இந்திய வோட்கா பிரான்ட் உருவாக்கிய ஐஏஎஸ் ஆக நினைத்த தொழில் முனைவர்!
வர்ணா பட் நிறுவியுள்ள Blisswater Industries நிறுவனம் தனிநபர் முதலீட்டாளர்கள் உட்பட முதலீட்டு நிறுவனங்களிடமிருந்து 335000 டாலர் சீட் நிதி திரட்டியுள்ளது.
கோவாவைச் சேர்ந்தவர் வர்ணா பட். இவர் RapidStall, Tessarakt Experiential ஆகிய இரு நிறுவனங்களை நிறுவியுள்ளார். RapidStall சுற்றுச்சூழலுக்கு உகந்த துணி பிராண்டிங் நிறுவனம். Tessarakt Experiential மார்க்கெட்டிங், ஈவெண்ட்ஸ் மற்றும் கிரியேடிவ் ஹவுஸ் நிறுவனம்.
இரண்டு நிறுவனங்களை நிறுவிய பின்னரும் ஆல்கஹால் பானங்கள் பிரிவில் செயல்படவேண்டும் என்கிற ஆர்வம் வர்ணாவிற்கு இருந்து வந்தது. இந்தியாவிற்கென பிரத்யேகமான பானம் எதுவும் இல்லை என்பதை வர்ணா தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது உணர்ந்தார்.
Blisswater Industries என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய வோட்கா பிராண்டாக Rahasya சந்தையில் அறிமுகமனாது.
கோவாவில் தயாரிக்கப்படும் 750 மி.லி வோட்கா 850 ரூபாய்க்கு கோவா சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
Rahasya வோட்காவை நான்கு நாடுகளுக்கு எடுத்துச் செல்ல Blisswater Industries திட்டமிட்டுள்ளது. CC One Venture Labs, Majithia Family House, தனிநபர் முதலீட்டாளர்கள் Disruptium இணை நிறுவனர் யாஷ் ஷா, ஷாம் கிஷோர் பட் ஆகியோரிடமிருந்து இந்நிறுவனம் 335000 டாலர் சீட் நிதி திரட்டியுள்ளது. நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு இந்த நிதித்தொகை பயன்படுத்தப்பட உள்ளது.
வோட்கா பிராண்ட்
“இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பானங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரே மாதிரியான சுவையைக் கொண்ட, அனைத்து இடங்களிலும் கிடைக்கக்கூடிய பொதுவான ஒரு பானம் இல்லை. இந்திய சுவையுடன் இதை உருவாக்க விரும்பினேன்,” என்று விவரிக்கிறார் வர்ணா.
இக்குழுவினர் வெவ்வேறு கலவைகளை பரிசோதனை செய்து இறுதியாக Rahasya தயாரித்தனர்.
தொழில்முனைவு
வர்ணா தொழில்முனைவு முயற்சியில் ஈடுபட்டது தற்செயலான நிகழ்வு. படிப்பில் சுட்டியான வர்ணா, ஐஏஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்கிற முனைப்புடன் நன்றாகப் படித்தார். நல்ல மதிப்பெண்கள் வாங்கினார்.
சிவில் சர்வீஸ் தேர்விற்காக தயாராகிக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தார். பிராண்டிங் பிரிவைச் சேர்ந்தவர்கள் இங்கு ஆலோசகர்களாக இருந்தனர்.
“நாங்கள் கிரியேடிவ் சயின்ஸ் கோர்ஸ் வடிவமைத்து வந்தோம். அப்போதுதான் பிராண்டிங், மார்க்கெட்டிங் போன்ற அம்சங்கள் குறித்து தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதுவே என்னுடைய முதல் ஸ்டார்ட் அப்’பிற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது,” என்கிறார் வர்ணா.
எம்பிஏ முடித்த வர்ணா பல நிறுவனங்களில் பிராண்டிங் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவிற்கு தலைமை வகித்த பின்னர் 2012-ம் ஆண்டு RapidStall நிறுவியுள்ளார். இந்நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு உகந்த துணி பிராண்டிங் தொடர்பாக செயல்பட்டது. பெங்களூருவில் தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் டெல்லி மற்றும் மும்பையில் விற்பனை அலுவலகம் இயங்கியது.
இதுதவிர மத்திய கிழக்குப் பகுதிகளில் விற்பனை செய்வதற்காக துபாயில் தயாரிப்பு மற்றும் விற்பனை செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
சில ஆண்டுகளுக்குப் பிறகு வர்ணா Tessarakt Experiential நிறுவினார். இந்நிறுவனம் சிறப்பாக இயங்கி வந்தபோதும் வர்ணாவிற்கு ஆல்கஹால் பானங்கள் பிரிவில் செயல்படவேண்டும் என்கிற விருப்பம் இருந்து வந்தது. இதற்கான சந்தை வாய்ப்பு இருப்பதை உணர்ந்து Blisswater Industries நிறுவினார்.
வோட்கா தயாரிப்பு
வோட்கா தயாரிப்பிற்காக உயர்தர மூலப்பொருட்கள் வாங்கப்படுவதாக வர்ணா குறிப்பிடுகிறார்.
”Rahasya தயாரிப்பிற்கான சீக்ரெட் சாஸ் உருவாக்குவதற்கு அதிக நேரம் செலவிட்டோம். நிறுவனத்தில் உள்ள வெகு சிலருக்கே இந்த சீக்ரெட் சாஸ் தெரியும்,” என்கிறார்.
இந்த சீக்ரெட் சாஸ் தனியாக தயாரிக்கப்பட்டு தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னர் இது வோட்காவுடன் சேர்க்கப்பட்டு 35-40 நாட்கள் அப்படியே விடப்படும். அதன் பின்னரே பாட்டில்களில் நிரப்பப்படும்.
வர்ணா கோவாவைச் சேர்ந்தவர் என்பதால் டிஸ்டில் செய்யவும் பாட்டில்களில் நிரப்பவும் சரியான பார்ட்னரை எளிதாகக் கண்டறிந்தார்.
பெருந்தொற்று பரவல்
2020-ம் ஆண்டு மே மாதம் Rahasya தயாரிப்பை சந்தையில் அறிமுகப்படுத்த குழுவினர் திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக திட்டம் தடைபட்டது. இருப்பினும் அந்த நேரத்தை பிராண்டை விளம்பரப்படுத்துவதற்காகப் பயன்படுத்திக்கொண்டார். இறுதியாக 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் Rahasya சந்தையில் விற்பனை செய்யத் தயார்நிலையில் இருந்தது.
கர்நாடகா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் இதர மாநிலங்களில் 2021-ம் ஆண்டு இறுதியில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: ஸ்ரீவித்யா