‘மழைநீர் அறுவடை’யால் பஞ்சத்துக்கே பஞ்ச் கொடுக்கும் தண்ணீர் மனிதர்!
மழைநீர் அறுவடை, குப்பைகளை உரமாக்குவது என்று தன்னுடைய வீட்டையே இயற்கை உரவாடும் நந்தவனமாக மாற்றி வைத்திருக்கிறார் சென்னையின் தண்ணீர் மனிதர் இந்திரகுமார்.
விவசாயி பயிர்களை அறுவடை செய்வது போல மனிதனும் கிடைக்கும் மழை நீரை சரியான நேரத்தில் அறுவடை செய்ய வேண்டும். மழைநீர் அறுவடைக்காக பழங்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஏரி, குளம், குட்டைகள் அனைத்தும் காணாமல் போனதே சென்னை அண்மையில் சந்தித்த தண்ணீர் பஞ்சத்திற்குக் காரணம்.
இனியாவது மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் உங்கள் வீட்டின் மீது விழும் மழை நீரை சேமியுங்கள், வீட்டைச் சுற்றி விழும் மழைநீர் பூமிக்குள் சென்றடைய வழி செய்யுங்கள் என்கிறார் ஹோம் எக்ஸ்னோரா அமைப்பின் தலைவரும் சமூக ஆர்வலருமான இந்திரகுமார்.
சென்னை பம்மலில் அமைந்துள்ள இவரின் வீடு எப்படி மழைநீர் அறுவடை செய்வது, கழிவுகளை குப்பைகளாக தூக்கி வீசாமல் அவற்றை எப்படி உரமாக்குவது, கழிவுநீரை இயற்கை முறையில் சுத்திகரித்து தோட்டத்திற்கு நீராக பயன்படுத்துவது எப்படி என்று பல அனுபவங்களை வழங்கும் இயற்கை பாதுகாப்பு பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது.
”மனிதன் உயிர் வாழ காற்று, உணவு, நீர் அவசியம். இன்றைய காலகட்டத்தில் இவை அனைத்துமே இயற்கையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இல்லை. ஆனால் நாம் நினைத்தால் அதை ஆரோக்கியமானதாக மாற்றலாம்,” என்று கூறுகிறார் இந்திரகுமார்.
முதலில் மழைநீர் அறுவடை என்னுடைய வீட்டைச் சுற்றியும் 2 அடி அகலம் 4 அடி ஆழத்தில் உறிஞ்சு குழிகளை அமைத்துள்ளேன். மழைக்காலத்தில் மழை நீரை பூமிக்கு அனுப்பாவிட்டாலும் கோடைகால மழையை நிச்சயம் பூமிக்குள் அனுப்ப வேண்டும் அப்போது தான் நிலத்தடி நீர் குறையாது.
என்னுடைய வீடு சாலையை விட தாழ்வானதாக இருந்தாலும் மழை பெய்தால் எதிர்வீட்டில் தேங்கி நிற்கும் அளவு நீர் கூட என் வீட்டைச் சுற்றி நிற்காததற்கு இந்த உறிஞ்சி குழிகளே காரணம். இந்தப் பகுதியைச் சுற்றி விழும் ஒவ்வொரு துளி மழைநீரையும் பூமி அப்படியே உறிஞ்சி விடுவதால் மழைநீர் தேங்காது, கொசுத் தொல்லையும் இல்லை என்கிறார் இந்திரகுமார்.
இது தவிர உப்புத் தன்மை அதிகரித்த கிணற்றிலும் நேரடியாக மழைநீர் அறுவடை செய்யும் வசதியையும் இவர் ஏற்படுத்தியுள்ளதால் கிணற்றில் நீர் வற்றாமல் இருப்பதோடு தண்ணீரின் சுவையும் கூடியுள்ளதாகக் கூறுகிறார்.
பொதுவாக சாலையை விட வீடு உயரமாக இருக்கும்படியும், வீட்டுக்கு முன்பு காலி இடம் இருக்கும்படியும் தான் வீட்டைக் கட்டுவார்கள். ஆனால் இந்திரகுமார் சற்று வித்தியாசமாக வீட்டின் முன்பக்கத்தை சாலையில் இருந்து தாழ்வாகவும், பின்பக்கத்தில் காலி இடம் விட்டும் கட்டி இருக்கிறார்.
”சாலையில் இருந்து வீடு பள்ளத்தில் இருப்பதால் இவரின் வீட்டைத் தேடி ஓடி வரும் மழைநீரை அன்போடு அரவணைத்து சேமித்து வைத்துக் கொள்கிறார். 1996 முதல் மழை நீர் அறுவடையை சிறப்பாக செய்து வரும் இவர், சென்னை மாநகரமே தண்ணீர் இல்லாமல் தவித்தாலும் என் வீட்டில் தண்ணீர் பிரச்னை வராது, என் தோட்டத்தில் இருக்கும் ஒரு செடியின் இலை கூட காயாது,” என்று பெருமிதத்தோடு சொல்கிறார்.
ஐடி பணியில் இருந்தவர் தன் வீட்டில் செய்யப்பட்டிருந்த மழைநீர் அறுவடை பற்றி தனது மகனின் பள்ளிக்குசென்று விளக்கிக் கூறியுள்ளார். அப்போது கிடைத்த வரவேற்பையடுத்து பணியை ராஜினாமா செய்து விட்டு அன்றிலிருந்து மழை நீர் அறுவடை குறித்து அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் சமூக ஆர்வலராக செயல்படத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து, எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பு மூலமாக ஆயிரக்கணக்கான வீடுகள், கல்லூரிகள், தொழிற்சாலைகளில் மழைநீர்ச் சேகரிப்பு அமைப்பைச் செயல்படுத்தி இருக்கிறார்.
மழைநீர் அறுவடை மட்டுமின்றி நாம் பயன்படுத்தும் நீரையும் இயற்கையான முறையில் சுத்திகரிக்க முடியும் என்கிறார் இந்திரகுமார். வீட்டில் சமையலறையில் இருந்து வெளியேறும் நீரை அப்படியே செடிகளுக்குப் பயன்படுத்தலாம். குளியலறை நீரில் சோப்பு கலந்திருக்கும் என்பதால் அந்த நீர் வெளியேறும் பாதையில் கல்வாழை, அலகேசியை நட்டுவைத்துவிட்டால் ரசாயனங்களை இந்தச் செடிகள் உறிஞ்சிக் கொண்டு சுத்தமான நீராக வெளியேற்றும்.
கழிப்பறை நீரைக் கூட குடிநீர் அளவிற்கு சுத்தப்படுத்த முடியும், ஆனால் அவை குடிக்க அறுவறுப்பாக இருக்கும் என்பதால் செடிகளுக்கு தாராளமாக பயன்படுத்தலாம் என்கிறார் இந்திரகுமார்.
என்னுடைய வீட்டின் செப்டிக் டேங்க்கில் கடந்த 2002-ம் ஆண்டில், ‘பேசில்லஸ் சப்டிலிஸ்’ என்ற பாக்டீரியாவை விட்டேன். அந்தப் பாக்டீரியாக்கள் பெருகி தொட்டியில் இருக்கும் திடக்கழிவுகளைச் சாப்பிட்டு நீரைச் சுத்தமாக்கி விடுகின்றன. அந்த நீரை பம்ப் செய்து வீட்டுத்தோட்டத்துக்குப் பாய்ச்சுகிறேன். அந்த நீரில் யூரியா இருப்பதால் செடிகளுக்கு உரமாகவும் மாறி விடுகிறது. பாக்டீரியா விட்டால், ரசாயனங்கள் மூலம் கழிப்பறையைச் சுத்தம் செய்யக் கூடாது.
நீர் மேலாண்மைக்கு அடுத்தபடியாக இந்திரகுமார் வீட்டில் இருக்கும் அடுத்த பயிலறை குப்பைகளை உரமாக்குவது. குப்பைகளை தூக்கி தெருக்களில் வீசினால் நாளைய தலைமுறை குப்பையின் கோபுரத்தில் தான் வளர வேண்டிய நிலை ஏற்படும். குப்பைகளில் மக்கும் தன்மையுள்ள குப்பைகள் நமக்குக் கிடைத்த பொக்கிஷம்.
தனது வீட்டில் சேரும் காய்கறிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளைத் தனியாகக் கூடாரம் அமைத்து மாட்டுச் சாணம் தெளித்து அவற்றை உரமாக மாற்றுகிறார்.
20 வருடங்களாக தான் சேர்த்து வைத்து வரும் குப்பைகளை மண்புழு உரமாக மாற்றி இயற்கை விவசாயிகளுக்கு விற்பனையும் செய்து வருகிறார். வீட்டுத் தோட்டத்தில் காய்ந்து விழும் இலைச்சறுகுகளை சுத்தமாக இல்லை என்று கூட்டிப் பெருக்கி அள்ளிப் போட்டுவிடாதீர்கள். தாவரங்கள் சூடு தாங்காமல் தன்னை சுற்றி இலைகளை உதிரச் செய்து தனக்குத் தானே குளிர்ச்சியை தேடிக்கொள்ளும் ஒரு இயற்கையான நிகழ்வு அது என்கிறார்.
காய்ந்த சறுகுகளை 2 சிமெண்ட் ரிங்குகள் அமைத்து அதில் சேகரித்து வைத்து அவ்வ போது சாணத்தை தெளித்துக் கொண்டே வந்தால் நல்ல உரம் கிடைக்கும் இவற்றை வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டத்திற்கு பயன்படுத்தலாம் என்கிறார் இந்த சென்னை நகரத்து இயற்கை விஞ்ஞானி.
காய்கறிக் கழிவுகள் மட்டுமல்ல முட்டை ஓடு, மீன் கழிவுகள், நண்டு கழிவுகள் ஆகியவற்றையும் காயவைத்து அறைத்து செடிகளுக்கு உரமாக்க முடியும். என் வீட்டில் மக்கும் குப்பைகள் அனைத்தையுமே உரமாக்கி விடுவேன் என்கிறார் இந்திரகுமார்.
தண்ணீரை சுத்தப்படுத்த ஆர்ஓ, அதிக விலை கொண்ட பில்டர்கள் எல்லாம் தேவை இல்லை ஒரே ஒரு தேற்றான்கொட்டை போதும் என்கிறார் இவர். செப்புக்குடத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து ஒரே ஒரு தேற்றான் கொட்டையை போட்டால் போதும் சுவையான சுத்தமான குடிநீரை நிம்மதியாகப் பருகலாம் என்று சொல்கிறார்.
இந்திரகுமார் தனது வீட்டின் மொட்டைமாடியில் 40 வகையான மூலிகைச் செடிகளை வைத்திருக்கிறார். இவற்றில் அரிய வகை மூலிகைகள் அதிகமாக இருக்கின்றன. இந்தியாவில் ஆண்டிற்கு சராசரியாக 100 செ.மீ மழை பெய்கிறது, நம் நாட்டை விட குறைவாக 30 சதவிகித மழையையே பெரும் இஸ்ரேல் எப்படி அமோக விளைச்சலைக் கொடுக்கிறது. அப்படியானால் இஸ்ரேல் செய்ததை நாம் செய்யத் தவறி இருக்கிறோம் என்பதை உணர வேண்டும்.
நீர் மேலாண்மைக்கு அரசை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது தனி மனிதனின் முயற்சியும் தேவை, இரு கைகள் தட்டினால் தான் ஓசை வரும் அரசுடன் இணைந்து மக்களும் மழைநீர் அறுவடைக்கு தேவையானவற்றை அவர்களின் வீடு மற்றும் தெருக்களில் செய்ய வேண்டும் என்கிறார் இந்திரகுமார்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இன்று செய்யும் ஒரு சிறிய மாற்றம் எதிர்கால சந்ததியினருக்கு இயற்கையான வாழ்க்கையைத் தரும். பருவமழை குறைவு என்று கூப்பாடு போடாமல் கிடைக்கும் நீரை முறையாக சேமித்து நாம் நல்வாழ்வு வாழ்வதோடு நமது சுற்றத்தையும் நலமாக வைத்திருக்க முடியும்.
வீட்டிலேயே திட, திரவ, வாயுவை உற்பத்தி செய்வது தொடர்பான சந்தேகங்களுக்கு இந்திரகுமாரை 99410 07057 என்ற எண்ணில் அழையுங்கள்.