ஜீரோ டு ரூ.35 கோடி: நண்பர்கள் தொடங்கிய சென்னை நிறுவனத்தின் வளர்ச்சிக் கதை!
சென்னையில் நண்பர்கள் தொடங்கிய ‘Contus' ஜிரோவில் ஆரம்பித்து, இன்று 400க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் வளர்ச்சியை நோக்கி லாபத்துடன் செயல்படுகிறது.
Bootstapped to Millions என்னும் தலைப்பில் லிங்கிடின் தளத்தில், ஜிரோவில் இருந்து மில்லியன் வரை என்னுடன் இருக்கும் நண்பர் பாலா எனக் குறிப்பிட்டிருந்தார்
நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீராம் மனோகரன்.’Contus’ ஒரு ஸ்டார்ட்-அப் ஆக தொடங்கி இன்று மில்லியன்களில் ஈட்டும் நிறுவனமாக ஆகியிருப்பதன் பின்னால் ஸ்ரீராம் மனோகரன் மற்றும் இணை நிறுவனர் பாலா கந்தசுவாமி இருக்கின்றனர். இந்த வளர்ச்சிக் கதையை நம்மிடம் பாலா பகிர்ந்து கொண்டார்.
இப்போது ஒரு நிறுவனம் தொடங்குவது என்பது மிக எளிதானது. கொஞ்சம் ஐடியா இருந்தால் போதும் நிதி திரட்ட முடியும். அதற்குத் தேவையான ஆலோசனைகள் எளிதாகக் கிடைக்கும்.
ஆனால், 2008-ம் ஆண்டு தொழில் தொடங்குவது என்பது கொஞ்சம் வித்தியாசமான சூழல்தான். அப்போது நிதி வேண்டும் எனக் கேட்டிருந்தாலும் கிடைக்காது என்பதுதான் சூழல்.
ஜிரோவில் ஆரம்பித்த ’காண்டஸ்’ ஸ்டோரி இன்று சில மில்லியன் டாலர்கள் ஈட்டும் 400க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது.
ஆரம்பகாலம்
என்னுடைய சொந்த ஊர் நாமக்கல் அருகே இருக்கும் மோகனூர். வேலை தொடர்பாக அப்பா சென்னை வந்ததால் நான் வளர்ந்து எல்லாமே சென்னை போரூர்லதான். நானும் ஸ்ரீராமும் பள்ளி நண்பர்கள். குருநானக் கல்லூரியில் பிஎஸ்இ கணிதம் படித்தேன். அதன் பிறகு, நானும் ஸ்ரீராமும் தனித்தனியாக சென்றுவிட்டாலும் நாங்கள் தொடர்பில்தான் இருந்தோம், எனத் தொடங்கினார் பாலா.
அதனைத் தொடர்ந்து நான் சதர்லேண்ட் நிறுவனத்தில் வேலை செய்தேன். ஸ்ரீராம்; விப்ரோ, டிசிஎஸ், ஐபிஎம் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை செய்தார். இடையிடையே சில வேலைகள் செய்திருகிறோம். ஒரு கட்டத்தில் சொந்தமாக எதாவது தொடங்கலாம் என முடிவெடுத்து எங்களது சொந்த முதலீட்டில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினோம்.
“25 லட்சம் ரூபாய் முதலீடு, அலுவலகம், ஆறு நபர்கள் கொண்ட குழு, அதிக பேண்ட் வித் இருக்கக் கூடிய இணையதளம் (அப்போது இணையதளத்துக்கு அதிகம் செலவு செய்ய வேண்டும்) என பெரிய அளவில் முதலீடு செய்து நிறுவனத்தைத் தொடங்கினோம்.”
ஆனால், நாங்கள் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. ஐந்து மாதங்களுக்கு எந்த வருமானமும் இல்லை. செலவு மட்டுமே இருந்தது. செலவினை சமாளிக்க முடியவில்லை. நிறுவனர்களாக நாங்கள் வீட்டில் இருந்த நகைகளை அடமானம் வைத்து சமாளித்தோம். ஒருவழியாக சீன நிறுவனம் ஒன்று அவர்களின் இணையதளத்தை மாற்றிதர வேண்டும் என்னும் வேலையை எங்களுக்குக் கொடுத்தது. 75 டாலர், இதுதான் காண்டஸின் முதல் வருமானம் என ஆரம்பகாலத்தை கூறிய பாலா அடுத்தகட்டம் குறித்து விளக்கத் தொடங்கினார்.
வெறும் இணையதளத்தை வடிவமைத்து கொடுப்பதோ அல்லது மாற்றிதருவதன் மூலமோ பெரிய அளவுக்கு வளர முடியாது என்பது புரிந்தது.
“அப்போது ஒவ்வொரு இணையதளத்திலும் வீடியோ பிளே ஆகும். அதற்கு பிளக்-இன் சாப்ட்வேர் எழுத வேண்டி இருக்கும். நாங்கள் அதற்கென பிளக்-இன் தயாரித்து வெளியிட்டோம். இது மிகப்பெரிய வெற்றி கண்டது. சில லட்சம் பிளக்இன் சர்வதேச அளவில் டவுன்லோடு ஆனது. அதனைத் தொடர்ந்து இதேபோல இணையதள உருவாக்கத்துக்கு என பல பிளக்இன்களை உருவாக்கினோம். இதற்கென ஆப்தா (apptha) டாட் காம் என்னும் தளத்தை உருவாகி அதில் வெளியிட்டோம். இதுவும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது,” என்றார்.
இதுதவிர பல நிறுவனங்களுக்கு ஆப் மற்றும் இணையதளம் தயாரித்துக் கொடுத்தோம்.
ஆனால், இதே நிலையில் நீடித்திருக்க முடியாது அடுத்தகட்டம் செல்ல வேண்டும். புராடக்ட் நிறுவனமாக மாற வேண்டும் எனத் திட்டமிட்டோம். அப்போதுதான் ’மிரர்பிளை’ மற்றும் ’விபிளேடு’ என்னும் இரு புராடக்ட்கள் உருவாக்கினோம்.
Vplayed மற்றும் மிரர் பிளை
தற்போது வீடியோகள் என்பது தவிர்க்க முடியாதது. ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் எதாவது ஒரு வடிவில் வீடியோவை கையாள வேண்டும். அதனால், அவர்களுக்குத் தேவையான வீடியோ மேனேஜ்மெண்ட் சாப்ட்வேரை உருவாக்கத் திட்டமிட்டோம். அதுதான் விபிளேடு.
“விடியோ தேவைப்படும் நிறுவனங்கள் எங்களுடைய புராடக்டை பயன்படுத்தினால் அவர்களுக்குத் தேவையான கன்டென்டை எளிதாக நிர்வகிக்கலாம். இதன் தொடர்ச்சியாகதான் ’குட்ஷோ’ என்னும் பிரத்யேக ஒடிடி கொண்டுவந்தோம். அந்த ஒடிடி சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அதில் மேலும் சில மாற்றங்களை கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறோம்,” என்றார் பாலா.
அடுத்ததாக மிரர்பிளை என்னும் அப்ளிகேஷன கொண்டுவந்தோம். தற்போதைய யுகத்தில் தகவல் தொடர்பு என்பது தவிரக்க முடியாதது. முகம் தெரியாத அல்லது யார் என்றே தெரியாத பலரிடம் நாம் உரையாட வேண்டி இருக்கிறது. அப்போது எழும் முக்கியமான பிரச்சினை நம்முடைய செல்போன் எண் அனைவருக்கும் தெரிவதுதான்.
நம்முடைய செல்போன் எண் யாருக்கும் தெரியக் கூடாது, அதே சமயத்தில் நம்முடைய உரையாடலும் இருக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் மிரர்பிளை. ஹெல்த்கேர், இ-காமர்ஸ், நிதிச்சேவைகள், இ-லேர்னிங் என பல இடங்களில் உரையாட வேண்டி இருக்கிறது. அப்போது எங்களுடைய புராடக்ட் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இதுமட்டுமல்லாமல் ஒரு கம்யூனிட்டியாகவும் உரையாடிக்கொள்ள முடியும். உதாரணத்துக்கு ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 100 வீடுகள் இருக்கிறது என்றால் ஒருவருடைய தொலைபேசி எண் மற்றவருக்கு தெரியத்தேவையில்லை. ஆனால், எங்களுடைய தொழில்நுட்பம் மூலம் அவர்களுடன் உரையாட முடியும். சாட், உரையாடல் மற்றும் வீடியோ கால் என மிரர்பிளை மூலம் அனைத்து தகவல் தொடர்பும் செய்துகொள்ள முடியும். தொடர்ந்து புதிய வசதிகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறோம்.
பல சர்வதேச நிறுவனங்கள் எங்களின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். பல பெரிய நிறுவனங்கள் எங்களின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த புராடக்டை மொத்தமாக விற்பனை செய்தோம். தற்போது சாஸ் மாடலுக்கு மாறி இருக்கிறோம். மாதம் 99 டாலர், மாதம் 199 டாலர் மற்றும் மாதம் 999 டாலர் என கட்டணத்தை நிர்ணயம் செய்திருக்கிறோம்.
நிதி மற்றும் வருமானம்
இதுவரை எந்தவிதமான நிறுவன முதலீடும் இல்லாமல் சொந்தமாகவே வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறோம். நிதி நிறுவனங்கள் முதலீடு குறித்து எங்களிடம் பேசி இருக்கிறார்கள். ஆனால் நிதி திரட்டலுக்கான சூழல் எங்களுக்கு உருவாகவில்லை.
”2008-ம் ஆண்டு ஜிரோவில் ஆரம்பித்தோம், கடந்த நிதி ஆண்டில் 35 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டி இருக்கிறோம். இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதற்கான முயற்சியில் இருக்கிறோம்,” என பாலா தெரிவித்தார்.
அப்போது நிதி கிடைக்காததால் திரட்டவில்லை. ஆனால் தற்போது சொந்த நிதியில் இயங்கும் அளவுக்கு பலமாகி இருக்கிறது இந்த நண்பர்கள் தொடங்கிய நிறுவனம்.