நரிக்குறவர்களின் வாழ்க்கைச் சூழலை மாற்றும் ஸ்வேதா !
திருச்சியில், வறுமை கோட்டிற்குக் கீழ் இருக்கும் மாணவர்கள் பயிலும் பள்ளியை நிர்வகித்து வரும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண் ஸ்வேதா!
நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவரிடமும் சொல்வதற்கு அசாத்தியமான கதைகள் இருக்கின்றன. அந்த கதைகளை நாம் கேட்க ஒரு அற்புதமான சூழலை திடீரென பிரபஞ்சம் உருவாக்கிக் கொடுக்கும். அப்படி, பலமாக காற்றடித்துக் கொண்டிருந்த ஒரு கோடை இரவில் நானும் ஸ்வேதாவும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தோம்.
நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண்ணான ஸ்வேதா அச்சமூகம் சந்திக்கும் சமகால பிரச்சினைகள் பற்றியும் பெரும்பாலும் நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் படிக்கும் பள்ளியை நடத்துவது பற்றியும் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசியதை அப்படியே எழுதி விட முடியாது என்றாலும் அதன் சாரத்தை சிதைக்காமல் எழுத முயற்சிக்கிறேன்.
உங்க சொந்த ஊர் எது? உங்க அப்பா அம்மா பத்தி சொல்லுங்க..?
“திருச்சியில இருக்க தேவராயன் ஏரி கிராமம் தான் என்னுடைய சொந்த ஊர். அப்பா மகேந்திரன் பனிரெண்டாவது வரை படிச்சிருக்காரு. குழந்தை திருமணங்கள் பற்றிய விழிப்புணர்வோ, அதுக்கு எதிராக இயங்கணும்ணு எண்ணமோ இல்லாத அந்தக் காலத்தில் என் அம்மா சீதாவுக்கு பதினஞ்சு வயசு இருக்கும் போது கல்யாணம் பண்ணி வைச்சிருக்காங்க, கல்யாணத்துக்கு அப்புறம் அம்மாவ படிக்க வெச்சிருக்காங்க. அப்படி அம்மா பத்தாவது படிச்சிட்டு இருந்தப்போ கர்ப்பம் ஆயிட்டாங்க. நான் பிறந்தேன். அதன் பிறகு அம்மாவால பத்தாம் வகுப்பு கூட முடிக்கமுடியல்ல.
1980-ல் திருவள்ளுவர் குருகுல ஆரம்ப பள்ளி-னு எலிமெண்டரி பிரைவேட் ஸ்கூல் ஒண்ணு நடத்திட்டு இருந்த ஹெ.எம் அப்பாவ கூப்பிட்டு, ஒரு ஹாஸ்டல் தொடங்குங்க, நெறைய எம்.பி.சி கிராண்ட்ஸ் எல்லாம் இருக்கு. அதை வெச்சு பிள்ளைங்களுக்கு சாப்பாடு போடலாம்னு சொன்னாரு.
அப்பா ஐ.ஏ.எஸ். ஆஃபிசர் ஆர்.எஸ்.மலையப்பன் பேருல ஹாஸ்டலும், நரிக்குறவர் எஜுகேஷன் வெல்ஃபேர் சொசைட்டின்னு ஒரு அரசு சாரா அமைப்பும் ஆரம்பிச்சாரு. ஹாஸ்டல் தொடங்குனதால நிறைய மாவட்டங்கள்ல இருந்து குழந்தைகள் வந்து தங்கி படிச்சாங்க. மாணவர்களோட எண்ணிக்கையும் அதிகமாச்சு, ஹாஸ்டல் குறிப்பா ஆறாவதுல இருந்து எட்டாவது வரை படிக்குற மாணவர்களுக்காகத் தான்... பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, அந்த ஸ்கூலை நடத்திட்டு இருந்தவங்களால அதை மெயிண்டெயின் பண்ண முடியாம போனதால, ஸ்கூலை நடத்துற பொறுப்பும் எங்களுக்கு வந்துச்சு.
என்ன படிச்சீங்க? உங்களோட விருப்பம் என்ன?
வழக்கமா எங்க ஊர்ல ஒரு பொண்ணு நல்லா வளர்ந்துட்டாலோ, பருவ வயசுக்கு வந்துட்டாலோ அவங்களுக்கு உடனடியாக கல்யாணம் பண்ணி வைக்க சொல்லிடுவாங்க. அப்படி எல்லாம் என்னைப் பார்த்து யாரும் சொல்லிடக் கூடாதுன்னு அப்பாவும் அம்மாவும் இங்க இருந்து முப்பது கிலோமீட்டர் தள்ளி இருக்கற ஸ்கூல்ல என்னை சேர்த்தாங்க. அங்க தங்கியிருந்து நான் பிளஸ் டூ வரை படிச்சேன். ஆனா, மறுபடியும் கல்யாணம் பத்தி எல்லாரும் பேசத் தொடங்குனதும், ‘இல்ல எம் பொண்ணு படிக்கணும்’னு என்னை எஞ்சினியரிங் படிக்க வெச்சாங்க.
படிச்சு முடிச்சப்போ அப்பாதான் பெரிய இன்ஸ்பிரேஷனா இருந்தாரு. அவரை பார்த்துதான் இதே துறைல இறங்கினேன். அப்பா செய்யுற வேலைகளை எல்லாம் ஷேர் பண்ணிக்கிட்டேன், அவங்களுக்கு உதவியா இருந்தேன், தொழில்நுட்ப வேலை எல்லாத்தையும் நான் பார்த்துக்கிட்டேன்.
நரிக்குறவர் சமூகத்தில படிச்சவங்களோட விகிதம் அதிகம் ஆகியிருக்கிறது உண்மை. நரிக்குறவர் சமூகம் இப்போ மிகவும் பின் தங்கிய சாதி பட்டியல்ல இருக்கு, அதை பழங்குடியினரா மாத்தணும்னு 2015-ல டில்லிக்கு போய் போராட்டம் பண்ணோம். ஒரு மசோதா இப்போ நிலுவையில இருக்கு, அது நகர்ந்தா எதாவது நல்லது நடக்கலாம்.
இப்படி போயிட்டு இருந்தப்போ 2017-ல அப்பா சிறுநீரக பிரச்சினையால இறந்துட்டாரு. அப்பா இறந்தது நாங்க நடத்தின அந்த ஸ்கூல்ல வைச்சிதான், அதெல்லாம் ரொம்ப உணர்வு பூர்வமான கதை.
இந்த ஸ்கூல்ல தங்கி படிக்குற குழந்தைகளோட பொருளாதார பின்புலம் எப்படி இருக்கும்?
அப்பா நல்லாயிருந்த வரைக்கும் ஹாஸ்டல்-ல இருநூறு குழந்தைங்க தங்கி படிச்சாங்க. இப்போ, நிதி உதவி இல்லாததால ஹாஸ்டல் நடக்கல. ஸ்கூல்ல படிக்குற குழந்தைங்க எல்லாருமே வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கவங்க தான். எல்லாருமே ஒடுக்கப்பட்டோராக தான் இருப்பாங்க. பெரும்பாலும் தலித்கள், நரிக்குறவர்கள் தான் படிக்குறாங்க.
ஸ்கூலை நடத்துறதுல என்ன மாதிரியான சிக்கல்களை எல்லாம் சந்திச்சீங்க?
அப்பா இறந்த பிறகு ஸ்கூலை நிர்வாகிக்கிற பொறுப்பு எனக்கு வந்துச்சு. சட்டப்பூர்வமாகவே நிறைய சிக்கல்களை சந்திக்க வேண்டியிருந்தது. நிறைய அதிகாரிகளே எங்களுக்கு எதிரா இருப்பாங்க. நரிக்குறவர் சமூகத்தில் இருக்குற குழந்தைகள படிக்க வைக்கும் போது நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மொதல்ல, இவங்கள எல்லாம் மிரட்டி தான் படிக்க வைக்கணும்.
நரிக்குறவர்கள் ஊர் விட்டு ஊர் போயிட்டே இருக்கும் ஜிப்ஸிக்கள். அவங்க ஒரு இடத்தில தொடர்ந்து தங்கியிருக்கணும்னா அவங்களுக்கு ஒரு வீடு கொடுக்கணும், வருமானத்திற்கு ஒரு வழி உண்டாக்கி கொடுக்கனும்.
என்.ஜி.ஓ ஒண்ணு தொடங்குனதா சொல்லியிருந்தேன் இல்லையா? அந்த அமைப்பு வழியா இவங்களுக்கான தொழில், உரிமைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக சில வேலைகள் செய்திட்டு இருந்தாரு அப்பா.
கைவினை பொருட்கள் எல்லாம் செய்றவங்களை அரசு கலை கண்காட்சிகளில் பங்கெடுக்க வச்சாரு. இதை ரொம்ப உபயோகமான விஷயமா அப்பா செஞ்சிட்டு இருந்தாரு. ஆனாலும், மார்ச் ஏப்ரல் மாசங்கள்ல நிறைய கோவில்களில் திருவிழாக்கள் நடக்குறதால, மார்ச் மாசம் குழந்தைய கூட்டிட்டி கெளம்பிடுவாங்க. அப்புறம், திருவிழா எல்லாம் முடிஞ்சு நாலு மாசம் கழிச்சு தான் வருவாங்க. அப்போ அந்த கொழந்த மறுபடியும் அதே கிளாஸ்ல படிக்கும். என்ன தான் பேசினாலும் இந்த இடம் பெயர்தலை மட்டும் கட்டுப்படுத்தவே முடியாது.
இன்னும் நாடோடித் தன்மையை நரிக்குறவர்கள் இழக்காமல் இருப்பதும், நிரந்தரமான தொழில் வருவாய் இல்லாம இருக்குறதும் நடைமுறைல சில பிரச்சனைகளை உருவாக்குது. எப்பவுமே, நாங்க சந்திக்குற பெரிய சவால், பாகுபாடு தான். இப்போ ஸ்கூலுக்கு போற குழந்தைங்க கூட சாதிப் பெயரால தீண்டாமைக்கு ஆளாகுறாங்க. இன்னும் இருநூறு முன்னூறு வருஷம் ஆனாலும், இந்த நிலைமை மாறுமாங்கிறது சந்தேகம் தான்.
உங்களுக்கு இப்போ எவ்வளவு நிதியுதவி தேவைப்படும்?
மத்திய அரசோட அனைவருக்கும் கல்வி திட்டத்தால ஹாஸ்டல்ல தங்கியிருக்க ஒவ்வொரு குழந்தைக்கும் அறுநூத்தி அம்பது ரூபாய் அரசு கொடுக்கும். ஆனா, அந்த குழந்தையோட பராமரிப்புக்கு இதை விட இரட்டிப்பு தொகை செலவாகும். அதை சமாளிக்கத் தான் நிறைய கண்காட்சி எல்லாம் நடத்துவோம். இப்போ அம்மாவுக்கும் வயசாச்சு, அவங்களால இயங்க முடியலேன்னா கஷ்டம் தான்.
அரசிடம் இருந்து மாசத்திற்கு அறுபதாயிரம் வருது, கூடவே இன்னொரு அறுபதாயிரம் கிடைச்ச ரொம்ப சிறப்பா ஹாஸ்டலை நடத்தலாம். நல்ல தரமான, ஆரோக்கியமான உணவு கொடுக்கலாம். எந்த குறையும் இல்லாம பார்த்துகலாம். இப்போ சம்மர் கேம்ப் வச்சு, குழந்தைகளுக்கு கல்வி எவ்வளவு முக்கியம்னு சொல்லித் தர ஒரு யோசனை இருக்கு.
இப்போ கூட கல்வி இரண்டாம் பட்சம் தான். மொதல்ல குழந்தைகளுக்கு பாதுகாப்பும், உணவும் கிடைக்குது. ஒரு மோசமான வாழ்க்கை முறையில இருந்து தப்பிக்குறாங்க. சமீபத்துல ஒரு வெப்சைட்டில இருந்து கூப்பிட்டப்போ, எங்க சமூகத்தை சேர்ந்த பெண்கள் நிறைய பாலியல் சீண்டல்களை, தொந்தரவுகளை அனுபவிக்குறதை பத்தி பேசியிருந்தேன். ஆனா, அதுக்கு ஒருத்தங்க மறுப்பு தெரிவிச்சு பேசியிருந்தாங்க. இதை எப்படி புரிஞ்சுக்குறது..?
நரிக்குறவர்கள் பொது இடங்கள்ல தங்குவாங்க, தூங்குவாங்க. அவங்க பக்கத்துலயே நிறைய ஆபத்தான ஆட்களால் தொந்தரவு இருந்துக்கிட்டே இருக்கும். இப்படி மற்ற சமூகங்கள விட எங்களுக்கு தான் நிறைய அச்சுறுத்தல்கள் இருக்கு. கூடவே, தென்னிந்திய பெண்களை விட மாறுபட்டு இருக்கு எங்களுடைய உடலமைப்பு இது எங்கள் மீது பொதுச் சமூகம் குறி வைக்க பிரதான காரணமாக இருக்கு.
நிறைய சந்தர்ப்பங்களில் நான் சீண்டலுக்கு ஆளான அனுபவம் இருக்கு. எங்களுடையது ரொம்ப கட்டுக்கோப்பான சமூகம். இதை பத்தி வீட்டுல சொன்னா, அடுத்து மற்ற பெண் பிள்ளைகளை படிக்க விட மாட்டாங்க. இப்படியான சூழல் தான் இந்த ஸ்கூல் நடத்துறத சவாலான விஷயமா மாத்துது.
நரிக்குறவர் சமூகத்தின் முதல் பெண் பொறியாளர் என்ற பெருமையைக் கொண்டிருக்கும் ஸ்வேதா, பட்டம் முடித்ததும் கேம்பஸ் இன்டர்வியூவில் சண்டிகர் மாநிலத்தில் வேலை கிடைத்தும், அந்த வேலைக்குச் செல்லாமல் தன் சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக பள்ளியை நடத்தி, இன்னல்களுக்கு இடையே வழிகாட்டி வருவது போற்றத்தக்க ஒன்று.