63 ஏக்கர்; ரூ.700 கோடி பட்ஜெட்- இந்தியாவில் ’தி வேர்ல்ட்ஸ் பிக்கஸ்ட் கிரிக்கெட் ஸ்டேடியம்’
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தின் கட்டுமானப் பணிகள் கடைசி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கின்றன. ஆனால், எங்கே, எப்படி, எவ்வாறு கட்டப்படுகிறது?
உலகெங்கிலும் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் பலவும் இந்தியாவிலே அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற பட்டம் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தின் வசம் உள்ளது. ஆனால், அப்பட்டத்தை கைப்பற்றும் விதமாகவும் உலகின் மற்ற கிரிக்கெட் மைதானங்களுக்கு குயினாக திகழும் வகையில் பிரம்மாண்டமான மைதானம் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் மெடேரா பகுதியில் கட்டப்பட்டு வருகிறது.
ஆனால், மெடேராவில் தான் ஏற்கனவே சர்தார் படேல் மைதானம் இருக்கின்றதே என்கிற கேள்வி எழுகிறதா? உங்கள் கேள்வி சரியே... சர்தார் படேல் மைதானம் தான் சுக்கு நூறாக இடிக்கப்பட்டு பிரம்மாண்டமாக மறுஅவதாரம் எடுத்து வருகிறது.
1983ம் ஆண்டு உலகக் கிரிக்கெட் வரைப்படத்துக்கு அறிமுகமாகிய சர்தார் படேல் மைதானம் பல சாதனைகளை ஏந்தி நின்றுள்ளது. 1987ம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 10,000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்ற சுனில் கவாஸ்கர், அச்சாதனையை நிகழ்த்தியது இந்த மைதானத்தில் தான்.
ஏழு ஆண்டுகள் கழிந்து அதே இந்தியாவின் பொக்கிஷமான சுனில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 431 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை படைத்திருந்த நியூசிலாந்து வீரர் ரிச்சார்ட் ஹாட்லியின் சாதனையை முறியடித்தும் இம்மைதானத்தில் தான். இவை மட்டுமல்ல, 1999ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் முதல் இரட்டை சதத்தை அடித்ததும் இம்மைதானத்திலே...
அப்படிப்பட்ட பெருமைகளை தன்னகத்தே அடக்கிய சர்தார் படேல் விளையாட்டு அரங்கு கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியதால், குஜராத் கிரிக்கெட் சங்கம் மறுவடிவமைப்பு செய்ய முடிவெடுத்தது.
இதற்கான பணிகள் 2017ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. புகழ்பெற்ற கட்டிடக்கலை நிறுவனமான பாப்புலஸுக்கு அரங்கத்தை வடிவமைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. தற்செயலாக, மெல்போர்ன் அரங்கத்தை வடிவமைத்ததும் இதே நிறுவனம் தான். பிரபல கட்டுமான நிறுவனமான லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம், மைதானத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளது.
63 ஏக்கர் பரப்பளவில் புதிய கிரிக்கெட் அரங்கத்தில் 50க்கும் மேற்பட்ட அறைகள், 76 கார்ப்பரேட் பெட்டிகள், நான்கு உடைமாற்றும் அறைகள், கிரிக்கெட் வீரர்களுக்கான மூன்று பயிற்சி மைதானம், ஒரு உட்புற கிரிக்கெட் பயிற்சி அகாடமி, ஒலிம்பிக் போட்டிகள் நடத்தும் அளவிலான நீச்சல் குளம்... ஆகியவை 700 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. அத்துடன் 3,000 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 10,000 இருசக்கர வாகனங்களுக்கான ஒரு பார்க்கிங் பகுதியும் தயாராகி வருகிறது.
ஏற்கெனவே, பழைய மைதானத்தில் 54,000 பேர் மட்டுமே அமர்ந்து பார்க்க முடியும். ஆனால் புதிய மைதானத்தில், அதன் இரு மடங்கு அளவில் பார்வையாளர்கள் அமர முடியும். ஆம், 1,10,000 பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இந்தாண்டின்
இறுதிக்குள் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில், சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கிரிக்கெட் போட்டிகளை காணுவதை எக்ஸ்ட்ரா மகிழ்ச்சிகரமானதாக ஆக்கக்கூடியவை அழகான விளையாட்டு மைதானங்கள். அதிலும் உலகிலே பெரிய கிரிக்கெட் மைதானம் நம் நாட்டில் அமைவது இந்திய ரசிகர்கள் விசில் போட்டு கெத்து காட்டும் ஹாப்பியோ ஹாப்பி நியூசாகியுள்ளது.
தகவல் உதவி : businesstoday | பட உதவி: குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் துணைத்தலைவர் பரிமல் நத்வானியின் டுவிட்டர் பக்கம். | கட்டுரையாளர்: ஜெயஸ்ரீ