40,000 கோடி சொத்து மதிப்பு கொண்ட ‘இந்திய பங்குச்சந்தை தந்தை’ ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மரணம்!
இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களிலேயே முதன்மையான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இன்று தனது 62 வயதில் காலமானார்.
இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களிலேயே முதன்மையாகவும் முன்னோடியாகவும் விளங்கும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இன்று தனது 62 வயதில் காலமானார்.
இந்திய பங்குச் சந்தை தந்தை:
இந்தியாவின் 'வாரன் பப்பெட்' மற்றும் ‘இந்திய பங்குச்சந்தையின் தந்தை’ என்றெல்லாம் அழைக்கப்படுவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. இவர் இந்திய சந்தைகளில் முதலீடு செய்து பிரபலமடைந்த தனிநபர் முதலீட்டாளர் ஆகும். பங்குச்சந்தை என்றாலே பலரும் அஞ்சி நடுக்கும் போது, இளம் வயதிலேயே பங்குச்சந்தை முதலீடுகள் மூலமாக கோடிகளை குவித்து சாதித்துக்காட்டியவர்.
பங்குச் சந்தைகளில் முதலீடு என்பதையும் தாண்டி, ஆப்டெக் லிமிடெட் கணினி மையத்தின் நிறுவனராகவும், பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் பங்கு வகித்து வருகிறார்.
இந்திய பங்குச்சந்தைகளில் இவருடைய முதலீட்டின் மதிப்பு சுமார் 18,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
யார் இந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா?
மும்பையில் பணியாற்றி வந்த வருமான வரித்துறை அதிகாரி ராதேஷ்யாம் ஜுன்ஜுன்வாலாவின் மகனாக ராகேஷ், 1960ஆம் ஆண்டு பிறந்தார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த ஷெகாவத் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் மும்பையில் தான் வளர்ந்தார்.
சைடன்ஹாம் கல்லூரியில் பட்டயக் கணக்காளர் பட்டம் பெற்றார். இதனாலேயே ஜுன்ஜுன்வாலா இந்தியாவின் பங்குச் சந்தையைப் பற்றி எப்பொழுதும் அறிந்து வைத்திருந்தார். 1985ம் ஆண்டு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போதே பங்குச்சந்தைகளில் முதலில் 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ததன் மூலமாக தனது பயணத்தை ஆரம்பித்தார்.
மேலும், பங்குச்சந்தை தொடர்பாக RARE எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தவர். தனது பெயரில் உள்ள R என்ற முதல் எழுத்தையும், மனைவி ரேகாவின் பெயரில் இருந்து சில எழுத்துக்களையும் சேர்த்து தனது நிறுவனத்திற்கு பெயர் சூட்டினர். டாடா டீ, சேஷ கோவா போன்ற சிறிய அளவிலான நிறுவனங்களில் முதலீடு செய்து வந்தார். அதில் வெற்றி கண்டதை அடுத்து டைட்டன், ஸ்டார் ஹெல்த், டாடா மோட்டார்ஸ் மற்றும் மெட்ரோ பிராண்ட்ஸ் போன்ற நிறுவனங்களில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்தார்.
1986 ஆம் ஆண்டு டாடா டீயின் 5,000 பங்குகளை₹43க்கு வாங்கினார். அடுத்தடுத்தடுத்து 3 மாதங்களிலேயே அதன் விலை 143 ரூபாய் வரை உயர்ந்தது. கடைசியாக 3 வருடங்கள் கழித்து டாடா டீயின் பங்குகளை 25 லட்சம் ரூபாய் வரை விற்று தனது முதல் லாபத்தை சம்பாதித்தார்.
கல்வி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்டெக் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் குழுவிலும் பங்கு வகித்து வந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, சுமார் 43 கோடி ரூபாய் மதிப்புள்ள 23 சதவீத பங்குகளை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2021ம் ஆண்டு ஒரே மாதத்தில் பங்குச்சந்தை மூலமாக ரூ.900 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, முதலீட்டாளர்களை அதிரவைத்தார். டாடா மோட்டார்ஸ், டைடன் கம்பெனிகளின் மதிப்பு உயர்ந்ததால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவரது பங்குகள் மூலமாக ரூ.900 கோடி ரூபாய் வரை லாபம் அடைந்தார். ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பங்குச்சந்தை பற்றி கூறுகையில்,
"வானிலை, மரணம், சந்தை மற்றும் பெண்களின் மனதை யாராலும் கணிக்க முடியாது. பங்குச்சந்தை ஒரு பெண்ணைப் போன்றது, எப்போதும் கட்டளையிடும், மர்மமானது, நிச்சயமற்ற மற்றும் நிலையற்றது. நீங்கள் ஒரு பெண்ணை ஒருபோதும் ஆதிக்கம் செலுத்த முடியாது, அதேபோல் தான் சந்தையிலும் நீங்கள் ஆதிக்கம் செலுத்த முடியாது,” எனக்குறிப்பிட்டுள்ளார்.
30க்கும் மேற்பட்ட இந்திய புளூ சிப் பங்குகளில் குறிப்பிடத்தக்க அளவு $3.5 பில்லியன் நிகர மதிப்பை கொண்டிருந்தார்.
"நஷ்டத்தைத் தாங்கும் திறன் உங்களிடம் இல்லையென்றால் பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட முடியாது," என்பார் ஜுன்ஜுன்வாலா.
Akasa Air தொடக்கம்:
கோடீஸ்வரர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, முன்னாள் ஜெட் ஏர்வேஸ் சிஇஓ துபே மற்றும் முன்னாள் இண்டிகோ தலைவர் ஆதித்யா கோஷ் ஆகியோருடன் இணைந்து ‘ஆகாசா ஏர்’ நிறுவினார். இந்தியாவின் புதிய விமான நிறுவனத்தின் சேவை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கியது.
இரண்டு 737 மேக்ஸ் விமானங்களுடன் மும்பை, அகமதாபாத், கொச்சி, பெங்களூரு ஆகிய வழித்தடங்களிலும் முதல் சேவையை தொடங்குவதற்கான டிக்கெட் முன்பதிவு ஜூலை 22ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 7ம் தேதி முதல் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே 28 வாராந்திர விமானங்களை இயக்க தொடங்கி நிலையில், நேற்று முதல் பெங்களூரு-கொச்சி வழித்தடத்தில் 28 வாராந்திர விமான சேவை தொடங்கப்பட்டது.
இந்த மாத தொடக்கத்தில் இந்திய வானத்தில் புறப்பட்ட இந்தியாவின் புதிய விமான நிறுவனமான ஆகாசா ஏர் நிறுவனத்தையும் அவர் ஆதரித்தார். விமானப் போக்குவரத்து சரியாக இல்லாதபோது அவர் ஏன் விமான நிறுவனத்தைத் தொடங்க திட்டமிட்டார் என்று நிறைய பேர் கேள்வி எழுப்பி வந்தனர்.
“நான் ஏன் ஒரு விமான நிறுவனத்தைத் தொடங்கினேன் என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். அவர்களுக்கு பதிலளிப்பதை விட, நான் தோல்விக்கு தயாராக இருக்கிறேன். ஏனென்றால் முயற்சி செய்யாமல் இருப்பதை விட, முயற்சி செய்து தோல்வி அடைவது நல்லது,” என பதிலளித்திருந்தார்.
பங்குச்சந்தையில் புலியாக இருந்தாலும், விமான நிறுவனம் குறித்து எவ்வித முன் அனுபவம் இல்லாத ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, அந்நிறுவனத்தில் தனது 40 சதவீத பங்குகளுக்காக $35 மில்லியன் முதலீடு செய்திருந்தார். ஆகாசா ஏர் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“இன்று காலை ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மரணமடைந்தார் என்ற செய்தியால் நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளோம். ஒரு சிறந்த விமான நிறுவனத்தை நடத்த பாடுபடுவதன் மூலம் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மரபு, மதிப்புகள் மற்றும் நம்பிக்கையை ஆகாசா ஏர் கௌரவிக்கும்,” எனக்குறிப்பிட்டுள்ளது.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மரணம்:
இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து தொடர்ந்து வெற்றி அடைந்து வந்த ராஜேஷ் ஜுன்ஜுன்வாலா இன்று காலை மும்பையில் காலமானார். அவருக்கு வயது 62. கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு ரேகா என்ற மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.
"இந்தியாவின் வாரன் பஃபெட்" என்று அழைக்கப்படும் ஜுன்ஜுன்வாலா சொத்து மதிப்பு ரூ.40,000 கோடிக்கு மேல் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் இறுதிச் சடங்கு மும்பையில் உள்ள மலபார் ஹில்லில் உள்ள பங்கங்கா இடுகாட்டில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைவர்கள் இரங்கல்:
பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மறைவுக்கு பிரதமர் முதற்கொண்டு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,
“ராகேஷ் ஜுன்ஜுன்வாலா நிதி சந்தைகளில் அழியாத பங்களிப்பை விட்டுச் சென்றுள்ளார். இந்தியாவின் முன்னேற்றத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி,” என புகழாரம் சூட்டியுள்ளார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தனது சகோதரனை இழந்துவிட்டதாக பதிவிட்டுள்ளார்.
"நான் இன்று என் சகோதரனை இழந்துவிட்டேன். பலருக்கும் தெரியாத உறவு. அவரை பில்லியனர் முதலீட்டாளர், பிஎஸ்இயின் பாட்ஷா என்று அழைக்கிறார்கள், ஆனால் அவர் உண்மையில் மிகப்பெரிய கனவுகளை காண்பவர்,” எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,
"பழம்பெரும் முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. வணிகம் மற்றும் தொழில்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக அவர் என்றும் நினைவுகூறப்படுவார். இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் கலாச்சாரத்தை உருவாக்குவதில் முன்னணியில் இருந்தவர். அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்,” என ட்வீட் செய்துள்ளார்.