ரூ.13,440 கோடி மதிப்பு நிறுவனத்தை வழிநடத்தும் தமிழக பெண் தொழிலதிபர் - லக்ஷ்மி வேணு யார்?
டிவிஎஸ் மோட்டார் நிறுவன தலைவர் வேணு ஸ்ரீநிவாசனின் மகளான லக்ஷ்மி வேணு இன்று தனது நிர்வாகத் திறமையால் இந்தியாவின் முதன்மை பெண் தொழிலதிபர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு ஸ்ரீநிவாசனின் மகளும், டிவிஎஸ் குழுமத்தின் சுந்தரம் கிளேய்ட்டன் (Sundaram - Clayton Limited | SCL) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், டஃபே மோட்டார்ஸ் அண்ட் ட்ராக்டர்ஸ் நிறுவன துணை நிர்வாக இயக்குநருமான டாக்டர் லக்ஷ்மி வேணு சமகால இந்திய பெண் தொழிலதிபர்களில் மிக முக்கியமானவர்.
தமிழகத்தைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இருசக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சு வரும் நிலையில், லக்ஷ்மி வேணுவின் சமீபத்திய பங்களிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.
வார்விக் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் பெற்ற லக்ஷ்மி வேணு, அமெரிக்காவின் சிறப்பு வாய்ந்த யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் சிறப்புப் பட்டம் பெற்றார். வால்வோ, கம்மின்ஸ், ஹியுண்டய், டெய்ம்லர் மற்றும் பேக்கார் போன்ற உலகளாவிய ஆட்டோ மேஜர்களை வாடிக்கையாளர்களாகக் கொண்ட சுந்தரம் கிளேட்டனுக்கும் அவர் தலைமை தாங்குகிறார்.
அமெரிக்காவின் தென் கரோலினாவில் உள்ள கார்லஸ்டனில் கிரீன்ஃபீல்ட் தொழிற்சாலையை நிறுவியதன் மூலம் சுந்தரம் கிளேய்ட்டன் நிறுவனம் அமெரிக்காவுக்குள் அடியெடுத்து வைத்ததில் பங்குவகித்த பெருமைக்குரியவர் லக்ஷ்மி வேணு.
லக்ஷ்மி வேணு - பர்சனல் பக்கங்கள்
லக்ஷ்மி வேணுவுக்கு சுதர்சன் வேணு என்னும் சகோதரர் உண்டு. இவர் ஆரம்ப காலத்தில் சிஷ்யா பள்ளியில் தன் பள்ளி வாழ்க்கையைத் தொடங்கினார். யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பட்டம் பெற்ற பிறகே வார்விக் பல்கலைக் கழகத்தில் பொறியியல் மேலாண்மையின் முனைவர் பட்டம் பெற்றார்.
2011-ம் ஆண்டு இவருக்கும் தகவல் தொழில் நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்திக்கும் திருமணம் நடந்தது. 2015-ம் ஆண்டு இருவருக்கும் இடையே விவாகரத்து நிகழ்ந்தது. இதனையடுத்து, 2018-ம் ஆண்டில் லக்ஷ்மி வேணு தொழில்நுட்ப தொழிலதிபர் மகேஷ் கோகினேனியை திருமணம் செய்துகொண்டார்.
என்.ஜி.ரங்கா என்னும் சுதந்திரா கட்சித் தலைவர் மற்றும் பத்மவிபூஷண் விருது வென்றவரின் கொள்ளுப் பேரனான மகேஷ் கோகினேனா பிட்ஸ் பிலானி மற்றும் லண்டன் பொருளாதாரப் பள்ளி பட்டதாரி என்பதோடு புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர்.
தொழில் நிர்வாகத்தில் கில்லி!
லக்ஷ்மி வேணு டிவிஎஸ் குழுமத்தின் துணை நிறுவனமான சுந்தரம் ஆட்டோ காம்பொனென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் தனது ஆரம்பப் பயிற்சியைப் பெற்றார். மேலும், அவர் இந்நிறுவனத்தில் வணிக உத்தி, கார்ப்பரேட் விவகாரங்கள், தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் ஆகிய துறைகளில் பணியாற்றினார்.
இந்தியாவின் நன்கு படித்த மற்றும் திறமையான கார்ப்பரேட் தலைவர்களில் ஒருவரான லக்ஷ்மி வேணுவின் திறமை, படிப்புடன் கூடிய கடின உழைப்புதான் நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாப எண்ணிக்கையில் பிரதிபலித்து வருகிறது. நிறுவனத்தின் கடைசி காலாண்டு மிகவும் நன்றாக இருந்தது.
கடந்த நிதியாண்டில் ரூ.83 கோடியாக இருந்த நிகர லாபம் ரூ.722 கோடியாக உயர்ந்தது. 2022-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 2021-ஆம் நிதியாண்டின் ரூ.75.84 கோடிக்கு எதிராக ரூ.2,276 கோடியாக உயர்ந்தது. இந்த உயர்வில் லக்ஷ்மி வேணுவின் பங்களிப்பு அபரிமிதமானது. அவரது தாயும் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் ஆவார். அவர் ஒரு தனி வணிக சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார்.
லக்ஷ்மி வேணு 2010-இல் சுந்தரம் கிளேய்ட்டனில் இணை நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றார். நவம்பர் 6 நிலவரப்படி, இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.13,430 கோடி. டிவிஎஸ் குழுமத்தில் போர்டில் ஒரு முக்கிய அங்கமாகவும் லக்ஷ்மி வேணு செயல்பட்டு வருகிறார்.
தொழிலதிபர்களான தன் பெற்றோர் இருவரிடமிருந்தும் நிறையக் கற்றுக் கொண்டதாக கூறுகிறார் லக்ஷ்மி வேணு. தன் தந்தை வேணு ஸ்ரீநிவாசனைப் பற்றி அவர் கூறியது:
“அவருக்கு மனிதர்களிடத்தில் அயராத நம்பிக்கை உண்டு. எங்கள் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் சப்ளையர்களின் நம்பிக்கையை குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் தக்க வைத்துக் கொள்வதில் அவர் நிறைய நேரம் செலவிடுகிறார்.”
இன்று இந்தியாவின் முதன்மையான பெண் தொழிலதிபர்களில் ஒருவராகத் திகழும் லக்ஷ்மி வேணு தனது தாயிடம் இருந்தும் நிறைய கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார். அவற்றில் ஒன்று:
“எனது தாய் தன்னிடம் உள்ள வலிமையை மிகச் சரியாகப் பயன்படுத்தினார். அவரிடம் பலதரப்பட்ட கண்ணோட்டங்களே இருந்தன. பல்வேறு விதமான கண்ணோட்டங்களைக் கொண்டிருப்பதில் பெண்கள் சிறந்தவர்கள். இதுதான் கார்ப்பரேட் நிறுவனத்தின் பெரிய பலமே.”
ஊர் நெல்லை, படிப்பு சென்னை, பெங்களூருவின் 3-வது பணக்காரப் பெண் - யார் இந்த அம்பிகா சுப்ரமணியன்?
Edited by Induja Raghunathan