நெல்லை கிராமத்தில் இருந்து அமெரிக்கா செல்லும் மண் பானைகள்...!
தங்கள் கிராமத்தை விட்டு வெளியே கூட செல்லாத இந்த பெண்கள் சுய உதவிக் குழுவின் வெற்றிப் பயணத்தின் கதை!
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது கூனியூர் என்கிற சிறு கிராமம். மண் சாலைகளுடனும் செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட சிறு வீடுகளுடனும் இந்தப் பகுதி காட்சியளிக்கிறது. பெரும்பாலான கிராமங்கள் போன்றே இங்குள்ள பெண்களும் தங்கள் ஊரை விட்டு வெளியில் சென்றதில்லை.
இவர்கள் அதிகம் பயணம் மேற்கொள்ளாதபோதும் இவர்களது திறன்கள் உலகளவில் சென்றடைந்துள்ளது. இவர்களது பாரம்பரியக் கைவினைப் பானைகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த முயற்சி எப்படி தொடங்கப்பட்டது?
52 வயதான சாந்தி, மண் பாண்டங்கள் செய்பவர். பாரம்பரியமான மண் பானைகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கவேண்டும் என்று விரும்பிய இவர், சுய உதவிக்குழு ஒன்றைத் தொடங்கினார். அதுவே ஆரம்பப்புள்ளியாக அமைந்தது.
“மண் பானைகள் செய்வது என்னுடைய குடும்பத் தொழில். என் முன்னோர்களின் பாரம்பரிய பணியில் தொடர்ந்து ஈடுபட்டு தொழில் செய்ய விரும்பினேன். எனினும் மாறி வரும் காலகட்டத்தில் இயற்கை பேரிடர்கள், களிமண் பற்றாக்குறை போன்ற சவால்கள் இருப்பதால் மண் பானை செய்யும் தொழில் மூலம் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்வதும் கடினமாக இருந்தது,” என்று நினைவுகூர்ந்தார்.
இவரது கணவரும் மண் பானைகள் செய்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒரு ஆண்டிற்கு வெறும் 50,000 ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டி வந்தனர் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது கணவரின் பெற்றோர்களும் உடன் வசித்து வந்தனர்.
இந்தத் தொகையைக் கொண்டு குடும்பத்தை நிர்வகிப்பது கடினமாக இருந்தது. பானைகளுக்கானத் தேவை அதிகம் இல்லாததால் சாந்தி வேறு வழியின்றி தொழிலை விரிவடையச் செய்வதற்கான மற்ற வாய்ப்புகளை ஆராயத் தொடங்கினார். பாரம்பரிய கலை வடிவத்தை தக்கவைத்தவாறே புதிய சந்தைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நவீன வடிவமைப்புகளை உருவாக்கவேண்டும் என்பதை உணர்ந்தார்.
2016ம் ஆண்டில் இவர் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி மற்றும் சுந்தரம் க்ளேடன் நிறுவனங்களின் சமூக நிறுவனமான ஸ்ரீனிவாசன் சர்வீஸ் டிரஸ்ட்டை தொடர்பு கொண்டார். இந்த அமைப்பு டி.வி சுந்தரம் ஐயங்கார் தனது சொந்த கிராமத்தின் மேம்பாட்டிற்காக அமைத்ததாகும். இது மூலப்பொருட்கள் மற்றும் பணியாளர்களுக்காக கடன் உதவி பெற அமைக்கப்பட்டது.
இவர்கள் உள்ளூர் பெண்களுக்கு பானை தயாரிப்பில் பயிற்சியளிக்க ‘நர்மதா’ என்கிற சுய உதவிக் குழுவை நிறுவினர். குடிசைத் தொழிலின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய அரசு நலத்திட்டங்கள் குறித்தும் இந்த அறக்கட்டளை எடுத்துரைத்தது.
இரண்டாண்டுகளில் சாந்தியின் தொழில் வளர்ச்சியடைந்தது. கைகளால் தயாரிக்கப்பட்ட பானைகளை தனது உறவினரின் உதவியுடன் அமெரிக்காவிற்கும் ஏற்றுமதி செய்தார். தனது கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் அதிகமான பெண்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கியுள்ளார். ஆண்டிற்கு 2.5 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்.
பானை தயாரிக்கும் குழு
சாந்தி தனியாகப் பணியாற்றிய சமயத்தில் பானைகளுக்கு அவ்வப்போது கிடைக்கும் ஆர்டர் அளவிற்கேற்ப தானே தயாரித்து உள்ளூர் கிராமச் சந்தையில் விற்பனை செய்தார். 2016-ம் ஆண்டு கூனியூர் கிராமத்தைச் சேர்ந்த 12 உறுப்பினர்களுடன் நர்மதா சுய உதவிக் குழு அமைத்தார். பாரம்பரியமான பானை தயாரிக்கும் கலையை மீட்டெடுப்பதும் அதிக வருவாய் ஈட்ட அவற்றை சிறப்பாக சந்தைப்படுத்துவதுமே இந்தக் குழு உருவாக்கியதன் நோக்கம் ஆகும்.
இந்த சுய உதவிக்குழு, பெண்களுக்கு ஆர்வம் இருக்கும் பகுதியில் அவர்களுக்கு சக்தியளிக்க விரும்புகிறது. பானைகள் இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு இயற்கையான முறையில் சாயமிடப்படுகிறது. பாரம்பரியத்தைத் தக்கவைக்கும் அதேசமயம் தயாரிப்புகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதையும் இந்தக் குழு உறுதிசெய்கிறது. சாந்தி விவரிக்கும்போது,
“எங்களது வணிகத்தின் வெற்றிக்கு எளிமையே முக்கியக் காரணம். எளிமையான வடிவமைப்புகளில் கவனம் செலுத்தி சுத்தமான பொருட்கள் கொண்டு தயாரித்தோம். நாங்கள் அலங்காரமான அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தயாரிப்புகளின் பயன்பாட்டு அம்சங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்.
மூலப்பொருட்களான களிமண்ணை உள்ளூர் ஏரிகளில் இருந்து இலவசமாக எடுத்துக் கொள்ள அதிகாரிகளை சந்தித்து சாந்தி அனுமதி பெற்றுக்கொண்டார். ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் ட்ரஸ்ட் சாந்திக்கு வணிகத் திட்டம் உருவாக்க உதவியது. இது உள்ளூர் சந்தையில் இவரது வணிகம் வளர்ச்சியடைய உதவியதுடன் கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட அருகாமை மாநிலங்களிலும் விரிவடைய உதவியது.
“நான் தனியாக பணிபுரிந்து சம்பாதித்தைக் காட்டிலும் அதிகமான தொகையை நாங்கள் ஒன்றிணைந்து சம்பாதிக்கிறோம். விற்பனையாளர்களுடன் மார்க்கெட்டிங் தொடர்பான இணைப்பு ஏற்படுத்தியிருப்பதால் விற்பனை அதிகரித்துள்ளது,” என்றார் சாந்தி.
பெண்கள் இந்தக் கலையைக் கற்றுக்கொள்ள இரண்டு நாட்கள் பயிற்சியெடுத்துக்கொண்டு அதன்பிறகு சாந்தியுடன் இணைந்து பானைகள் தயாரிக்கின்றனர். ஒரு வாரம் வரையிலும் பானை தயாரிப்பில் சாந்தி அவர்களுக்கு உதவுகிறார். விரைவில் இந்தக் குழுவினர் தாமாகவே கற்றுக்கொண்டு வேலையில் ஈடுபடுகின்றனர்.
ஒவ்வொரு பானையும் 30-40 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பானையின் அளவு, அமைப்பு, வடிவமைப்பு ஆகிய அம்சங்களைப் பொறுத்து 500 ரூபாய் வரையிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் நிதி சார்ந்த நடவடிக்கைகளில் தாங்களாகவே ஈடுபடத் தொடங்கி வங்கி பரிவர்த்தனைகளைக் கையாளத் தொடங்கினார்கள். ஏடிஎம் சென்று தாங்களே பணத்தை எடுக்கத் தொடங்கியுள்ளனர். இன்று நர்மதா சுய உதவிக் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு 12,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.
அமெரிக்கச் சந்தை
சாந்தியின் உறவினர் முத்துக்குமார் அமெரிக்காவில் உணவகம் ஒன்றில் பணியாற்றுகிறார். விடுமுறையின்போது தனது கிராமத்திற்கு வந்து செல்வார். இவர் பானை தயாரிக்கும் முறையை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்தப் பதிவுகள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் அதிகளவில் பகிரப்பட்டது.
விரைவிலேயே அமெரிக்காவில் இவருடன் பணிபுரிந்தவர்கள் கிராம அமைப்பையும் பானை தயாரிப்பு கலை வடிவத்தையும் கண்டு வியந்து இவரிடம் கேட்டறியத் தொடங்கினர். சக்கரம், மரத்தினால் ஆன மாடலிங் டூல்ஸ், கத்தி போன்றவற்றைப் பயன்படுத்தி இந்தப் பெண்கள் எவ்வாறு பானை தயாரிக்கின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினர்.
“நண்பர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களின் ஆர்வத்தைத் தெரிந்து கொள்ள சிலவற்றைப் பகிர்ந்துகொண்டேன். அவர்கள் தயாரிப்பை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். அவர்கள் மூலம் சில ஆர்டர்கள் கிடைக்கவும் உதவினர். பரிந்துரைகள் மூலமாகவே அதிக ஆர்டர்கள் கிடைப்பதால் மார்க்கெட்டிங் உத்திகள் ஏதும் உருவாக்கவில்லை,” என்று பகிர்ந்து கொண்டார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதால் இந்தத் தயாரிப்புகள் அமெரிக்காவில் பிரபலானது. களிமண் பானைகளுக்கான தேவை மெல்ல அதிகரித்தது. ஆரம்பத்தில் முத்துக்குமார் சில நண்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார். ஆனால் 2017-ம் ஆண்டில் முறையாக ஆர்டர்கள் பெற்றுக்கொண்டார்.
பானைகளை வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்ல தூத்துக்குடியில் உள்ள அவரது உறவினர்கள் உதவினர். இன்று முத்துக்குமார் தனது வழக்கமான பணியைக் கவனித்தவாறே இந்த வணிகத்தின் மார்க்கெட்டிங் தலைவராக பணியாற்றுகிறார். இதுவரை இவர்கள் 15,000 பானைகளை மூன்று முறையாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளனர்.
வருங்காலத் திட்டம்
வெளிநாடுகளில் பிரபலாகி வந்தாலும் சாந்தியும் முத்துக்குமாரும் உள்ளூர் சந்தையில் வளர்ச்சியடைவதிலேயே அதிகக் கவனம் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய சந்தைகளில் கவனம் செலுத்துகின்றனர்.
“இந்தச் சந்தைகளில் அதிகளவில் தேவை உள்ளது. எனவே இந்தப் பகுதிகளில் வளர்ச்சியடைய விரும்புகிறேன். இரண்டாம் சுற்று விரிவாக்கத்தின்போது அந்நிய சந்தைகளில் கவனம் செலுத்துவோம்,” என்றார் முத்துக்குமார்.
சாந்தியால் தனது குடும்பத்தை நிர்வகிக்கமுடிகிறது. அவரது மகன்களை நகரில் உள்ள கல்லூரிகளில் படிக்கவைக்க முடிகிறது. இவற்றையே மிகப்பெரிய வெற்றியாக அவர் கருதுகிறார்.
“பெண்கள் தங்கள் குடும்பங்களுக்கு உள்ளும் வெளியிலும் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண உதவ விரும்புகிறேன். கிராமத்தின் வளர்ச்சி தொடர்பான முயற்சிகளில் பெண்களை ஈடுபடுத்தி சமூக நலனில் அவர்களது பங்களிப்பை அங்கீகரிக்கும்போது அவர்களுக்கு சக்தியளிக்கப்படுவதுடன் சமூகமும் பலனடைகிறது,” என்றார் சாந்தி.
பானை தயாரிப்பு மூலம் குடும்பத் தொழிலில் தொடர்ந்து ஈடுபடவேண்டும் என்கிற அவரது விருப்பம் நிறைவேறுகிறது. அத்துடன் பாரம்பரியமான பானை தயாரிப்பு கலை மீட்டெடுக்கப்படுகிறது. இதனால் பெண்கள் அதிக ஒற்றுமையுடன் செயல்படுகின்றனர். இவர்கள் நிதிச் சுதந்திரம் பெற்றதுடன் சமூக அந்தஸ்தும் உயர்ந்து வருகிறது.
ஆங்கில கட்டுரையாளர்: ஸ்ருதி கெடியா | தமிழில்: ஸ்ரீவித்யா