53,300 மழைத் துளிகளைக் கொண்ட 500 மி.லி மழைநீர் பாட்டில்!
எப்போதாவது ஒரு மழைத்துளியை ருசித்து பார்த்திருக்கிறீர்களா! இனி, நன்கு சுத்திகரிக்கப்பட்ட மழைநீர் பாட்டில்களை வாங்கி அருந்தலாம்...
உலகின் பெரும்பாலான குடிநீர் விற்பனை நிறுவனங்கள், நிலத்தடி நீரை ஆதாரமாகக் கொண்டு பல அடிகள் தோண்டி நீரை எடுத்துக் கொண்டிருக்க அமெரிக்காவின் டெக்சாசை சேர்ந்த நிறுவனம் ஒன்று அதன் நீர் ஆதாரத்திற்காக வானை நோக்கியுள்ளது. ஆம், ‘வானிலிருந்து நேரடியாக சேகரிக்கப்பட்ட மழைநீர்’ என்ற டேக்லைன் உடன் மழைநீரை பாட்டிலில் அடைத்து விற்பனையை துவக்கி உலகமக்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது .
2000ம் ஆண்டில் ரிச்சர்ட் ஹெய்னிச்சென் என்பவரால் நிறுவப்பட்டது தான் ‘ரிச்சர்ட்ஸ் ரெயின்வாட்டர்’ எனும் நிறுவனம். கிட்டத்தட்ட இரு தசாப்தத்திற்கு முன்னதாக, அவருடைய தாகத்தை தணிப்பதற்கான ஒரு வழியை கண்டுபிடிக்கும் தேடலில் இறங்கியுள்ளார். அவருடைய கிணற்றில் இருந்து பெறப்பட்ட சல்பர் வாசனையுடன் கூடிய நீரை அவர் விரும் பவில்லை. அந்நீரின் மணத்தை சகித்துக் கொள்ள முடியாமல், ரிச்சர்ட் அவருடைய வீட்டில் பயன்படுத்த மழைநீரை சேகரிக்கத் தொடங்கினார்.
அவர் மழையைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் ஃபைபர் கிளாஸ் தொட்டியைக் கவனித்த பக்கத்து வீட்டுக்காரர் இதேபோன்ற அமைப்பை அவரது வீட்டிலும் நிறுவ உதவுமாறு கேட்டுள்ளார். அது தான் இன்றைய தொழிலுக்கான தொடக்கமாக அமைந்துள்ளது.
1000 செ.மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதியில் 3 செ.மீ மழை பதிவாகினால், அப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 2,082 லிட்டர் மழைநீர் கிடைக்குமாம். அமெரிக்காவின் டெக்சாஸ், கில்ன், மிஸ்ஸிஸிப்பி, டிரிப்பிங் ஸ்பிரிங்ஸ் ஆகிய பகுதிகளிலிருந்து மழைநீரை சேகரிக்கின்றது இந்நிறுவனம்.
மழைப் பொழிய துவங்கிய முதல் 10 நிமிடங்களுக்கு மழைநீர் சேகரிக்கப்படுவதில்லை. பின், கட்டிடத்தின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடியிழை தொட்டியில் மழைநீரானது சேகரிக்கப்படுகிறது. அல்ட்ரா வயலெட் லைட் (புறஊதா நீர் சுத்திகரிப்பு), ரிவர்ஸ் ஆஸ்மாஸில் (எதிர் சவ்வூடு முறை), குளோரினுக்கு பதிலாக ஆக்சிஜன் நீர் சுத்திகரிப்பு ஆகிய மூன்று நிலை வடிப்பான் மூலம் மழைநீரானது சுத்திகரிக்கப்படுகிறது.
அவர்களது சேகரிப்பு நிலையங்களில் ஒன்றான மிஸ்ஸிஸிப்பியின் லேஸி மாக்னோலியா மதுபான உற்பத்தி நிலையத்தின் வருடாந்திர மழைப்பதிவு 152செ.மீ ஆகும். இது ஆண்டுதோறும் 2,000 நபர்களுக்கு போதுமான ஆறு மில்லியன் லிட்டர் தண்ணீரை அளிக்கிறது.
“சுத்தமான தண்ணீருக்கான ஆதாரத்தை கண்டறிதலே உலகம் இப்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால். ஆனாலும், மழைநீரின் பெரும்பகுதி கடலில் கலந்து போகிறது. எங்கள் செயல்முறையில் குறைந்த ஆற்றலே பயன்படுத்தப்படுகிறது மற்றும் குறைந்த கழிவுகளை உருவாக்குகிறது.
”நகராட்சி ஆதாரங்களையே அல்லது நிலத்தடி நீரின் அளவையோ நாங்கள் குறைக்க மாட்டோம். மேலும், மழைநீர் சேகரிப்புத் தளங்களை விரிவுபடுத்தவும், அதற்காக வறட்சி குறைவான இடங்களைத் தேர்வுசெய்யவும் விரும்புகிறோம். தண்ணீர் பாட்டில் உற்பத்திக்கு எந்தவித இடையூறும் இல்லாமலிருக்க மழைநீரை சேமித்து வைக்கிறோம்,” என்றார் ரிச்சார்ட்ஸ் ரெ யிவாட்டரின் சிஇஓ திரு ஓநீல்.
ஓநீல் தொடர்ந்து கூறுகையில் “நாங்கள் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக்கை பேக்கேஜிங்கிற்காக பயன்டுத்துகிறோம்” என்றார்.
ரிச்சர்டின் மழைநீர் வடிகட்டுதல் செயல்முறைக்கு காப்புரிமை பெறவும் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு மில்லியன் மழைநீர் பாட்டில்களை உற்பத்தி செய்வதை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்நிறுவனம். மழைநீரை பாட்டில்களில் விற்பனை செய்ய அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து தரக்கட்டுபாடு நிர்வாகம் அனுமதித்த முதல் நிறுவனமும் இதுவாகும்.
தகவல் உதவி : The hindu & My Business