விவசாயத்துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஒரு பார்வை!
இந்த கட்டுரையில் விவசாயத்துறையில் உள்ள ஸ்டார்ட் அப் வாய்ப்புகளையும் அத்துறை சார்ந்த சில நிறுவனங்களையும் பார்க்கலாம்!
வித்தியாசமான புதுயுக தொழில் ஐடியாக்கள் ஐ.டி யில் மட்டும் தான் வரவேண்டும் என்ற கட்டாயம் ஒன்றுமில்லை.
எல்லாத்துறைகளிலும் வரலாம். இந்த கட்டுரையில் விவசாயத்துறையில் உள்ள வாய்ப்புகளையும் அத்துறை சார்ந்த சில நிறுவனங்களையும் பார்க்கலாம். இதன் நோக்கம் வித்தியாசமான ஐடியாக்களின் அடிப்படையில் தொழில் முனைவுகளை செய்ய விரும்புவோர் ஐ.டி துறையையும் தாண்டி விவசாயம் போன்ற வாழ்வாதாரத்துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே.
விவசாயம்
விவசாயம் உலகின் முதன்மையான பழைய தொழில். புதுயுக தொழில் முனைவுகளின் அடிப்படை அறிவுசார் ஐடியாக்களும் தொழில்நுட்பங்களும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக வடிவம் பெறுவது தான் என்பதை முந்தைய கட்டுரைகளில் பார்த்தோம். பழைய தொழிலான விவசாயத்துறையில் புதுமையான சிந்தனைகள் எப்படி தாக்கம் செய்கின்றன என்று பார்ப்போம். இன்று விவசாயத்துறையில் ஆள் பற்றாக்குறை, காலநிலை மாற்றங்கள், தண்ணீர் பற்றாக்குறை, இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் உருவான தீமைகள், கட்டுப்படியாகாத செலவினங்கள் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
வாய்ப்புகள்
மேலே சொன்ன பிரச்சனைகளுக்கான தீர்வுகளை அறிவுசார் ஆக்கங்கள் (intellectual concepts) மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புதுயுக தொழில்முனைவுகளை உருவாக்க விவசாயத்துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளது.
அண்மைக்காலங்களில் தான் விவசாயத்துறையில் புதுயுக தொழில் முயற்சிகள் ஆரம்பித்துள்ளன. ஆள் பற்றாக்குறை மற்றும் செயல்திறன் மேம்பாடு சம்பந்தமான குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு புதிய விவசாயக்கருவிகள் உருவாக்குதல், நீர் மற்றும் நில வளங்களில் உள்ள சவால்களை சமாளிக்கும் ஹைட்ரொபோனிக்ஸ், அக்குவாபோனிக்ஸ் தொழில் நுட்பங்கள், பழைய விவசாய கலாச்சாரத்தை புதுப்பிக்கும் தற்சார்பு மற்றும் இயற்க்கை வேளாண் அணுகு முறைகள், தகவல் உதவி மற்றும் இடைத்தரகர்களை குறைக்கும் மென்பொருள் தொழில்நுட்பங்கள் என்று பல பிரிவுகளிலும் புதிய முயற்சிகள் மலர ஆரம்பித்துள்ளன. மேலும் புரிந்து கொள்ளும் பொருட்டு விவசாயம் சார்ந்த இரண்டு புதுயுக நிறுவனங்களை அறிமுகம் செய்கிறேன்.
ஹாப்பி ஹென்ஸ் (Happy Hens)
மதுரையை பதிவிடமாகக் கொண்ட இந்த பிரீ ரேஞ் (Free Range) கோழி வளர்ப்பு நிறுவனத்தின் பண்ணை, திருச்சி அருகே இருக்கிறது. இந்த நிறுவனத்தின் சுவாரஸ்யமான புதுயுக ஐடியாவை பார்க்கலாம்.
இன்றைய தலைமுறையினரை, கோழிப்பண்ணை பற்றிக் கேட்டால் நாமக்கல் பக்கம் இருக்கும் பிராய்லர் கோழிப் பண்ணைகள் தான் அவர்கள் நினைவுக்கு வரும். ஆனால் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களிடம் கேட்டால் அவர்களின் இளம்பிராயத்தில் விசாலமான வீட்டுக்கொல்லைப்புறத்தில் தானாக உணவு தேடி அந்த வட்டாரத்துக்குள் (Range) சுதந்திரமாக (Free) அழைத்து திரிந்த நாட்டுக்கோழிகளும், அவை மாலையில் வந்து அடைந்த பஞ்சாரங்களும் கூட நினைவுக்கு வரும். இந்த வீட்டுக்கோழிகளுக்கு எல்லாமே இயற்கை தான். அதற்கான இயல்பில் அதன் போக்கில் வளர்ந்து முட்டைபோடும். அடைகாத்து குஞ்சுகளை பொரிக்கும். காலமாற்றத்தில் வேகமாக பணம் பண்ணும் எண்ணத்தோடு பிராய்லர் கோழிகள் அறிமுகம் செய்யப்பட்டன. கோழிகளின் இயல்புகள் மாற்றப்பட்டன. அவற்றின் வாழிடம் சுருக்கப்பட்டது. வளர்ச்சி, ஹார்மோன்களால் பெருக்கப்பட்டது. மொத்தத்தில் கோழி என்றபெயரில் எதோ ஒன்றை மனிதன் அதிக பணத்துக்காக அறிவியலை பயன்படுத்தி உருவாக்கினான். அவற்றின் முட்டையும் இறைச்சியும் இரசாயனங்களின் கலவையாக மாறியது. குறுகிய காலத்திலேயே கோழிகளும் முட்டைகளும் இந்த பிராய்லர் என்ற அடையாளத்தை பெறத்தொடங்கின. மனிதனின் ஆரோக்கியம் கேள்விக்குறியானது. இழந்த ஒன்றை மீட்டெடுப்பதும் அதை புதுவிதமாக சந்தைப்படுத்துவதும் கூட புதுமையாக்கம் (innovation) தான். 'ஹாப்பி ஹென்ஸ்' இதைத்தான் செய்கிறது. திறந்த வெளிகளில் நாட்டுக்கோழிகளை இயல்பாக மேய விடுகிறார்கள். அவற்றுக்கு இயற்கை உணவும் மருத்துவமும் தருகிறார்கள். இப்படி வளர்க்கப்படும் கோழிகளின் முட்டைகள் பிரீ ரேஞ் முட்டைகள் (Free Range Eggs) என்று உலகெங்கும் அழைக்கப்படுகிறது. இந்த முட்டைகள் சாதாரண ப்ராய்லர் முட்டைகளை விட நான்கு மடங்கு மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தைப்பற்றி தெரிந்து கொள்ள www.thehappyhensfarm.com என்ற இணைய தளத்தை மேயுங்கள்.
லூமியர் ஆர்கானிக்
பெங்களூருவைச் சேர்ந்த இந்த நிறுவனம், "Seed to Table Organic" என்ற தாரக மந்திரத்துடன் இயங்கி வருகிறது. 1930 களுக்கு பின்பு பசுமைப்புரட்சி என்ற பெயரில் பயிர்கள் வேகமாக வளரவும், பூச்சிகள் தாக்கத்திருக்கவும் பல்வேறு இரசாயன நச்சுக்கள் விவசாயத்தில் திணிக்கப்பட்டன. பல ஆண்டுகால நச்சுப் பயன் பாடினால் இன்று நமது உணவும் மண்ணும் நச்சுத்தன்மை பெற்று மனித குலத்தை அச்சுறுத்துகிறது. இந்த கொடுமையான சூழலில் இருந்து மீள இப்போது இயற்கை வேளாண்மை பரவலாக பிரபலமாகி வருகிறது. நச்சுக்களற்ற உணவுப் பயிர்களை சொந்த தோட்டத்தில் பயிர் செய்து அவற்றை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வது மற்றும் சொந்த உணவகம் மூலமாக இயற்கையாக விளைந்த பொருட்களால் உணவுளித்தல் ஆகிய சேவைகளை இந்த நிறுவனம் வழங்குகிறது. ஆன்லைன் மூலமாகவும் இவர்களிடம் ஆர்கானிக் பொருட்களை வாங்கலாம். இந்த நிறுவனத்தைப்பற்றி தெரிந்து கொள்ள lumiere.co.in என்ற இணைய தளத்தை பாருங்கள்.
இந்த உதாரணங்கள் விவசாயத்துறையில் எப்படி வித்தியாசமான புதுயுக தொழில்கள் நடக்கின்றன என்ற புரிதலை தருவதற்காக தந்துள்ளேன். மேலும் சில வேறுபட்ட விவசாய நிறுவனங்களின் இணைய முகவரியையும் உங்கள் பார்வைக்கு தருகிறேன்:
saal.co.in | தற்சார்பு விவசாயம் சம்பந்தமான முழுமையான சேவைகள்.
freshworldinc.com | காய்கறிகள் பழங்களை வீடுகளுக்கு நேரடி விற்பனை செய்தல்.
24mantra.com | பல்வேறு ஆர்கானிக் பொருட்கள் தயாரிப்பு.
organicshop.in | பல்வேறு ஆர்கானிக் பொருட்களுக்கான இணைய வணிகத் தளம்.
helpusgreen.com | கங்கை போன்ற ஆறுகளில் கழிவுகளாக சேரும் பூக்களிலிருந்து இயற்கை உரங்கள் தயாரித்தல்.
mitraweb.in | நவீன விவசாய கருவிகள்.
ecozensolutions.com | விவசாய தேவைகளுக்கான சூரிய சக்தி தீர்வுகள்.
கட்டுரையாளர்: சிவராஜா இராமநாதன், தலைமை நிர்வாகி, நேட்டிவ்லீட் பவுண்டேஷன் மற்றும் நேட்டிவ் ஏஞ்செல்ஸ் நெட்வொர்க்
கடந்த வார கட்டுரைகள்:
'புதுயுக தொழில் முனைவு'- சரித்திரமும், பரிமாணங்களும்!
'ஸ்டார்ட் அப்' - அரசின் வரையறைகளும், ஐ.டி துறை சார்ந்த வாய்ப்புகளும்!