கிய பலமே செஃப்கள் தான். தமிழ்நாட்டின் பல கிராமப்புறங்களிலிருந்து இவர்களை தேர்ந்தெடுக்கின்றனர். இவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டுவதற்கான தளத்தை வழங்குகின்றனர்.
கஃபேக்கான இடத்தைப் பொருத்தவரை எட்டு மாதங்கள் செலவிட்டு 38 இடங்களைப் பார்வையிட்ட பிறகு சென்னையின் புறநகர் பகுதியான நங்கநல்லூரைத் தேர்வு செய்தார். இந்தப் பகுதியில் கடந்த முப்பது அல்லது நாற்பதாண்டுகளில் சிறிய பாரம்பரிய தென்னிந்திய மற்றும் வட இந்திய ரெஸ்டாரண்டுகளே திறக்கப்பட்டிருந்தன.
இதனால் அஸ்வினி இந்த வணிக வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள எண்ணினார். மக்களிடையே செலவிடும் திறன் அதிகமாக காணப்படுவது, நவீன வாழ்க்கைமுறை, குடியிருப்புவாசிகளிடையே புதிய விஷயங்களை முயற்சிக்கவேண்டும் என்கிற ஆர்வம் போன்ற அம்சங்கள் அவருக்கு சாதகமாக இருந்தது.
கஃபேவின் செயல்பாடுகள் துவங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே 54 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. அதன் செலவுகளை பராமரித்து ஓரளவிற்கு லாபம் ஈட்டவும் உதவியது. இதனால் நிறுவனர்கள் தொடர்ந்து பணத்தை முதலீடு செய்யவேண்டிய அவசியம் இல்லாமல் போனது.
கஃபேவின் சூழல்
கஃபேக்கான தீம் குறித்து ஆய்வு செய்தபோது பயணம் மற்றும் உணவு சார்ந்ததாக கஃபேவின் சூழலை அமைக்க விரும்பினார் அஸ்வினி.
”பயணத்தை போன்ற ரசிக்கத்தக்க விஷயமோ அல்லது உணவைப் போல திருப்தியளிக்கக்கூடிய விஷயமோ எதுவும் இல்லை,” என்கிறார்.
கஃபேவின் அலங்காரம் அவர்களது உணவு சார்ந்த தத்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலும் பயணம் மற்றும் உணவின் அம்சங்களைக் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளது. சுவர்களில் நாடுகளின் பெயர்களும் வெவ்வேறு நேர மண்டலத்தைக் கொண்ட கடிகாரங்களும் பயணம் மற்றும் உணவு சார்ந்த மேற்கோள்களும் உள்ளன.
ரம்மியமான சூழலும் வாரத்தின் ஏழு நாட்களிலும் பரிமாறப்படும் நாவூறும் உணவு வகைகளும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்கிறார் அஸ்வினி. அத்துடன் நகரின் பிற பகுதியைச் சேர்ந்தவர்களும் வரத் துவங்கினர்.
பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவ மாணவிகள், குடும்பத்தினர் என பலரும் ஒன்றுகூடும் இடமாக இந்த கஃபே மாறியது. வார இறுதி நாட்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவை ரசிப்பது இவர்களுக்கு கிடைத்த வரவேற்பிற்கான அத்தாட்சியாகும்.
உணவுப்பட்டியலில் உள்ளவை…
80 டிகிரிஸ் ஈஸ்ட் குழுவில் ரெஸ்டாரண்ட் மேலாண்மை குறித்த அடிப்படை அறிவும் உணவு மற்றும் சமையலில் அதீத ஆர்வமும் கொண்ட இளம் செஃப்களும் வளர்ந்து வரும் செஃப்களும் உள்ளனர்.
வழக்கமாக கஃபேக்களில் கிடைக்கும் உணவு வகைகளான பர்கர், நாச்சோஸ், பொறித்த உள்ளூர் உணவு வகை (desi fries) போன்றவவை இங்கும் கிடைக்கும். அத்துடன் கிழக்கு மற்றும் மேற்கின் கலவை உணவு வகைகளும் கிடைக்கும்.
இவர்களது பிரத்யேக டிஷ் பேல் பாஸ்தா. இது பேல் பூரி, பாஸ்தா ஆகிய இரண்டு முக்கிய உணவு வகையின் கலவையாகும். பிரபல தென்னிந்திய உணவு வகையான பிசிபேலாபாத் மற்றும் பாஸ்தாவின் கலவையாக ‘பிசிபேலா பாஸ்தா’ என்கிற உணவு வகையும் இங்கே பிரபலம். அதே போல பாரம்பரிய மேகி மற்றும் தோசை வகைகளும் சுவாரஸ்யமான விதத்தில் பரிமாறப்படுகிறது.
அஸ்வினி செஃப்களின் ஆதரவுடன் மெனுவை தொகுக்கிறார். அவரது வணிக பார்ட்னர் மற்றும் வழிகாட்டியான பிரானேஷ் அவர் சோதனை செய்யும் உணவு வகைகள் மக்களின் விருப்பத்திற்கேற்ப சரியான சுவையில் அமைந்திருப்பதை உறுதிசெய்கிறார்.
”உணவு வகையின் தனித்துவம், சமைக்கத் தேவைப்படும் நேரம், வாடிக்கையாளர்களின் செலவிடும் திறன் போன்ற காரணிகளை கருத்தில் கொண்டே மெனு தீர்மானிக்கப்படுகிறது,” என்றார் அஸ்வினி.
கஃபேவிற்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் தொகுப்பை கருத்தில் கொண்டு இரண்டு நபர்களுக்கான உணவிற்கு சராசரியாக 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரையிலான பயணம்
அவரது பயணம் பல சவால்களைக் கொண்டதாகவே அமைந்திருந்தது. பல புதிய அனுபவங்களைக் கையாளவேண்டியிருந்தது. முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டியிருந்தது. அவர் கஃபே மற்றும் ஸ்டுடியோ 31 பணிகளுக்காக இரவும் பகலும் அயராது உழைப்பதைக் கண்டு கவலையடைந்த அவரது குடும்பத்தினரை சமாளிக்க நேர்ந்தது. 22 வயதே ஆன ஒருவர் வணிக ஒப்பந்தங்களை தீர்மானிப்பதைக் கண்டு தயக்கம் காட்டிய பலரையும் கையாள வேண்டியிருந்தது. ஆனால் அஸ்வினி இந்த சவால்களை எதுவும் அவரது முயற்சிக்கு தடையாக இல்லாத வகையில் அனைத்தையும் திறம்பட எதிர்கொண்டார்.
உணவில் ஆர்வம் இருப்பவரான, மாஸ்டர்செஃப் ஆஸ்திலேலியாவின் மிகப்பெரிய ரசிகரான இவருக்கு சைவ கஃபே துவங்கி மக்களுக்கு உணவு வகைகளை வழங்கவேண்டும் என்பது கனவாக இருந்தது. “என் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் கஃபேவிற்கு செல்லும்போதெல்லாம் அதன் உரிமையாளர்களை சந்தித்து பல விஷயங்களை தெரிந்துகொள்வேன்,” என்றார் அஸ்வினி.
இந்த கலந்துரையாடல்கள் வெவ்வேறு கஃபேக்களின் வணிக மாதிரிகள், துறையின் முக்கியமான அடிப்படை விஷயங்கள், மக்கள்தொகை மற்றும் இடத்தின் முக்கியத்துவம், நிதி மேலாண்மை, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு ஆகியவற்றை தெரிந்துகொள்ள பெரிதும் உதவியது.
”நாம் அனைவருமே நம்முடைய திறனை வெளிக்காட்ட ஒரே மாதிரியான கருத்துக்களை தகர்த்தெறியவேண்டும். இந்த கருத்தையே நான் பின்பற்றியேன்,” என்றார் அஸ்வினி.
விற்பனையாளர் மேலாண்மை, உணவின் தரம், இருப்பு மேலாண்மை, நிதி, மெனு புதுப்பித்தல் போன்ற வல விஷயங்களில் நேரடியாக ஈடுபட்டதால் கிடைத்த நடைமுறை அறிவு அவர் செய்த ஒவ்வொரு தவறு வாயிலாகவுமே பெறப்பட்டதாகவும் எந்த ஒரு மேலாண்மை பட்டமும் இத்தகைய அறிவை வழங்கியிருக்க முடியாது என்றும் அஸ்வினி தெரிவிக்கிறார்.
வருங்கால திட்டம்
80 டிகிரிஸ் ஈஸ்ட் கஃபேவின் வளர்ச்சி ஆர்கானிக்காகவே இருந்தது. ஒருவர் மற்றவருக்கு பரிந்துரை செய்ததால் கிடைத்த விளம்பரம் மற்றும் மெனுவில் தொடர்ந்து செய்யப்பட்ட மாற்றங்கள் போன்றவையே வாடிக்கையாளர்கள் தொடர்ந்து உற்சாகமாக வரவும் புதிய உணவு வகைகளை முயற்சிக்கவும் உதவியது.
முழுமையான சந்தை ஆய்விற்குப் பிறகு விரிவடைய திட்டமிட்டுள்ளனர். உரிமம் வழங்கும் வணிக மாதிரி குறித்த பேச்சுவாரத்தையும் நடந்து வருகிறது.
தற்போது சுயநிதியில் இயங்கும் இந்நிறுவனம் சரியான வாய்ப்பு கிடைத்தாலோ அல்லது நிதித்தேவை எழுந்தாலோ முதலீட்டாளரை அணுகக்கூடும்.
”நான் தகவல் தொழிநுட்பப் பிரிவில் பணியாற்றியிருந்தால் பெறமுடியாத பல விஷயங்களை கஃபே எனக்கு கற்றுத்தந்தது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நம்பிக்கையுடன் செயல்பட உதவியது. மக்களுடன் ஒருங்கிணைவதன் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுத்தது. அதாவது சரியான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது, தடைக்கற்களை படிக்கட்டுமாக மாற்றுவது போன்றவற்றை கற்றுக்கொடுத்தது,” என்றார் அஸ்வினி.
ஆங்கில கட்டுரையாளார் : ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில் : ஸ்ரீவித்யா