பாலியல் தொழிலில் இருந்து மீட்கப்பட்டும் மீளாத துயரம்: 22 வயது விதவைப் பெண்ணின் கதை!
இந்த வார சர்வைவல் தொடர்!
இந்த வாரத்தின் சர்வைவல் தொடரில், சாய்னா என்பவர், தான் எவ்வாறு பாலியல் வேலையில் ஏமாற்றப்பட்டடேன் என்பதையும், இப்போது கொரோனா தொற்றுநோயால் தனது வாழ்க்கையை நடத்த எவ்வளவு சிரமப்படுகிறார் என்பதையும் கண்ணீர் மல்க கூறுகிறார்!
"எனது பெயர் சாய்னா. நான் மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஜெயநகரிலிருந்து வருகிறேன். எனக்கு 27 வயது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு 22 வயதாக இருந்தபோதே விதவையாக ஆனேன். இதனால் நான் என் பெற்றோரின் வீட்டிற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என் தந்தை தினசரி தொழிலாளி, என் குழந்தைகளையும் என்னையும் கவனித்துக் கொள்ள சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். நான் ஏதோ ஒரு வகையில் உதவ விரும்பினேன்.
2018ம் ஆண்டில் ஒருநாள் எனது உறவினருடன் நான் மருத்துவமனை சென்றபோது ஒருநபர் எங்களுடன் வந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, எனக்கு வேலை ஏற்படுத்தி கொடுக்க ஒருவரை தெரியும் என்று அவர் கூறினார். அவர் கூறிய வார்த்தை எனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்தது. இது என் தந்தையிடமிருந்து சில சுமைகளை எடுத்துகொள்வதோடு, என் குழந்தைகளை வளர்க்க உதவும் ஒரு வாய்ப்பு என்று நான் நினைத்தேன்.
அவர் முதலில் என்னை அருகிலுள்ள நகரமான கேனிங்கிற்கும் பின்னர் புனேவிற்கும் அழைத்துச் சென்றார். நாங்கள் அங்கு சென்றதும், அவர் என்னை ஒரு விபச்சார விடுதியில் விற்றார். பின்னர் பந்தன் முக்த் நகரத்திலிருந்து சமூக சேவையாளர்களால் நான் மீட்கப்படும் வரை, பல மாதங்களாக அந்த விபச்சார விடுதியில் இருந்தேன்.
கோரன்போஸ் கிராம் பிகாஸ் கேந்திரா என்ற வழிகாட்டல் அமைப்பின் மூலமாக புனே காவல்துறையை அணுகி 2018ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் விபச்சார விடுதி மீது சோதனை நடத்தி என்னையும் கடத்தப்பட்ட மற்ற ஐந்து சிறுமிகளையும் மீட்டனர்.
நான் மீட்கப்பட்டேன் என்று நிம்மதியாக இருக்கும்போது, வீட்டிற்கு திரும்பி வந்தபின் வாழ்க்கை எனக்கு எளிதானதாக இருக்கவில்லை. நாங்கள் ஒரு பெரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டோம். என் தந்தை கடுமையான கல்லீரல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டார். அவரின் மருந்து செலவு மற்றும் உணவுக்கு பணம் ஏற்பாடு செய்ய நான் மிகவும் சிரமப்படுகிறேன். கொரோனாவுக்கு முன்புவரை, முடிந்தவரை இந்த செலவுகளை நிர்வகித்து வந்தேன்.
ஆனால் கொரோனாவுக்கு பிறகு விஷயங்கள் மிகவும் மோசமாகிவிட்டன, நான் மிகுந்த மனமுடைந்து, உள்ளூர் பணக்காரரிடமிருந்து ரூ.60,000 ஆறு மாத வட்டி விகிதத்தில் கடன் வாங்கினேன். எந்தவொரு வேலையும் அல்லது மாற்று வருமான ஆதாரமும் இல்லாமல், கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்பது தெரியாமல் அல்லாடி வருகிறேன்," என்று கண்ணீர் வடிக்கிறார்.
தொகுப்பு: மலையரசு