நீங்கள் கவனச்சிதறல் இல்லாமல் எழுத விரும்புபவரா?
நீங்கள் எந்த கவனக்குறைபாடும் இல்லாமல் எழுத விரும்புகிறீர்கள். ஆனால் உங்களால் முடியவில்லையா? உதாரணமாக எழுதிக்கொண்டிருக்கும்போது, அவ்வப்போது ஃபேஸ்புக் திறந்து பார்த்து பின்னர் அதிலேயே மூழ்கி விடுகிறீர்களா? இதனால் கவனம் சிதறுகிறதா? நேரம் விரையமாகிறது என்று கவலைப்படுபவரா நீங்கள்? தற்போது சில செயலிகளைக் கொண்டு ஃபேஸ்புக் போன்ற இணையதளப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நான் கூறப்போவது வித்தியாசமான ஒன்று. ’The Most Dangerous Writing App' என்ற ஒரு இணையதளம் இருக்கிறது.
இதற்குள் நுழைந்த உடனேயே எவ்வளவு நேரம் எழுதப்போகிறீர்கள் என கேட்கும். ஐந்து நிமிடமா, பத்து நிமிடமா என அறுபது நிமிடங்கள் வரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக ஐந்து நிமிடங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால், அந்த ஐந்து நிமிடங்களுக்குள் உங்களால் எவ்வளவு எழுத முடிகிறது என்று இந்த இணையதளத்தைக் கொண்டு கணக்கிடமுடியும். இந்த இணையதளத்தில் எழுதிக்கொண்டிருக்கும்போதே, ஃபேஸ்புக்கைத் திறந்தீர்களென்றால் ஆபத்து. இதுவரை எழுதிய அத்தனையும் காணாமல் போய்விடும். மீண்டும் முதலிலிருந்து எழுத வேண்டி இருக்கும். இது ஒரு தண்டனை போல தான்.
யாராவது கஷ்டபட்டு யோசித்து எழுதியதை இழக்க விரும்புவார்களா? அது தான் இந்த இணையதளத்தின் நோக்கம். எழுதும்போது எந்த கவனச்சிதறலும் இல்லாமல் எழுத வேண்டும். கவனச்சிதறல் ஏற்பட்டால் எழுதியதை இழக்க நேரிடும் என்பதே இந்த இணையதளத்தின் ஐடியா. ஒரு நாளைக்கு சுமார் இவ்வளவு மணி நேரம் எழுத வேண்டும் என்று இலக்கு வைத்துக்கொண்டு எழுதுபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமான இணையதளம். இந்த தளத்தைப் தொடர்ந்து பயன்படுத்தினால் வேகமாக எழுதமுடியும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறைய யோசித்து சிறப்பாக எழுத முடியும் என்பதெல்லாம் சிறப்பம்சம். எழுதியதை அவ்வப்போது அழித்துவிட்டு மீண்டும் எழுதுவதையும் இது ஒரு தவறான செயலாக சுட்டிக்காட்டுகிறது. எனவே அடித்தல் திருத்தல் இல்லாமல் விரைவாக கவனமாக எழுத நீண்டகால அடிப்படையில் இந்த தளம் உதவும். ஐந்து நிமிடம் என்று தேர்ந்தெடுத்தீர்களென்றால் அதற்குள் எழுதும் வகையில் சின்னசின்னதாக யோசித்துக்கொள்வது நல்லது. பெரிதாக யோசிப்பவர்கள் 60 நிமிடங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். எவ்வளவு நேரம் ஆகும் என்று முன்கூட்டியே யோசித்துக்கொண்டு அதற்கேற்ப நேரத்தைத் தேர்ந்தெடுப்பது பழக்க அடிப்படையிலேயே அமையும். நீண்ட கால அடிப்படையில் பயன்படுத்த இந்த தளத்தைப் பயன்படுத்தலாம்.
இதேபோல பல செயலிகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. உதாரணமாக ஃபோகஸ்ரைட்டர் என்ற செயலியைச் சொல்லலாம். ஆனால் இவர்களெல்லாம் கவனச்சிதறலைக் குறைக்க, எழுதும்போது ஃபுல் ஸ்கிரீன் வைத்துக்கொள்ளுதல் போன்ற முறைகளையே கையாள்கிறார்கள். ஆனால் மோஸ்ட் டேஞ்சரஸ் ஆப், நமக்கு தண்டனை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தண்டனைகள் தான் நம்மை சரியான பாதைக்குக் கொண்டு செல்கிறது.
ஆங்கிலத்தில் : Aditya Bhushan Dwivedi | தமிழில் : ஸ்வரா வைத்தீ
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்