ஸ்டீவ் ஜாப்ஸ் இடம் தொழில் முனைவோர் கற்றுக்கொள்ள வேண்டிய 7 படிப்பினைகள்!
தொழில்முனைவு குறித்து புத்தகங்களைக் காட்டிலும் நேரடி அனுபவம் மூலமாகவே திறம்படக் கற்றுக்கொள்ளமுடியும்.
தொழில்முனைவு என்பது வெறும் கவன ஈர்ப்பு அல்ல; அது வாழ்க்கை முறை. தொழில் முனைவிற்கு விடாமுயற்சி முக்கியம். ஆனால் தொழில் தொடங்கும் பெரும்பாலோருக்கு மனம் தளராமல் தொடர்ந்து முயற்சியை மேற்கொள்ளும் திறன் இருப்பதில்லை. இதனால் தங்களது முயற்சியைக் கைவிடுகின்றனர்.
தற்போதைய பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் வகையில் மதிப்பு கூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வளர்ச்சியை எட்டவேண்டும் என்பதே தொழில்முனைவின் முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும். இதை சாத்தியப்படுத்த புதுமையான எண்ணங்களை செயல்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
ஒரு தொழில்முனைவோராக நீங்கள் ஒவ்வொரு நுணுக்கமான விஷயங்களுக்கும் பொறுப்பேற்கவேண்டும். ஒரு யோசனையை சேவையாகவோ தயாரிப்பாகவோ வழங்கப்படும் நிலைக்குக் கொண்டு செல்லவேண்டும். சந்தைக்குத் தேவையான சரியான தயாரிப்பை எட்ட ஒவ்வொரு நாளும் இதில் பணியாற்றவேண்டும். அதன் பிறகு மற்றவர்களிடமிருந்து முதலீட்டை ஈர்க்கும் வகையில் தயாரிப்பை சுவாரஸ்யமானதாக மாற்றவேண்டும்.
தொழில்முனைவு என்பது கடின முயற்சியுடனும் உறுதியுடனும் மேற்கொள்ளப் படவேண்டிய ஒரு பயணம். இதில் ஈடுபடுபவர் ஒரு மாறுபட்ட நபராக உருவெடுப்பார். இந்த மாற்றம் குறித்து எந்த புத்தகமும் நமக்குக் கற்றுக்கொடுக்காது. நேரடி அனுபவத்தால் மட்டுமே கற்கமுடியும்.
ஸ்டார்ட் அப் சூழலில் பலர் நமக்கு உந்துதலளிக்கின்றனர். இவர்களுள் மிகப்பிரபலமானவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.
இவர் பொறியாளரோ வடிவமைப்பாளரோ அல்ல. ஆனால் இவர் தொழில்நுட்பத்தை மிகச்சிறப்பாகப் பயன்படுத்தி வருகிறார். அதுவே இவரை வேறுபடுத்திக் காட்டுகிறது. உலகை மாற்ற வேண்டும் என்கிற இவரது நோக்கமே இவரை புகழ்பெறச் செய்தது. இந்த நோக்கத்தை இவர் சாதித்தும் காட்டியுள்ளார்.
இவர் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களின் கண்ணோட்டத்தில் பார்க்கிறார். அவர்கள் எப்படிப் பயன்படுத்துவார்கள்? எதற்காக பயன்படுத்துவார்கள்? இந்தக் கோணத்தில் அணுகினார்.
ஆப்பிள் தயாரிப்புகள் எந்த விதத்தில் பலனளிக்கும் என்பதில் அவர் கவனம் செலுத்தியத்திய காரணத்தினால்தான் அவற்றைப் பயன்படுத்துவது எளிதாக உள்ளது. இத்தகைய அணுகுமுறையினால் ஒரு கட்டத்தில் இவர் வழங்கிய தயாரிப்புகளுக்கு தேவையில்லாதபோதும் மில்லியன் கணக்கோருக்கு தேவையானதாக மாறிவிட்டது.
ஸ்டீவ் ஜாப்ஸ் வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டியுள்ளார். என்னுடைய முதல் ஸ்டார்ட் அப் முயற்சி தோல்வியடைந்த நாட்களில் தொடங்கி புதுமையான தயாரிப்புகளை வடிவமைத்தது வரை அவரைப் பல காலமாக பின் தொடர்ந்து வருகிறேன்.
நான் தவறுகள் செய்தேன். அதே தவறுகளை மீண்டும் செய்து தோல்வியடைந்தேன். என் முயற்சியைக் கைவிட எண்ணினேன். ஆனால் அந்த தருணத்தில் வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமை படைத்த ஸ்டீவ் ஜாப்ஸின் கருத்துக்கள் என்னைத் தொடர்ந்து செயல்பட வைத்தன.
வளர்ந்து வரும் தொழில்முனைவோர்களின் தொழில்முனைவுப் பயணத்திற்கு பேருதவியாக இருக்கக்கூடிய ஸ்டீவ் ஜாபின் முக்கிய படிப்பினைகள் இதோ:
1. உலகம் முழுவதும் பயணம் செய்து புதிய செயல்களில் ஈடுபடுங்கள்
பயணம் புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும். பெற்றோர்களுடன் வசித்த 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் திருமணம் முடிந்த பிறகு தேனிலவிற்காக முதல் முறையாக வெளியிடங்களுக்கு பயணம் செல்வதைப் பார்க்கிறோம்.
பதின்ம வயது முடியும் தருவாயில் பயணம் செய்யவேண்டும். நாம் செய்யும் தவறுகள், அறிமுகமில்லாத புதிய நபர்கள், புதிதாக செல்லும் ஒரு நாட்டில் திறந்த மனதுடன் வலம் வருவது போன்றவை மனிதர்கள், கலாச்சாரம், வரலாறு போன்றவற்றைக் கற்றுக்கொடுக்கும்.
அத்தகைய அனுபவம் நம் சிந்தனையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஸ்டீவ், இந்தியா பயணித்து ஒரு ஆசிரமத்தில் அமைதியாக தங்கியிருந்தார். மனிதர்களைப் புரிந்துகொண்டால் தானாக நுகர்வோரின் போக்கு குறித்தும் தெரிந்துகொள்ளலாம் என்பது அவரது முக்கிய படிப்பினை ஆகும்.
2. குழந்தையைப் போல் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளவேண்டும்
கற்றல் என்பது ஒரு வாழ்க்கை முறை போன்றது. என்றென்றும் நம்முடன் இருக்கும். கட்டுக்கடங்காத ஆர்வமே குழந்தைகள் கற்றுக்கொள்ளத் தூண்டுகிறது. கற்றல் முறையைக் குழந்தைகள் வித்தியாசமாக அணுகுவார்கள்.
உங்கள் மூளையை இளமையாக வைத்துக்கொள்ள தொடர்ந்து ஆராயவேண்டும். மிகச்சிறந்த படிப்பினைகள் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள். கற்றலயே உலகை விரிவடையச் செய்யும். நீங்கள் கல்லவில்லையெனில் உங்கள் உலகம் சுருங்கிவிடும்.
3. ‘முடியாது’ என்பது பதிலல்ல
ஸ்டீவ் ஜாப்ஸ் மிகவும் துணிச்சலானவர். தன்னுடைய விருப்பத்தில் தெளிவாக இருப்பார். தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கத் தயங்கமாட்டார். மக்கள் பொதுவாக அவருடன் நேரடியாக விவாதிப்பதைத் தவிர்த்துவிடுவார்கள்.
ஏனெனில் ஸ்டீவ் ஜாப்ஸின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதை அனைவரும் அறிவார்கள். எனவே அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிவிடுவார்கள் என்பதால் விவாதிப்பதைத் தவிர்த்துவிடுவார்கள்.
4. ஆபத்தை மதிப்பிட்டு ரிஸ்க் எடுக்கவேண்டும்
ஒரு யோசனையை நடைமுறைப்படுத்தாத வரை அது சிறந்த யோசனையாகவே தோன்றும். புதுமையான செயல்பாடுகளில் ஈடுபடும்போது மனிதவளம், முதலீடு, நேரம், திறன், சந்தை இயங்கும் விதம், போட்டி, நம்பகத்தன்மை போன்ற பல்வேறு ஆபத்துகள் இருக்கும். அந்த ஒரு யோசனையும் சிறப்பாக இருக்கும் என்பதற்கான எந்ததவித உத்தரவாதமும் இல்லை.
ஆனால் அந்த ரிஸ்க் எடுக்கவில்லையென்றால் நாம் சரியான திசையில் பயணிக்கிறோமா என்பது தெரியாது. எனவே ஆபத்துகளை கணித்து ரிஸ்க் எடுப்பது சிறந்தது.
5. யதார்த்தம் குறித்து கவலை கொள்ளவேண்டாம்
ஸ்டீவ்; யதார்த்தம் குறித்து அதிகம் கவலை கொள்வதில்லை. சாத்தியமில்லாத தயாரிப்புகளை உருவாக்குமாறு அவர் தன்னுடன் பணியாற்றும் பொறியாளர்களை வற்புறுத்தியுள்ளார். ஆப்பிள் இவற்றை உருவாக்குவதற்கு முன்பு இவை சாத்தியமில்லாத தயாரிப்புகளாகவே இருந்தன. Macbook, iPhone போன்றவை உருவாவதற்கு அவரது நோக்கம் மட்டுமல்ல யதார்த்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் குணாதிசயமும் ஒரு முக்கியக் காரணம்.
6. தொடர்ந்து புதுமை படைக்கவேண்டும்
ஸ்டீவ் ஜாப்ஸ் என்றாலே புதுமை என்கிற வார்த்தையும் இணைந்தே வரும். மக்கள் பொதுவாக தங்களது யோசனைகள் குறித்து மற்றவர்களுடன் கலந்தாலோசித்தால் அவை திருடப்படும் என்று அச்சப்படுவது வழக்கம். புதுமை படைப்பதே இந்தப் பிரச்சனைக்கு முக்கியத் தீர்வாக அமையும்.
மக்கள் உங்களது சிந்தனையைத் திருடி அதேபோல் அவர்களும் பின்பற்றலாம். ஆனால் நீங்கள் புதுமை படைக்கும் அதே வேகத்தில் அவர்களும் புதுமையைப் புகுத்துவது சாத்தியப்படாது. அதுமட்டுமின்றி உங்களது சிந்தனையைத் திருடி மற்றொருவர் பின்பற்றினால் நீங்கள் சரியான விதத்தில் செயல்படுகிறீர்கள் என்பதற்கு அதுவே சாட்சி.
7. முயற்சியைத் தொடங்க சரியான நேரம் என்று எதுவும் இல்லை
60 வயதிற்கு மேல் தொழில் தொடங்கும் பலரது கதைகளைக் கேட்டிருப்போம். அதனால் சரியான நேரம் என்று எதுவும் இல்லை. சூழலுக்கேற்ப சரியாக செயல்படுவதே முக்கியம். சிறியளவில் தொடங்குவது சிறந்தது. எனவே நீங்கள் இருக்குமிடத்தில் உங்களிடம் இருப்பதைக் கொண்டு தொடங்குங்கள். முழு நம்பிக்கையுடன் உங்களது யோசனையிலும் தயாரிப்பிலும் முதலீடு செய்யுங்கள்.
உங்களிடம் யோசனை இருக்குமானால் செயல்படுத்துங்கள். நீங்கள் முயற்சியைத் தொடங்கவில்லை எனில் அந்த யோசனை அழிந்துவிடும். உங்கள் யோசனையில் நம்பிக்கை வைத்துத் தொடங்குங்கள்.
ஆங்கில கட்டுரையாளர்: தினேஷ் பாசின் | தமிழில்: ஸ்ரீவித்யா