நான் பலியாள் இல்லை; 'நம்பிக்கையின் தூதர்' ப்ரக்யா சிங்
ஆசிட் வீச்சை எதிர்கொள்வது என்பது மரணத்தை எதிர்கொள்வதை விடக் கடினமானது. முகம் சிதைக்கப்பட்டு, மறைந்து வாழும் நிலைக்கு தள்ளப்படும் பெண்கள் நடைபிணங்களாக வாழும் விலைக்கு தள்ளப்படுகின்றனர். உடலும் உள்ளமும் சிதைக்கப்படும் கொடூர நிகழ்வு இது. ஆனால், இப்படிபட்ட கொடுமையை அனுபவித்து, அதிலிருந்து மீண்டதுடன், தன்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையளித்துக் கொண்டிருக்கிறார் அதிஜீவன் அமைப்பை நடத்திக் கொண்டிருக்கும் ப்ரக்யா சிங் .
எல்லாவற்றையும் மாற்றக்கூடிய நாம் யாராக இருக்கிறோம் என்பதை உருவாக்கும் அல்லது என்னவாக முடிந்து போகப்போகிறோம் என்பதை தீர்மானிக்கக்கூடிய ஒரு தருணம் எல்லோர் வாழ்விலும் உண்டு.
தங்கள் வாழ்வில் சந்திக்கும் இத்தகைய சூழ்நிலைகளுக்கு வினையாற்றும் எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கிறேன். சிலருக்கு, வாழ்க்கையில் ஏற்படும் கடுமையான உடல்நலக் குறைவானது வாழ்க்கையை போற்றும் மனநிலையை ஏற்படுத்துகிறது அல்லது வாழ்க்கையின் தங்கள் மனதுக்கு பிரியமானவர் ஒருவரின் இழப்பு எல்லாவற்றிலும் நம்பிக்கையிழக்கச் செய்துவிடுவதும் உண்டு. தங்களிடம் இருந்த எல்லாவற்றையும் பொருட்படுத்தாதவர்கள் மீது கூட எனக்கு மரியாதை உண்டு. அந்தத் தருணம் எவ்வளவு பெரியது என்பது முக்கியமல்ல, அந்தக் கணம்,… அந்தக் கணம்தான். அதன் முக்கியத்துவம் சமூகத்தால் முடிவு செய்யப்படுவதில்லை, மாறாக தனிநபராலேயே தீர்மானிக்கப்படுகிறது.
இந்த அறிவார்ந்த தத்துவஞானி யார் என்றும், அவளது கதை என்னவென்றும் நீங்கள் வியப்படையலாம்.
என் கதை கொஞ்சம் வித்தியாசமானதுதான். வாழ்க்கையை மாற்றக்கூடிய சம்பவங்களாக நான் கருதக்கூடிய தொடர் நிகழ்வுகள் பலவற்றை நான் கடந்து வந்திருக்கிறேன். ஒரு நாள் உண்மையிலேயே வாழ்க்கையை மாற்றிய சம்பவம் நடக்கும்வரை. எனது பதின்பருவத்தில், ரயிலில் பயணம் செய்துகொண்டிருத போது எங்கிருந்தோ பறந்துவந்த கல் தாக்கி என் மூக்கு உடைந்தது – இதுகூட என் வாழ்க்கையை மாற்றி இருக்கலாம். அல்லது என் பணி வாழ்க்கையில் பேரார்வத்தைக் கண்டபோது மற்றும் நான் பார்த்ததிலேயே அழகான ஒருவரைத் திருமணம்செய்தபோது – இப்படி தீர்மானகரமாக என் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடிய தருணங்கள் இருந்தன.
ஆனால், அன்று பழிவாங்கும் செயலாக, சந்தேகத்தை ஏற்படுத்தாத ஒருவன் என் மீது அமிலத்தை வீசிய அந்த துரதிர்ஷ்டமான நாளை எந்த ஒன்றும் நெருங்கக்கூட முடியாது. எண்ணற்ற அறுவைச்சிகிச்சைகள் செய்யப்பட்டபோது, கடுமையான வலியும் துயரமும் என்னை வாட்டியெடுத்தபோது நான் என் துணிச்சலை கண்டுகொண்டேன் என்று சொல்லலாம். ஏற்றுக்கொள்வதிலும், வாழவேண்டுமென்ற மனத்தின் உத்வேகத்திலும் நான் அமைதியை கண்டதாக நம்ப விரும்பியிருப்பேன். ஆனால், நான் செய்யவில்லை. அமைதியும் வாழவேண்டுமென்ற உத்வேகமும் என்னுள் மிக ஆழத்தில் இருந்து, கடவுள் எனக்கு ஆசிர்வதித்திருந்த இரண்டு அழகான பரிசுகளில்- எனது மகள்களிடம், இருந்து எனக்கு வந்தது. அந்த நிகழ்வுகள் அளித்த மகிழ்ச்சியும், தாயாக மாறிய எனது புதிய பாத்திரமும் என்னை நிரந்தரமாக மாற்றியது.
எனது கனவுகளில், பருக்களுக்கு பயந்த, வெயில் பட்டு முகம் கருத்துவிடுமோ என்று அச்சமடைந்த- எனது பழைய முகத்தை கண்ணாடியில் பார்க்கிறேன். பருக்களை களைவதற்கும் பளிச்சென தோன்றுவதற்காகவும் பல்வேறு அழகு சாதனப் பொருட்களை நான் சோதித்துப் பார்ப்பேன். ஆனால், இப்போது அந்த அழகு சாதனங்களுடன் நான் போட்டிப் போடுவதில்லை. சாதாரணமாக தோன்றவே... ஐப்ரோ இல்லாமல், ஹேர்லைன் இல்லாமல் தோன்றவே நான் போராடுகிறேன். நான் எப்படி தோற்றமளிக்க முடியும்?
என்னை வேடிக்கைப் பார்க்க மக்கள் எப்போதும் திரும்புகிறார்கள். குழந்தைகள் பயத்தில் அலறுகிறார்கள். சிலர் தங்கள் அம்மாக்களிடன், அந்தப் பெண்ணுக்கு என்ன ஆயிற்று என்று கேட்கிறார்கள். சிலர் என்னை பின்தொடர்வார்கள், சிலர் என்னிடம் இருந்து மறைந்து கொள்வார்கள். என் வீட்டுப் பக்கத்தில் இருந்த ஒரு குழந்தை என்னை வெறுப்பதாக ஒரு நாள் கூறியது. என் முகம், என் கண்கள், என் உதடுகள், என் கைகள் எல்லாம் பயங்கரமாக இருப்பதாக அவள் கூறினாள்.
என் வாழ்க்கையில் அற்புதமான தருணம் எது என் று என்னை நீங்கள் இப்போது கேட்பீர்களானால், மேலே சொன்ன எதுவும் இல்லையென்று பதிலளிப்பேன். என் வாழ்க்கையை என் கட்டுப்பாட்டில் நான் எடுத்துக்கொண்ட கணமே அது என்று நான் பெருமையுடன் கூறுவேன். என்னில் நான் நம்பிக்கையும் துணிச்சலும் பெற்றுக்கொள்ளும் போது, என் சம்மதத்தைப் பெறாத ஏதும் மற்றும் எனது சக்திக்கு அப்பாற்பட்டு நிகழும் ஏதும் என்னை, என் ஆளுமையை, என் சுயத்தை வரையறுக்க முடியாது என்று நம்புகிறேன். அந்த நினைவுகளை ஏற்றுக்கொள்வதிலும், நான் உருவாக்கிக் கொண்டிருக்கும் புதிய நினைவுகளால் அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துபோகச் செய்வதிலும் தான் எனது மன அமைதி இருக்கிறது.
யதார்த்தம் என் முகத்தில் கடுமையாக தாக்கியதுடன், ரத்த நாளங்களில் குருதிபாய்வது போல பரவியது. ஆம், நான் வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்பட்டேன். ஆனால், அதற்கு காரணமென்ன என்று எனக்கு தெரியவில்லை. அதனால் என்ன? இந்தச் சம்பவங்கள், இந்தத் தாக்குதல், அதன் பின்னர் நடந்தவை எதுவுமே என் கைகளில் இல்லை. அதற்காக நான் எதுவும் செய்திருக்க முடியாது, எதையும் மாற்றியிருக்கவும் முடியாது. ஆனால், இப்போது நான் செய்வது எனது முடிவின் படி நடக்கிறது. இது வெளியில் தெரிவதைவிடவும் மிகவும் கடினமானது. ஆனால், நானும் அப்படித்தானே? நான் இப்போது தகர்க்க முடியாத அளவுக்கு கடினமானவள்.
இதயமில்லாத ஒருவன் என் வாழ்க்கையை தகர்க்க முயன்றான் என்பதற்காக என்னை துணிச்சலானவள் என்று அழைக்காதீர்கள். எனக்கு இரக்கம் தேவையில்லை. எனக்கு தேவை ஆதரவு. என் வாழ்க்கையில் மதிப்புமிக்க சில ஆண்டுகளை நான் இழந்திருக்கலாம், என் ஆரோக்கியத்தை இழந்திருக்கலாம். ஆனால், நான் என் அடையாளத்தையும் கனவுகளையும் இழக்கவில்லை. எப்போதும் நம்பிக்கையிழந்து விடாதே என்று கூறும் ஆன்மாவையும் நான் இழக்கவில்லை, எனக்கு எப்போதும் பிரியமான அன்பையும் நான் இழக்கவில்லை.
இன்று நான் என்னை கண்டு பெருமை அடைகிறேன். நான் "அதிஜீவன்" (Atijeevan Foundation) அமைப்பிற்கு ஆற்றிவரும் பங்கு என்னுடைய வெற்றியை காட்டுகிறது. என்னுடைய எளிய சிந்தனை வழியே என்னை உந்தி தள்ளுகிறது. "நான் பாதிக்கப்பட்டவள் அல்ல, நான் 'நம்பிக்கையின் தூதர்'. என்னுடைய ஆதரவு தேவைப்படும் மற்றவர்களுக்காக நான் போராடி அவர்களுக்கு உறுதுணையாக நிற்பேன்...
இரண்டு வகையான மனோபாவங்கள் கொண்ட மக்கள் இருக்கிறார்கள். எப்போதுமே புலம்பிக்கொண்டு தங்கள் வழியில் செல்பவர்கள் ஒரு வகையினர். அற்புதமான பாதையில் பின்தொடரும் மற்றொரு வகையினர். பாதி நிறைந்த கோப்பையை பார்க்க நான் கற்றுக்கொண்டேன்.
எனக்கு நேர்ந்ததன் விளைவல்ல 'இன்றிருக்கும் நான்’. நான் என்பது என்னுடைய முகமல்ல, நான் என்னை என்னவாக உருவாக்கிக் கொண்டேனோ, அதுவே நான். மகிழ்ச்சியான முடிவைக்கொண்ட கதை என்னுடையது.
அதிஜீவன் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் ஆற்றும் பணிகளை பற்றி தெரிந்துகொள்ள: Atijeevan