எய்ட்ஸ் நோய் பாதித்த 100க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பராமரிக்கும் 68 வயது மங்கள் ஷா!
மகாராஷ்டிராவில் மங்கள் ஷா நடத்தி வரும் Palawi என்கிற தங்குமிடத்தில் தற்போது ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட 125 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மங்கள் ஷாவிற்கு அறுபத்தெட்டு வயதாகிறது. சக மனிதர்களுக்கு சேவை செய்வதையே இவர் நோக்கமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார். மனிதர்கள் என்றால் சாதாரணமானவர்கள் அல்ல, எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்கள். அதிலும் குறிப்பாகக் குழந்தைகள்.
கிட்டத்தட்ட இருபதாண்டுகளாக எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காகவே பணியாற்றி வரும் மங்கள் ஷா நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தாயாக மட்டுமின்றி தெய்வமாகவே காட்சியளிக்கிறார்.
80-களிலும் 90-களிலும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அதைப் பற்றி பேசுவதைக்கூட மக்கள் அருவருப்பாகக் கருதினார்கள். அந்த காலகட்டத்தில் ஒரு பெண்ணாக துணிந்து எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களுக்கு உதவியுள்ளார் மங்கள் ஷா.
ஒருவரை மதிப்பிட்டுப் பார்க்கத் தொடங்கினோமானால் அவர்கள் மீது அன்பு செலுத்த நேரம் இல்லாமல் போய்விடும் என்கிற அன்னை தெரசாவின் வரிகளில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் மங்கள் ஷா.
தேவை இருப்போருக்கு உதவி
மங்கள் ஷாவிற்கு திருமணம் முடிந்த பின்னர் குடும்பத்தில் இருந்த மற்ற பெண்கள் எல்லோருக்கு இறை வழிபாட்டிற்கு அதிக நேரம் ஒத்துக்கியபோது 17 வயதான மங்கள் ஷா தேவை இருப்போருக்கு உதவுவதில் ஆர்வம் காட்டினார்.
மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் தொழிலாளர்கள் போன்றோருக்கு உதவ நினைத்த மங்கள் ஷா அரசு மருத்துவமனையை அணுகியுள்ளார். அந்த சமயத்தின் பெண்களுக்கு குடும்பத்தில் போதிய ஆதரவு கிடைப்பதில்லை என்பதை உணர்ந்தார்.
அவர்களுக்கு உதவத் தீர்மானித்தார். மருத்துவமனையில் இருந்த நோயாளிகளில் தேவைப்படுவோருக்கு வீட்டில் சாப்பாடு தயாரித்துக் கொடுக்க ஆரம்பித்தார்.
மகாராஷ்டிராவின் சோலாபூர் மாவட்டத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் விலக்கிவைக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவி தேவைப்படுவதை மங்கள் ஷா உணர்ந்தார்.
பெண் பாலியல் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 35 ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் தொடங்கியுள்ளது மங்கள் ஷாவின் பயணம். அந்த காலகட்டத்தில் மனித சமூகத்திற்குத் தெரிந்த மிகவும் மோசமான, கேவலமான நோயாக எய்ட்ஸ் கருதப்பட்டது.
திசைமாற்றிய சம்பவம்
ஒருமுறை மங்கள் ஷா, அவரது மகள் டிம்பிள் இருவரும் பந்தர்பூர் பகுதியில் உள்ள பாலியல் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தச் சென்றிருந்தனர். அங்கு நடந்த சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார்.
இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தையும் 1.5 வயதில் ஒரு பெண் குழந்தையும் மாட்டுத் தொழுவத்தில் அனாதையாக விடப்பட்டது அவர்களுக்குத் தெரியவந்தது. இந்தக் குழந்தையின் பெற்றோர் இருவரும் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்துவிட்டனர். குடும்பத்தினருக்கும் தொற்று ஏற்படும் என்று பயந்ததுடன் அவமானத்தின் சின்னமாக அந்தக் குழந்தைகளைக் கருதிய உறவினர்கள் குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்க முன்வரவில்லை.
மங்கள் ஷா கிராம மக்களுக்கு புரியவைக்க முயற்சி செய்தார். குழந்தைகளைப் பராமரிக்கச் சொல்லி பலரிடம் கேட்டுப் பார்த்தார். எந்தப் பலனும் இல்லை. மங்கள் ஷா, டிம்பிள் இருவரும் அந்தக் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்லத் தீர்மானித்தனர்.
ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடைக்களமளிக்கும் ஆதரவற்றோர் இல்லத்தை இருவரும் தேடினார்கள். ஆனால் ஒட்டுமொத்த மகாராஷ்டிராவிலும் அப்படி ஒரு தங்குமிடம் இல்லை என்பதை அவர்களது தேடல் முயற்சி புரியவைத்தது.
எனவே ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடைக்கலம் வழங்கி பராமரிக்க சொந்தமாக ஒரு இல்லம் கட்ட மங்கள் ஷா முடிவு செய்தார். அந்த இல்லத்திற்கு 'பலவி’ (Palawi) என பெயரிடப்பட்டது. மராத்தியில் பலவி என்கிற சொல்லிற்கு 'செடியில் புதிதாக முளைத்த இலை’ என்று பொருள்.
“2001-ம் ஆண்டு முதல் ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பராமரித்து அவர்களுக்கு மறுவாழ்வளித்து வருகிறோம். குழந்தைகளுக்கும் எனக்கும் இடையே ஒரு இணைப்பு உருவாகியுள்ளது. இந்தக் குழந்தைகளுக்கு தாயின் அரவணைப்பு தேவைப்படுகிறது. இவர்கள் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாக ரசித்து அனுபவிக்கவேண்டும். இது தொடர்பாகவே Palawi செயல்பட்டு வருகிறது,” என்கிறார் மங்கள் ஷா.
பராமரிப்பு இல்லம்
ஹெச்ஐவி பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா பகுதியில் Palawi செயல்படுகிறது. எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதே இதன் நோக்கம். தனிநபர்கள் மட்டுமின்றி சர்வதேச நிறுவனங்களும் இந்த இல்லத்திற்கு நிதியுதவி அளித்து வருகிறது.
மிலாப் போன்ற கூட்டுநிதி தளங்களில் பிரச்சாரம் செய்வதன் மூலமாகவும் நிதி திரட்டப்படுகிறது.
Palawi விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஏற்பாடு செய்வதுடன் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தங்குமிட வசதியும் செய்து கொடுக்கிறது.
இங்கு 50 பேர் ஊழியர்களாகவும் 50 பேர் தன்னார்வலர்களாகவும் இணைந்துள்ளனர். இந்நிறுவனம் ஹெச்ஐவி பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சையும் பராமரிப்பும் வழங்குகிறது.
“குழந்தைகள் மீது அன்பு காட்டுகிறோம். எங்கள் நடவடிக்கை ஒவ்வொன்றும் இதை அவர்களுக்கு உணர்த்தும். நாம் ஒதுக்கப்படுவதில்லை என குழந்தைகள் உணர்கிறார்கள்,” என்கிறார் மங்கள் ஷா.
ஆரம்பத்தில் இருந்தே எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிடுகிறார். தற்சமயம் ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட 125 குழந்தைகள் இந்த பராமரிப்பு இல்லத்தில் உள்ளனர்.
வருங்காலத்தில் ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் 500 பேர் தங்கும் வகையில் Matruvan என்கிற இல்லத்தை அமைக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தக் குழந்தைகள் தற்சார்புடன் இருக்கவும் ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா