ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பணம் ஈட்ட பின்பற்றிய 5 வழிகள் இதோ!
பங்குச்சந்தை முதலீடு மூலம் ரூ.43,000 கோடி அளவிலான செல்வத்தை ராகேஷ் ஜுன்ஜுன்வாலா எளிதாக ஈட்டிவிடவில்லை. ஒவ்வொரு முதலீட்டை மேற்கொள்ளும் போதும் அவர் ஐந்து முக்கிய விஷயங்களை மனதில் கொண்டே செயல்பட்டிருக்கிறார். அவர் தாரகமந்திரமாக பின்பற்றும் வழிகளை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய பங்குச்சந்தை உலகில் Big Bull என அன்போடு அழைக்கப்பட்ட ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தனது 62 வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கான அஞ்சலிகளும், இறங்கல் குறிப்புகளும் வெளியாகி வரும் நிலையில், பங்குச்சந்தையில் அவரது பயணத்தை திரும்பி பார்த்து அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கையில் 5,000 ரூபாய் மட்டும் வைத்துக்கொண்டு பங்குச்சந்தையில் நுழைந்து 43,000 கோடி அளவிலான செல்வத்தை ஈட்டியுள்ளார். அவர் செல்வம் ஈட்டியதன் பின்னணியில் அவர் மறக்காமல் பின்பற்றிய ஐந்து முக்கிய வழிகள் இருக்கின்றன.
ஒவ்வொரு முதலீட்டை மேற்கொள்ளும் போதும், ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்த ஐந்து வழிகளையும் நினைவில் கொண்டே செயல்பட்டிருக்கிறார். பங்குச்சந்தையில் பணம் ஈட்ட விரும்பி ஆலோசனை கேட்பவர்களுக்கும் இந்த வழிகளை தான் பரிந்துரைத்திருக்கிறார்.
இந்த வழிகளை பின்பற்றினால் பணம் தானாக வரும் என்பது அவரது நம்பிக்கை.
கோடிக்கணக்கான அளவில் செல்வம் ஈட்ட உதவிய அந்த ஐந்து வழிகளை பார்க்கலாம்.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பின்பற்றிய 5 வழிகள்
தவறு செய்யத் தயங்க வேண்டாம்:
ஒருவர் தவறு செய்ய அஞ்சக்கூடாது என்பது ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கொண்டிருந்த நம்பிக்கையாக இருந்தது. பங்குச்சந்தையில் முதலீடு செய்ய பல முடிவுகளை எடுக்க வேண்டும் என அவர் கூறுவது உண்டு. சில நேரங்களில் முடிவுகள் தவறாக அமையலாம். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவரது நம்பிக்கை.
தவறு செய்ய அஞ்சினால் முடிவு எடுக்க முடியாது. எனவே, பணம் ஈட்டுவதும் சாத்தியம் இல்லை. அவரே கூட ஒரு நிறுவன முதலீட்டில் 150 கோடி இழந்திருக்கிறார். ஆனால் அந்த தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டார்.
முதலீடு செய்யும் முன் ஆய்வு தேவை
எந்த ஒரு நிறுவனத்தின் பங்குகளிலும் முதலீடு செய்வதற்கு முன், அந்த நிறுவனம் பற்றி நன்றாக ஆய்வு செய்வது முக்கியம். சந்தையின் ஏற்ற இறக்கத்தை பயன்படுத்திக்கொள்ளும் தின வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்காக அவர் இதைச் சொல்லவில்லை. நீண்ட கால நோக்கில் முதலீடு செய்பவர்களுக்காக சொல்கிறார். நிறுவனத்தின் பாலன்ஸ் ஷீட் தவிர, அதன் நிர்வாகக் குழு, எதிர்காலத் திட்டங்களை உள்ளிட்டவற்றை தவறாமல் ஆய்வு செய்ய வேண்டும்.
பங்குச்சந்தை மேலானது, ஏற்றுக்கொள்ளுங்கள்
பங்குச்சந்தை மேலானது என்பது அவரது நம்பிக்கை. இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்களால் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியாது. சந்தையில் நஷ்டம் ஏற்படும் போது பலரும் சந்தையை சபிக்கத்துவங்குகின்றனரே தவிர தங்கள் முடிவுகள் குறித்து யோசிப்பதில்லை. ஆனால், தங்கள் முடிவுகளின் தவறுகளை அலசி ஆயவு செய்பவர்கள் சந்தையை மேலானதாக கருதி, தவறுகளில் இருந்து கற்றுக்கொள்கின்றனர்.
டிரேடிங் வேறு முதலீடு வேறு
சந்தையில் இரண்டுவிதமாக பணம் ஈட்டலாம். டிரேடிங் ஒரு வழி என்றால் முதலீடு இரண்டாவது வழி. டிரேடிங்கில் குறுகிய கால நோக்கில் பணம் முதலீடு செய்து, பங்குகள் விலை உயர்ந்தவுடன் விற்கின்றனர். முதலீட்டில், நீண்ட கால நோக்கில் முதலீடு செய்து பலன் கிடைக்க காத்திருக்கின்றனர்.
இந்த இரண்டையும் செய்ய விரும்பினால், இரண்டுக்கான முதலீடு தொகுப்பையும் தனித்தனியே வைத்திருக்க வேண்டும் என்கிறார். டிரேடிங்கில் நஷ்டம் ஏற்படும் இடர் அதிகம். முதலீட்டில் பலன் கிடைக்கும். அவர் எப்போதுமே நீண்ட கால முதலீட்டையே பரிந்துரைத்திருக்கிறார்.
குறிப்புகளை நம்ப வேண்டாம்
சந்தையில் முதலீடு செய்யும் பலரும், மற்றவர்கள் சொல்லும் குறிப்புகளை கேட்டு ஏமாறுகின்றனர். அவர்கள் விஷயம் அறிந்தவர்களிடம் இருந்து குறிப்பை பெற்று செயல்பட விரும்புகின்றனர் அல்லது பெரிய முதலீட்டாளர் வாங்கும் பங்கை வாங்க விரும்புகின்றனர்.
ஆனால், எப்போதும் சொந்தமாக ஆய்வு செய்து முதலீடு செய்ய வேண்டும் என்பது அவரது அறிவுரை. குறிப்புகளை நம்பி செயல்பட்டால் நஷ்டம் அடைய நேரும். அதே போல, பெரிய முதலீட்டாளர் தான் வைத்திருக்கும் பங்கில் பிரச்சனையை உணர்ந்தால் அதை விற்று வெளியேறுவார். வாங்கியவர்கள் வைத்திருந்து நஷ்டம் அடைவார்கள்.
தொகுப்பு: சைபர் சிம்மன்