கண், அருவி, கேக், விண்வெளி, என விதவிதமாக கொண்டாடப்படும் 75வது சுதந்திரத் தின விழா!
75வது சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாடிவரும் நிலையில், தங்களது தேசப் பக்தியை வெளிக்காட்டும் வகையில் பலர் விதவிதமாக தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.
இந்தியா சுதந்தரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இன்று, 75வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்த மாதத் தொடக்கத்திலேயே 75வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி விட்டது என்றுதான் கூற வேண்டும். ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 15ம் தேதிவரை சமூக ஊடகங்களில் அனைவரும் தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்தார்.
மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக தனது முகப்புப் பக்கத்தையும் அவர் மாற்றினார். அவரைத்தொடர்ந்து சமூகவலைதளங்களில் பலரும் தங்களது முகப்பு பக்கத்தை தேசிய கொடியாக மாற்றினார்கள்.
இதேபோல், ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரையில் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதனையும் ஏற்றுக் கொண்ட மக்கள், தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி, தங்களது தேசப்பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சுதந்திர தினமான இன்று பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன், கொடியேற்றும் விழாவும் இனிதே நடந்துள்ளது. இதுதவிர 75வது சுதந்திர தினத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் தங்களால் இயன்ற அளவு வித்தியாசமாக கொண்டாடி வருகின்றனர்.
அதைப் பற்றிய சிறிய தொகுப்பு இதோ...
விண்வெளி வீராங்கனையின் வாழ்த்து
75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்தியாவிற்கு உலக நாடுகள் தங்கள் வாழ்த்துக்களைக் கூறி வரும் வேளையில், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தும் நம் நாட்டிற்கு வாழ்த்துச் செய்தி வந்துள்ளது. இத்தாலிய விண்வெளி வீராங்கனை சமந்தா கிறிஸ்டஃப்ரோட்டிதான், விண்வெளியில் பறந்தபடி, இந்த வாழ்த்து வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அதில், “இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில் இத்தாலிய விண்வெளி முகமை (ஐஎஸ்ஏ), அமெரிக்க விண்வெளி மையம் நாசா இன்னும் பல சர்வதேச கூட்டாளிகள் சார்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவுக்கு வாழ்த்து கூறுகிறேன். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு இஸ்ரோ ஆயத்தமாகும் சூழலில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்ஜித் சிங் சந்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கண்ணில் தேசியக் கொடியை வரைந்து கொண்ட தமிழர்
கோவை மாவட்டம், குனியாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த யுஎம்டி.ராஜா வித்தியாசமாக தனது தேசபக்தியை வெளிப்படுத்தியுள்ளார். மிகச் சிறிய அளவிலான ஓவியங்களை வரைவதில் வல்லவரான இவர், 75வது சுதந்திர தின விழாவுக்கு மரியாதை செலுத்தும் நோக்கில், தனது வலது கண்ணில் தேசியக் கொடியை ஓவியமாக வரைந்துள்ளார்.
மிக நுண்ணிய, துணி போன்ற ஃபிலிம் ஒன்றை கண்ணில் வைத்து இந்த ஓவியத்தை ராஜா தீட்டியுள்ளார்.
மூவர்ணத்தில் உணவுகள்
உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள உணவகம் ஒன்று, 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு மூவர்ணங்களில் உணவைப் பரிமாறி வருகிறது. நாம் விரும்பி சாப்பிடும் பாஸ்தா, சாண்ட்விட்ச், ஃபிரைடு ரைஸ் போன்றவை மட்டுமல்லாமல் சில பானங்களும் கூட இங்கு மூவர்ணங்களில் வழங்கப்படுகிறது.
மூவர்ண அருவி
இன்ஸ்டாகிராம் பக்கமொன்றில் பகிரப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், அருவி ஒன்றில் மேலிருந்து கீழே கொட்டுகின்ற நீரானது தேசியக் கொடி வண்ணத்தில் காவி, வெள்ளை, பச்சை என மூவர்ணத்தில் உள்ளது. இளைஞர்கள் சிலர் அருவியின் மேலே நின்று, கொட்டுகின்ற நீரில் இதுபோன்று மூன்று வண்ணங்களைக் கொட்டுகின்றனர். அதனாலேயே அருவி நீர் மூவர்ணக் கொடியாகக் காட்சி தருகிறது. இதனை அருவியின் கீழிருக்கும் மக்கள் பார்த்து ரசிப்பது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது.
ஆழ்கடலில் தேசியக் கொடி:
புதுச்சேரி மற்றும் சென்னையில் temple adventure என்ற பெயரில் ஆழ்கடல் பயிற்சி பள்ளியை நடத்தி வரும் ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் என்பவர், புதுச்சேரி ஆழ் கடலில் 75 அடி ஆழத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அசத்தியுள்ளார்.
முன்னதாக, உலக யோகா தினம், காதலர் தினம், சர்வதேச கிரிக்கெட் போட்டி, கடல் தூய்மை போன்றவற்றிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல நிகழ்வுகளை அரவிந்த் இதேபோல், கடலுக்கு அடியில் நிகழ்த்தியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டு வரும் அரவிந்த் கொரோனா, கடல் தூய்மை, யோகா, உடல் ஆரோக்கியம் போன்றவை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வை ஆழ்கடலில் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
140 கிலோ எடையில் பிரம்மாண்ட தேசியக்கொடி!
கர்நாடகா மாநிலம், கலபுர்கியில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள கமலாப்பூரில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ரேவப்பா பொம்மன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து, 75வது சுதந்திரக் கொண்டாட்டமாக 140 கிலோ எடையில் பிரம்மாண்ட தேசியக் கொடியை உருவாக்கியுள்ளனர். 75 அடி நீளமும், 50 அடி அகலமும் கொண்ட கையால் சுழற்றப்பட்ட காதித் துணி பயன்படுத்தி, மொத்தம் 3750 சதுர அடி பரப்பளவில் இந்த பிரம்மாண்ட தேசியக் கொடியை அவர்கள் தயாரித்துள்ளனர்.
விவசாயப் பின்னணி கொண்ட ரேவப்பாவின் குடும்பத்தினர், இந்த கால இளைஞர்களிடம் நாட்டுப்பற்றை ஊக்குவிக்கவும், சுதந்திர இயக்கம் மற்றும் கொடியின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்குக் கற்பிக்கவும் இப்படி ஒரு பிரம்மாண்ட தேசியக் கொடியை உருவாக்கியுள்ளதாகக் கூறுகின்றனர்.
இந்தக் கொடியை உருவாக்குவதற்காக, திரங்கா, தார்வாட் மாவட்டம் காரகா கிராமத்தில் இருந்து 300 பெண்கள் இங்கு வந்து, ஒன்றரை மாத முயற்சியில் சுத்தமான பருத்தியில் நெய்யப்பட்ட காதி துணியில் இந்தக் கொடியை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
5 லட்சம் தேசியக் கொடிகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 லட்சம் தேசியக்கொடிகள் இலக்காகக் கொண்டு, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி துறையின் மூலம் தேசியக்கொடி தயாரிக்கும் பணியை சுய உதவி குழுவினர் மேற்கொண்டனர்.
இதற்காக மாவட்டம் முழுவதிலிருந்தும் 150க்கும் மேற்பட்ட தையல் தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.
கேக்கில் தேசியக்கொடி
கரூர் வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள பேக்கரி ஒன்றில், வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ‘தேசத்தை நேசிப்போம்’ என்ற வாசகமும் ‘இந்தியனாக இருக்க பெருமைப்படுகிறேன்’ என்ற ஆங்கில வாசகமும் பொறிக்கப்பட்ட 10 கிலோ அளவிலான பிரத்யேக கேக் ஒன்றை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மூவர்ணக் கொடியை அடையாளப்படுத்தும் வகையில் இந்திய பாரம்பரிய நடனமான பரதநாட்டிய புகைப்படம், டெல்லியில் அமைந்துள்ள இந்தியா கேட் மற்றும் ஆக்ராவில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் படித்த திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் புகைப்படமும் இந்த கேக்கில் இடம்பெற்றிருந்தன.
இதேபோல், கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராம கிருஷ்ணா கல்லூரியின் உணவு மற்றும் விடுதி மேலாண்மை துறை மாணவர்கள் 250 கிலோ எடை கொண்ட 76 சதுர அடி பரப்பளவில் கேக் ஒன்றைத் தயாரித்துள்ளனர்.
சிறுதானியங்கள் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கேக் சிறுதானியஙள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் தயாரித்த இந்த கேக், அப்துல் கலாம் புக் ஆப் ரெக்கார்ஸ்சில் இடம்பெற்றுள்ளது.